Monday, March 31, 2008

எனக்கு 'விசா' கிடைத்து விட்டது!

தோழர்களே...,

அளவற்ற மகிழ்ச்சியுடன் சொல்கின்றேன் எனக்கு 'விசா' கிடைத்து விட்டது. இதுவரை நான் காத்திருந்த நாள் இப்போது எனக்காக மணித்துளிக்கணக்களவில் சுருங்கிக் கிடக்கின்றது. முருங்கை மரம் ஏறும் வேதாளமாக எத்தனையோ நிராகரிப்புக்களுடன் போராடி போராடி ஈற்றில் இன்று எனக்கு வெற்றி. இச்செய்தியைக் காவி வந்த என் நண்பனின் வாடிய முகம் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. என்னை விட அதிக தடவைகள் அவன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாய் உணர்கின்றானா? அல்லது பிரிவுத்துயரா?

ஊட்டி வளர்த்த அம்மா, ஓடி விளையாடிய கடற்கரை மணல், அறிவூட்டி இன்று யுத்த அழிவுச் சின்னமாய் மிளிரும் எனது பாடசாலை.... எப்படி இவை எல்லாவற்றையும் விட்டுப்போக உன்னால் முடிகிறது என வெளியிலிருந்து நீங்கள் தொடுக்கும் ஒவ்வொரு அறிவார்ந்த வினாக்களும் எனது காதுகளுக்கு கேட்கின்றது. எல்லோரையும் போல கடல் தாண்டி வேலை கிடைத்ததும் பணம் அனுப்புகின்றேன் என சொல்லமாட்டேன். ஆனால், இவைகளுக்காகத்தான் போகின்றேன்; என்னை நம்புங்கள்.

நேற்று வரை 'விசா' பெற்று ஒவ்வொரு தோழர்களும் விடை பெறுகின்ற போதும் பொறாமைப்பட்டேன்; பிரிவுத்துயர் தாங்காது கலங்கினேன். இன்று அந்தப் பாத்திரத்தை தாங்கும் உங்களுக்கு என்னால் என்ன கூற முடியும்?

தோழர்களே... இது ஒரு அமாவாசை இரவு... காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். ஆழ்கடலில் உலகதிரும் வெடியோசை... அது என் பயணச்செய்தியை சொல்லிச் செல்லும்...!

4 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Touching One

மதுவர்மன் said...

ஆதிரை,

பெயரிலியின் முதலாவது, பின்னூட்டம் தான் என்னை ஒரு முறை உங்கள் ஆக்கத்தை ஆழமாக, ஆறுதலாக படிக்க வைத்தது.

ஆரம்பத்தில் ஏதோ வெளிநாடு போக விசா கிடைத்ததை பற்றி தான் பேசுகின்றீர்கள் என்று நினைத்தேன். இல்லை அது இல்லை. இப்போது தான் புரிகின்றது.

எழுத்து நடை, கருவை கையாண்ட விதம் அருமையிலும் அருமை.

இன்னும் நீங்கள் இப்படியான ஆக்கங்களை எழுதுங்களேன். ஏன் இப்போது எழுதுவதில்லை?

நாமக்கல் சிபி said...

நல்ல பதிவு ஆதிரை!

ஒரு சுமையை மனதிலேற்றிவிட்டீர்கள்!

Anonymous said...

சொல்லிய விதம் அருமை.
நீங்கள் சொல்லிவிட்டீர்கள், சொல்லாதோர் அனேகம் பேர்.

‍‍ ‍ உமா

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி