Thursday, December 3, 2009

நானும் காரில்...
பதினாறே வயது நிரம்பிய
பருவப் பெண் நான்.
அழகான சொகுசுக் காரிலேயே
அனுதினமும் செல்கின்றேன்.

பின்னிருக்கையில் நான்,
பக்கத்திலே குழந்தை,
ஐயா காரை ஓட்டுகின்றார்,
அம்மா அவருக்கு பக்கத்தில்

ஐயாவும் அம்மாவும்
வெளிச்செல்லும் போதெல்லாம்
அவர்களுடன் நானும்
குழந்தையை கவனிப்பதற்காய்...

பதினாறே வயதான - மலையகத்துப்
பருவ மங்கை நான்
அழகான சொகுசுக்காரிலேயே
அனுதினமும் செல்கின்றேன்


(உண்மையாக கண்டகாட்சியை வைத்து எழுதியது, 2009-12-01)

Friday, November 6, 2009

அழைப்பு: தோழர் நவம் 5வது ஆண்டு நினைவும் சி.கா.செ. நேர்காணல் நூல் வெளியீடும்

நிகழ்ச்சி நிரல்

தலைமை
: சோ. தேவராஜா

நவம் நினைவுரை
: சி.கா செந்திவேல்

நூல் வெளியீடு

நூல் வெளியீட்டு உரை:
இ. தம்பையா

நன்றியுரை
: ஞா.ஸ்ரீமனோகரன்


காலம்
:
08-11-2009 ஞாயிறு
நேரம்: பி.ப 5.00 மணி
இடம்: கைலாசபதி கேட்போர் கூடம்
தேசிய கலை இலக்கியப் பேரவை,
தலைமைப் பணிமனை
571/15 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-06


அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நவம் நினைவுக் குழுவும் புதியபூமி வெளியீட்டகமும்
கொழும்பு

குறிப்பு: தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையானது Roxy திரையரங்கிற்கு முன்னால், Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையினுள் அமைந்துள்ளது.

Saturday, October 24, 2009

கோவில் பிரைவட் லிமிட்டட் களும் பஞ்சாங்க சுத்துமாத்துக்களும்....என்னுடய வீட்டிலே கடந்த சில நாட்களாக பேசப்பட்ட hot toppic சூரன் போர் 23ம் திகதியா 24ம் திகதியா என்பதுதான். இந்த திகதிகளை தீர்மானிக்கும் பஞ்சாங்கத்தில் திருக்கணிதம் வாக்கியம் என்டு இரண்டு இருக்குதாம்.வாக்கியம் 24 என்டுதாம், திருக்கணிதம் 23 என்டுதாம். புதுசா திருவிஞ்ஞான பஞ்சாங்கம் என்டு ஒன்டு வந்தாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை. எனக்கு கனகாலமா ஏன் இந்த பஞ்சாங்க குழப்பம் என்டு விளங்கேலை. பேமஸ் சாத்திரி மாரிட்டையும் கேட்டு பார்த்தன். ஏதோ திருக்கணிதம் வான் வெளியை ஒரு பாகை பிந்தி அளக்குது என்டு சொல்லிச்சினம். எனக்கு தெரிஞ்ச Geomatery யின் படி, ஒரு கோளத்தை எத்தினை பாகை திருப்பி வச்சு அளந்தாலும் குறிப்பிட்ட புள்ளி வாற நேரம் மாறாது. உன்மையா சாத்திரி சொல்லுறது எதுவும் எனக்கு விளங்குறேலை. வீடு, பார்வை அது இது என்டு கனக்க சொல்லுவினம். எனக்கு எதுவும் விளங்குறேலை. சூரன் எப்ப செத்தவன் என்டு அவன்ட dead certificate ஐ வாங்கிப்பாக்கலாமென்டா கச்சேரியில பழைய records ஒன்டும் இல்லயாம். சூரன் எப்ப செத்தவன் என்டு சரியா சொல்லேலாத படியால நாங்கள் ஏதாவது ஒரு பஞ்சாங்கத்தை சரி என்டு எடுப்பம். ஒன்டு சரி என்டா மற்றது பிழை தானே. அப்ப அரைவாசி கோயிலுகள் பிழையானதை தான் follow பண்ணினம் என்ன?

முதல்ல நான் நினைச்சது என்னன்டா எங்கையாவது கோஸ்டி பூசல் என்டாத்தான் புதுப் புது பிரிவினைகளும் வரும். இதுவும் எங்கட ஐயர்மாருக்கிடையிலை கோஸ்டி பூசல் அதுதான் இரண்டா பிரிஞ்சிட்டினம் என்டு நினைச்சன்.

பிறகு தான் கவனிச்சன் வீட்டில பெண்டுகள் எல்லாரும் இவிரண்டு உடுப்புகள் ready பண்ணுறதை. ஏன் என்டு கேட்டா, இன்டைக்கு இந்தக்கோவிலில சூரன் போர், நாளைக்கு அந்தக்கோவிலில சூரன் போர். இரண்டுக்கும் போக இரண்டு செட் உடுப்பு என்டு சொல்லிச்சினம். அப்பத்தான் எனக்கு ஒன்டு விளங்கிச்சுது. இந்த பஞ்சாங்க புலுடா எல்லாம் வெறும் calculation குழப்பங்களில்லை. கோவில்களின் வியாபார தந்திரங்கள் என்டு. ஒரே நாளில சூரன் போர் என்டா, வார சனம் பிரிஞ்சு பிரிஞ்சு போகும். வெவ்வேறை நாளென்டா முழுச்சனமும் இரண்டு கோவிலுக்கும் போகும்.

சரி கோட சனம் கோவிலுக்கு போறதாலை என்ன லாபம் என்டு கேக்கிறிங்களோ?

ஒரு சின்ன calculation
இந்தமுறை மயூரபதி அம்மன் கோவிலில பால் குடம் எடுத்தது 3000 பேர்.
தலைக்கு 650 ரூபா
மொத்த வருமானம் = 650 x 3000 = 1,950,000.00
ஒரே நாளில் 2 மில்லியன் ரூபா.
இதை விட, ஒவ்வொருவரும் 3 அல்லது 5 அல்லது 7 லீட்டர் பால். சராசரியா 4 லீட்டர் என்டு வச்சா மொத்தப்பால் = 3000 x 4 = 12,000
பாலுக்கு செலவான மொத்த தொகை = 12,000 x 60 = 720,000.00
இவ்வளவு பாலும் சாக்கடையில் தான் ஊத்தப்பட்டது.
So called தன்மானத்தமிழர்களின் ஒரு கூட்டம் தண்ணிக்கே கஸ்டப்பட்டு முகாம்களுக்குள் இருக்கேக்க தான் இந்த கூத்து.

இதை விட புது குடம், புது சீலை - அதுவும் யூனிபோம் மாதிரி - கோவிலிலை தான் வாங்க வேணும். ஒரு பால்குடம் எடுக்க குறைந்தது 5000 ரூபா ஆவது செலவாகும். தயவு செய்து 5000 x 3000 என்ட கணக்கை செய்து பார்க்க வேண்டாம். heart attack வந்துடும்.

Monday, September 7, 2009

கடவுளரின் கவனத்திற்கு - 001 - பாவம் செய்த பலியாடுகள்!

நண்பர்களே,

கடவுளரின் கவனத்திற்கு வராதவை!

'கடவுளரின் கவனத்திற்கு' என்ற தலைப்பில், இது ஒரு தொடர் எழுத்தாக அமையப்போகின்றது. கடவுள், மத நம்பிக்கைகள் உலகம் முழுமைக்கும், பிரதேச, சமூக எல்லைகளை கடந்து பொதுவாக, ஏதோ ஒரு வடிவில் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. நம்பிக்கை என்ற நடத்தை, உயிரியல் பரிணாம பாதையில், மனித இனத்துக்கு, பிழைத்துக்கொள்வதற்கான(survival) ஒரு விடயமாக வரப்பெற்றது. அதற்கு மனித மூளையின் அமைப்பு, அதன் சில பகுதிகள் பொறுப்பாக இருக்கின்றன என்பது அண்மைய விஞ்ஞான ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பு. இந்த நன்மை புரிந்த 'நம்பிக்கை (Belief)' என்ற நடத்தையின் பக்கவிளைவாகவே கடவுள், மத நம்பிக்கைகள் மனித இனத்தில் ஏற்பட்டன. எவ்வாறு இசை, சங்கீதம் போன்றவை பரிணாம வளர்ச்சியின் (Biological Evolution) அம்சமான, தொடர்பாடலுக்கு துணைபுரிந்த 'மொழி (Language)' வளர்ச்சியின் பக்கவிளைவாக அமைந்ததோ, அவ்வாறே கடவுள், மத நம்பிக்கைகளும் நம்பிக்கை என்ற நடத்தையின் பக்கவிளைவே.

ஆனால் மத, கடவுள் நம்பிக்கைகள் என்ற பெயரில் அரங்கேறும் கொடுமைகள், பொருள் வீண்விரயங்கள், ஏமாற்று நடவடிக்கைகள், பாரபட்ச நடவடிக்கைகள் என்றுமே ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை. அவை சிந்திக்கத்தெரிந்த மனிதர்க்கு ஆத்திரமூட்டுபவன. அவ்வகையில், விழிப்புணர்வூட்டும் நோக்கோடு மத நம்பிக்கைகள் என்ற பெயரில் நடைபெறும் பைத்தியக்காரத்தனங்களை அவ்வப்போது வெளிப்படுத்துவதாக இத்தொடர் அமையப்போகின்றது.

பாவம் செய்த பலியாடுகள்???

இது இவ்வாண்டு (2009) சிலாபத்தில் அமைந்திருக்கின்ற முன்னேஸ்வரம் மகா பத்திரகாளி அம்மன் கோவிலில் அரங்கேறிய மகா கொடுமை. ஏறக்குறைய 200 ஆடுகள், கோயில் முன்றலில் பலநூறு மக்கள் முன்னிலையில், அக்கோயிலின் சமய சடங்கு என்ற பெயரில் வெட்டிக்கொல்லபட்டன, அதாவது பலியிடப்பட்டன. படங்களை பாருங்கள் அவையே கதை சொல்லும்.


ஒரு காலத்தில், உலகம் முழுவதும் மத சடங்குகளில் இந்த (கடவுளர்க்கு) பலியிடுதல் என்ற சடங்கு இருந்து வந்திருக்கின்றது. ஆடுகள், கோழிகள் போன்ற விலங்குகளை பலியிடுவதுடன் மட்டும் நிற்காமல், குழந்தைகள் உட்பட மனிதர்களை பலியிடும் வழக்கமும் இருந்திருக்கின்றது) ஆனால் காலப்போக்கில், இவற்றை பல மக்கள் ஏற்றுக்கொள்ளாமலும், தடைச் சட்டங்களாலும் இப்பலியிடுதல் என்பது அருகிப்போயுள்ளது.

ஆனாலும் இன்றுவரை இது எங்கோ ஒரு மூலையில் நடைபெற்றுவரும் நிகழ்வாகவே இருந்து வருகின்றது. இந்தியாவில் நகர்ப்பகுதிகளில் நடைபெறாவிட்டாலும், கிராமப்புறங்களில் அதிகமான அளவில் நடைபெறுவதாகவே அறியக்கிடைக்கின்றது.

ஆனாலும், இலங்கையிலும் இது நடைபெறுகின்றது என்பதை அறிந்தபோது மிக அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் ஏறக்குறைய 200 ஆடுகள், குழந்தைகள், சிறுவர்கள் முன்னிலையில், நீண்ட கூரிய வாள்களால் வெட்டிக்கொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வளவிற்கும் இந்நாட்டில், பொதுஇடங்களில் மிருகங்களை வெட்டிக்கொல்வதற்கு சட்டரீதியான தடை இருக்கின்றது. மதம் எல்லவற்றிலுமிருந்து தப்பிவிடுகின்றது.

எல்லா உயிர்களும் கடவுளின் படைப்பே, அவற்றிலும் கடவுள் வியாபித்திருக்கின்றார் என்று வலியுறுத்தும் இந்து மதத்தில், இக்கொலைகளை எவ்வாறு நியாயப்படுதமுடியும். அத்துடன் உயிக்கொலைகளையும், மாமிசமுண்ணலையும் இம்மதத்தில் மாபாதங்களாக குறிப்பிட்டிருக்கின்றார்கள். தங்கள் மீது கருணைகாட்டுவதாக பல்லாயிரக்கனக்கான மக்கள் நம்பும் இந்த கருணை மிக்க கடவுளர் (ஆகக்குறைந்தது நேரே பார்த்துக்கொண்டிருந்த மகா பட்திரகாளி அம்மன்) ஏன் இப்பாதகங்களை தடுக்கமுடியாமல் போனது. கடவுளரின் கவனத்திலிருந்து இவை தப்பிவிட்டனவா? அவ்வாறெனில் இதோ கடவுளரின் கவனத்துக்கு இவ்விடயம், எதிர்காலத்தில் இம்மாதிரியானவை நடைபெறாமல் தடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு...

மதுவர்மன் (2009-09-06)

நன்றி
படங்கள் மற்றும் செய்தி
Public slaughter of animals http://sundaytimes.lk/image_story.htm
Sacrificial goats http://sundaytimes.lk/090906/News/nws_04.html

உசாத்துணை
Belief and the brain's 'God spot' http://www.independent.co.uk/news/science/belief-and-the-brains-god-spot-1641022.html
Functional Neuroimaging of Belief, Disbelief, and Uncertainty http://richarddawkins.net/article,1994,Functional-Neuroimaging-of-Belief-Disbelief-and-Uncertainty,Sam-Harris-Sameer-A-Sheth-Mark-S-Cohen

Animal sacrifice http://en.wikipedia.org/wiki/Animal_sacrifice

Animal sacrifice: a corrective http://www.hindu.com/op/2003/09/16/stories/2003091600290300.htm
Significance of Anuimals in Hinduism http://www.hinduwebsite.com/hinduism/essays/animals.asp
Hinduism and animals http://www.bbc.co.uk/religion/religions/hinduism/hinduethics/animal.shtml
Ban on sacrificing animals in temples lifted http://www.hindu.com/2004/02/21/stories/2004022106220400.htm

Sunday, August 30, 2009

சரளமான ஆங்கில அறிவு அவசியம், சக்தி தொலைக்காட்சி நேயராக இருப்பதற்கு - இலங்கை

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7:30 மணிக்கு, இலங்கை சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், Zorro தொலைக்காட்சித் தொடரை என்றாவது ஒரு நாள் பார்த்தவர்களுக்கு, அல்லது சனி, ஞாயிறு தினங்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் Grand Master நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு புரியும், இந்தப் பதிவின் தலைப்பு ஏன் அவசியம் என்று.

Zorro தொலைக்காட்சித் தொடர் - ஞாயிறு காலை 7:30

இது முக்கியமாக சிறுவர்களை
இலக்கு வைத்து ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சித் தொடராக இருக்கவேண்டும், காலை நேர தொடர்கள் அநேகமாக சிறுவர்களை இலக்காக கொண்டவை.

சக்தி தொலைக்காட்சியின் இந்த தொடர் அப்படியே ஆங்கில மொழியிலேயே ஒளிபரப்பப்படுகின்றது. தமிழ் மொழியில் ஒலி மாற்றம் இலங்கையிலே பெரும்பாலும் செய்யப்படுவதில்லை என்பது காரணமாக இருக்கலாம். ஆனாலும் ஆச்சரியப்படவும், ஆதங்கப்படவும் வைக்கும் விடயம் என்னவென்றால், இத்தொடரில் உபதலைப்புக்கள் சிங்கள மொழியில் வழங்கப்படுவது, தமிழில் எதுவுமே இல்லாமை.

சக்தி தொலைக்காட்சியின் அநேக தமிழ் மொழியிலமைந்த நிகழ்ச்சிகள் சிங்கள உப தலைப்புக்களுடன் வழங்கப்படுவது வழமை, அது வரவேற்கத்தக்கதும் கூட. ஆனால், ஆங்கில மொழியிலமைந்த தொடரொன்றுக்கு, தமிழ் பேசும் மக்களை நேயர்களாக கொண்ட தொலைக்கட்சி, தமிழ் மொழியை தவிர்த்து சிங்கள மொழியில் உபதலைப்புக்களை வழங்குவது வேதனையளிக்கின்றது.

என்னுடைய நண்பர் வீடொன்றில் நடந்த சம்பவமே என்னை இதை எழுதத்தூண்டியது. மூன்று பத்து வயதிற்கு கூடாத சிறுவர்க்ள் இத்தொடரை பார்த்துக்கொண்டிருந்தபோது, நானும் அவர்களுடன் இணைந்துகொண்டேன், அப்போது அவர்களில் ஒரு சிறுவன் என்னிடம் கேட்டான் ‘மாமா, அந்த எழுத்துக்களை சிங்களத்தில போடுகினமே, தமிழில போடமாட்டினமா?’ என்று. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதற்கு நான், அச்சிறுவனுக்கு ‘உவங்கள் உப்பிடித்தான்’ என்று பதிலளிக்கவேண்டியதாயிற்று.

பெரியவர்களையாவது பரவாயில்லை, அச்சிறுவர்களையும் ஆங்கில தெரிந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு நியாயம். தமிழ் மொழியிலான தொலைக்காட்சியான சக்தி, எம்மொழியில் முக்கியமாக இங்கு உபதலைப்புக்களை கொடுத்திருக்கவேண்டும்? அல்லது தமிழ் மொழிபெயர்த்து உபதலைப்புக்களை போடுவதற்கான வசதி சக்தி நிறுவனத்திடம் இல்லையா?

சக்தியின் Grand Master - சனி, ஞாயிறு இரவு 8 மணி

இங்கேயும் ஒரு ஆங்கில மேலாதிக்கம் நிலவுகின்றது, இந்நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்து வருபவர்களுக்கு இந்நிலைமை புரியும். இந்நிகழ்ச்சியை நாடாத்தும் பிரதீப் என்ற இந்தியர் ஒரு மலையாளி என்று அறியக்கிடைத்தது, ஆனாலும் அவர் தமி மொழியில் கணிசமான புலமையோடு உரையாடுகின்றார்.

அவ்வப்போது இந்நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்கள் பிரதீப் கேட்கும் கேள்விகள் புரியாமல் ஆமா, இல்லையா என்று விடையளிக்க முடியாமல் சங்கடப்படுவதை கண்டிருக்கின்றேன். கேட்கப்பட்ட கேள்வி தொடர்பான விடயம் சம்பந்தமாக போதிய அறிவில்லாமை என்ற காரணம் போக, என்னை ஆத்திரப்பட வைத்த இன்னொரு காரணம் இருக்கின்றது.

அதாவது, பிரதீப் அநேகமாக, அதிகமாக, வேகமாக கதைக்கும் ஆங்கிலத்தை புரிந்துகொள்ளாமல், என்ன கேட்கின்றார் என்று புரியாமல் ஆம் அல்லது இல்லை என்று ஏதோ ஒன்றை விடையளித்து தடுமாறியவர்களை கண்டிருக்கின்றேன். அந்நிலைமைகளில் பிரதீப் நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்களை ஒரு ஏளனத்தனமையோடு நடத்துவதையும் அவதானிக்கலாம். நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்கள் சங்கடப்பகுகின்றார்கள்.

இந்நிகழ்ச்ச்சியில் பங்குபற்றும் அனைவரும் காட்டாயம் ஆங்கிலத்தில் சிறப்பு புலமை பெற்றிருக்கவேண்டும் என்ற நிபந்தனையை சக்தி தொலைக்கட்சி விதித்திருக்கின்றதா? தமிழ் தெரிந்த பிரதீப் தமிழ் மொழி பேசுபவர்களிடம் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்கலாம் தானே.இலங்கை நேயர்களை பிரதீப் இந்திய நேயர்கள் போன்று எண்ணுகின்றாரோ தெரியவில்லை. இந்திய நேயர்கள் போன்றன்று, இலங்கை நேயர்கள் மிகக்குறைந்த அளவிலேயே ஆங்கிலச் சொற்களை பாவிப்பவர்கள். மாறாக இந்தியாவில் அவர்களுக்கேயுரிய, உச்சரிப்புடன்கூடிய தமிழ் கலந்த ஆங்கிலம் பேசுவார்கள், ஆனால் இலைகையில் தமிழர்கள் பெரும்பாலும் அப்படியில்லை.

பிரதீப் அதிகம் ஆங்கிலத்தை பாவிப்பது, மேலும் பங்குபற்ற விருப்பும் நேயர்களை கொஞ்சம் பின்நிற்கச்செய்யும் என்பதை சக்தி தொலைக்கட்சி விளங்கிக்கொள்ளவேண்டும். ஏனென்றால் ஆங்கிலம் சரளமாக தெரியாவிட்டால், பிரதீப் கேட்கும் கேள்விகளை புரிந்துகொள்ள முடியாதென்ற நிலை காணப்படுகின்றது. இவற்றை கவனித்து, சக்தி நிர்வாகம் முடிந்தவரை இந்நிகழ்ச்சிகளில் தமிழ் பாவனையை ஏற்படுத்தலாம்.

’தமிழ் மொழியின் சக்தி’ என்று சொல்லிக்கொள்பவர்கள் அதற்றாற்போல் நடக்காமல், தமிழர்களை ஆங்கில மயப்படுத்தவேண்டும் என்ற குறிக்கோளோடு இயங்குகின்றார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஏற்கனவே சிங்கள மயமாக்கலால் தமிழ்மொழி பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில், இலங்கையின் பிரதான தமிழ் தொலைக்காட்சியான சக்தியில், ஆங்கிலத்தின் ஆதிக்கம் அசாதாரணமாக அதிகமாகவே காணப்படுவது கொஞ்சம் மனவேதனையளிப்பதாகவே இருக்கின்றது.

கொசுறுத்தகவல்: சக்தி தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் ஒரு இந்தியர்

பிரதீப் தொடர்பாக ஏனைய இடங்களில்
http://nkashokbharan.wordpress.com/2008/05/02/a-moment-with-grand-master/
http://www.thehindu.com/fr/2007/06/08/stories/2007060851630400.htm
http://www.hindu.com/mp/2006/06/05/stories/2006060500050702.htm

Saturday, August 29, 2009

அஞ்சலி: கவிஞர் மாவை வரோதயன்


கவிஞர் மாவை வரோதயன் இன்று(2009-08-29 சனிக்கிழமை) அதிகாலை யாழ்ப்பாணத்தில் காலமானார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் கொழும்புக் கிளையின் இலக்கியச் செயலராக மாவை வரோதயனின் பங்களிப்பு அளப்பரியது. இவரது பன்னிரு சிறுகதைகளைக் கொண்ட "வேப்பமரம்" என்ற சிறுகதை தொகுதியும் "இன்னமும் வாழ்வேன்" என்ற கவிதை தொகுதியும் வெளிவந்துள்ளன.

சிவகடாட்சம்பிள்ளை சத்தியக்குமரன் எனும் இயற்பெயரை உடைய மாவை வரோதயன் யாழ்ப்பாணத்தின் வடக்கே மாவிட்டபுரத்தின் பளை எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். கவிதை, சிறுகதை, நாடகம், விமர்சனம், சினிமா எனப் பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். தொடக்கத்தில் கொழும்பில் பரீட்சைத் திணைக்களத்தில் இவர் பணிபுரிந்தார். பின்னர் இலங்கை சுகாதார சேவையில் சுகாதாரப் பரிசோதகராக கடமையாற்றிய இவர் சகல சமூக மக்களுடனும் மிக நெருக்கமான உறவைப் பேணியவர்.

அவரதுமறைவு நிரப்ப முடியாத இடைவெளியை ஈழத்து இலக்கிய உலகில் ஏற்படுத்தி இருக்கிறது அவரது பிரிவு தமிழ் இலக்கிய உலகிற்கும் சமூக விடுதலைச் சிந்தனையாளர்கட்கும் ஒரு பேரிழப்பாகும்.

அவரது பிரிவால் வருந்தும் அவரது மனைவியார் அவர்கட்கும் பிள்ளைகட்கும் குடும்பத்தினருக்கும் நாம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கான இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதில் அவருடைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் இணைந்து, எமது ஆழ்ந்த துயரை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மாவை வரோதயனின் இழப்பு குறித்து

செ.பொ.கோபிநாத் வலைப்பதிவில் http://spggobi.blogspot.com/2009/08/blog-post_29.html
கானா பிரபாவின் வலைப்பதிவில்http://kanapraba.blogspot.com/2009/08/blog-post_30.html

மாவை வரோதயனின் நூலகள் நூலகம் திட்டத்தில்

Tuesday, August 25, 2009

கோழியா, முட்டையா, எது முதலில் வந்தது?

ஒருவரை பார்த்து, 'இதுவா அதுவா, எது முதலில் வந்தது அல்லது எதிலிருந்து எது வந்தது’ என்று வெளிப்படையாக விடை சொல்லமுடியாத கேள்வி'யொன்றை கேட்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு இதற்கான விடை உடனடியாக தெரியாதாயின், மாறாக உங்களை மடக்குவதற்காக அவர் உடனடியாக உங்களை நோக்கி ஒரு கேள்வியை எடுத்துவிடுவார். ‘கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்று சொல்லுங்கள்' என்று உங்களை கேட்பார். நீங்களும் எது முதலில் வந்தது என்று சொல்லமுடியாது விழிப்பீர்கள். உடனே அவர் ‘அவ்வாறே உங்களுடைய முன்னைய கேள்விக்கும் விடையளிப்பது கடினம்' என்பார்'

மேற்படி சந்தர்ப்பங்கள் பலவற்றை நான் சந்தித்திருக்கின்றேன். பெரிய அறிஞர்கள் என்று மதிக்கப்படுபவர்கள் கூட இவ்வாறு நடந்ததை கண்டிருக்கின்றேன். அவ்வாறே நீங்களும் சந்தித்திருப்பீர்கள். சரி, கோழியா முட்டையா, எது முதலில் வந்தது என்பது பற்றி இங்கே இப்போது ஆராய்வோம்.
 

“ …இந்த கோழி, கோழிமுட்டை பிரச்சினை தொடர்பாக

எம்மவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி கூட

அடிப்படையில் பிழையானது. 'கோழியிலிருந்து முட்டை

வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா?'

என்று கேட்பார்கள். கோழியிலிருந்து முட்டை வருகின்றது

சரி, அதெப்படி முட்டையிலிருந்து கோழி வரமுடியும்?

குழப்பமாக இருக்கின்றதா?… " 


கோழியா, முட்டையா, எது முதலில் வந்தது?

கோழிக்கு முன்பே முட்டையிடக்கூடிய வேறு உயிரினங்கள் இருந்துள்ளன தானே. உதாரணத்துக்கு, உயிர்ப் பரிணாமத்தில் (Biological Evolution), நகருயிர்களின் (Reptiles) பின்பு தான், பறவைகள் உருவாகியிருந்தன. டைனசோர் போன்ற நகருயிர்கள் பறவைகள் தோன்றுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்திருக்கின்றன. ஆகவே கோழியை விட, 'முட்டை' தானே முதலில் வந்திருக்கவேண்டும். இது கொஞ்சம் சுவாரசியமான விளக்கமாக இருக்கின்றது இல்லையா!

அவ்வாறல்ல, இங்கே கேள்வியிலே கொஞ்சம் குழப்பமிருக்கின்றது. கோழியா, முட்டையா என்பதற்கு பதிலாக கோழியா, கோழிமுட்டையா, என்றவாறு கேள்வி இருந்திருக்கவேண்டும். முட்டை என்று பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டால், அது கோழிமுட்டையல்லாத முட்டைகளையும் உள்ளடக்கி, டைனசோர்களையும் உள்ளே கொண்டுவந்துவிடும். ஆகவே கேள்வி ‘கோழியா, கோழிமுட்டையா, எது முதலில் வந்தது?' என்று அமையவேண்டும்.

இந்த கோழி, கோழிமுட்டை பிரச்சினை தொடர்பாக எம்மவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி கூட அடிப்படையில் பிழையானது. 'கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா?' என்று கேட்பார்கள். கோழியிலிருந்து முட்டை வருகின்றது சரி, அதெப்படி முட்டையிலிருந்து கோழி வரமுடியும்? குழப்பமாக இருக்கின்றதா?

மனிதத் தாயிலிருந்து குழந்தை வருகின்றது (பிறக்கின்றது). குழந்தை பிறந்த பின்பும், தாய் தாயாக இருக்கின்றாள், குழந்தை என்று புதிய ஒரு பொருள் வந்திருக்கின்றது. ஒன்றிலிருந்து இன்னொன்று வந்து, இப்போது இரண்டாக இருக்கின்றது.

அவ்வாறே, கோழி முட்டையிடுகின்றது. அதுவே கோழியிலிருந்து முட்டை வருகின்றது. அங்கேயும் கோழி கோழியாக இருக்கின்றது, முட்டை என்று ஒரு புதிய பொருள் வந்திருகின்றது.

இவற்றை வைத்து இப்போது சொல்லுங்கள். முட்டையிலிருந்து கோழி வருகின்றதா அல்லது முட்டையே கோழியாக மாறுகின்றதா?

ஆம், முட்டைக்குள் உயிர், இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு அந்த முட்டை அப்படியே கோழியாக மாறுகின்றதேயொழிய, முட்டையிலிருந்து கோழி வருவதில்லை. முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு பொரிக்கும்போது, இப்போது முட்டை இல்லை, கோழிக்குஞ்சு மட்டும் தானே எஞ்சியுள்ளது. இது உரு மாற்றம் தானே. ஒன்று இன்னொன்றாக மாறி எஞ்சியுள்ளது ஒன்றுதானே.

ஆகவே, இன்னும் யாராவது உங்களை பார்த்து, கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்த் கோழி வந்ததா என்று கேட்பாராயின், அவரது கேள்வியை திருத்தவேண்டியது உங்கள் பொறுப்பு. ஏனென்றால், தர்க்கரீதியாக அக்கேள்வி பிழையானது. இபோது சரியான கேள்வி ‘கோழியா (கோழி) முட்டையா, எது முதலில் வந்தது?' என்பதே. 'ஒன்றிலிருந்து மற்றது' என்ற முறையை விட்டுவிடவேண்டும், ஏனென்றால் இருவழிக்கும் அது பொருந்தவில்லை.

கோழிமுட்டை என்றால் என்ன என்று உங்களை கேட்டால் உடனே சொல்வீர்கள் ‘கோழி இட்ட முட்டை தான் கோழிமுட்டை' என்று. ஆனால், உயிரியலின்படி, அவ்வாறிருக்கவேண்டியதில்லை. கோழியல்லாத விலங்கு (பறவை) கூட கோழிமுட்டையை இடமுடியும். அதை பின்பு விளக்குகின்றேன். இலகுவாக ஒருவரியில் சொல்வதானால், குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்வது போல தான்.

மாறாக, உயிரியலின்படி, கோழியாக மாறக்கூடிய முட்டையே கோழிமுட்டையாக இருக்கமுடியும். அதாவது, எந்த முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு பொரிக்கின்றதோ (முட்டை கோழியாக மாறுகின்றது) அந்த முட்டை நிச்சயமாக கோழிமுட்டையாக தானே இருக்கமுடியும்.

தாயின் கருப்பையிலிருந்து குழந்தை வெளியே வந்த கணத்திலிருந்து நாங்கள் குழந்தையின் வயதை கணிக்கத்தொடங்குகின்றோம். மாறாக, அக்கணத்துக்கு ஏறத்தாழ பத்து மாதங்களுக்கு முன்பே குழந்தையின் உருவாக்கம்(ஆரம்பம்) தொடங்கிவிட்டது என்பது தானே உண்மை. அதாவது தந்தையின் விந்துக்கலமொன்றும் (Sperm Cell), தாயின் முட்டைக்கலமொன்றும் (Ovum) கருப்பையில் இணைந்து, குழந்தையை உருவாக்கக்கூடிய முதலாவது கலம் (நுகம் - Zygote) உருவாக்கப்பட்டபோதே குழந்தையின் உருவாக்கம் தொடங்கிவிட்டது. அந்த ஒரு கலம் பின்பு பல கலங்களாக பிரிவடைந்து நேரத்துடன் முழுமையான குழந்தையாக உருமாறுகின்றது. குழந்தையின் நடத்தைகள், உடலியல்புகள் எவ்வாறு இருக்கும் என்ற விடயங்களெல்லாம், அந்த முதலாவது கலத்திலேயே, தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன.

உயினமொன்றின் மொத்த இயல்புகளையும் தீர்மானிப்பது அதன் கலங்களிலுள்ள DNA யாதலால், DNA யில் ஏற்படுகின்ற மாற்றங்கள் காரணமாக, இயற்கையில், உயிரினங்கள் பரிணாமமடைகின்றன. கோழி போன்ற விலங்கினத்தில், ஆண்விலங்கின் விந்துக்கலத்திலிருந்தும் (Sperm), பெண்விலங்கின் முட்டைக்கலத்திலிருந்தும் (Ovum) (இது கோழிமுட்டையல்ல) DNA மூலக்கூறுகள் ஒன்றுசேர்ந்து, நுகம் (Zygote) - கோழிக்குஞ்சொன்றின் முதலாவது கலம், உருவாகின்றது. இந்த முதற்கலம் எண்ணுக்கணக்கற்ற தடவைகள் கலப்பிரிவுக்கு (ஒரு கலம் இரண்டாக பிரிந்து, இரு புதிய கலங்கல் உருவாதல்) உள்ளாகி, ஒரு முழுமையான விலங்குக்குரிய கலங்கள் உருவாகின்றன. எந்த ஒரு விலங்கிலும், எல்லாக் கலங்களும் ஒரே மாதிரியான DNA மூலக்கூறகளையே கொண்டிருக்கும் அந்த DNA முதலாவது கலமான நுகத்திலிருந்தே (Zygote) வருகின்றது.

ஆணினதும், பெண்ணினது DNA கலப்பினால் ஏற்பட்ட சிறிய மாற்றங்களினாலோ அல்லது, நுகத்தை (Zygote) உருவாக்கிய DNA யில் ஏற்பட்ட விகாரங்களினாலோ (Mutation) கோழியல்லாத உரிரினங்களிலிருந்து கோழிகள் பரிணாமமடைந்தன. இந்த மாற்றங்களும், விகாரங்களும் (Mutations) நுகம் (Zygote) உருவாகும் தருணத்தில் மாத்திரமே பாதிப்பை ஏற்படுத்தவல்லன. அதாவது, கோழியல்லாத இரு விலங்குகள் (இன்னும் சிறப்பாக பறவைகள்) இணைசேர்ந்தன, அவற்றினுடைய புதிய நுகத்திலிருந்த (Zygote) DNA, முதலாவது உண்மையான கோழியை உருவாக்கிய அந்த விகாரத்தை (அல்லது விகாரங்களை - mutations) கொண்டிருந்தது. அந்த ஒரு நுகக்கலம் (Zygote) கலப்பிரிவடைந்து முதலாவது உண்மையான கோழியை உருவாக்கியது

முதலாவது, உண்மையான கோழியாக உருவாகிய அந்த நுகத்துக்கு முன்பு, கோழியல்லாத விலங்குகள் மாத்திரமே இருந்தன. புதிய விலங்கொன்றை உருவாக்கக்கூடிய DNA விகாரங்கள் (mutations) ஏற்படக்கூடிய ஒரேயொரு இடம், நுகக்கலம் (Zygot) மாத்திரமே. அந்த நுகக்கலம் கோழியினுடைய முட்டையினுள்ளே கொண்டிருக்கப்பட்டுள்ளது. அதாவது, கோழி முட்டையென்பது ஒரு நுகம் - கோழியாக உருவாகப்போகின்ற அந்த உயிரினத்தின் முதலாவது கலம். ஆகவே முட்டையே முதலில் வந்திருக்கவேண்டும் என்பது, சந்தேகத்துக்கு இடமில்லாது நிரூபணமாகின்றது.

காலாகாலத்துக்கும் விஞ்ஞானிகளையும், தத்துவாசிரியர்களையும், ஏன் எங்கள் எல்லோரையுமே குழப்பத்திலாழ்த்திக்கொண்டிருந்த இந்த கேள்விக்கு, இப்போது விஞ்ஞானம் விடையளித்துள்ளது. இன்னும் இதுபற்றி (அறியாமையால்) குழம்பி/குழப்பிக்கொண்டிருப்பவர்களை தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பும் இதை அறிந்தவர் கைகளிலேயே உள்ளது.

குறிப்பு: இக்கட்டுரை இலங்கையிலிருந்து வெளிவருகின்ற 'பயில்நிலம்' காலாண்டு சஞ்சிகையின், 2009 இன் முதல் காலாண்டு இதழில் வெளிவந்தது.


உசாத்துணை
2. Which came first, the chicken or the egg? http://science.howstuffworks.com/genetic-science/question85.htm
3. Chicken and egg debate unscrambled http://www.cnn.com/2006/TECH/science/05/26/chicken.egg/
4. Which Came First? Eggs Before Chickens, Scientists Now Say http://www.livescience.com/animals/081114-chicken-or-egg.html
5. Chicken and egg question answered http://www.guardian.co.uk/science/2006/may/26/uknews