Wednesday, May 28, 2008

நீங்கள் வாழ்கின்றீர்களா?

இலத்திரனியல் ஊடகங்களை கட்டியழுதுகொண்டிருக்கும் மக்களே....
நீங்கள் வாழ்வதாக நினைத்திருக்கும் வாழ்க்கை கணக்கை பாருங்கள்.

ஒரு நாளின் 24 மணிநேரத்தை
நித்திரை 8 மணித்தியாலம்,
வாழத்தேவையான பணத்தை சம்பாதிக்க 8 மணித்தியாலம்,
ஆக, உங்கள் வாழ்க்கை என்பது மீதியுள்ள 8 மணி நேரம் என்று பிரிக்க‌லாம்.

அதாவது, மொத்த வாழ்வில் மூன்றிலொரு பங்கை நித்திரையிலும் இன்னொரு மூன்றிலொரு பங்கை உழைப்பிலும் செலவிடும் நீங்கள், உண்மையாக வாழக்கூடியது மூன்றிலொரு பங்கு காலம்தான்.

கொழும்பில் வாழும் சராசரி மனிதனை உதாரண‌த்துக்கு எடுத்துக்கொள்வோம்.
அவர் தினமும் சக்தி TV பார்க்கிறார்.
அதிலே 13 தொடர் நாடகங்கள், ஒரு திரைப்படம் என்பன காட்டப்படுகின்றன.

அதைவிட Good Morning Sri Lanka என்று அரை வேக்காடுகளின் அலம்பல் நிகழ்சசி, cine Choice நெஞ்ச‌ம் மர(ற‌)ப்பதில்லை, புத்தம் புதுசு...போன்றனவும் காட்டப்படுகின்றன.


இவ‌ற்றுக்கான‌ மொத்த‌ நேர‌ம்

13 நாட‌க‌ங்க‌ள் = 6.5 ம‌ணித்தியால‌ங்க‌ள்
1 திரைப்ப‌ட‌ம்= 3 ம‌ணித்தியால‌ங்க‌ள்
செய்தி த‌விர்ந்த‌ ஏன‌ய‌ நிக‌ழ்ச்சிக‌ள் = 2.5 ம‌ணித்தியால‌ங்க‌ள்

ஆக மொத்த‌ம் 10 ம‌ணித்தியால‌ங்க‌ள்.

இதில் வேலைக்கு செல்ப‌வ‌ர் அரைவாசியைதான் பார்ப்பார் என்று வைத்துக்கொள்வோம்.

அவ‌ர‌து வாழ்க்கையில் மீத‌மிருப்ப‌து 3 மணித்தியால‌ங்க‌ள். அதிலும் இய‌ற்கைத்தேவைக‌ளான குளித்த‌ல், காலைக்க‌ட‌ன்க‌ள், உண்ணுத‌ல் போன்ற‌வ‌ற்றிற்கு 2 ம‌ணி நேர‌த்தை செல‌விடுகிறார் என்றும் வைத்துக்கொள்ளுவோம்.

ப‌ய‌ண‌த்தில் செல‌விடும் நேர‌த்தை 30 நிமிட‌ம் என்று வைத்துகொள்ளுவோம்.

ஆக‌வே அவ‌ர் வாழும் நேர‌ம் நாளொன்றுக்கு 30 நிமிட‌ம்.அதாவ‌து 1/48 நாள்.

48 வ‌ய‌தான‌ ஒருவ‌ர் வாழ்ந்த‌ கால‌ம் 1 வ‌ருட‌ம்...

எனவே நீங்கள் வாழ்வதாக நினைக்கிறீர்களா?


எடுகோள்க‌ள்‍‍ : ச‌ராச‌ரி ம‌னித‌னின் வாழ்வு தின‌மும் ஒரேமாதிரியாக‌த்தான் க‌ழிகிற‌து.
மீத‌மிருந்த‌ அரை ம‌ணி நேர‌த்துக்கு அவ‌ர் TV பார்க்க‌வில்லை.

Tuesday, May 27, 2008

பெண்ணியமெனும் பெயரினிலே.....

பெண்ணியம் என்ற பெயரில் கவிதை, கதை கட்டுரைகளூடாக விதைக்கப்படும் விஷ விதைகளை பார்த்து வெறுத்துப்போய் இப்பதிவை இடுகின்றேன். நான் பெண்ணியம் பற்றி எதிர்க்கருத்துக்களை கொண்டவனல்ல. பெண் விடுதலையின் அவசியம் பற்றியோ Gender Equality இன் அவசியம்பற்றியோ எந்தவிதமான எதிர்கருத்துக்கும் இடமில்லை. என்றாலும்,

அனேகமாக பெண்விடுதலை பற்றிக்கதைக்கும் எல்லோரும், ஆணாதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பதை விடுத்து, ஆண்களெல்லோரும் பெண்களின் எதிரிகள் என்கிறமாதிரியாகத்தான் கூப்பாடு போடுகின்றனர். ஆண்களும் பெண்களும் இப்பூமியில் ஒன்றாக வாழவேண்டியவர்கள். ஆண்களை ஒதுக்கி பெண்களோ பெண்களை ஒதுக்கி ஆண்களோ வாழமுடியாது/கூடாது. ஆண்களிலாமல் வாழ, சந்ததிகளை உருவாக்கமுடியும் என்று கூறும் பெண்களே! ஆண்களிலாத சமுதாயத்தை உங்களால் உருவாக்க முடியுமா? முடியாதல்லவா? ஆண்களை எதிரியாக்கிகொண்டு ஆண்களும் வாழும் ஒரு சமுதாயதில் பெண்கள்மீதான வன்முறை, குடும்ப வன்முறையிலிருந்து சமூக வன்முறையாய்ப்போகும் ஒரு சூழ்நிலைதான் உங்கள் எதிர்பார்ப்பா?

பண்பாட்டு புரட்சியொன்றால் வென்றெடுக்கப்படவேண்டிய பெண்ணுரிமையை, ஆணெதிர்ப்பு சிந்தனைகளை தூண்டி பிரச்சினையை இன்னும் சிக்கலாக்க நினைக்கும் உங்களின் உள்நோக்கம்தான் என்ன? பெண்கள் மீதான அடக்குமுறையும் வன்முறையும் சமுகத்தில் புரையோடிப்போயுள்ளது. இதற்கு காரணம் நிச்சயமாக இந்த ஆணாதிக்க சமுதாய அமைப்புத்தான். காலங்காலமக விஷமூட்டப்பட்டு வந்த எங்களின் சிந்தனைமுறையை மாற்றுவதென்பது இலகுவான காரியம் இல்லைத்தான். ஆனாலும் முடியாத காரியமல்லவே?

சமயங்களும், காலங்காலமாக சொல்லப்பட்டுவந்த புராணக்கதைகளும், தற்போது தொலைக்காட்சிகளில் சீரியல்களில் காட்டப்படும் பிற்போக்குத்தனமான கருத்துக்களும் விதைக்கும் பெண்ணடிமைத்தனமான கருத்துக்களை தாண்டி இச்சமுதாயம் (பெண்களும் ஆண்களும்) பயணிக்கவேண்டிய தூரம் மிக நெடிது.

இச்சமயத்தில் ஒட்டுமொத்த ஆணாதிக்க சிந்தனைக்கும், பெண்கள்மீது வன்முறைபுரியும் தனிமனிதர்களுக்கும்(இருபாலாரும் இதிலடங்குவர்) எதிராக ஒட்டுமொத்த சமுதாய, பண்பாட்டு, சிந்தனை மாற்றத்தை உருவாக்க முன்வரவேண்டும்.

அதை விடுத்து, ஆண் vs பெண் வாதங்கள், கடுமையான சொற்பிரயாகங்களால் ஆண்களை வசைபாடுதல், ஐரோப்பிய பெண்ணியத்தை இறக்குமதிசெய்தல், பின்நவீனத்துவ பெண்நிலைவாதம் என்றபெயரில் பெண்களை விளிம்புநிலை மனிதர்களாக்குதல் போன்ற முட்டாள் தனமான விடயங்களை விடுத்து, ஆண் பெண் முரன்பாட்டை பகை முரண்பாடாக்கி, எக்காலத்திலும் தீர்க்கமுடியாததாக ஆக்காமல், சினேக முரண்பாடாகவே தீர்ப்பதற்கு முன்வரவேண்டும்.

மனிதர்களை எந்தவொரு கோஷத்தின் கீழும் ஒன்றுசேரவிடாது, தனித்தனித் தீவுகளாக்கி சுலபமாக சுரண்டுவதற்கான வழிமுறைகளே இப்போது நடைபெறுகின்றன. அதற்கு பெருந்தடையாக இருப்பது குடும்பம் என்ற அடிப்படை அலகுதான். குடும்பக்கட்டமைப்பை உடைக்கும்படிக்குத்தான் இன்றய கருத்துக்கள் கட்டமைக்கப்படுகின்றன.

மனிதன் என்பவன் தனி அலகு, அவன் சமூக விலங்கு அல்ல.
குடும்பமே பெண்கள் மீதான வன்முறைக்கு அடிப்படை காரணம். அதனால் குடும்பத்தை உடையுங்கள்.
சேர்ந்து வாழும்(living together) கலாசாரத்துக்கு மாறுங்கள்.
ஆணுக்கு பெண்ணும்
பெண்ணுக்கு ஆணும் எதிரிகள்.....

மொத்தத்தில் இவர்கள் சொல்வதெல்லாம் மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துங்கள் என்பதுதான்.

இப்படியான கருத்துக்களை விதைப்பவர்கள் எல்லோரும் என்னைப்பொறுத்தவரையில் மக்களை பிரித்து தனி அலகுகளாக்கி சுரண்ட நினைக்கும் சக்தியொன்றின் ஏஜென்டுகளே. இப்படியான வரட்டு பெண்ணியம் கதைப்பவர்கள், தாங்கள் ஏஜென்டுக்களல்ல என்று நம்பினால், ஆண் எதிர் பெண் என்ற நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு, பெண்ணடிமைத்தனம், பெண்கள்மீதான வன்முறை, பால்நிலை சமமின்மை என்பவற்றுக்கு எதிராக போராட ஒன்றிணையவேண்டும்.

பி.கு:

இதுசம்பந்தமாக அண்மையில் படித்து வெறுத்துப்போன கவிதை ஒன்று...
வீரியம் குறைந்த ஆண்குறி...!

இதைவிட, தாயகம்(2008 ஏப்ரல்-ஜூன்) இதழில் சந்திரகாந்தா முருகானந்தன் என்பவர் எழுதிய கவிதையில் ஆண் என்ற கொடூரனால் குடும்ப வன்முறைக்குட்படுத்தப்பட்ட தான், முலை யோனி ஆகியவற்றை துறப்பதாக எழுதியிருந்தார். உண்மையில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் இவ்வாறு எழுதியிருந்தால் விரக்தியால் எழுந்த வார்த்தைகளெனலாம். ஆனால் இக்கவிஞர் பாதிக்கப்பட்டிராவிட்டால் இக்கவிதை போன்ற அயோக்கியத்தனம் வேறெதுவுமில்லை.

Tuesday, May 20, 2008

குழப்பம்

Saturday, May 17, 2008

இலங்கை, கிழக்கு மாகாணசபைத்தேர்தல்(2008) சொல்லும் பாடம் என்ன (தேர்தலுக்கு பின்)?

(2008-05-16, தமிழ் பூங்கா) கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் ஒருவாறாக முடிந்துவிட்டது. யாரை முதலமைச்சராக நியமிப்பது என்பதில் பெரிய இழுபறிகளும், கருத்துமோதலகளும், ஆரூடங்களும் முடிவுக்கு வந்து, அந்நியமனமும், பதவியேற்புவைபவமும் அண்மையில் (2008-05-16) நடந்துவிட்டது. இறுதியில் ஜானாதிபதி எடுத்த முடிவே நடைமுறைப்படுத்தபட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால், அதிகம் கோபமடைந்திருப்பவர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள். முக்கியமாக ஹிஸ்புல்லாவும் அவரது ஆதரவாளர்களும். அரசாங்கத்தின் முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், ஒன்று சேர்ந்து ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக நியமிக்காவிட்டால் தாங்கள் அரசாங்கத்திலிருந்து விலகப்போவதாக அறிவித்திருந்தும், அரசாங்கத்தை சேர்ந்த சிங்கள அமைச்சர்கள் பலரும் பிள்ளையான் முதலமைச்சராக வருவதையே விரும்பியிருந்தனர்.

இப்பொழுது, பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதானது, அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அங்கத்தவர்களை விசனமடையச்செய்துள்ளது. கிழக்குமாகாண சபையிலே ஹிஸ்புல்லாவுடன் சேர்ந்து, இன்னும் மூன்று அரச கூட்டணி முஸ்லிம் வேட்பாளர்கள் தனித்தியங்க முடிவெடுத்திருப்பதாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அத்துடன், பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், ஒட்டுமொத்த முஸ்லிம்கள் (எதிர்க்கட்சிகள், ஆளும்கட்சி வேட்பாளர்களை சேர்த்து) என்று பார்த்தால் முஸ்லிம் வேட்பாளர்களே பெரும்பான்மையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள், இந்நியமனத்திற்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளார்கள் என்றும் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

மொத்தத்திலே இத்தேர்தல், சுமுகமாக நடந்ததாக அரசாங்கம் பிரச்சாரப்படுத்திக்கொண்டாலும், சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் இதை ஒரு மோசமான தேர்தல் என வர்ணித்திருக்கின்றன. அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் இது குறித்து தமது கவலையையும் தெரிவித்திருந்தன. எதிர்க்கட்சிகள் தலைநகரிலே இந்த தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தியிருந்தன. சராசரியாக் 55-60 வீதமான மக்களே வாக்களிதிருந்தனர். திருகோணமலையில் சில பிரதேசங்களில் தமிழமக்கள் தேர்தலை புறக்கணிததிருந்த நிலையும் காணக்கூடியதாக இருந்ததாக தமிழ் தேசிய கூட்ட்மைப்பினர் தெரிவித்திருந்தனர். தேர்தலுக்கு முன்பான பிரச்சார நடவடிக்கைகளில் ஆளும்தரப்பு தவிர்ந்த ஏனைய கட்சி வேட்பாளர்கள் பல சிரமக்களுக்கு மத்தியிலே தமது பிரச்சார பணிகளை செய்திருந்தனர். வாக்காளர்களும், அரச எதிர் வேபாளர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தனர். அரச கட்சியினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக, அரச ஊடகங்கள் பக்கச்சார்பாகவே பாவிக்கப்பட்டிருந்தன, தேர்தல் நாளில் சில வாக்குச்சவடிகளிக் சுயாதீனகண்காணிப்பாளர்களோ, எதிர்க்கச்சி உறுப்பினர்களோ அனுமதிக்கப்படவில்லை, என்பன போன்ற விடயங்களை மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலைய தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து, மோர்ணிங் லீடர் பத்திடிரிகைக்கு வழங்கிய பேட்டியிலே தெரிவித்திருந்தார்.

தேர்தலின் முன், தேர்தலில் போட்டியிட்ட பலருக்கும் அரசினால் பல்வேறு வாக்குறுதிகள் வழக்கப்பட்டிருந்த போதிலும், அவை வாய்வழி வாக்குறுதிகாளாக இருந்தபடியால், அவ்வாக்குறுதிகள் பலராலும் பலவாறாக விளங்கிக்கொள்ளப்பட்ட நிலையில், இறுதியில் அரச தலைவர் எடுத்த சுயாதீன் முடிவே நடைமுறைப்படுத்தபட்டிருக்கின்றது. முஸ்லிம் தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டு, தமிழ் தரப்பிலொருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதானது, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயுள்ள விரிசலை மேலும் அதிகமாக்கும் என பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளநிலையில், இது சம்பந்தமான விளைவுகளை இனிவரும் காலங்களிலேயே அவதானிக்கமுடியும். அதிலும் ஹிஸ்புல்லாவும், இன்னும் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் தனித்தியங்க முடிவெடுத்திருப்பது மாகாணசபையை நிர்வகிப்பது சம்பந்தமாக பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாமென தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதானது, எதிர்காலத்தில் அவர்கள் பெயரில் இடம்பெறுகின்ற வன்முறைகள் குறைந்துபோவதற்கு வழிவகுக்கலாம் என சில ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.கடந்த காலங்களிலே பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும், பல்வேறு நாடுகளும் அவர்களை பலமுறை, மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும், சிறுவர்களை படையணிகளில் சேர்த்தல் சம்பந்தமாகவும் குற்றம்சாட்டியிருந்தன. அவர்கள் இப்போது சட்டரீதியாக ஆட்சியில், ஜனநாயகத்தில்(?) இணைந்திருப்பதானது, அவர்கள் கொஞ்சமாவது வன்முறைகளை குறைக்கும்படி தூண்டலாம் என்பதே எதிர்பார்ப்பு. அவ்வாறு ஒரு மாற்றம் நிகழ்ந்தால் அது கிழக்கு மாகாண மக்களுக்கு நன்மையாகவே அமையும். அதன் ஒரு சமிக்ஞையாகத்தான், தேர்தலுக்கு முன்பாக இரண்டொரு தடவைகளில், அவர்களது அமைப்பிலிருந்த ஐம்பதிற்கும் அதிகமான சிறுவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

யாரை முதலமைச்சராக நியமிப்பது என்று, அரசதலைவர் செயலகத்தில் கலந்துரையாடல்கள் நடந்தபோது, முஸ்லிம்களும் தமிழர்களும் சுழற்சிமுறையில் முதலமைச்சர் பதவிவகிப்பது என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டபோது, 'அப்படியானால் சிங்களவர்களுக்கும் அவ்வுரிமை வழக்கப்படவேண்டும்' என அரசதலைவர் தெரிவித்திருந்ததாக ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தார். அப்படியான சுழற்சிமுறயிலும், ஹிஸ்புல்லவே முதலில் முதலமைச்சராக நியமிக்கப்படவேண்டும் என முஸ்லிம் தரப்பினர் கேட்டுக்கொண்டபோதிலும், அரசதலைவர் பிள்ளையானே முதலில் முதலமைச்சராக நியமிக்கப்படவேண்டும் என பிடிவாதமாக நின்றதால், சுழற்சிமுறை என்ற வாக்குறுதியிலும் ஹிஸ்புல்லா நம்பிக்கையீனத்தை வெளியிட்டிருந்தார். அதற்காகவே தாம் தனித்தியங்கப்போவதாக அறிவித்திருந்தார்.

மொத்தத்தில், இப்பகுதியில், கிழக்கு மாகாணசசபை தேர்தலின் முன் எழுதிய ”இலங்கை, கிழக்கு மாகாணசபை தேர்தல் சொல்லும் பாடம் என்ன (தேர்தலுக்கு முன்)” என்பதில் குறிப்பிட்டதுபோன்று, தேர்தலும் சரி, தேர்தலின் பின்னான நியமனங்களும் சரி, மூவினங்களுக்குமிடையிலான, யார் ஆள்வது என்பது தொடர்பான தீவிர போட்டியையே காட்டுகின்றது. இனங்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கையீனத்தையே காட்டுகின்றது. மக்களை கையாலாகாத நிலைமையையே காட்டுகின்றது.

இங்கே இந்நாட்டில் தங்களுக்கான தலைவர்களை தீர்மானிப்பது, மக்களல்ல, மாறாக ஒருசில மனிதர்களே தீர்மானிக்கின்றார்கள். இதுதான் இலங்கையில் நாம் காணக்கூடிய ஜனநாயகம். ஒருசில ஜனங்களின் நாயகம்.

மதுவர்மன் - Mathuvarman (2008-05-16)

என்னவானாலும் பெண்கள், பெண்கள் தான்!

இவை 2008-05-16 இல் இலங்கை, கொழும்பு கோட்டை தற்கொலை குண்டுவெடிப்பின் பின்னான புகைப்படங்கள். அவை பற்றி நான் விபரிக்கவேண்டியதில்லை. தற்கொலை குண்டுதாரி குண்டு பொருத்திய மோட்டார் சைக்கிளை ஒட்டிவந்து, கலகமடக்கும் பொலிசார் ஏற்றப்பட்டு தயாராகநின்ற பேருந்தொன்றில் மோதினார் என்று தெரியவருகின்றது. அண்மைய தகவலக்ளின் படி 9 பொலிசாரும் 4 பொதுமக்களும் உட்பட 13 பேர் கொல்லப்பட்டார்கள். 80 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். அவர்களுள் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகின்றது.

தங்கள் பொலிஸ் சகாக்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் போயுள்ளதை பார்த்து, இங்கே படத்தில் பெண் பொலிஸார்கள் என்னமாய் உடைந்துபோயுள்ளார்கள் பாருங்கள். இது பெண்களுக்கேயுரித்தான பண்பு. பெண்கள் பெண்கள் தான்.

1ue3lwzdxugivr252c30ec45_main11

ஏனைய புகைப்படங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. போர் என்றுமே வலிகள் நிறைந்ததுதான்.


1ue3lwzdxugivr252c30ec45_main2

1ue3lwzdxugivr252c30ec45_main31ue3lwzdxugivr252c30ec45_main4

1ue3lwzdxugivr252c30ec45_main6

1ue3lwzdxugivr252c30ec45_main7


1ue3lwzdxugivr252c30ec45_main9

1ue3lwzdxugivr252c30ec45_main10

1ue3lwzdxugivr252c30ec45_main11

நன்றி: Daily Mirror (www.dailymirror.lk)

மதுவர்மன் - mathuvarman (2008-05-17)

Sunday, May 11, 2008

தமிழ்மணம் பதிவுப்பட்டையைச் சீராக்கல்

(Mathuvathanan Mou / மதுவதனன் மௌ)
உங்கட வலைப்பதிவின் வார்ப்புருவை அழகாக செய்யதிருப்பீர்கள். ஆனால், தமிழ்மணம் பதிவுப்பட்டை மட்டும் இடது பக்கமா சுளுக்குப் பிடித்த கழுத்துப்போல வந்து நின்று அழகை கெடுத்துக்கொண்டிருக்கும். அந்த பட்டையை நடுவில கொண்டுவந்து விட்டா நல்லாயிருக்குமல்லவா?

இதுக்கொன்றும் பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டியதில்லை. சும்மா இரண்டு வரியை உங்கட வார்ப்புருவில சேர்த்துவிட்டாச் சரி. அவ்வளவுதான்.

உங்கட வலைப்பதிவில Layout->Edit Html இக்குப் போய் Expand Widget Template இனைச் சொடுக்குங்கள் கீழே படத்தில் காட்டியவாறு.அந்த HTML வார்ப்புருவில தமிழமணம் பதிவுப்பட்டையின் இரண்டாம் பகுதியை கண்டுபிடியுங்கள். இதுதான் அந்த இரண்டாம் பகுதி.பிடிச்சிட்டீங்களா? சரி நீங்கள் செய்யவேண்டியது இந்த இரண்டாம் பகுதிக்கு மேல என்பதையும் கீழே என்பதையும் சேர்த்துவிடுங்கள் கீழே உள்ளவாறு


இப்போது உங்கட வார்ப்புருவில பதிவுப் பட்டை நடுவில வந்து சிரிச்சுக்கொண்டிருக்குமே.

உதாரணத்துக்கு தமிழ்பூங்காவின்ர தமிழ்மணப் பதிவுப்பட்டையை கீழே பாருங்கோ.

தொடர்புபட்ட சுட்டிகள்:
http://www.kuzhali.co.nr/
http://kuzhali.blogspot.com/2007/03/blog-post.html
http://blog.thamizmanam.com/archives/51
http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

வாயினால்... பிறந்தன குழந்தைகள்!

கொஞ்சம் பொறுங்கோ! தலைப்பை பார்த்திட்டு ஓடி வந்திருப்பியள்... கொஞ்சம் ஆசுவாசபடுத்திக்கொள்ளுங்கோ.

தலைகீழா நிண்டாலும் வாயாலை குழந்தை பிறக்குமே...? சிலவேளை தலைகீழா நிண்டால் வாயாலை பிறக்கும் தானே எண்டு நீங்கள் நினைப்பியள். அது பிழை. தலைகீழா நிண்டாலென்ன தலைமேலா நிண்டாலென்ன குழந்தை வழமையா பிறக்கிறமாதிரி தானே பிறக்கும். ஒண்டில் இயற்கையா பிறக்கவேணும் இல்லாட்டி, சத்திரசிகிச்சை செய்து எடுக்கவேணும்.

தலைப்பை கொஞ்சம் மாத்தவேணும். சுருக்கமா போடுறதுக்காக அப்பிடி போட்டுட்டன். தலைப்பு எப்பிடி வரவேணுமெண்டால்..

“வாயினால் குடித்ததால் பிறந்தன குழந்தைகள்” எண்டு வரவேணும். அதுவும் 'வாயினால் பாயாசம் குடித்ததனால், பிறந்தன குழந்தைகள்'.

இப்ப உங்களுக்கு கொஞ்சம் விளங்குமெண்டு நினைக்கிறன். தலைப்பை “பாயாசத்துக்கு பிறந்ததுகள்...” எண்டு போடுவமோ எண்டும் நினைச்சன். பிறகு ஆகக் கேவலமாய் போடும். பரவாயில்லை, தொடர்ந்து வாசியுங்கோ.

எங்கையெண்டு தெரியுமே? வேறையெங்கை... இந்தியாவிலைதான்...

எனக்கு இது என்னண்டு தெரியுமெண்டு கேட்பியள்... வேறை என்னண்டு, எங்கடை, இலங்கையின்ரை நம்பர் வண் சக்தி ரீவீயிலை தான் காட்டினவங்கள். அதுவும் 2008-05-11 ஞாயிற்றுக்கிழமை.

தசரதன் எண்டவர் தான் அப்பாவாம்.. அவருக்கு மூண்டு மனிசிமாராம்... அவையின்ரை பேரும் எனக்கு ஞாபகம் வருகுதில்லை. ஆ.. ஒராள் கோசலை.. மற்றாள் கைகேயி... மற்றாள் சுமித்திரை.

அப்ப, வழமை மாதிரி.. தசரதனும், மூண்டு மனிசிமாரும் சந்தோசமா வாழ்ந்து வந்தினமாம்.. ஆனால் பாருங்கோ.. தசரதனுக்கு நீண்டகாலமா ஒரே கவலையாம்.. அதென்னண்டால்.. அவையளுக்கு கனகாலமா பிள்ளையளில்லையாம்.... மற்றாக்கள் தங்கடை பிள்ளையளோடை கொஞ்சிக்குலவுறதை பார்த்து தசரதனுக்கு ஒரே ஏக்கமாம்..

அப்ப இப்பிடி இருந்துவரும் காலத்திலே.. ஒருநாள் யாரோ ஊரிலை பெரியாக்கள் தசரதனுக்கு ஆலோசனை சொல்லிச்சினமாம், யாகமொண்டு செய்தால் உனக்கு குழந்தை பிறக்கும் எண்டு. இவ்வளவு நாளும் குழந்தை பெற்றுக்கொள்ளுறதுக்கு வழி தெரியாமலிருந்த தசரதனுக்கு சொல்லவா வேணும்.. சந்தோசத்தாலை துள்ளிக்குதிச்சாராம்...

தசரதன், உடனை போய்.. யாகம் செய்தாராம்.. யாகம் எண்டால் என்னெண்டு உங்களுக்கு தெரியும் தானே? உந்த எங்கடை சைவக்கோயில்களிலை செய்வாங்கள்.. நடுவிலை நெருப்பெரிச்சு, கண்டது கடியது எல்லாத்தையும் அதுக்குள்ளை ஊத்தி, ஏதோவெல்லாம் விளங்காத பாஷையிலை சொல்லுவாங்கள்.. அதேதான்.. விளங்குதுதானே...!

அப்ப தசரதன் யாகம் செய்துகொண்டிருக்கேக்கை.. அந்த நெருப்பிலை ஆரோ ஒராள் தோன்றி ஒரு கிண்ணத்திலை பாயாசத்தை தசரதன்ரை கையிலை குடுத்திட்டு மறைஞ்சிட்டாராம்... சொக்கிப்போன தசரதன்.. பாயாசம் ஆறமுதல்.. ஓடிப்போய்.. மூண்டு மனிசிமாருக்கும் குடிக்கக் குடுத்தாராம்...

அவை குடிச்ச வடிவை பார்த்தியள் எண்டால்... நான் பார்த்தனான்.. அப்ப... மூண்டு மனிசிமாரிலை.. ஒராள் கொஞ்சம் கூடக்குடிச்சிட்டாவாம்.. மூண்டாவது மனிசி தான் அவ.. சுமித்திரை...

அப்ப, பாயாசம் குடிச்சது மட்டும் தான்.. வேறை ஒண்டுமே தசரதனுக்கும்.. அவற்றை மூண்டு மனிசிமாருக்கும் இடையிலை நடக்கேலை... ஆனாலும், பாயாசம் குடிச்சதாலை.. மூண்டு மனிசிமாரும் கர்ப்பமாகிட்டினமாம்..

உண்மையாய் தான் சொல்லுறன்.. அவை வேறை ஒண்டுமே செய்யேல்லை... தசரதன் குடுத்த பாயாசத்தை குடிச்சது மட்டும் தான்... என்ன இழவு பாயாசமோ அது தெரியாது.. !(?)

அப்ப, கொஞ்ச காலத்துக்கு பிறகு.. மூண்டு மனிசிமாருக்கும் பிள்ளைகள் பிறந்திச்சுதாம்.. அதிலையும் பாருங்கோ.. நான் முதலிலை சொன்னன்.. ஒராள் கொஞ்சம் கூட பாயாசம் குடிச்சா எண்டு.. சுமித்திரை.. அவவுக்கு இரண்டு பிள்ளைகளாம்.... அப்ப, இப்ப உங்களுக்கு விளங்குது தானே பாயாசம் குடிச்சதாலை தான் பிள்ளையள் பிறந்தது எண்டு.

கோசலைக்கு ஒண்டு, கைகேயிக்கு ஒண்டு, சுமித்திரைக்கு இரண்டு எண்டு மொத்தம் நாலு பிள்ளையள், தசரதனுக்கு. தசரதனுக்கு சந்தோசம் தங்கமுடியேல்லை.. மேலையும் கீழையும் எண்டு குதிச்சாராம்.. பிள்ளையளுக்கு முறையே இராமன், பரதன், இலட்சுமணன், சத்துருக்கன் எண்டு பேர் வச்சினமாம்.

பாத்தீங்களோ நடந்ததை.... பிள்ளை பெறத்தெரியாமல் இருந்த தசரதனுக்கு இப்ப ஒரேயடியா நாலு பிள்ளையள்.. அதுவும் அவராலை பிறக்கேல்லை.. அவர் ஒண்டுமே செய்யேல்லை.. மூண்டுபேரையும் தொடவேயில்லையாம்... சும்மா ஒரு யாகம் செய்தார்.. சுடச்சுட பாயாசம் கிடைச்சிது.. அதை மனிசிமாருக்கு குடுத்தார் அவ்வளவுதான்...

அப்ப இதை பார்த்த எனக்கு பெரிய அதிசயமா இருந்திச்சு. எங்கடை சமூகத்திலையும் பாருங்கோ.. எத்தினையோ பேர் இன்னும் பிள்ளையள் பெறாமல் இருக்கினம். அவைக்கும் தசரதன் மாதிரி எப்பிடி பிள்ளை பெறுறது எண்டு தெரியாமல் தான் இருப்பினம் எண்டு நான் நினைக்கிறன்.. நீங்கள் என்ன நினைக்கிறியள்..?

அப்ப, தசரதன் இந்தியாவிலை இப்பிடி வலு ஈஸியா பிள்ளை பெத்திருக்கேக்கை, இதை அவரைமாதிரியே பிள்ளையள் இல்லாம வாடுற ஆக்களுக்கு தெரியப்படுத்தவேணும் எண்டு தான் இதை இப்பிடி ஆராஞ்சு எழுதுறன்... பாயாசம் மட்டும் போதுமுங்கோ.... ஆனால் யாகம் செய்யவேணும்...

அப்ப செய்யவேண்டியது ஒண்டு தான்.. தசரதனை மாதிரி யாகம் செய்யுங்கோ.... சுடச்சுட பாயாசம் கிடைக்கும்.... தசரதனுக்கு மூண்டு மனிசிமாரெண்டதாலை.. கொஞ்சம் கூட பாயாசம் கிடைச்சிருக்கும்.. உங்களுக்கு ஒரு மனிசியெண்டால்.. கொஞ்சம் குறைவாய் தான் கிடைக்கும்.... பரவாயில்லை... சூடாறுறதுக்கு முதல் மனிசிக்கு குடிக்க குடுங்கோ.... அல்லது மனிசிமார் இதை வாசிச்சா, சூடாற முதல் குடியுங்கோ...

ஒண்டு.. கனக்க பாயாசம் கிடைச்சாலும்.. அளவாய் குடியுங்கோ.. தெரியும் தானே! சுமித்திரை கொஞ்சம் கூட குடிச்சு இரண்டு பிள்ளையள் பிறந்தது... ஆகக் கனக்க குடிச்சியள் எண்டால், பிறகு கனக்க பிள்ளையள் பிறந்திடுங்கள், கவனம்.

சரி, பகுத்தறிவுவாதியள் எண்டு சொல்லுறாக்கள், நினைப்பீங்கள்.. என்ன வயித்துக்குள்ளையோ (இரைப்பை) பிள்ளை உருவாகுதெண்டு.. அதெல்லாம் ஆருக்கப்பச்சி தெரியும்? இரைப்பையிலை உருவானா என்ன, கருபையிலை உருவானா என்ன.. எங்களுக்கு குழந்தை கிடைச்சா சரி.. உந்த விஞ்ஞானம், பகுத்தறிவு எண்டு சொல்லுறாக்கள் கண்டதையும் சொல்லுவினம்.. உடலுறவு, கருப்பை அது இதெண்டு... உதெல்லாம்.. சும்ம்மா.... பொய்.. தேவையில்லாதது... பாயாசம் மட்டும் இருந்தா போதும்

அதுக்கென்ன... அவை சொல்லுறதுகளையும் சரியெண்டு எடுத்தால்.. இரைப்பையும் கருப்பைக்கு பக்கத்திலை தானை இருக்கு.. எல்லாம் வயித்துக்குள்ளை தானே இருக்கு. எல்லாம் ஒண்டுதான்.. அப்ப பாயாசமெண்டு....? இதுவும் அதுதான்... அங்கை(?)யிருக்கிறது.. இங்கை கிண்ணத்திலை இருக்கு... சுடச்சுட.... அவ்வளவுதான்...

- மதுவர்மன் mathuvarman (2008-05-11)-

Saturday, May 10, 2008

கவனம், நகைக்கடைகளில் நீங்கள் கொள்ளையடிக்கப்படலாம்! (சம்பவத்தின் ஒலிப்பதிவுடன்)

தங்கநகைகள் வாங்கும்போது நாங்கள் என்ன என்ன விடயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று உண்மையான சம்பவங்களுடன் இங்கே விளக்கப்படுகின்றது. மிகச்சரியான விடயங்கள் கட்டுரையின் இறுதியிலேயே குறிப்பிடப்படுகின்றன, ஆகவே கடைசிவரை வாசியுங்கள். சம்பவத்தின் ஒலிப்பதிவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

(2008 - 05 - 06 செவ்வாய்க்கிழமை) என்னுடைய நண்பரொருவருக்கு (சக பணியாளர் - பெண்) பரிசளிப்பதற்காக, தங்கத்தினாலான பதக்கமொன்று வாங்குவதற்கு, அண்மையில், நானும், இரண்டு நண்பர்களும் (சக பணியாளர்கள் - பெண்கள்) கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள பிரபல்யமான (நான்கைந்து மாடிகள் கொண்ட) ‘வெள்ளவத்தை நித்தியகல்யாணி' நகைக்கடைக்கு (Wellawatta Nithyakalyani Jewellery) சென்றிருந்தோம். தங்கத்தின் விலை உலக அளவில் அதிகரித்திருப்பதால், ஆபரணத்தின் விலையும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம்.

கடையிலே பலவேறுபட்ட பதக்கங்களையும் பார்த்துவிட்டு, ஓரளவு மனதுக்கு பிடித்த ஒன்றை எடுத்து அங்கே நின்ற இளஞரிடம், விலையை கேட்டபோது, கணிப்பானை (Calculator) எடுத்து கண்டபடி தட்டிவிட்டு, விலை 7100 ரூபாய்கள் என்று சொன்னார்.

என்னுடைய சந்தேகம், விலை கொஞ்சம் அதிகமாகவே பட்டது எனக்கு. ஆகவே ஆராயும் நோக்கத்தோடு ‘எப்படி விலையை கணிக்கின்றீர்கள்?” என்று அவ்விளைஞரிடம் கேட்டேன்.

அவர் சொன்னார் “இப்போது நகையிலுள்ள (22 கரட்) தங்கத்த்தின் அளவுக்கான விலை + 12% சேதாரமான தங்கத்தின் விலை + செய்கூலி என்ற கூட்டுத்தொகையுடன், அக்கூட்டுத்தொகைக்கான 6% வரியையும் உள்ளடக்கவேண்டும்” என்றார். (இப்படி வரியெதுவும் நடைமுறயில் இல்லை என்பது பின்பு அறிந்துகொண்டது)

அவர் சொன்னவற்றை உள்வாங்கிக்கொண்டு, அவரிடமே கணிப்பானை (Calculator) வாங்கி நானே கணிக்க ஆரம்பித்தேன். ஆபரணத்திலுள்ள தங்கத்தின் அளவு அதிலே குறிப்பிடப்பட்டிருந்தது (1.36g)

8 g தங்கத்தின் விலை இப்போது (2008 மே) ரூபா 23 120/=

ஆகவே 1.5 g தங்கத்தின் விலை = ரூ (23 120/8) x 1.36 = ரூ 3930 --------- (1)

12% சேதாரமான் தங்கத்தின் அளவு = (1.36/100) x 12 g = 0.1632 g

சேதாரமான தங்கத்தின் விலை = (23 120/8) x 0.1632 = ரூ 471.648 --------(2)

செய்கூலி (அவர் சொன்னது) = ரூ 1200.00 --------(3)

இப்போது கூட்டுத்தொகை = 3930.00 + 471.648 + 1200.00 = ரூ 5601.648

6% வரித்தொகை = ரூ (5601.648/100) x 6 = 336.09888 ----------(4)
(வரி 6% தான் என்பதை இன்னொருவரிடமும் உறுதிப்படுத்திக்கொண்டேன்)

ஆகவே இப்போது பதக்கத்த்தின் இறுதி விலை = (1) + (2) + (3) + (4)
= ரூ 3930.00 + 471.648 + 1200.00 + 336.09888
= ரூ 5937.75
பார்த்தீர்களா இப்போது விலை, அவ்ர் சொன்ன விலையைவிட 1162 ரூபாய்கள் குறைவாக வருகின்றது. இப்படித்தான் அப்பாவி மக்கள் இந்த வியாபாரிகளால் ஏமாற்றப்படுகின்றார்கள். முக்கியமாக, புடவைக்கடைக்காரர்களும், நகைக்கடைக்காரர்களும் இவ்விடயத்தில் விண்ணர்கள்.

இறுதியில், பதக்கத்திற்கு 7100 ரூபா விலை சொன்ன இளைஞரை பார்த்து நாங்கள் மூவரும் நக்கலாக சிரிக்கவேண்டியதாயிற்று. அவருக்கு சூடாக இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டு அப்பால் நகர்ந்தோம்.

அதே நகைக்கடையின், தங்க மோதிரங்கள் விற்கும் பகுதிக்கு சென்று மோதிரங்களை பார்த்தோம். அங்கே வேறொரு இளைஞர், நாங்கள் மோதிரமொன்றை காட்டி விலையை கேட்க, கணிப்பானை (Calculator) எடுத்து வேகமாக தட்டிவிட்டு, 5500 ரூபாய்கள் என்றார். முந்தைய சம்பவத்தை பற்றி அறிந்திராதவர் அவர்.

இங்கேயும் விலை கணித்த விதத்தை விபரமாக கேட்கவேண்டியதாயிற்று. முன்னர் கேட்டது போலவே இவ்விளைஞரிடம் கேட்க ஆரம்பித்தபோது, சுதாகரித்துக்கொண்ட இளைஞர், மீண்டுமொருமுறை கணிப்பானை (Calculator) கடுமையாக தட்டிவிட்டு, இப்போது 4500 ரூபாய்கள் என்றார். எங்கள் மூவருக்குமோ சிரிப்பை அடக்கமுடியவில்லை :). அவருக்கும் நக்கலாக இரண்டு வார்த்தைகள் சொல்லவேண்டியதாயிற்று. அவரும் கூட 6% வரியை உள்ளடக்கியதாக சொன்னார்.

(2008 - 05 - 10 சனிக்கிழமை) மேற்படி விடயம் சம்பந்தமாக வேறுசில பிரபல்யமான நகைக்கடைகளுடன் கலந்தாலோசிக்கவேண்டி, சுவர்ணமஹால் (Swarna Mahal Jewellers) நகைக்கடைக்கு தொலைபேசி எடுத்தேன். அவர்களை, 'எவ்வாறு நீங்கள் ஆபரணங்களுக்கு விலைகளை மதிப்பிடுகின்றீர்கள்' என்று கேட்டபோது, ஆபரணத்தில் காணப்படும் தங்கத்தின் விலை (8g 24000.00) + சேதாரமான (அங்கே 10%) தங்கத்தின் விலை + செய்கூலி (சராசரி 1000 ரூபாய்) என்று சொன்னார்கள்.

நித்தியகல்யாணியில் குறிப்பிட்டமாதிரி, வரியெதுவும் எனக்கு சுவர்ணமஹாலில் சொல்லப்படவில்லையாதலால், சந்தேகத்தோடு மீண்டும் அவர்களிடம் கேட்டேன், ‘நீங்கள் வரியெதுவும் புறம்பாக உள்ளடக்குகின்றீர்களா?' என்று. அப்படியெதுவும் இல்லை என்று எனக்கு சொல்லப்பட்டது. இது சுவர்ணமஹாலின் விலை மதிப்பு முறை.

பின்பு பிரபல்யமான வொக் (Vogue Jewellers Ltd) நகைக்கடையுடனும் தொடர்புகொண்டு கேட்டபோது, சுவர்ணமஹாலில் சொல்லப்பட்ட அதேமுறை எனக்கு சொல்லப்பட்டது. வெளிநாட்டவர்கள் என்றால் சிறுவரி மேலதிகமாக சேர்ப்பதாக சொன்னார்கள் அங்கே. இலங்கையர்களுக்கு அப்படியெதிவும் இல்லை. அத்துடன் நகையிலே கற்ற்களெதுவும் பதிக்கப்பட்டிருந்தால், அதன் சிறிய விலையொன்றும் சேர்க்கப்படுவதாக சொன்னார்கள்.

இதற்குப்பின், மீண்டும் நித்திய்கல்யாணி நகைக்கடையுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, பிரேம் என்பவர் என்னுடன் கதைத்தார். அவரிடமும் மேற்படி கேள்வியை கேட்டபோது, அவரும் சுவர்ணமஹாலிலும், வொக்கிலும் எப்படி சொன்னார்களோ அப்படியே சொன்னார், ஆனால் சேதாரத்தை 14% என்றார் (கவனிக்க, முன்பு அங்கே 12% என்று எனக்கு சொல்லப்பட்டது. ஆச்சரியத்தோடு அவரிடம் கேட்டேன், 'வரியெதுவும் இல்லையா' என்று. அப்படியெதுவும் இல்லை என்றார். ‘உங்களது கடையில், போன செவ்வாய்க்கிழமை வந்தபோது 6% வரி என்று ஒரு புறம்பான தொகையை சொன்னார்களே” என்றபோது, மீண்டும் அவர் “அப்படியெதுவும் இல்லை” என்றார்.

Get this widget
Track details
eSnips Social DNA


ஆகவே இந்த குழப்பங்களை பற்றி மேலும் விசாரிக்க, நித்தியகல்யாணி நகைக்கடைக்கு நேரில் சென்றேன் (சம்பவத்தின் முழு ஒலிப்பதிவும் மேலே). சென்றமுறை நின்ற அதே இளைஞர் விற்பனையாளராக நின்றார். அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார். அவரிடம் ஒரு பதக்கத்தை எடுத்து விலையை கேட்டபோது, மீண்டும் கணிப்பானை பலமுறை தட்டிவிட்டு, 6950.00 ரூபாய்கள் என்றார். தங்கத்தின் நிறை 1.49g என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் அவரிடம் 'எப்படி விலையை கணித்தீர்கள்' என்று கேட்டபோது ‘தங்கத்தின்விலை + செய்கூலி + சேதாரம் + 6% வரி' என்றார். ஆகா, எனக்கு பிடி கிடைத்தமாதிரி.

முன்பு என்னுடன், தொலைபேசியில் கதைத்த பிரேம் என்றவரை கூப்பிடவேண்டியதாயிற்று. அவரிடம் கேட்டபோது அப்படி வரியெதுவும் இல்லை என்றதுடன், எனக்கு முன்பு விலை சொன்ன இளைஞருக்கும் இரகசியமாக ஏசினார். அவருடன் நான் சிறிது வாக்குவாதப்படவேண்டியதாயிற்று. அதன் பின், பிரேம் போய் இன்னொருவரை கூட்டிவந்தார். அவர்ர் நித்தியகல்யாணியின் முக்கிய பொறுப்பிலுள்ளவராக இருக்கவேண்டும். அவர் பல நியாயங்களை சொல்லத்தொடங்கினார். தாங்கள் விபரமான விலையெதுவும் குறிப்பிடுவதில்லையாம், மிகக்குறைந்த விலைகளிற்கே விற்பதாகவும். ஆகவே அவரிடம், முன்பு எனக்கு 6950.00 ரூபாய்கள் என்று சொல்லப்பட்ட பதக்கத்தை காட்டி, இதன் விலை என்ன என்று சொல்லுங்கள் என்றபோது, ஆச்சரியமாக 5700 என்று சொன்னார். பாருங்கள் முன்பு சொன்ன விலையைவிட, இந்நபர் சொன்ன விலை எவ்வளவு வித்தியாசமாக இருக்கின்றது என்று.

இவ்வளவுக்கும் இந்நகைக்கடை, கொழுப்பு வெள்ளவத்தையிலுள்ள மிகப்பெரியதொரு, பல மாடிகளை கொண்ட நகைக்கடை. அங்கே பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் தமிழர்களே, அங்கு நகை வாங்கப் போகின்றவர்களும் பெரும்பாலும் தமிழர்களே. தமிழர்களை இலகுவாக ஏமாற்றலாம் என்று தமிழர்கள் ந்ன்றாக அறிந்திருப்பார்களோ? ஏமாறக்கூடியவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

ஏமாற்றங்களை தவிர்க்கவேண்டுமாயின், நாம் ஒவ்வொருவரும் இது போன்ற விடயங்களில் விழிபுணர்வடையவேண்டும். நான் பெற்ற அனுபவத்தை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்வதன் மூலம், மற்றவர்களும் ஏமாற்றப்படுவதை தவிர்க்கலாம் என்ற நோக்கத்த்தில் இதை எழுதியுள்ளேன். ஆகவே தங்க நகை வாங்கும்போது, மேற்படி விடயங்களை கவனித்தீர்கள் என்றால், ஏமாற்றமடைவதை தவிர்த்துக்கொள்ளலாம்.

நகை வாங்கும்போது நீங்கள் கவனமாக இருக்கவேண்டிய விடயங்கள்:

1. ஆபரணத்திலுள்ள தங்கத்த்தின் நிறை, அதன் விலை.
- 8g (ஒரு பவுண்) தங்கத்தின் அன்றைய சந்தைவிலையை நகைக்கடைக்காரரிடமே கேட்டுதெரிந்துகொள்ளுங்கள், அதன்பின் ஆபரணத்த்தில் உள்ள தங்கத்தின் விலையை கணிக்கலாம்

உ+ம் - 8g தங்கத்தின் விலை 24000.00 எனறால்
1.5g தங்கத்தின் விலை (24000/8)x1.5 = 4500.00


2. சேதார வீதம்
- நகைக்கடக்காரரிடமே கேட்டுதெரிந்துகொள்ளுங்கள். இடத்துக்கிடம் சிறிது வேறுபடலாம்.

உ+ம் - 10% சேதாரம் என்றால்
1.5 g இல சேதாரமான தங்கத்தின் அளவு = (10/100)x1.5g = 0.15g
சேதாரமான தங்கத்தின் விலை = (24000/8)x0.15 = 450.00


3. செய்கூலி
-2008 இல் அண்ணளவாக பதக்கமொன்றுக்கு 1000 ரூபாவில் இருக்கின்றது

4.கற்கள் பதிக்கப்பட்டிருந்தால் கற்களின் விலை.

மேற்படி நான்கு பெறுமானங்களையும் கூட்டிவருவதே இறுதி விலையாக இருக்கமுடியும். ஆகவே நகைவாங்கும்போது மிகக்கவனமாக இருங்கள்.


மதுவர்மன் - mathuvarman (2008-05-10)

Thursday, May 8, 2008

ஒபாமா கறுப்பரா, வெள்ளையரா? கிறிஸ்தவரா, முஸ்லிமா?

வித்தியாசமாக இம்முறை அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக களம் குதித்திருக்கும் மனிதர் ஒபாமாவைப்பற்றி சூடான செய்திகள் பல மாதங்களாகவே இடம்பெறுகின்றன. அவ்வகையில் அவர் ஒரு கிறிஸ்தவரா, முஸ்லிமா, கறுப்பரா, வெள்ளையரா எனற சர்ச்சை அங்கே கிளப்பப்பட்டுள்ளது . அது சம்பந்தமாக இங்கே ஆராயமுற்படுகின்றது இக்கட்டுரை.

எதிர்வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக்கட்சி (Democratic Party) வேட்பாளர்களை தெரிவுசெய்யும் போட்டியில் பாரக் ஒபாமாவும் (Barack Obama), ஹிலாரி கிளிண்டனும் (Hillary Clinton) கடுமையாக போட்டியிடுவது யாவரும் அறிந்ததே.

பல மாகாணங்களில் ஒபாமா ஹிலாரியைவிட முன்னணியில் நின்றாலும், வெள்ளையர்கள் அதிகமாக வாழும்பகுதிகளில் ஹிலாரி, ஒபாமாவை விட முன்னணியில் நின்ற்கின்றார். ஆனால் இதுவரை நடைபெற்ற வாக்கெடுப்புக்களில் ஒட்டுமொத்தமாக ஒபாமா தான் சிறிது முன்னணியில் நிற்கின்றார்.

மறுபுறத்தில் குடியரசுக்கட்ட்சியின் (Republican Party) நிச்சயமான வேட்பாளர் ஜோன் மக் கெய்ன் (John Mc Cain) அதிகமான வெள்ளையினத்தவரின் ஆதரவைப்பெற்று நிற்கின்றார்.

மொத்தத்திலே இங்கே அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் பால்வேறுபாடும் (Gender), இனவேறுபாடும் (Race), மதமும் (Religion) செல்வாக்கு செலுத்தப்போகின்றன என்பது நிதர்சனமான உண்மை. அவற்றுள் இனவேறுபாடே அதிக செல்வாக்கு செலுத்தப்போகின்றது.

ஜனநாயகக்கட்சி வேட்பாளர்களான ஒபாமாவுகும், ஹிலாரிக்கும் இடையிலான போட்டியில் ஒபாமா ஒரு கறுப்பராகவே அடையாளப்படுத்தப்படுகின்றார். ஒபாமாவின் தந்தை கென்யாவை சேர்ந்த கறுப்பினத்தவராவார். தாயார் அமெரிக்க வெள்ளையினத்தை சேர்ந்தவர். வெள்ளையினத்தவர் அதிகமாகவுள்ள அமெரிக்க மாநிலங்களில் ஹிலாரி முன்னணியில் நிற்பதற்கு காரணம் இந்த கறுப்பர் வெள்ளையர் என்ற இனப்பாகுபாடே.

ஒபாமா ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும், ஒபாமாவின் தந்தையார் ஒரு முஸ்லிம் என்ற உண்மை இப்போது வெளிக்கொணரப்பட்டிருக்கின்றது. சில கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம், சில வாக்காளர்கள் ஒபாமாவை ஒரு ‘இரகசிய முஸ்லிமாகவே (Secret Muslim)' கருதுகின்றனர். இயலாக முஸ்லிம்கள் மீது அமெரிக்கர்களுக்கு உள்ள வெறுப்பு ஒபாமாவுக்கு எதிராக பாவிக்கப்படலாம்.

மாறாக ஹிலாரியை பாதிக்கக்கூடிய விடயம் அவர் ஒரு பெண்ணாக இருப்பது. முன்பே குறிப்பிட்டது போல, பால்நிலை வேறுபாடு கூட இத்தேர்தலில் சிறிய செல்வாக்கை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகின் பல நாடுகளிலும் பெண்கள் ஜனாதிபதிகாளாகவோ, பிரதமர்களாகவோ பதவிவகித்திருக்கின்றார்கல், இன்னும் வகிக்கின்றார்கள். ஆனால், இன்னும் ஆவ்வாறு அனுமதிக்காத ஒரு சில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அமெரிக்காவில், இதுவரைக்கும், பெண்ணொருவர் ஜனாதிபதியாக இருந்ததில்லை. சில கருத்துக்களிப்புக்களில்படி, பெண்ணொருவரை அதிபராக தெரிவுசெய்ய அமெரிக்க மக்கள் தயங்குவதாகவே தெரிகின்றது. அமெரிக்க, உலகத்தின் பொலிஸ்காரனாக இருக்கவேண்டி அமெரிக்க மக்கள் உணர்வதால், ஆண்களையே அதற்கு தகுந்தவர்களாக பார்கின்றார்கள்.

இனி தலைப்புக்கு வந்தால். ஒபாமா கறுப்பரா வெள்ளையரா? தந்தையார் ஒரு கறுப்பர், தாயார் ஒரு அமெரிக்க வெள்ளையர். ஆகவே ஒபாமா கறுப்பரா வெள்ளையரா. ஒபாமா பால் வெள்ளை நிறத்தவரில்லை, அதே நேரம் ஏனைய கறுப்பினத்தவரை போன்று கரிய நிறத்தவரும் இல்லை, பொது நிறத்தவர்.

சரி எவ்வினத்தவர் என்பதை நிறத்தை வைத்து தீர்மானிக்காவிட்டாலும், அறிவியல் ரீதியாக பார்த்தால், ஒபாமாவின் உடலில், கலங்களில் காணப்படும் 23 சோடி நிறமூர்த்தங்களில் அரைவாசி கறுப்பின தந்தையினுடையது, மீதி அரைவாசி வெள்ளையின தாயினுடையது. அப்படியானால், பாதி வெள்ளையின நிறமூர்த்தங்களாலும், மீதி கறுப்பின நிறமூர்த்தங்களாலுமான கலங்களாலான ஒபாமாவை எந்த இனத்துக்குள் அடக்குவது. அது தான் என்முன் எழும் கேள்வி. அவரை கறுப்பர் என்று சொல்வது சரியாகுமா? ஆனால் வெள்ளையர்களின் மேலாதிக்க சிந்தனையும், அமெரிக்க அதிபர் தேர்தலில் தூய வெள்ளயர்களுக்கெதிராக ஒபாமா போட்டியிடுவதாலும் அவர் கறுப்பர் என்ற கருத்து விதைக்கப்படுகின்றது.

அவ்வாறே, ஒபாமா ஒரு முற்றுமுழுதான கிறிஸ்தவராக இருந்தாலும், அவரின் தந்தை ஒரு முஸ்லிமானதால், ஒபாமா ஒரு முஸ்லிம் என்ற கருத்துருவும் உருவாக்கப்படுகின்றது.

மொத்தத்தில் அமெரிக்க அரசியலில், இனம் மதம் என்பன முக்கிய காரணிகளாக இன்னும் இருந்தாலும், கறுப்பரென கொள்ளப்படும் ஒருவர் ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமனம்பெறுமளவுக்கு வந்திருப்பது, அமெரிக்காவில் பெருமளவில் இனங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்பதையே காட்டுகின்றது.

அரசியல் இலாபங்களுக்காக, இனம், மதம், பால்வேறுபாடு என்பன அவ்வப்போது முக்கியமான தருணங்களில் எடுத்தாளப்பட்டாலும், காலமாற்றத்தோடு அவை குறைவடைந்துகொண்டே செல்கின்றன. ஒன்றை நாம் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும், அமெரிக்காவில் இன்னும், கிறிஸ்தவரல்லாத ஒருவர் சாதாரணமான வாழ்க்கை நடாத்துவது என்பது கடினமான காரியமே. அதிலும் அரசியலில் அது முடியாத காரியமே. அவ்வளவுக்கு அமெரிக்காவில் கிறிஸ்தவமதம் செல்வாக்கு செலுத்துகின்றது. கறுப்பர் வெள்ளையர் என்ற வேறுபாட்டுக்கும் இம்மதவாத சிந்தனையே உரமிடுகின்றது.

அமெரிக்காவில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலுமே ஏதோ ஒவ்வொரு அளவுகளில் இவ்வேறுபாடுகள் காண்பிக்கப்படுகின்றன தான். மனித இனம் இருக்கும் வரைக்கும், இனம், மொழி, மதம், பால் வேறுபாடுகள் பார்க்கப்படுமா என்று ஐயப்படத்தான் முடிகின்றது இப்போதைக்கு எம்மால்.

- மதுவர்மன் (2008-05-08)

உதவி
1. The Sunday Leader ஆங்கில வார பத்திரிகை, இலங்கை
2. BBC World Service
3. இலங்கை தமிழ் வார பத்திரிகைகள் (வீரகேசரி, தினக்குரல்)
4. TIME

Tuesday, May 6, 2008

பறக்கும் பெண்?

பறக்கும் பெண் உருவம் ஒன்று மெக்சிகோவில் தென்பட்டுள்ளது. பறக்கும் தட்டு, வேற்று கிரகவாசிகள் வரிசையில் இன்று பறக்கும் பெண்ணும் இடம்பிடித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம் இருப்பது போன்ற படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதேபோல இப்போது பறக்கும் பெண் போன்ற மர்ம உருவம் மெக்சிகோ நாட்டின் நிïவோ லியோன் மலைப்பகுதியில் நடமாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இரண்டு வருடங்களுக்கு முன்பு,இதே போன்ற ஒரு வதந்தி மெக்சிகோவில் பரவியது. வானில் அடையாளம் தெரியாத மர்மப் பொருட்களை படம் பிடிக்கும் ஆய்வாளர் ஒருவர் அப்போது மலைப்பகுதியில் பறக்கும் பெண்ணொன்றைக் கண்டு படம்பிடித்துள்ளார்.

இது சம்மந்தமாக பல செய்திகளை படிக்ககூடியதாக இருந்தாலும், இதன் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய முடியவில்லை.

பறக்கும் பெண் என்று நம்பப்படும் சலனப்படம் காண இங்கே சொடுக்கவும்...


மேலும் அறிந்துகொள்ள...
http://www.thesun.co.uk/sol/homepage/news/article1118824.ece
http://isooryavidz.blogspot.com/2008/05/flying-humanoid-ufo-in-mexico.html

Sunday, May 4, 2008

உலகளாவிய உணவு நெருக்கடி, காரணம் என்ன?

இன்றையகாலப்பகுதியில் உலகநாடுகள் பல எதிர்நோக்குகின்ற உணவுப்பொருள் தட்டுப்பாடு, விலையதிகரிப்பு, அவற்றிற்கான காரணங்கள் சம்பந்தமாக இங்கே ஆராயப்படுகின்றன.

உலக அமைதியை பாரதூரமாக அச்சுறுத்தக்கூடிய காரணிகளுள் ஒன்றாக இன்று உணவு காணப்படுகின்றது. உணவுப்பொருட்களின் அதிகரித்த விலைகள் (சிலபொருட்களின் விலைகள் இரண்டு வருடகாலப்பகுதியில் இருமடங்காகியுள்ளன) பல நாடுகளிலும் கலவரங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் தோற்றுவித்திருக்கின்றன.

மெக்சிக்கோவிலிருந்து பாக்கிஸ்தான் வரை எதிர்ப்பார்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறியுள்ளன[9]. 2008 ஜனவரியில் மேற்கு ஆபிரிக்க நாடான Burkina Faso இல் மூன்று நகரங்களில் கலவங்கள் ஏற்பட்டு அரச கட்டடங்கள் எரியூட்டப்பட்டன, களஞ்சியங்கள் சூறையாடப்பட்ட்டன. அதே மாதத்தில் கமரூனில் நடந்த வண்டி ஓட்டுனர்களின் எண்ணைவிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம், உணவு விலைகளுக்கு எதிரான மிகப்பெரியதொரு ஆர்ப்பாட்டமாக மாறி 20 பேரின் உயிர்களை காவுகொண்டது.அதே மாதிரியான ஆர்ப்பாட்டங்கள் கடந்தவருட இறுதியில் செனகலிலும், Mauritania விலும் வெடித்திருந்தன.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் இந்திய மேற்கு வங்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கான உணவு-நிவாராண களஞ்சியங்களை எரியூட்டியிருந்தார்கள். களஞ்சியங்களின் உரிமையாளர்கள் அரச நிவாரணப்பொருட்களை கருப்பு சந்தையில் விற்பதாக அங்கே ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டியிருந்தார்கள்[9]. மொத்தத்தில் உலக அமைதிக்கு பெரியதொரு அச்சுறுத்தலாக இந்த உலகளாவிய உணவுநெருக்கடி மாறியிக்கின்றது.

ஆசியநாடுகளில் கடந்த மூன்று தசாப்தங்களாக ஏற்படுத்தப்பட்ட பசுமைப்புரசியின் காரணமாக உணவுநெருக்கடியின் தாக்கம் மிகப்பாரதூரமாக இல்லாவிட்டாலும், ஆபிரிக்காவிலோ நிலைமை மிக மோசமடைந்துவிட்டது. அங்கே மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை உருவாகியிருக்கின்றது.

கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள், அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப்பொருட்களின் விலைகள் ஏறக்குறைய இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. உலகிலுள்ள மிக வறிய மக்களில் ஏறக்குறைய 100 மில்லியன் மக்கள் இப்போது, உணவிற்காக செலவளிக்க முடியாத நிலையிலுள்ளார்கள் என ஐ.நா சபை அண்மையில் கணிப்பிட்டுள்ளது.

இலங்கையில், உணவுப்பொருட்களின் விலைகள் முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளன. சாதாரண, வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு, எகிறிச்செல்லும் உணவுபொருடகளின் விலைகள் பெரும் பிரச்சினைகளாக மாறியுள்ளன. அரசியல், இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளுடன், இந்த உலகளாவிய உணவுத்தட்டுப்பாடும், உணவுப்பொருட்களின் விலைகளை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

கீழே உலகளாவிய இன்றைய உணவுத்தட்டுப்பாட்டுக்கு காரணமான ஐந்து விடயங்கள் ஆராயப்படுகின்றன,

1. உயிரியல் எரிபொருள் (Bio Fuels) உற்பத்தி

இன்று வளர்ச்சியடைந்துவரும் நாடுகளால், உலக உணவுத்தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணியாக, வளர்ச்சியடைந்த நாடுகளால் அவர்களது எரிபொருள் தேவைகளை நிறைவுசெய்ய, மேற்கொள்ளப்படும் உயிரியல் எரிபொருள் (எதனோல்) உற்பத்தியே சுட்டிக்கட்டப்படுகின்றது.


உணவாகப்பவிக்கப்படும் தானியங்கள் இதற்காக பெருமளவில் பாவிக்கப்படுவது உலகளாவிய உணவுப்பொருட்களின் விலையதிகரிப்புக்கு முக்கிய காரணியாகின்றது. உண்பதற்கான உணவுற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவு உற்பத்தி நிலங்கள் பலவும் இப்போது இந்த உயிரியல் எரிபொருள் உற்பத்திக்கான தானியங்களை விளைவிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

2. சனத்தொகைப்பெருக்கம்

இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் 9 பில்லியனை தாண்டவிருக்கும் உலகசனத்தொகைப்பெருக்கம் உலக உணவுத்தட்டுப்பாட்டுக்கு இன்னொரு முக்கிய காரணியாகும்.

என்றுமில்லாதவாறு அதிகளவான வயிறுகளுக்கு உணவளிக்கவேண்டிய அதேநேரம், அதிகரித்துள்ள சனத்தொகையால் நீர், நிலம், எண்ணெய் என்பவற்றின் பாவனையும் அதிகரித்துள்ளது. முக்கியமாக பயிர்ச்செய்கைக்கான நிலப்பவனை குறைவடைவதில் அதிகரித்துவரும் சனத்தொகை செல்வாக்குசெலுத்துகின்றது. அதிகரித்த சனத்தொகையால் இன்று நாடுகள்பல பாலைவனங்களாக (காடழிப்பு) மாறிக்கொண்டிருகின்றன.

3. எதிர்பாராத காலநிலை மாற்றங்கள்
உலகின் முக்கிய உணவுப்பொருள் உற்பத்திசெய்யும் நாடுகளில் கடந்தகாலங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பாதகமான காலநிலை மாற்றங்கள் (வரட்சி, சூறாவளி, வெள்ளம், மாறுபட்ட மழைவீழ்ச்சி) உலக சனத்தொகைக்கான உணவுவழங்கலை பெருமளவு பாதித்துள்ளது.

அதிகரித்துள்ள உலக சனத்தொகை, சுற்றுச்சூழல் மீது அதிக அழுத்தத்தை பிரயோகிக்கின்றது. அதன்விளைவான சூழல் மாசடைதல், எதிர்பாராத காலநிலை மாற்றங்களுக்கு வழிகோலுகின்றது. அவ்வாறே புவி வெப்பமடைதல் உணவுற்பத்தியை பெருமலவில் பாதிக்கின்றது.

4. அதிகரித்துவரும் மத்தியதர வர்க்கம்

முக்கியமாக இந்தியா, சீனா போன்ற சனத்தொகை அதிகமுள்ள நாடுகளில், அதிகரித்துவரும் மத்தியதரவர்க்கத்தை சேர்ந்தவர்களால், உணவுப்பொருட்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. அவர்கள் இப்போது அதிக உணவினை உட்கொள்ளுகின்றார்கள். இந்தியாவில் 350 மில்லியன் மக்கள் நடுத்தர வர்க்கத்தினராக உள்ளனர். இது அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம். அந்த மக்களுக்கு வளம் அதிகரிக்கும்போது அவர்களின் வாங்கும் சக்தியும், சத்தான உணவுகளை நாடிச் செல்வதும் அதிகரிக்கிறது. அது உலக அளவில் விலையேற்றத்துக்கு வழி வகுக்கிறது

உலகத்தில் ஒட்டுமொத்தமாக அதிகரித்துவரும் எண்ணிக்கையிலான பணக்காரர்களினால் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், ஏறக்குறைய 100 மில்லியன் அளவிலான வறியவர்கள் உணவுப்பொருட்களை வாங்கமுடியாதவர்களாகின்றார்கள்.

5. நாடுகளின் அரசியல் ஸ்திரமற்ற தன்மை
பல்வேறு உணவுற்பத்த்திசெய்யும் நாடுகளினதும் அரசியல், பொருளாதார ஸ்திரமற்ற நிலைமை உலக உணவுற்பத்தியில் பெரும் பாதிப்பை உண்டுபண்ணுகின்றது.

மேற்குநாடுகளின் உலகமயமாதல் என்றபோர்வையில், உணவுற்பத்திசெய்யும் நாடுகளில் உணவுற்பத்திக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்துசெல்கின்றது. புதிய, புதிய மத்தியதர வர்க்கத்துக்கான தொழில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

உலக உணவுத் தட்டுப்பாட்டின் தாக்கம்

- மதுவர்மன்

உதவி
1. இலங்கை சூரியன் F.M செய்திகள் (2008-04-30 : 6:45 மு.ப)
2. பி.பி.சி தமிழோசை ஒலிபரப்பின் செய்திகள்.
3. வீரகேசரி, தினக்குரல் வாரவெளியீடுகள்.
4. ”Assessing the global food crisis” on BBC
5. Website of UN special rapporteur on the right to food
6. The cost of food: Facts and figures on BBC
7. India to America: Eat Less, Fatties
8. After the Oil Crisis, a Food Crisis?
9. The World's Growing Food-Price Crisis

மூடத்தனமான சிந்தனைகளும் பகுத்தறிவான விளக்கங்களும் 1

இத்தொடர் நாம் அன்றாடம் சந்திக்கின்ற மூடத்தனமான சிந்தனைகளைப்பற்றி பகுத்தறிவுடன் அலசப்போகின்றது.

உதாரணமாக, சமூகத்திலே பெரியமனிதர்களாக மதிக்கப்படுபவர்கள் யாரேனும் எப்போதாவது ஏதொவொரு விடயத்தைப்பற்றி சுவாரசியமாக சொல்லிவிட்டு போய்விடுவார்கள். எம்மில் அநேகர் என்ன செய்வரென்றால், அதைப்பற்றி துளியும் ஆராயாமல், அதை அப்படியே தாரகமந்திரமாக எடுத்துக்கொள்வர்.

இந்த எங்கள் மனோநிலையே, மூடப்பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கைகள் எங்களிடையே பல்கிப்பெருகவும், நிலைபெறவும் காரணமாயிற்று. எஙகள் சமுதாயத்தில் எத்தனையோபேர் இன்றும், சொல்லிலும் செயலிலும் மூடத்தனங்களை சுமந்துதிரிகின்றார்கள்.

அவைபற்றிய விழிப்புணர்வுக்காக இத்தொடர் எழுதப்படுகின்றது. இதிலே என்னுடைய கருத்து மட்டும் என்றாகாமல், பலருடைய கருத்துக்களையும் உள்வாங்கி இத்தொடர் பரிணாமமடைய காத்திருக்கின்றது. உங்கள் கருத்துக்களும் இங்கே காத்திரமாக இடம்பெறட்டும்.

இது என்னுடைய நண்பரொருவர், Google Talk அரட்டை மென்பொருளில், Personal Message ஆக இட்டிருந்தார்.

"நீ எந்த சமுதாயத்தில் வாழ்கிறாயோ அந்த சமுதாய மக்கள் உன் மரணத்திற்காகக் கண்ணீர் சிந்துவார்களானால் மரணத்தை பிச்சைஎடுத்தாவது பெற்றுக்கொள்."
அவருக்கே சொந்தமான கருத்தா எனக்கு தெரியாது. அல்லது யாரும் பிரபலமானவரொருவர் சொன்ன கருத்தா தெரியவில்லை.

எவ்வளவு மூடத்தனமான செய்தியை இது காவுகின்றது என்பது தான் என்னை ஆச்சரியப்படவைத்தது.

இதுதொடர்பான பகுத்தறிவு விளக்கத்தை தந்துவிட்டு இதன் முட்டாள்தனத்தை பற்றி அலசுவோம்.

இதற்கு பதிலளிப்பதாக அதே பாணியில் சொல்வதானால்..

"உன் மரணத்திற்காக உனது சமுதாய மக்கள் கண்ணீர் சிந்துவார்களானால், அது வாழும்போது உனது சமுதாயத்துக்கு நீ ஆற்றிய பணியினாலாகும். சமுதாயத்துக்கு நீ பெறுமதியானவன். ஆகவே முடிந்தவரை வாழ முயற்சி செய். சமுதாயம் உன் மரணத்துக்காக கண்ணீர் சிந்தப்போவதை கொஞ்சம் நீ பிற்போட்டுக்கொள்ளலாம்"
முன்னையது மூடத்தனமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. அழகான, அருமையான வாழ்க்கையை அழித்துக்கொள்ள சொல்கின்றது. ஒருவேளை மதங்கள் சொல்கின்ற மூடத்தனமான சிந்தனைகளை அடிப்படையாக இது கொண்டிருக்கலாம்.

இந்து மதமும், பௌத்தமதமும் பல பிறப்புக்கள் உண்டு என்கின்றன. இம்மூடச்சிந்தனை இந்த அருமையான மனிதப்பிறவியை பெறுமதியற்றதாக்கும் நோக்கத்திலானது.

பரீட்சையொன்றுக்கு படித்துக்கொண்டிருக்கின்றீர்கள். அப்பரீட்சையை ஒருதரம் மட்டுமே எழுதலாம் என்றிருந்தால், நீங்கள் அப்பரீட்ட்சைக்கு இயன்றவரை சிறப்பாக படித்து, அவ்வொருதரத்திலேயே சித்தியடைய முயற்சிப்பீர்கள்.

அவ்வாறில்லாமல், அப்பரீட்சையை எத்தனை தரமும் எழுதமுடியும் என்றிருந்தால், இம்முறை படித்துக்கொண்டிருக்கும் ஒருவர், 'இம்முறை விட்டால் அடுத்தமுறை' என்று சந்தர்ப்பங்களை வீணே கழிப்பதற்கு இடமேற்படுகின்றது.

அவ்வாறே இந்த மறுபிறப்பு கொள்கையும், மனிதவாழ்க்கையை நாசப்படுத்துகின்றது.

அநேகமான தற்கொலைகளுக்கு இது கூட ஒரு முக்கிய காரணமாக் அமையலாம். வாழ்க்கையிலே பிரச்சினைகளுக்கு ஆளாகி, மன உளைச்சலடைந்த ஒருவர், இந்த மறுபிறப்பை நம்பிக்கொண்டு, பின்வருமாறு ஒரு அபரிமிதமான முடிவை எடுக்கக்கூடும்.

"அட, இந்த பிறப்பிலை தான் எனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவில்லை. இவ்வாழ்க்கை ஒரே துன்பம் நிறைந்ததாக போய்விட்டது. அடுத்தபிறவியிலாவது ஒரு நல்ல, சந்தோசமான வாழ்க்கை கிடைக்கும். இறப்பதே இந்த துன்பங்களுக்கெல்லாம் ஒரே முடிவு"
பாருங்கள், எப்படியான நிலைக்கு இந்த மறுபிறவி என்ற மூடத்தனம் ஒருவரை இட்டுச்செல்லலாம்.

அவ்வாறே, இந்த சொர்க்கம், நரகம் என்ற கொள்கையும். இது அனேகமாக அனைத்து மதங்களும் சொல்லும் ஒன்று. மக்களை ஏமாற்ற மதவாதிகளால் பயன்படுத்தப்படும் முக்கிய ஆயுதமும் இதுவே.

இன்று உலகமெங்கும், மதத்துக்காக குண்டைக்கட்டிக்கொண்டு, தம்மையும் கொன்று, சூழவுள்ள அப்பாவிகளையும் கொன்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞனும் தான் சொர்க்கத்துக்கு செல்வதாகவே நினைத்துக்கொள்கின்றான். அதுமட்டுமல்லாமல், தன்னுடன்சேர்த்து, தான் கொல்பவர்களையும் சொர்க்கத்துக்கு தான் அனுப்புவதாக அவன் நினைத்துக்கொள்கின்றான். இதற்கு அவன் திட்டமிட்டவகையிலே நஞ்சூட்டப்படுகின்றான்.

அருமையான, விஞ்ஞானரீதியாக நிகழ்தகவு மிக முக குறைந்த இந்த மனித வாழ்க்கையை, அழித்துக்கொள்ளச்சொல்பவைதான், இந்த மறுபிறவி, சொர்க்கம் என்ற கொள்கைகளெல்லாம். இவைகள் மூடநம்பிக்கைகளைத்தவிர வேறொன்றுமல்ல.

இன்னும் வரும்....

-மதுவர்மன்

Thursday, May 1, 2008

ஏக்கம்

முந்தைய இரவுகளில் நிலவில் முழங்கி வந்த
தந்தையர் தம் முரசங்கள்தாம் அடங்கிப் போயினவே!!
ஓங்கி எரி தணலில் ஒளியில் விடுதலையில்
நாங்கள் களித்தாடும் நடனம் என்று வருமோ??

இது நம் விடுதலையை எதிர்பார்க்கும் அனைவருக்கும் சமர்ப்பணம்!!!!!

---------------------------------------------------------------------------------

நான் நீயல்ல!!
ஆனால் நான் நானாக இருப்பதற்கு
நீ ஒரு சந்தர்ப்பம் தருகிறாயில்லை!!!