Saturday, March 29, 2008

கொழும்பு பல்கலைக்கழகம்- கேவலத்தின் சாட்சி.

கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான-கணனி பீட மாணவர்கள் சில மாதங்களுக்கு முன்பு திரைப்படம் ஒன்றை தயாரித்துத் திரையிட்டிருந்தார்கள். அது தொடர்பாக சில குறிப்புகளை வரையலாம் என்ற எண்ணம் இருந்த போதிலும் பொதுத்தளத்தில் கேவலமான விடயங்களை காட்சிப்படுத்துவதின் காரண்மாக அவை இன்னுமின்னும் வேகமான பரவலுக்குள்ளாகி தீய அதிர்வுகளை உண்டாக்க கூடும் என்ற பயத்தின் காரணமாக இது பற்றிப் பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானோம். ஆயினும் ஒரு சில வாரங்களில் அது தொடர்பான விடயம் ஒன்றை வீரகேசரியில் கண்ட போதும் எதிர்வினையாற்ற எண்ண்யிருந்தோம். ஆயினும் அதனையும் தவிர்க்க வேண்டியதாகிவிட்டது.

இன்று இணையத்தில் இத்திரைப்படத்தை முன்வைத்து ஊரோடி பகீ பிச்சை எடுக்க முற்படுகின்ற இவ்வேளையில் இது தொடர்பாக எதிர்வினையாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்க்குத் தள்ளப்படவேண்டியதாயிற்று. கொழும்பு பல்கலைக்கழகம் நூற்றாண்டுகால சிறப்பை தன்னகத்தே கொண்டது. நூற்றுக்கணக்கான சமூக ஆய்வாளர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்கிய பெருமை பெற்றது. சமூகத்தளத்தில் கொழும்பு பலகலைக்கழகத்தின் மிகப்பெரியது. பல்வேறுவகையான சமூக ஆர்வலர்களை உற்பத்திக்களமாகவும் விளங்கியது.இலங்கையில் மார்க்சிய இயக்கங்களில் ஆரம்பித்து போராட்ட இயக்கங்கள் வரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் காலத்தின் சாட்சியாக இருந்தார்கள்.

ஈழத்தின் புதுக்கவிதை முன்னோடி முருகையன் இது பற்றி அழகாகச் சொல்லுவார். தாங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்த காலங்களில் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மற்றும் செயற்பாட்டு இயக்கங்கள் பற்றிய விடயங்களை. அப்போது கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் இருந்தது. அதன் பின்னர் ஜே.வி.பி புரட்சி மையம் கொண்ட 70 களில் கொழும்பு பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து பல விதமான புரட்சிகர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கணிசமான அளவினர் தமிழ் மாணவர்களே. ஆரம்பத்தில் கருத்தியல் அளவில் உள்வாங்கப்பட்ட மார்க்சியம் பின்னர் பல்கலைக்கழகங்களை முன்வைத்து புரட்சிகர செயற்பாட்டு இயக்கங்களாக வளர்ச்சி பெற்றது. அவ்வகையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பங்கு முக்கியமானது. அதிலும் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடம் இது தொடர்பாக பரந்த அளவில் தன்னை ஈடுபடுத்தியதும் அதில் தமிழர்கள் கணிசமான அளவானோர் என்பதும் வரலாறு.

தமிழ்த்தேசியம் எழுச்சி பெற்ற காலங்களில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அவை தொடர்பான கலந்துரையாடல்கள் பல்வேறுவகைப்பட்ட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டன. தெற்கில் இருந்த மாணவர்கள் வடக்கில் இருந்த மாணவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணி அவை தொடர்பாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். சிலர் தம்மை போராளிகளாக இணைத்துக் கொண்டு போராட்டத்தில் நேரடியாகவே பங்குபற்றினர். புளொட் இயக்கத்தின் உள்விவகாரங்களை வெளிக்கொணர்ந்த ஈழத்தின் முக்கியமான அரசியல் படைப்பான புதியதோர் உலகம் என்பதை எழுதியவர் பிற்காலத்தில் கோவிந்தன் என அறியப்பட்ட நோபேட் கொழும்பு பல்கலைக்கழக மாணவனே. புதியதோர் உலகம் முன்னுரையில் இருந்து சில விடயங்கள்.. ...இவர் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனிதவளனார் தமிழ் வித்தியாலயத்தில் முடித்தார். இடைநிலை கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும், உயர்கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் முடித்தார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அக் காலத்தில் மாணவர் அமைப்புகளில் தீவிரமாக பங்கெடுத்தார். மார்க்சியக் கருத்துகளில் ஈடுபாடு செலுத்தினார். பல்கலைகழக வாழ்வில் பல்வேறு இடதுசாரிக் குழுக்கள், அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டார்...

தமிழ்த்தேசிய எழுச்சியின் பிற்பட்ட காலங்களிலும் கோவிந்தன் போன்று புலிகள் அமைப்பிலும் பல கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வேலை செய்தனர். இயக்க அரசியலில் ஈடுபட விருப்பமற்ற மாணவர்கள் அது தவிர்த்து சமூக அபிவிருத்தி இயக்கங்க்ளில் ஈடுபட்டனர். ஆயினும் 90 களின் பிற்பகுதி தெற்கில் வாழும் மாணவர்களை இன அடையாளம் சார்ந்து செயற்பட முடியாத நிலமைக்கு உள்ளாக்கியது. சமூகம் சார்ந்து செயற்பட முடியாத நிலைக்கும் இன ஒடுக்குதலுக்கு உள்ளாகிய மாணவர்கள் தம்மால் இயன்றவரை தமது அடையாளம் சார்ந்த பிரக்ஞையின் காரணாமாக அடையாள பேணுகையை மேற்கொண்டனர். தமிழ்விழா போன்ற பல்கலைக்கழக நிகழ்ச்சிகள் ஊடாக தமது குறைந்தபட்சமான குரலை ஒலிக்கச்செய்தனர். மொரட்டுவ பல்கலைக்க்ழகம், பேராதனிய பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்ழகம் மற்றும் சப்பிரகமுவ பல்கலைக்கழகம் போன்றவை இவற்றில் முக்கியமானவை. முக்கியமாக நாடகங்கள் மூலமாக தமது ஈனக்குரலை வெளிப்படுத்துவதில் வெற்றிபெற்றனர். சில வருடங்களுக்கு முன்னர் மொரட்டுவ பல்கலைக்கழகம் தமது வருடாந்த கலைநிகழ்ச்சியூடாக டக்ளஸ் தேவானந்த அவர்களை கடுமையாக வசைபாடியது. கேலியான நடிப்பினூடாக மாணவரொருவர் அருமையாக அதனை வெளிப்படுத்தியிருந்தார்.

கொழும்பைத் தளமாகக் கொண்ட பல்கலைக்கழகத்தில் அரசியல் சார்ந்து இயங்குவதன் கடினத்தை நாம் அறிவோம். ஆயினும் எங்கிருந்தாவாது வரும் ஒரு சில குரல்களுக்காவது எமது ஆதரவை எழுத்து மூலமாகவாவது தெரிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.கொழும்பு பல்கலைக்கழகமும் தமது வருடாந்த நிகழ்ச்சிகளை இவ்வாறான முறையில் தொடர்ச்சியாக செய்து வந்தது. வடக்கு கிழக்கில் நடைபெறும் யுத்தத்தினால் ஏற்படும் துயரங்களை வடக்கு கிழக்குக்கு வெளியேயும் தம்மால் இயன்ற அளவில் பதிவுசெய்தனர். மற்றும் வர்த்தக நோக்கில் பொதுப்புத்தியை அவமதிக்கும் நோக்கில் தயாரிக்கப்டும் சினிமா மற்றும் நாடகம் போன்ற்வற்றிற்கு மத்தியிலும் மக்கள் நலன் சார்ந்த கருத்தியலை வலுப்படுத்தும் நோக்கிலான படப்புக்கள் இன்றும் அழிந்து போகாமல் இருக்கின்றன என்பதற்குச் சாட்சியாக பல்கலைக்கழகங்களில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். இறுதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூத்து பற்றியதான நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்த வேளை கலை தொடர்பாக மாணவர்களிடத்தில் எஞ்சியிருக்கும் நினைவுகள் நம்பிக்கையளிக்க கூடியவை என்ற எண்ணம் ஏற்பட்டது. அயினும் அதன் பின்னர் ஒரு குழுவினர் தென்னிந்திய சினிமாப் பாணியில் ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்றினர். பாலியலை மையாமாக்கிய ஆணாதிக்க சொல்லாடல்களினூடான பகிடிகள் மூலம் பகிரங்கமான மேடையில் மாணவ சமூகத்தால் அரங்கேற்றப்பட்டது. அவர்கள் தமது அசைவுகளையும் சொற்களையும் வர்த்தக சினிமாவில் இருந்து பெற்றுக்கொண்டனர். பார்வையாளர்களை அவமதிக்கும் வகையில் அமைந்த வகையிலானதாக அவர்களின் வெளிப்படுதிறன் அமைந்திருந்தது. இம்மாணவர்கள் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான-கணனி பீட மாணவர்கள் என அறியக்கிடைத்தது. அதன் பின், நடந்த இன்னுமொரு விழாவில் திரைப்படம் ஒன்று மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டது. முந்தய விழாவைக் கேவலப்படுத்திய அதே குழுவினராலேயே இம்முறை இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டதாக அறிந்தோம். அக்குழுவினர் வழமையாக இதேவிதமான நாடகங்களை மேடையேற்றுவதாகவும் அதன் உச்சக்கட்டம் தான் இத்திரைப்படம் எனவும் அறியக்கிடைத்தது. இங்கு மாணவரின் கேளிக்கை உணர்வினை விமர்சிப்பது எமது நோக்கமல்ல. ஆயினும் வர்த்தக நோக்கிலான கலைவடிவங்களே மக்கள் சார்பானவை மக்களுக்கானவை சமூக மயமானவை சமூக யதார்த்ததளத்தில் அமையப்பெற்றவை எனும் மாயை கட்டமைக்கப்படுவதையும் அதன் தொடர்ச்சியான போக்கிலான அபாயத்தினையும் சுட்டிக்காட்டுவதே எமது நோக்கமாகின்றது. தென்னிந்திய சினிமா வின் நேரடியான தாக்கத்துக்கு உட்பட்ட கேவலமான சமூகக்குழு ஒன்றிடம் இருந்து இதற்கு மேல் எதிர்பார்ப்பது தவறென்பது விளங்கியதாலேயே இவ்விடயம் பற்றி நாம் அதிகம் அக்கறை எடுக்கவில்லை. இக்குழுவைச் சேர்ந்தவர்கள் 3 ஆம் வருட மாணவர்களாவார்கள். இதற்கு முந்தைய பிரிவினர் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடியவர்கள் அல்ல என சிரேஸ்ட மாணவர்கள் தரப்பில் தெரிவீக்கப்பட்டது. ஆயினும் இம்மாணவ குழுவுக்கு கீழே புதிதாக அனுமதிக்கப்படும் மாணவர்களையும் இவ்வாறான மனநிலை தயாரிப்புக்கு இம்மாணவ குழு உட்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இப்பிரிவைச் சேர்ந்த பல மாணவர்களின் விருப்பமின்றி ஒரு சிலரே இவ்வாறான விடயங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இத்திரைப்படம் அடுத்த பிரிவு மாணவர்களில் ஒரு பகுதியினரது ஒத்துழைப்புடன் கூட்டாகவே எடுக்கப்பட்டதாக அறிகின்றோம். தமிழ்மணம் வாசகர்களே,நீங்கள் இப்படத்துண்டைப் பார்த்திருப்பீர்கள். இதிலிருந்து இத்திரைப்படம் பற்றியும் இதன் தயாரிப்பாளர்கள் பறியுமான ஊகம் ஒன்றிற்கு வந்திருப்பீர்கள். ஒவ்வொரு நாளும் உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பூமியில் இருந்து இவ்வாறான திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டதை நினைத்து நீங்கள் வருத்தப்படக்கூடும். அதுவும் வியாபார நோக்கத்திற்காக அன்றி மாணவர் குழு ஒன்று இவ்வாறான கேவலமான திரைப்படம் ஒன்றை தயாரித்து தமது கேவலமான மனநிலையையும் சமூக அக்கறையையும் எல்லோருக்கும் வெளிக்காட்டி உள்ளார்கள். இத்திரைப்படம் தொடர்பாக உதவும் எண்ணமுள்ளோர் உங்கள் எண்ணத்தை மாற்றி இவ்வாறான மோசமான திரைப்படங்கள் இனிமேலும் வராமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் உதவுமிடத்து நாளை இதுவே தவறான முன்னுதாரணமாகி பல்வேறு திரைப்படங்களின் வருகையைச் சாத்தியமாக்கிவிடக்கூடும். நீங்கள் வழங்க நினைக்கும் பணத்தை வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு வழங்குவதன் மூலம் உங்களது நல்லெண்ணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான-கணனி பீட தமிழ்ச்சமூகத்திற்கு, இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உங்களது பூரண ஒத்துழைப்பு இருக்கின்றதா? இவ்வகையான விடயங்களை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா என்பதை தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றோம். பல்கலைக்கழகங்க வளாகங்களுக்குள் நடைபெறும் விடயங்கள் பொதுச்சமூக வெளிக்கு வரும்போது அது தீவிர விமர்சனத்துக்கு உட்படுத்தப்படும். நீங்கள் பொது வெளியில் இவ்வாறானதொரு விடயத்தை அனுமதிப்பதன் மூலம் சமூக பொதுவெளியில் உங்களது நற்பெயரை இழக்கின்றீர்கள். இது தொடர்பாக உங்களது கருத்தைத் தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.

8 பின்னூட்டங்கள்:

கௌபாய்மது said...

Rooto,

விமர்சனங்கள் என்றுமே வரவேற்கப்பட வேண்டியவை.

ஆனால் இந்த விமர்சனத்தை நான் ஏலவே இங்கே பார்த்திருக்கிறேன். அந்த அனானி இடுகைக்கு பின்னூட்டங்கள் அளிக்க விரும்பவில்லை.

rooto, ஒரு விமர்சனத்தை மீளப்பிரசுரிக்கும் போது (முன்னைய இடுகைக்கான சொந்தக்காரர் நீங்களா எனத் தெரியாது) அது உங்களுடைய இடுகையாக இருந்தாலும் எங்காவதோர் இடத்தில் அதனைக் குறிப்பிடுவது நல்லது. ஏனெனில் வாசகர்கள் குழம்பிவிடுவார்கள்.

மேலும் இவ்விடுகை சம்பந்தமான வேறு இடுகைகளுக்காக நீங்கள் இங்கே காட்டமான பின்னூட்டங்களை பெறலாம். எனது பின்னோட்டத்தையும் அங்கே வாசிக்கமுடியும்

அத்துடன் தமிழரங்கம் இணையத்தளத்தின் ஆசிரியர் இராயகரனால் இடப்பட்ட பின்னூட்டம் சம்மந்தமாக இங்கே வாசிக்கலாம்.

rooto said...

கௌபாய்மது அவர்களிற்கு,
தவறுக்கு வருந்துகிறேன்.தவறு என்னுடையதாகினும், நான் இணையதள ஆக்கங்களிற்கு புதியவனாகையால் ஏற்பட்ட தவறை மன்னிப்பீர்கள் என நம்புகிறேன். மேற்படி இடுகை மீள் பிரசூரம் என்பதை சுட்டிகாட்ட தவறிவிட்டேன்.
இது என்னாலேயே வேறு ஒரு தளத்திலும் இடப்பட்டது. மீண்டும் இத் தவறு நேராது என கூறிக்கொள்கிறேன். தவறுகளை சுட்டி காட்டியதிற்கு நன்றி.
இப்படிக்கு
rooto

thiva said...

அடேய் கெளபோய் மது,
கொழும்பு பல்கலைகழகம் எடுத்த படத்தைப்பற்றி கனக்க கத்தைக்கிறியள்.... மொறடுவை ஏதோ திறமே? அங்கயும் இதே கூத்து தானே? உங்களுக்கும் அது தெரியும் தானே? அதைப்பற்றியும் கதையுங்கோ....

மதுவர்மன் said...

கௌபாய்மது,

அனானி என்றவார்த்தை எவ்வளவு பொருத்தமானது என்று எனக்கு விளங்கவில்லை!

anonymous என்பதற்கு 'அநாமதேயம்' என்ற நல்லதொரு தமிழ் வார்த்தை இருக்கும்போது ஏன் சும்மா உந்த ஒவ்வாத வார்த்தைகள்.

தமிழ் வலைப்பதிவாளர்களிடையே 'அனானி' என்பது பரவலாக பாவிக்கப்படுவது எனக்கும் தெரியும். அறியாமையில் அப்படி பாவிக்கின்றார்கள் என்பதற்காக, நீங்களும் அப்படி செய்யத்தேவையில்லை.

கொஞ்சம் நல்ல தமிழ் சொற்களை அறிமுகப்படுத்துவோமே!

கௌபாய்மது said...

வாங்கோ திவா,

முதலில் இந்த இடுகைக்கு சொந்தக்காரர் நானல்ல.

ஆனாலும் இதன்மேல் நான் கருத்துத் தெரிவித்திருக்கிறேன்.

மொறட்டுவைப் பல்கலைக்கழகம் படத்தினை இன்னும் வெளியிடவில்லை. அதனுடைய முன்னோட்டத்தினை இங்கே காணலாம்.

கருத்துகள் எங்கும் அளிக்கப்படும்.

கௌபாய்மது said...

றூட்டோ,

பரவாயில்லை, மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தைகளாப் படுகிறது. இடுகை சம்மந்தமான சுட்டிகளை இட்டால் நல்லது என்று நான் நினைத்தேன்.

நன்றி.

கௌபாய்மது said...

மதுவர்மன்,

ஓம், அனானி என்பது எவ்வளவு பொருத்தமானது என நினைக்கிறேன். அநாமதேயம் ஒரு நபரினைக் குறிக்குமா எனவும் சந்தேகம். பெயரிலி அல்லது அடையாளமிலி போன்றவற்றை பாவிக்கலாம் என யோசித்திருக்கிறேன். தமிழ் அறிஞர்களிடம் கேட்டுப்பார்க்கலாம்.

நன்றி மதுவர்மன்.

thiva said...

jeya19http://media.desishock.com/231392/UOM-Tamil-FILM-2

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி