Saturday, March 7, 2009

கிரிக்கெட்+அரசியல்=பயங்கரவாதம்?

கடந்த 3 ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது திட்டமிட்ட தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுததாரிகளான ஒரு குழுவினர் நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் இலங்கை அணியினர் காயங்கள் அடைந்தனர். எவ்வாறாயினும் இத்தகைய தாக்குதலை எவர் செய்திருப்பினும் வன்மையாகக் கண்டிக்கப்படவும் எதிர்க்கப்படவும் வேண்டியதாகும். தீவிரவாத ஆயுதக் குழுக்களின் பலம் ஓங்கியுள்ள பாகிஸ்தானில் இவ்வாறான தாக்குதல் முயற்சி இடம்பெறக் கூடியது என்பதை இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்க வேண்டியதொன்றாகும். தெற்காசிய நாடுகளில் காணப்படும் பயங்கரவாதம் பற்றியும் இலங்கையில் இருந்து வரும் பயங்கரவாதம் பற்றியும் உச்சக் குரலில் பேசி வந்த இலங்கையின் தலைவர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் பற்றிக் கணக்கிட முடியாமல் போய்விட்டமை ஏன் என்பது புரியவில்லை.

ஏற்கனவே கடந்த வருடப் பிற்கூறில் மும்பையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டது. அங்கு தமக்குப் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தையே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்திய அணி அங்கு செல்லாது விட்டதற்கு பாகிஸ்தான் மீது இந்தியாவிற்கு ஏற்பட்ட விரோதக் கோபமே காரணமாகும். இந்தக் கோபத்தின் பின்னால் இந்திய பாகிஸ்தான் முரண்பாட்டு அரசியல் ராஜதந்திரம் இருந்தது. அது இன்று நேற்று ஏற்பட்டதொன்றல்ல. பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து நீடித்து வருவதாகும். இந்நிலையில் இந்திய அணி அங்கு செல்ல மறுத்ததைப் பொருட்படுத்தாது இலங்கை அணிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. அதனை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஏற்றுக்கொண்டு அங்கு சென்று விளையாட சம்மதம் தெரிவித்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற உள்ளார்ந்த நிலையிலேயே இலங்கை அணி பாகிஸ்தான் சென்றது என்பதை இலகுவில் மறைத்துவிட முடியாது.

இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான அரசியல் ராஜதந்திரப் பின்புலம் பார்க்கப்பட்ட அளவிற்கு இலங்கை அரசாங்கத்தால் அங்குள்ள பயங்கரவாதக் குழுக்கள் பற்றியும் அவற்றிலிருந்து இலங்கை அணியினரைப் பாதுகாக்கக் கூடிய வழிவகைகள் பற்றியும் முன்கூட்டியே சிந்திக்கப்படவில்லை. உயிர்ச்சேதம் இன்றி இலங்கை அணியினர் மீண்டு வந்தமை அரசாங்கத்திற்கு ஆறுதல் தருவதாக இருந்த போதிலும், எழக் கூடிய எதிர்ப்புகளை சமாளித்துக் கொள்ளவும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவைப் பெறவும் ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாகவே செயற்பட்டனர். நேபாளப் பயணத்தில் இருந்த ஜனாதிபதி தன்னுடன் இருந்த வெளியுறவு அமைச்சரை உடன் பாகிஸ்தான் அனுப்பியதுடன், தானும் ஒருநாள் முந்தியே பயணத்தை முடித்து நாடு திரும்பினார். இதனால், கிரிக்கெட் வட்டாரங்களில் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பெயர்கள் பாதுகாக்கப்பட்டன. அதன் மூலம் இவர்கள் தமக்கான சக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் கிரிக்கெட் என்பது வெறுமனே ஒரு விளையாட்டு மட்டுமல்ல அதன் பின்னால் அரசியல் வணிகம், இலாபமீட்டல் என்பன மிகக் கெட்டியாக இருந்து வருவதையும் உறுதிப்படுத்த முடிந்துள்ளது.

இத்தாக்குதல் நடைபெற்று 5 நாட்களாகியும் உரிய ஆயுததாரிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. எந்தவொரு தீவிரவாத இயக்கமும் உரிமை கோரவுமில்லை. அதனால் ஊகங்களை மட்டுமே ஊடகங்களும் இணையத்தளங்களும் வெளியிட்டு வருகின்றன. அத்துடன், இலங்கை இந்திய பாகிஸ்தானிய உயர்மட்டத் தலைவர்கள் தத்தமது நிலைப்பாடுகளுக்கு ஏற்ப கருத்துகளைக் கூறியும் வருகின்றனர். தாக்குதலுக்குப் பின்பு இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை அணி மீதான தாக்குதலைக் கண்டித்துவிட்டு பாகிஸ்தான் மீது பழி சுமத்தும் வகையில் கருத்துக் கூறிக்கொண்டார். அத்துடன் மேற்படி தாக்குதலை மும்பைத் தாக்குதலின் தொடர்ச்சி என்றும் கூறி பாகிஸ்தான் தனது நாட்டினில் இருந்து வரும் பயங்கரவாதத்தை உண்மையாகவே ஒழிக்க வேண்டும் என்றார். அதேவேளை, பாகிஸ்தானில் இருந்து வெளிவந்த கருத்துகளில் ஒன்று மும்பைத் தாக்குதலுக்குப் பழி தீர்க்கும் வகையில் இந்திய உளவு நிறுவனமான "றோ' வின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட தாக்குதல் என்றவாறு கூறப்பட்டது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் றோகித போகொல்லாகம கூறுகையில்; புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்டிருப்பதை நிராகரிக்க முடியாது என்றார். ஏனென்றால், தோல்வியால் விரக்தியடைந்த புலிகள் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடவே செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு லாகூர் தாக்குதல் பல்வேறு தரப்புகளின் கருத்துகளுக்கும் கண்ணோட்டங்களுக்கும் இலக்காகி உள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் விரைவில் இத்தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து இதன் பின்னால் உள்ளவற்றை அம்பலப்படுத்துவோம் என்று கூறியுள்ளார். அதேவேளை, இலங்கை அரசாங்கத்திடம் வருத்தம் தெரிவித்து இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவுக்கு எவ்வித பங்கமும் ஏற்படாது என்றும் அறிவித்திருக்கிறார். மேற்படி தாக்குதலை இந்தியத் தலைவர்களும் பிரதான ஊடகங்களும் தமது பாகிஸ்தான் எதிர்ப்புப் பல்லவிக்கு ஏற்றவிதமாகச் சுருதி சேர்த்து வாசித்து வருகின்றனர். அவர்களது கருத்து நோக்கின் படி தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்பது ஏதோ பாகிஸ்தானில் மட்டும் தான் விளைந்த வண்ணம் இருக்கிறது என்பதாகவே காட்டப்படுகிறது. இந்தியாவில் அவை இல்லை என்பது போலவும், இருந்தாலும் தமது கட்டுக்குள் இருந்து வருவதாகவும் அவை கூறி வருகின்றன. இந்தியாவில் எங்கு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தாலும் உடனடியாகவே பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களே காரணம் எனப் பட்டை அறைந்து கூறிவிடுவது இந்திய ஆளும் தரப்பிற்கு கைவந்த ஒன்று. மேலும் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தான் பின்னிருந்து இக் குழுக்களை இயக்குவதாகப் பரப்புரை செய்வதிலும் இந்திய ஊடகங்கள் மகா கெட்டிக்காரர்கள். ஆனால் , இந்தியாவில் பல்வேறுபட்ட பயங்கரவாத அமைப்புகள் இருந்து வருவது பற்றியும் அவை நடத்தும் தாக்குதல் பற்றியும் அடக்கியே அவை வாசிக்கின்றன.

அத்துடன், இந்திய உளவு நிறுவனமான "றோ' வின் செயற்பாடுகள் பற்றி வாயே திறப்பதில்லை. முஸ்லிம் தீவிரவாதிகள் பற்றி நீட்டி முழக்கும் எவரும் இந்து தீவிரவாத அமைப்புகளான ஆர்.எஸ். எஸ். சிவசேனை போன்ற சங்கப்பரிவார அமைப்புகள் இந்துத்துவத்தின் பேரால் நடத்தும் பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிப் பேசுவது மிகக் குறைவு. இன்றைய நிலையில் தீவிரவாதம் பயங்கரவாதம் இன, மத , மொழி பிரதேச அடிப்படையில் எங்கிருந்து வந்தாலும் அது எதிர்த்து நிராகரிக்கப்பட வேண்டியதாகும். அவை பாரத புண்ணிய பூமியில் இருந்து வந்தால் புனிதமானது என்றும் பாகிஸ்தானில் இருந்து வந்தால் அழிவுகரமானது என்றும் பார்க்கும் குறுகிய பார்வைகள் அகற்றப்பட வேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சோஷலிசத்தையும் மார்க்ஸிஸத்தையும் வர்க்கப் போராட்டப் பாதையில் அமைந்த விடுதலைப் போராட்டங்களையும் முறியடிக்கவே பயங்கரவாதக் குழுக்களையும் இயக்கங்களையும் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு உருவாக்கி நிதி, ஆயுதம், பயிற்சி வழங்கி முன் தள்ளிவிட்டது. அதேவழியில் ஏனைய முதலாளித்துவ ஆட்சி அதிகார சக்திகளும் அத்தகைய குழுக்களை தோற்றுவித்தன. இது சிறிய நாடுகளில் பாதாள உலகக் குழுக்களை உருவாக்கி இயக்குவது வரை கொண்டு செல்லப்பட்டது. அன்று சதாம் ஹுஸனையும் , பின் லேடனையும் வளர்த்து அரங்கில் ஆடவிட்டது அமெரிக்கா என்பதை யார் தான் மறுப்பர். அதே பெயர்கள் 9/11 க்குப் பின்பு உலகின் ஈவிரக்கமற்ற உலகப் பயங்கரவாதிகளாகக் காட்டப்பட்டனர். ஈராக்கில் புகுந்து கொள்ளவும் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கவும் அதே பெயர்களைத் தான் அமெரிக்கா பயன்படுத்தியது. தமது தேவை நிறைவேறும் மட்டும் விடுதலைப் போராளிகளாகக் காட்டி அத் தேவை முடிந்ததும் பயங்கரவாதிகளாக சித்திரித்தும் ஊட்டி வளர்த்தவர்களையே உதைத்து அழிப்பதும் ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளுக்கு கைவரப் பெற்ற கலையாகும்.

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கான போராட்டத்திலும் அமெரிக்கா , இந்தியா என்பன நடந்து கொண்ட முறைமையை யாராவது இன்றும் விளங்கிக் கொள்ளாவிட்டால் அத்தகையோர் முட்டாள்களாக அல்லது அறிவிலிகளாக மட்டுமே இருக்க முடியும். எனவே, தீவிரவாதம் பயங்கரவாதம் வெறுமனே ஒரு கேள்வி ஒரு விடையில் விளக்கிக் கொள்ளவியலாத ஒன்றாகவே காணப்படுகிறது. அது யாரால் யாருக்காக எந்த வழிமுறையில் முன்னெடுக்கப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். எந்தவொரு மக்கள் பிரிவினருக்கும் எதிராக ஒரு சிலரின் தேவைக்காக முன்னெடுக்கப்படும் தீவிரவாதமோ தாக்குதலோ அடிப்படையில் மக்கள் விரோதமானதாகும்.

இவ்வாறு தான் கிரிக்கெட் என்ற விளையாட்டுப் பற்றியும் நோக்க வேண்டியுள்ளது. அது நமது நாட்டின் தேசிய விளையாட்டுக்களில் ஒன்றல்ல. அது பிரித்தானியாவில் இருந்து நம்மீது திணிக்கப்பட்ட கனவான்களின் காலத்தை விரையமாக்கும் விளையாட்டு. அது இன்று சில நாடுகளால் மட்டுமே விளையாடப்படுகிறது. அவற்றில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்பன தெற்காசிய நாடுகளில் முக்கியமானவைகளாகும். இந்த கிரிக்கெட் விளையாட்டு வெறுமனே உடல் நலத்திற்காகவோ நட்பை விருத்தியாக்குவதற்கோ நடத்தப்படுவதில்லை. இன்று இந்த விளையாட்டு முற்றிலும் பணமும் சொத்தும் குவிக்கும் களமாகக் காணப்படுகிறது. ஏகாதிபத்திய உலகமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கு இக் கிரிக்கெட் விளையாட்டு பக்கபலமாகிக் கொண்டது. விளையாட்டு வீரர்களின் திறமையையும் ஆற்றல்களையும் விலைகொடுத்து வாங்குவதில் பல்தேசிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டன. தத்தமது விளம்பரங்களுக்காக விளையாட்டு வீரர்களை பிம்பமாக்கிக் கொண்டன. கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்குக் கோடிக்கணக்கில் பணம் கொட்டி அனுசரணை வழங்கி வருகின்றன. இந்தப் பணத்தில் ஒரு பகுதி விளையாட்டு வீரர்களுக்கும் மறுபகுதி கிரிக்கெட் சபையினருக்கும் சென்றடைகின்றன. அதனாலேயே கிரிக்கெட் சபையின் தலைவராவதற்கும் ஏனைய பதவிகளுக்கும் கடும்போட்டி இருந்து வருகின்றதை அவதானிக்கலாம். இந்தியாவின் கிரிக்கெட் சபைத் தலைவராக வருவதற்கு மத்திய அமைச்சராக இருக்கும் சரத்பவார் எத்தனை பாடுபட்டு தலைவரானார். அங்கே மக்களுக்குச் சேவை செய்வதற்கு அல்ல. அங்கு ஓடும் பண நதியில் நீச்சல் அடிப்பதற்கேயாகும். இங்கும் பெரும் பெரும் பண முதலைகள் பெருமளவில் செலவு செய்து கிரிக்கெட் சபைத் தேர்தலில் நின்று வருவதையும் காணலாம்.

இவ்வாறு கிரிக்கெட் விளையாட்டும் வீரர்களும் கிரிக்கெட் சபையும் கோடி கோடியாகப் பணம் பண்ணிக் கொண்டிருக்க அவ் விளையாட்டை நேரிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து ரசித்து நிற்கும் மக்கள் இறுதியில் கொட்டாவி விட வேண்டியதாகவே இருந்து வருகிறது. இத்தகைய வணிகமயப்படுத்தப்பட்ட இக் கிரிக்கெட் விளையாட்டினால் பல்தேசியக் கம்பனிகள் தமது உற்பத்திகளை மக்களிடையே திணிக்க விளம்பரங்கள் மூலம் பிரசாரம் செய்கின்றன. கொக்காக்கோலா, பெப்சி முதல் எரிபொருட்கள் வரையானவற்றுக்கு கிரிக்கெட்டில் முன்னணி வகிக்கும் வீரர்களைப் பயன்படுத்திக் கொள்வதையும் காணமுடிகிறது. அவை மட்டுமன்றி அரசியல்வாதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் கிரிக்கெட்டின் மூலம் பன்முகப்பயன்கள் சென்றடைகின்றன. அத்துடன் ஒவ்வொரு விளையாட்டுத் தொடருக்குப்பின்பும் பாதுகாப்புக்கென்ற பெயரில் யுத்தத்திற்கும் பெரும் தொகைப் பணம் அன்பளிப்பாகிறது. அத்துடன் அரசியலிலும் இக் கிரிக்கெட் மூலம் செல்வாக்குச் செலுத்தப்படுகிறது.

ஆதலால் கடந்த 3 ஆம் திகதி லாகூரில் இடம்பெற்ற தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரு கருத்திற்கு இடமேயில்லை. ஆனால் பணம் சம்பாதிக்கும், ஒரு சிலரின் பைகளை நிரப்பும், மக்களை நுகர்வுக்குத் தூண்டும் வகைகளிலான இக் கிரிக்கெட் விளையாட்டினால் நாட்டு மக்களுக்கோ நாட்டிற்கோ எவ்வித பலாபலன்களும் கிடைக்க மாட்டாது என்பதே உண்மையாகும்.