Thursday, October 30, 2008

போராட்டங்களில் நாடக அரங்கத்தின் வகிபாகம்

ஒரு புலக்காட்சி ஊடகம் என்ற வகையில், எழுத்தறிவற்ற பாமரமக்களையும் சென்றடையக்கூடியது அரக்காற்றுகையாகும். மக்கள்நிலைப்பட்ட அல்லது மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களின் பிரதான பிரசார ஊடகமாக நாடகங்களே திகழ்ந்து வந்திருக்கின்றன. மக்கள் போராட்டங்களைப்பொறுத்தவரையில் அதன் பெருவாரியான பிரதிநிதிகள் உழைக்கும் மக்களைச்சேர்ந்த பாமர மக்களே. போராட்டங்களை முன்னேடுக்கும் மக்கள் சார்பு சக்தியானது பலவகையான ஊடகங்களை மக்களை அறிவூட்டவும் எழுச்சியூட்டவும் பயன்படுத்துவது வழமை.

பெரும்பாலன மக்கள் போராட்டங்கள் இடம்பெறும் பிரதேசங்களில் இலத்திரனியல் ஊடகங்கள் எல்லாம் அடக்கியாழும் வர்க்கத்தின் கைக்கூலிகளாகவே செயற்பட்டு வருகின்றன. இதனால் அவை புரட்ட்சியின் போராட்டத்தின் எதிர் ஊக்கிகளாகவே நோக்கப்படவேண்டியன. மேலும் அச்சு ஊடகங்களும், அடக்கியாழும் சக்திகளின் வண்ணமயமான அச்சு ஊடகங்களுடன் போட்டியிட்டு மக்களை சென்றடய வேண்டியவையாகவுள்ளன. அத்துடன் பாமர மக்களின் எழுத்தறிவு மட்டமானது அவ்வடைவுக்கு பெரும் தடையாகவே அமைந்துவிடுகிறது. ஆக பாமர மக்களை வெற்றிகரமாக சென்றடையக்கூடியதும், இலகுவாக கருத்துக்களை புகுத்தி எழுச்சிகொள்ளச்செய்யக்கூடியதுமான ஊடகம் புலக்காட்சி ஊடகம் ஒன்றாகும். சினிமா என்பது நேர, பண விரயம்மிக்கதும் காட்சிப்படுத்துவதற்கு திரையரங்குகளின் தேவையுடையதுமான ஊடகமாகும்.போராட்ட சக்திகளின் அக புற சூழ்நிலைகள் சினிமாவை பிரசார ஊடகமாக கைக்கொள்ள ஏதுவாக அமைவதில்லை. இதனால் போராட்டங்களில் சினிமாவின் பங்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. (ஆனாலும சில போராட்டங்களில் சினிமா பிரச்சார ஊடமாக பயன்பட்டுள்ளது) எனவே செலவு குறைந்த செயற்றிறன் மிக்க ஊடகமாக நாடகத்தையே கொள்ளலாம். அதுவும் முக்கியமாக வீதி நாடகங்களே போராட்டங்களுக்கு மிகச்சிறந்த ஊடகமாக அமையக்கூடியன.

அநேகமாக அதிகார வர்க்கத்தினால் நடமாட்டத்துக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கும் போராட்ட சக்திகள் திடீர் திடீரென மக்கள் கூடுமிடங்களில் ஒன்றுசேர்ந்து வீதி நாடகம் ஒன்றை நிகழ்த்திக்காட்டிவிட்டு மறைவதில் உள்ள இலகுத்தன்மை மற்றய புலக்காட்சி ஊடகங்களில் இல்லை.மக்களுக்கும் பிரச்சினைலளை வெறும் சொற்ற்களால் விளங்கிக்கொள்வதைவிட தமது பிரச்சினைகளை மூன்றாம் நபராக நின்று பார்த்து உணர்ச்சிபெறுவதென்பது இலகுவானதொன்றாகும். தமது அவலங்கள் தம்முன்னே நிகழ்த்திக்காட்டப்படும்போது அவ்வவலம் பலமடங்காகி மக்களின் நெஞ்சை சுடும். அடக்கப்பட்ட வாழ்வினால் ஏற்படும் துலங்களின்மை அல்லது மரத்துப்போதல் (insensitiveness ), தினமும் நடக்கும் அவலங்கள் மக்களின் உள்ளுணர்வை தொடாத்தன்மை என்பன அதிகரித்தே காணப்படும். அதையும் மீறி மகளின் மனதை தொட்டு அவலங்களின் உண்மைக்கோலத்தை உணரச்செய்வதில் நாடகங்களே மிகச்சிறந்த கருவியாகும்.

தலைவிதியை நொந்துகண்டிருக்கும் மக்களுக்கு இவ் அவலஙகள் தீர்க்கப்படலாம், அதிகாரத்தை மக்கள் கேள்வி கேட்களாம் , மக்கள் எழுச்சியின் முன் எவ்வாறான அதிகாரமும் செல்லாக்காசே என மக்களின் பலத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கு நாடகத்தாலேயே முடியும். அவலங்களை அநுபவிக்கும் நாடக கதைமாந்தரின் எழுச்சியானது அவர்களின் மீட்சிக்கு வழிகோலுவதாக காட்டப்படுவதும், எழுச்சியினதும் போராட்டத்தினதும் மாட்சிமை விளக்கப்படுவதுமே போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோரின் மிகச்சிறந்த நாடக உத்தியாக அமையும். நம்பிக்கையீனச்சகதியில் கிடந்துழலும் மக்களுக்கு நம்பிக்கையளித்து எழுச்சிகொள்ளச்செய்வதும் எழுச்சிகொண்ட மக்களின் போராட்டத்தை ஆற்றுப்படுத்துவதிலும் நாடகக் கலையால் மிகச்சிறந்த பங்கொன்றை ஆற்றமுடியும் . எனினும் பிரச்சார ஊடகமாக நாடகத்தின் வெற்றியானது ஏனய ஊடகங்களை அதுவும் வண்ணமயமான மயக்கும் போதைதரும் இலத்திரனியல், சினிமா ஊடகங்களை வென்று மக்களிடத்தே சென்றடைவதிலும் அதன் பின் மக்களை அவ்வூடகங்களின் மலிவான போதையூட்டலிலிருந்து மீட்டு நாடகத்தைநோக்கி கொண்டுவருவதிலுமே தங்கியுள்ளது.

அடுத்த பதிவில் போராட்டங்களின் வெற்றிக்கு காரணமாக நாடகங்கள் அமைந்த சில சந்தர்ப்பங்களான "கந்தன் கருணை" "மண் சுமந்த மேனியர்" மற்றும் நேபாள மாவோயிஸ்டுகளின் போராட்டங்களில் நாடகங்களின் பங்கு என்பனபற்றி பார்க்கலாம்.

Tuesday, October 28, 2008

தேசிய கலை இலக்கியப் பேரவை - பகுதி ஒன்று

எனது கடைசி பதிவிற்கு பின்னூட்டம் போட்டவர்கள் தேசிய கலை இலக்கியப் பேரவை பற்றி விரிவான பதிவு போடும்படி கேட்டதற்கு இணங்க இப்பதிவு இடப்படுகிறது . மொத்தம் மூன்று பதிவுகளுக்கு இது நீளும்

1. வரலாற்றுப் பின்புலம்

2008இல் தேசிய கலை இலக்கியப் பேரவை தனது 35வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. மூன்றரைத் தசாப்த காலத்திற் பேரவை ஆற்றி வந்த பணிகள் காத்திரமானவை. கலை இலக்கியச் சவால்கள், நிதி நெருக்கடிகள், சமூகத் துயரங்கள், அரசியல்-யுத்தக் கொடூரங்கள், மனித அவலங்கள், வீண் உயிரிழப்புக்கள் என்பன நடுவே கடும் எதிர்நீச்சலிட்டு அது தனது பணிகளை முன்னெடுத்து வந்துள்ளது. அப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவிய பிரதான காரணங்கள் இரண்டு. ஒன்று தேசிய கலை இலக்கியப் பேரவையின் கலை இலக்கியக் கொள்கை. மற்றது அக் கொள்கையை அமைப்பு வாயிலாக முன்னெடுத்தவர்களின் அர்ப்பணிப்பு மிக்க கடும் உழைப்புக் கொண்ட கூட்டு முயற்சி. அந்த உழைப்பு, சுயநலம், பொருள்தேடல், புகழ் நாட்டம், பட்டம் பதவி பெறல், தனிமனித வெற்றிப் புலம்பல் போன்றவற்றுக்கு அப்பால் தன்னடக்ககமும் சமூக அக்கறையும் கொண்ட கனதிமிக்க கலை இலக்கியப் பங்களிப்பாக இருந்து வந்துள்ளது. மக்கள் கலை இலக்கியக் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்துத் தேசிய கலை இலக்கியப் பேரவை ஆற்றிய பன்முகப் பணிகளையும் பங்களிப்புகளையும் இப்போது நினைவுபடுத்தல் அவசியமாகின்றது.

எந்தவொரு கலை இலக்கியக் கோட்பாடும் அதனை முன்னெடுக்கும் கலை இலக்கிய அமைப்பும் அதன் அரசியல் பொருளாதார சமூக கலாசார வரலாற்றுச் சூழலை உள்வாங்கியே உருவாகிறது. படைப்பாளிகளும் தத்தமது நிலைக்களங்களுக்கு ஏற்பவே செயற்படுவர். வர்க்க சமூகத்தில் இலக்கிய நோக்கும் போக்கும் ஏதோ ஒரு வர்க்க அடையாளத்துடனேயே இருக்கும். தேசிய கலை இலக்கியப் பேரவைக்கும்; ஒரு வரலாற்று அடிப்படையும், வர்க்கச் சார்பும் உண்டு.

இலங்கையில் 1940களிலும் 1950களிலும் பொதுவுடைமை இயக்கம் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது. அதன் காரணமாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவானது. அதைக் கட்டியெழுப்பி அதற்குரியதொரு முற்போக்கு கலை இலக்கியக் கொள்கையை வகுத்து வழி நடத்த அவ் இயக்கத்தைச் சேர்ந்த கலை இலக்கியவாதிகள் கடுமையாக உழைத்தனர். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஈழத்து இலக்கியப் பரப்பில் ஆற்றிய இலக்கியப் பணியாற் சமூக அக்கறையும் வர்க்க முனைப்பும் கொண்ட எழுத்தாளர்கள் பலர் உருவாகினர். ஈழத்து இலக்கியத்தின் தனித்துவத்தை அடையாளங் காட்டத் தேசிய கலை இலக்கியத்தின் முக்கியத்துவத்தை வற்புறுத்தி விதேசிய இலக்கியச் சீரழிவை எதிர்ப்பதில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பெரும் பணியை ஆற்றியுள்ளது.

ஆனால் அச் சங்கம் அறுபதுகளின் முற்கூறுடன் திசைமாறத் தொடங்கி விரைவில் முற்று முழுதாகச் சீரழிந்தது. இலங்கையின் பொதுவுடைமை இயக்கத்தில் அக் காலத்தில் ஆழமான அரசியல் தத்துவார்த்த விவாதங்கள் இடம்பெற்றுப் பொதுவுடைமை இயக்கம் 1964ல் பிளவடைந்தது. அப் பிளவும் அணி பிரிதலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை இயங்காமலாக்கின. தலைமைப் பொறுப்பில் இருந்த சிலர் அவ் அரசியல் தத்துவார்த்த பிளவின் போது சமாதானப் பாராளுமன்றப் பாதையைத் தேர்ந்தோர் பக்கம் தம்மை நிறுத்திக் கொண்டனர். மாறாகக் கவிஞர் பசுபதி, பேராசிரியர் கைலாசபதி, சுபைர் இளங்கீரன், என்.கே. ரகுநாதன், கே. டானியல், எச்.எம்.பி. முகைதீன், சில்லையூர் செல்வராசன், செ. கணேசலிங்கன், நீர்வைப் பொன்னையன், கவிஞர் சுபத்திரன்;, இளைய பத்மநாதன், இ. சிவானந்தன், கே. தங்கவடிவேல், இ. முருகையன் போன்றோர் உட்பட்ட பெரும்பா லானோர் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்திய அணியில் இணைந்து தமது கலை இலக்கியப் பணிகளை ஆற்றினர்.

1964-1972 காலகட்டம் தேசிய அளவிலும் சர்வதேசிய அளவிலும் சகலவகையான ஒடுக்கு முறைகட்கும் எதிரான எழுச்சிகளும் போராட்டங்களும் இடம்பெற்ற ஒரு புரட்சிகர காலப்பகுதியாகும். இலங்கையின் பல பகுதிகளிற் பல வகைப்பட்ட போராட்டங்கள் எழுவதற்கான சூழல்கள் தோன்றின. 1965ல் ஐக்கிய தேசியக் கட்சி - தமிழரசு - தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளுடனும் ஏனைய சிங்கள இனவாதக் கட்சிகளுடனும் வர்க்க ரீதியில் இணைந்து இன மொழி வேறுபாடு கடந்த வலதுசாரி ஆட்சியைத் தேசிய அரசாங்கம் என்னும் பெயரில் அமைத்துக் கொண்டது. அதேவேளை பாராளுமன்றச் சந்தர்ப்பவாத அரசியலிற் தம்மை இழந்த இடதுசாரிகள் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து சந்தர்ப்பவாத அரசியலில் இறங்கினர். புரட்சிகரக் கோட்பாட்டை ஏற்றவர்கள் தோழர் நா. சண்முகதாசன் தலைமையில் பொதுவுடைமைக் கட்சியின் வழிகாட்டலில் நடைமுறைப் போராட்டங்கள் ஊடாகத் தமது அரசியல், தத்துவார்த்தக் கொள்கைகளை விருத்தி செய்ய முற்பட்டனர். அம் முயற்சிகள் கலை இலக்கியப் பரப்பிலும் பல்வேறு தாக்கங்களை உருவாக்கின.

கலை இலக்கியத் துறைக்குரிய முயற்சிகள் பற்றிய சிந்தனைகள் எழுந்தன. அதன் விளைவாக 'வசந்தம்' எனும் கலை இலக்கிய சஞ்சிகையை வெளியிட முடிவானது. 1964ன் பிற்கூற்றிலே 'வசந்தம்' தொடக்கப்பட்டது. அதை வெளிக் கொணர்வதில் அன்றைய இளம் வளர் நிலைப் படைப்பாளிகளான செ. யோகநாதன், இ.செ. கந்தசாமி, நீர்வைப் பொன்னையன், யோ. பெனடிக்ற் பாலன், ச. முத்துலிங்கம், செல்வ. பத்மநாதன், அ. கந்தசாமி போன்றோர் முன்னின்று செயற்பட்டனர். அவர்களது முயற்சிக்கும் வசந்தத்தின் இலக்கியத் தரத்திற்கும் ஆதரவாக ஏற்கனவே குறிப்பிட்ட நாடறிந்த எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களை வழங்கிப் பக்கபலமாக நின்றனர். ஒரு வருடம் மட்டுமே இலக்கியப் பணி ஆற்றிய வசந்தம் நிதி வளம் இன்மையால் நின்று போனாலும் அது தோற்றுவித்த இலக்கியத் தாகமும் காட்டிய திசையும் எழுத்தாளர்களுக்கு ஒரு உந்து விசையாக அமைந்தது. எனினும் எவ்வித கலை இலக்கிய அமைப்பையும் தோற்றுவிக்காமலே கலை இலக்கிய முயற்சிகளை நாடு பூராவும் இருந்த எழுத்தாளர்கள் முன்னெடுத்தனர்.

1964க்குப் பின்பு வடக்கிலும் தெற்கிலும் மலையகத்திலும் அரசியல் தொழிற்சங்க வெகுஜனப் போராட்டங்கள் வேகமடைந்தன. தெற்கிலே தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டங்கள் தனியே பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டுமன்றி அரசியல் கோரிக்கைகளையும் முன்னெடுத்தன.

வடக்கில் 1966ம் ஆண்டு ஒக்டோபர் 21 எழுச்சி சாதிய-தீண்டாமை அமைப்புக்கு எதிரான புரட்சிகரப் போராட்டக் களத்தை திறந்து வைத்து ஒரு வரலாற்றுத் திருப்பு முனையை ஏற்படுத்தியது. போராட்டங்கள் பல்வேறு களங்களில் முன்னேறிய அக் காலப்பகுதியில் வட பகுதியில் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டங்கள் பல இடம்பெற்றன. அத்துடன் அரசாங்கத்தின் மக்கள் விரோத நிலைப்பாடுகட்கு எதிராகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மலையகம் முன் கண்டிராதவாறான தொழிற்சங்கப் போராட்டங்கள் வர்க்க உணர்வின் உச்ச நிலையிற் பற்றிப் பரவின. பல்வேறு வேலைநிறுத்தப் போராட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் ஆண்களும் பெண்களுமாகத் தமது வர்க்க உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

மேற்கூறிய இயக்கங்களும் போராட்டங்களும் சமூக மாற்றத்தை வேண்டி நின்ற கலை இலக்கியவாதிகளுக்கு மக்கள் கலை இலக்கியக் கோட்பாட்டு அடிப்படையில் புதிய புதிய அனுபவங்களை வழங்கின. அவற்றின் செழுமையான பின்புலத்தில் வளமிக்க ஆக்க இலக்கியங்கள் எழுந்தன. கவிதைகள், பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள் என்பனவற்றுடன் நாடக வடிவங்கள் புதிய புதிய பரிசோதனைகளில் வெற்றி பெற்றன.

“எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும் / நிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும் / குச்சுக் குடிசைக்குள் கொலுவிருக்கும் கோபத்தை / மெச்சுகிறேன்" “பாளையைச் சீவிடும் கைகளைப் புதுப் பணி / பார்த்துக் கிடக்குதடா" என்று கவிஞர் சுபத்திரனும், “ஆற்றல் மிகு கரங்களிலே ஆயுதங்கள் ஏந்துவதே / மாற்றத்திற்கான வழி, மாற்றுவழி ஏதுமில்லை" எனக் கவிஞர் கணேசவேலும், “மாவிட்டபுரத்திலோர் மந்தி / மடைச் சேட்டை புரியுது / வாசலில் குந்தி" எனக் கவிஞர் வில்வராசனும் பாடியவை மக்கள் போராட்டக் களத்திற்குப் புதிய வேகத்தை அளித்தன. மேலும் சி. மௌனகுரு, சில்லையூர் செல்வராசன், சாருமதி, சிவானந்தன், புதுவை இரத்தினதுரை, முருகையன், முருகு கந்தராசா, முருகு இரத்தினம், தில்லை முகிலன், பூமகன் ஆகியோரது கவிதைகள் வீச்சுடன் பிறந்தன. அக் காலகட்டத்தில் மலையக மக்களது வர்க்க உணர்வுகளைக் கூறுங் கவிதைகள் படைக்கப்பட்டன. பாடல்கள் போராட்டத் தீ - 1, போராட்டத் தீ - 2 என நூல் உருப் பெற்றன. மலையகக் கவிஞர்கள் எம். முத்துவேல், பி. மரியதாஸ், ஆர். இராமலிங்கம் போன்றவர்கள் கனதி மிக்க கவிதைகள் படைத்தனர்.

அவ்வாறே கருத்தாழமும் கலையுணர்வும் மிக்க சிறுகதைகளை என்.கே. ரகுநாதன், கே. டானியல், பெனடிக்ற் பாலன், செ. யோகநாதன், நா. யோகேந்திரநாதன், நந்தினி சேவியர், இராஜா தருமராஜா போன்றோர் படைத்தனர். இளங்கீரனின் “நீதியே நீ கேள்", கணேசலிங்கனின் “செவ்வானம் " பெனடிக்ற் பாலனின் மலையகப் பின்னணியிலான “சொந்தக்காரன்" போன்ற நாவல்கள் குறிப்பிட வேண்டியன. டானியலின் “பஞ்சமர்" நாவல் கடும் விமர்சனங்களை எதிர்நோக்கிய போதும் சாதிய ஒடுக்குமுறையின் பல்வேறு அம்சங்களை வெளிக் கொணர்ந்த முக்கியமான ஆக்கமாகும்.

மேற்கூறிய ஆக்கங்கள் மக்களது அன்றைய வர்க்க, சமூகப் பிரச்சினைகளையும் போராட்ட நியாயங்களையும் ஆற்றல்களையும் பிரதிபலித்ததுடன் மக்கள் இலக்கியத்திற்குரிய வலுவான அடிப்படைகளையுங் கொண்டிருந்தன. அவை பற்றிய பன்முக நோக்கும் ஆயு;வுகளும் விமர்சனங்களும் ஏற்கனவே வெளிவந்துள்ளன. அவற்றின் வரலாற்று முக்கியத்துவங் கருதி அவை தொடர்ந்தும் ஆக்கபூர்வமாக ஆராயப்பட வேண்டும்.

ஆக்க இலக்கியங்கள் போன்று விமர்சனமும் கலை இலக்கியத் துறையின் கவனத்திற்குரிய ஒரு துறையாக அன்று செழுமை பெற்றது. விமர்சனத் துறையின் கவனத்தைக் க. கைலாசபதி பெரிதும் ஈர்த்தார்.

அப்போது எழுதி மேடையேற்றிய நாடகங்களை மக்கள் பெரிதும் வரவேற்றனர். மக்கள் கலை இலக்கிய கோட்பாட்டு வழி நின்று தரம் மிக்க நாடகங்களை உருவாக்க முடியும் என அவை உணர்த்தின. முதல் நாடகமாக மட்டக்களப்பு நாடகசபா தயாரித்து, சி. மௌனகுருவின் நெறியாள்கையில், 1969ம் ஆண்டில் வடமோடி தென்மோடிக் கூத்து வகைகள் இணைந்த “சங்காரம்" எனும் நாடகம் மேடையேறிப் பெரு வரவேற்பைப் பெற்றது.

அடுத்து என்.கே. ரகுநாதன் எழுதிய “கந்தன் கருணை" நாடகப் பிரதி அம்பலத்தாடிகளினால் காத்தவராயன் கூத்துப் பாணியில் இளைய பத்மநாதனின் நெறியாள்கையில் வட பகுதியில் மேடையேறியது. 1969-1974 காலப்பகுதியில் “கந்தன் கருணை" கொழும்பிலும் வடபகுதியிலும் ஐம்பது முறைகட்கும் மேல் மேடையேறியது. அந் நாடகத்தின் வெற்றி இளைய பத்மநாதன் சுட்டிக் காட்டியது போல ஒரு கூட்டு முயற்சியின் வெற்றியாகும். அந் நாடகம் சாதிய அமைப்பை அம்பலமாக்கி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தின் நியாயங்களை வலியுறுத்திய மக்கள் கலை வடிவமெனலாம். அவ்வாறே மட்டுவில் மோகனதாஸ் கலைக்கழகம் தயாரித்த “குடி நிலம்" “புதிய வாழ்வு" முருகையனின் “கடூழியம்" பண்டத்தரிப்பு காலையடி மறுமலர்ச்சி மன்றம் தயாரித்த “காகிதப் புலிகள்" மாவை நித்தியானந்தனின் “ஐயா எலக்சன் கேட்கிறார்" போன்ற நாடகங்கள் மக்கள் மத்தியில் ஆழமான கருத்துக்களை எடுத்துச் சென்றன. “கந்தன் கருணை" பின்னர் புதிய வகை உத்தி முறைகளைப் பயன்படுத்தி வெவ்வேறு நாடக அமைப்புக்களால் நடிக்கப் பெற்றது. புதிய உத்திமுறைகளைப் பயன்படுத்துவதில் சி. மௌனகுரு, இளைய பத்மநாதன், தாசீசியஸ், முருகையன் போன்றோர் தத்தமது ஆற்றல்களை ஏனையோருடன் பகிர்ந்தமை முக்கியமான விடயமாகும்.

சித்திர ஓவிய முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டன. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மாநாட்டிற்கான சித்திரக் கண்காட்சி குறிப்பிட வேண்டியதாகும். அன்றுவரை சாதிய ஒடுக்கு முறைக்கு உள்ளான சாதிய-தீண்டாமைக் கொடுமைகளை உயிர்ப்புடன் சித்தரிக்கும் சித்திரங்களும் ஓவியங்களும் சேகரிக்கப்பட்டுக் கண்காட்சியில் வைக்கப்பட்டன. 1969ல் வடக்கின் பல பகுதிகளிலும் நடாத்தப்பட்ட இக் கண்காட்சி பின்னர் கொழும்பிற் பலரது கவனத்தை ஈர்த்தது. மறைந்த பேராசிரியர் சரச்சந்திர கண்காட்சியைத் திறந்து வைத்தார். பெருந்தொகையான தென் இலங்கை மக்கள் தமது உணர்வுளை வெளிப்படுத்திப் பார்வையிட்டனர். அதனால் கண்காட்சியை மேலும் இரண்டு தினங்கள் நீடிக்க வேண்டியதாயிற்று. கண்காட்சியை நடாத்துவதிற் பேராசிரியர் க. கைலாசபதி முன்னின்று உழைத்தார். கண்காட்சிக்கான சித்திரங்கள் வரைவதிலும் ஏனையோரிடம் பெறுவதிலும் என். கே. ரகுநாதன், கே. தங்கவடிவேல் கே. டானியல் போன்றோர் ஆர்வத்துடன் செயற்பட்டனர்.

இவ்வாறு 1964-1972 கால கட்டகத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களும் அவற்றின் வளமான அனுபவங்களும் ஒரு பரந்த மக்கள் இலக்கியக் கோட்பாட்டுத் தளத்தை விரிவுபடுத்தி செழுமையாக்கின. மாறாக, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நெருங்கி நின்ற இலக்கியவாதிகளின் அரசியல் நிலைப்பாடு மக்கள் இலக்கியக் கோட்பாட்டுக்கு முரணாக அமைந்தது. எல்லா விடயங்களிலும் சமரச மார்க்கத்தைப் பின் பற்றிய இவர்கள் அரசியலிலும் இலக்கியத்திலும் வெகுஜன மார்க்கப் பாதையை நிராகரித்து மக்கள் இலக்கியக் கோட்பாட்டிலிருந்து விலகி நின்றனர். 1970ல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வரவும் 1971 ஏப்பிரல் கிளர்ச்சியும் அதனையொட்டிய அரசாங்க அடக்குமுறை நடவடிக்கைகளும் புரட்சிகர இயக்கத்திற்குக் கடுமையான பின்னடைவுகளை ஏற்படுத்தின. இத் தேக்க நிலையிலிருந்து மீள இரண்டு மூன்று ஆண்டுகள் சென்றன. இச் சூழலில் தம்மை மீள அமைத்துக் கொள்ள முயன்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாட்டின் யதார்த்த சூழலுக்கு ஏற்ற கலை இலக்கியக் கோட்பாட்டை நிலை நிறுத்தத் தவறியது. ஆளும் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு அப்பாற், கலை இலக்கியத் துறையில் அவர்களுக்கு எதுவும் இயலவில்லை.

Thursday, October 16, 2008

எத்தர்கள் வரலாறு எழுதினால் எப்படியிருக்கும்? 2008இன் ஞானம் சிறப்பிதழைப் பார்த்தால் விளங்கும்

நவீன இலக்கியச் சிறப்பிதழாக ஞானம் சஞ்சிகையின் நூறாவது இதழ் வந்திருக்கிறது. அதில் பெரும் பகுதியானவை கட்டுரைகள். கட்டுரைகளில் பெரும்பகுதியானவை இலக்கிய வரலாறுகள். இலக்கிய வரலாறுகளில் பெரும் பகுதியானவை பட்டியல்கள்.

எழுதுகிறதுக்கு வேறு எதுவுமில்லை என்கிறதால் சிலபேர் பட்டியல் போடுவார்கள். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு முதுகு சொறிய சிலபேர் பட்டியல் போடுவார்கள். சில பேர் வலுங் கவனமாக முக்கியமான படைப்புக்களையும் படைப்பாளிகளையும் ஒதுக்கிப் பட்டியல் போடுவார்கள். இன்னுஞ் சிலபேர் தங்களுடைய பட்டியல்களால் தங்களுடைய முதுகுகளையே சொறிந்து கொள்ளுவார்கள்.
பட்டியல்கள் ஆய்வாளர்கட்குத் தேவையானவை தான். என்றாலும் அவை போதுமானவை அல்ல. என்ன தேவைக்காகப் பட்டியல் ஒன்று தரப்படுகின்றது என்கிறதை நாங்கள் கவனிக்க வேண்டும். ஆய்வு என்கிற பேரில் வருகிற அரைகுறைப் பட்டியல்களால் ஒரு பிரயோசனமும் இல்லை. எழுதுகிறதுக்கு வேறு எதுவுமில்லை என்கிறதால் சிலபேர் பட்டியல் போடுவார்கள். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு முதுகு சொறிய சிலபேர் பட்டியல் போடுவார்கள். சில பேர் வலுங் கவனமாக முக்கியமான படைப்புக்களையும் படைப்பாளிகளையும் ஒதுக்கிப் பட்டியல் போடுவார்கள். இன்னுஞ் சிலபேர் தங்களுடைய பட்டியல்களால் தங்களுடைய முதுகுகளையே சொறிந்து கொள்ளுவார்கள்.
இது ஞானத்தின் அஞ்ஞானமா அயோக்கியத்தனமா?
இந்த விதமான பட்டியல் வரலாறுகள் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டு வந்திருக்கிற மாற்றங்களும் வளர்ச்சிகளும் என்ன காரணத்தால் ஏற்பட்டன என்று சொல்லுவது இல்லை. அவை என்ன விதமாகச் சமூகத்தைப் பாதித்தன என்றும் சொல்லுவது இல்லை. இடையில் ஒரு படைப்பையோ எழுத்தாளரையோ புகழ்ந்து நாலு வரிகள் வரும். ஆனால் என்ன சிறப்பு என்கிறதை கட்டுரையாசிரியர் சொல்லமாட்டார். உண்மையான காரணம் உள்ளடக்கத்தை விட்டு வேறெதுவுமாக இருக்கும்.

இந்த விதமான குறைபாடுகளுக்கு ஒரு காரணம் பல ஆய்வுக் கட்டுரைகள் ஒரு தரவழி ஆய்வும் இல்லாத அவசரக் கோலங்களாக இருக்கிறது தான். அதைவிடப் பொல்லாத காரணங்களும் இருக்கின்றன. அவை வன்மம் வக்கிரச் சிந்தனை தனிப்பட்ட பகைமை பொறாமை தொடர்புடையவை.

இந்தச் சிறப்பிதழில் வலிந்து சொல்லப்பட்டுள்ள சில இடதுசாரி விரோதமான திரிப்புக்களையும் திட்டமிட்ட புறக்கணிப்புக்களையும் பற்றிச் சொல்ல வேண்டி இருக்கிறது. இந்தப் பொய்களும் போலித்தனங்களும் இப்போது சுட்டிக்காட்டப்படாவிட்டால் அவையே மற்ற ஆய்வாளர்களுக்கான ஆதாரபூர்வமான உண்மைகளாகி நாளைய இலக்கிய வரலாறாகி விடும்.

மு.பொன்னம்பலதத்தின் பொய்கள் பற்றிப் 'புதிய பூமி'யில் ஒரு கட்டுரை சிலவருடம் முந்தி வெளிவந்தது. திரும்பத் திரும்ப சளைப்பில்லாது சொல்லப்படுகிற பொய்கட்காக அவருக்கு "கொயபெல்சு" பரிசு வழங்கினால் நன்றாயிருக்கும். கைலாசபதி தினகரனில் ஆசிரியராக இருந்த போது முற்போக்கு எழுத்தாளர்கட்கு மட்டுமே ஆதரவுகாட்டினாரென்றும் அந்த அணி சாராதோர் புறக்கணிக்கப்பட்டார்கள் என்றும் அதனால் சமஷ்டி ஆட்சிக் கொள்கை இலக்கியத்தில் இருட்டடிப்புச் செய்யப்பட்டது என்றும் தனக்கே உரிய கோமாளித்தனத்துடன் அடுக்கடுக்காகப் பொய் எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் வருகிற பிதற்களுக்கெல்லாம் மறுமொழி எழுதுகிறது என்றால் அதற்காகவே ஒரு சிறப்பிதழ் வெளியிடக் கூடிய அளவுக்குப் புண்ணியவான் பிதற்றி வைத்திருக்கிறார்.
திரும்பத் திரும்ப சளைப்பில்லாது சொல்லப்படுகிற பொய்கட்காக மு.பொன்னம்பலதத்திற்கு "கொயபெல்சு" பரிசு வழங்கினால் நன்றாயிருக்கும்.
இந்த விதமான சில பொய்களை விமர்சனமில்லாமல் விழுங்கி மீண்டும் மீண்டும் சொல்லுகிறவர்களுள் கலாநிதி துரை மனோகரனும் ஒருவராகக் காணப்படுகிறார். உலக இடதுசாரி இயக்கம் பிளவுபட்டு நாற்பது ஆண்டுகட்குப் பிறகும் ரஷ்யசார்பு சீனசார்பு என்று எழுதி அந்தப் பிளவின் அடிப்படையையே அவர் கொச்சைப் படுத்துகிறார்.

பேராசிரியர் கா. சிவத்தம்பியும் என். சோமகாந்தனும் சில ஆண்டுகள் முந்தி வருத்தம் தெரிவித்ததை வைத்து 1963இல் யாழ்ப்பாணத்தின் படுபிற்போக்குச் சிந்தனையாளர்கள் நடத்திய கூட்டத்தில் கூழ் முட்டை எறிந்தது முற்போக்கு எழுத்தாளர்களின் "இமேஜைக்" குறைத்ததாக எழுதியிருக்கிறார். இந்த இரண்டு பேருக்கும் அந்தக் கூட்டத்தைக் குழப்புகிற தீர்மானம் முன்கூட்டியே தெரியும். ஏனெனில் அது எழுந்தமானமாக நடந்த சம்பவமில்லை. யோசித்து எடுக்கப்பட்ட முடிவு. இதை மிகவும் நேர்மையாகவே சொக்கன் சில காலம் முந்தி உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர் அது சரியானது என்றுங் கூறியிருக்கிறார். அன்றைய நிலைமையில் சாதி வெறி இலக்கியப் பிரமுகர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் மீதும் தொழிலாளர் மீதும் இழிசினர் என்றும் வேறு நிந்தனைச் சொற்களாலும் நாளாந்தம் கூழ்முட்டை எறிந்து கொண்டு இருந்தார்கள். அதைப் பற்றி எங்களுடைய இலக்கியப் பண்பாட்டுக்காரர்களுக்கு இது வரையிலும் ஒரு கவலையும் இருக்கவில்லை.
வேண்டுமென்றே விடயங்களைத் தவிர்க்கிறதில் ஸ்ரீபிரசாந்தன் மிகுந்த ஆற்றல் உடையவராகி வருகிறார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் எந்தத் தொகுப்பு நூலும் அவர் கண்ணிற்படாமல் எந்த அவதாரம் அவரது கண்ணை மறைத்திருக்கிறதோ தெரியவில்லை.
"புரட்சி என்பது தேநீர் விருந்து வைபவமல்ல" என்று நினைவூட்ட விரும்புகிறேன். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மக்களிடையே மரியாதை கெட்டது அதனாலில்லை. சந்தர்ப்பவாதிகளுக்குப் பின்னால் அந்தச் சங்கத்தை இழுத்துக் கொண்டு போனவர்கள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போனார்கள். தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தை எதிர்க்கிறவர்களுடன் சேர்ந்து நின்றார்கள். 1966இல் பேரினவாத ஊர்வலம் போனவர்களை ஆதரித்தார்கள். 1970 முதல் பதவிகளுக்குப் பின்னால் அலைந்தார்கள். இவற்றால் தான்.

அப்படிச் செய்யாதவர்கள் தங்களுடைய ஒவ்வொரு செய்கைக்கும் தட்டிக் கழித்துப் பிறர் மேல் பழி சொல்லாமல் துணிந்து பொறுப்பெடுக்கிறார்கள். நல்ல இடதுசாரிக்கு வேண்டியது "இமேஜ்" இல்லை. நேர்மையான இதயம். இது தான் கைலாசபதி காட்டிய வழி. "இமேஜ்" தேவையானவர்கள் பச்சோந்தி போல நிறங்களை மாற்றிக் கொள்ளலாம்.
கலாநிதி துரை மனோகரன், பேராசிரியர் கா. சிவத்தம்பியும் என். சோமகாந்தனும் சில ஆண்டுகள் முந்தி வருத்தம் தெரிவித்ததை வைத்து 1963இல் யாழ்ப்பாணத்தின் படுபிற்போக்குச் சிந்தனையாளர்கள் நடத்திய கூட்டத்தில் கூழ் முட்டை எறிந்தது முற்போக்கு எழுத்தாளர்களின் "இமேஜைக்" குறைத்ததாக எழுதியிருக்கிறார்.
கலாநிதி துரை மனோகரன் சொல்கிறது போல முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எழுபதுகள் வரை வீறு நடைபோடவில்லை. அறுபதுகளிலேயே படுத்து விட்டது. எழுபதுகளில் அரசாங்கத்துக்கு வால்பிடித்து எழும்பி நிற்கப்பார்த்தது. நிற்க முடியவில்லை. டொமினிக் ஜீவாவின் தளராத உழைப்பும் திரிபுவாதிகளிடமிருந்து கிடைத்த மறைமுகமான சிறு நிதி உதவியும் மல்லிகையை மாதமாதம் வெளியிட உதவி செய்தன. மற்றப்படி அந்த அமைப்பால் இலக்கியத் துறையில் எதையுமே செய்ய முடியவில்லை. இதைச் சிவத்தம்பியோ டொமினிக் ஜீவாவோ இயலுமானால் மறுக்கட்டும். என்.ஜி.ஓப் பிழைப்பு நடத்தி வந்த உதிரிகள் சிலர் சில ஆண்டுகள் முன்பு உருவாக்கிய ஒரு அமைப்பை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்ச்சி என்ற விதமாகச் சொல்லியிருக்கிற கலாநிதி துரை மனோகரனுக்குத் தேசிய கலை இலக்கியப் பேரவையே முற்போக்கு இலக்கியச் சிந்தனையின் மக்கள் இலக்கியப் பாசறையாக 1974 முதல் இன்று வரை இருந்து வருவதை உரிய இடத்தில் கூற முடிய வில்லை. கட்டுரையின் முடிவில் இன்னுமொரு அமைப்பாக அது குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது ஏன்?

வேண்டுமென்றே விடயங்களைத் தவிர்க்கிறதில் ஸ்ரீபிரசாந்தன் மிகுந்த ஆற்றல் உடையவராகி வருகிறார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் எந்தத் தொகுப்பு நூலும் அவர் கண்ணிற்படாமல் எந்த அவதாரம் அவரது கண்ணை மறைத்திருக்கிறதோ தெரியவில்லை. ஒழுங்காக ஒருதொகுப்பை வழங்குவதற்கு இரண்டு விடயங்கள் தேவை. ஒன்று திட்டமிட்ட முறையிலான கடும் உழைப்பு. மற்றது நேர்மை. தன்னுடைய அரை வேக்காட்டுத் தொகுதியை விமர்சித்தவர்கள் புலம்பித்தீர்த்திருக்கிறதாகச் சொல்லுகிற ஸ்ரீ பிரசாந்தன் கட்டுரை முடிவில் கட்டுரைக்குப் பொருத்தமின்றித் தனக்காகப் புலம்பித் தீர்த்திருக்கிறார். பிழையைப் பிழையென்று விளங்கிக்கொள்ள அறிவு வேண்டும். அதை ஏற்றுக் கொள்ள நேர்மை வேண்டும். இவரிடம் எது மிகவுங் குறைகிறது என்று விளங்கவில்லை.
பேராசிரியர்கள் நுஃமானும் மௌனகுருவும் பாநாடகங்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். இந்தப் பேராசிரியப் பெருந்தகைகள் இரண்டு பேரும் சொல்ல மறந்த முருகையனுடைய நாடகம் ஒன்றும் இருக்கிறது. அவருடைய "வெறியாட்டு" என்ற நாடகம் வெற்றிகரமாக மும்முறை மேடையேறிய பின் யாழ்ப்பாணத்தில் நான்காம் மேடையேற்றம் நடவாதபடி தமிழ்த் தேசிய வாத போராட்ட இயக்கத் தலைமைக்கு அது பற்றிய பொய்த் தகவல் அனுப்பப்பட்டதால் நாடகம் தடை செய்யப்பட்டது. அதற்குப் பொறுப்பானவர்களில் இந் நாள் தமிழ்த் தேசியவாதிகளும் முன்னாள் தமிழ்த் தேசிய வாதிகளும் அடங்குவார்கள். இதனை பேராசிரிய வக்கிரத்தனம் என்பதா அல்லது ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதா?
பேராசிரியர்கள் நுஃமானும் மௌனகுருவும் பாநாடகங்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். பேராசிரியர் நுஃமான் சிறுவர்கட்கான பாநாடகங்கள் பற்றியும் எழுதியிருக்கிறார். என்றாலும் அவருக்குப் பேராசிரியர் சிவசேகரம் பல வேறு செய்யுள் வடிவங்களையும் கூத்துச் சந்தங்களையும் பயன்படுத்தி எழுதிய "கிட்கிந்தை" பற்றித் தெரியாதா? "பாட்டுங் கூத்தும்" என்ற தலைப்பில் வெளிவந்த சிறுவர்கட்கான பாநாடக நூல் பற்றித் தெரியாதா? அவை பல முறை லண்டனில் மேடையேறியதும் கொழும்பில் மேடையேற்றப்பட்டதும் தொடர்ந்தும் மேடையேறி வந்ததும் தெரியாதா? பேராசிரியர் மௌனகுருவுக்கும் பேராசிரியர் சிவசேகரத்தின் சிறுவர் நாடகங்கள் பற்றித் தெரியாதா? மொழி பெயர்ப்பு நாடகங்கள் பற்றிப் பேசுகிற போதும் நூல்வடிவம் பெற்ற பேராசிரியர் சிவசேகரத்தின் நாடகங்கள் பற்றியோ பாலேந்திரா மேடையேற்றிய பிற தமிழாக்க நாடகங்கள் பற்றியோ பேராசிரியர் மௌனகுருவுக்கு எழுத இயலவில்லை என்றால் அதற்கான காரணம் அறியாமையாக இருக்க முடியாது. இதனை பேராசிரிய வக்கிரத்தனம் என்பதா அல்லது ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதா? இந்தப் பேராசிரியப் பெருந்தகைகள் இரண்டு பேரும் சொல்ல மறந்த முருகையனுடைய நாடகம் ஒன்றும் இருக்கிறது. அவருடைய "வெறியாட்டு" என்ற நாடகம் வெற்றிகரமாக மும்முறை மேடையேறிய பின் யாழ்ப்பாணத்தில் நான்காம் மேடையேற்றம் நடவாதபடி தமிழ்த் தேசிய வாத போராட்ட இயக்கத் தலைமைக்கு அது பற்றிய பொய்த் தகவல் அனுப்பப்பட்டதால் நாடகம் தடை செய்யப்பட்டது. அதற்குப் பொறுப்பானவர்களில் இந் நாள் தமிழ்த் தேசியவாதிகளும் முன்னாள் தமிழ்த் தேசிய வாதிகளும் அடங்குவார்கள்.

இளங்கீரனின் நாவல்களை மிகைப்படுத்தி பேராசிரியர் கைலாசபதி இலக்கிய உலகில் உயர்த்தி வைத்தார் என்று முறைப்படுகிற செங்கை ஆழியான் அவரது இரண்டு நாவல்கள் ஈழத்து நாவல் துறைக்கு வலுச் சேர்த்ததாகவும் சொல்லியிருக்கிறார் இவர் இன்னொரு இடத்தில் ஏராளமான தமிழ் நாவல்களில் ஒரு சில ஒரு சில போக எல்லாமே சருகுகள் என்றும் சொல்லி வைத்திருக்கிறார். இதில் ஞானம் ஆசிரியர் சருகல்லாத ஒரு நாவலை எழுதியதாகச் சொன்ன புண்ணியத்திற்காகவே இந்த மேற்கோள் என நம்பலாம்.

ஈழத்தில் தலித் இலக்கியம் என்ற தலைப்பில் எழுதியிருக்கிற மா. ரூபவதனன் இலங்கையிலே தலித் இலக்கியம் என்ற முத்திரை இல்லாமல் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான காத்திரமான படைப்புக்கள் 1950கள் தொடங்கி வர்க்கக் கண்ணோட்டத்தில் வெளியாகி உள்ளன என்பதை விங்கிக் கொள்ள இயலாதவராகத் தெரிகிறார். முருகையனைப் போலி இலக்கியப் படைப்பாளர் என்று வலிந்து தாக்கியும் இருக்கிறார். அதற்கும் மேலாகச் சாதிய தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தையும் வக்கிரப்படுத்தி எழுதியுள்ளார். அவருக்கு சாதிப்பிரச்சனை தானாய்த் தீரும், சண்டை வேண்டாம் என்பவர்கள் யாரென்று தெரியாது. சாதி முறையின் வரலாறும் தெரியாது. சாதி முறைக்கும் சாதியத்துக்கும் ஆதரவாக நிற்கிறவர்கள் யாரென்றும் தெரியாது. அவர்கள் எல்லாரையும் விட்டு விட்டு யார் யாரெல்லாம் சாதியத்துக்கு எதிராகத் தளராது போராடி நிற்கிறார்களோ அவர்கள் மீது சேறு வீசுகிறார்.
வணிக நோக்கங்கள் பற்றி விளாசித் தள்ளியிருக்கிற சுதர்சன் அறிய வேண்டிய உண்மைகள் இருக்கின்றன. பதிப்பித்த புத்தங்களுக்கு நூலாசிரியர்கள் காசு தராததால் நட்டப்பட்ட நூல் வெளியிட்டாளர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து நட்டப்பட்டு விரக்தியால் நூல் வெளியீட்டுத் துறையிலிருந்தே ஒதுங்கிப் போனவர்களும் இருக்கிறார்கள்.
மார்க்சிச எதிர்ப்பு என்கிற தொற்று வியாதிக்கு செ. சுதர்சனும் உள்ளாகியிருக்கிறார். கட்டுரைக்கு எவ்வகையிலும் பொருத்தமில்லாமல் "ஒரு காலத்தில் ஈழத்துப் புனைகதைத் துறைக்கும் வாசிப்புத் துறை க்கும் வித்திட்ட பொதுவுடைமைவாதிகள் பலர் இன்று வணிக நாயகர்களாக வடிவம் எடுத்துள்ளனர்" என்று வலிந்து சாடியிருக்கிறார். தடித்த எழுத்தில் இது அச்சிடப்பட்டிருக்கிறது. இது சுதர்சனுடைய கை வண்ணமா அல்லது இது போல பிற கட்டுரைகளிலும் தடித்த எழுத்துக்களைப் புகுத்தியிருக்கிற ஞானம் பத்திரிகைக் "குடும்பத்தின்" கை வண்ணமா?. சுதர்சனுக்கும் பேராசிரியர் சிவசேகரத்தைத் தெரியாதா? வணிக நோக்கங்கள் பற்றி விளாசித் தள்ளியிருக்கிற சுதர்சன் அறிய வேண்டிய உண்மைகள் இருக்கின்றன. பதிப்பித்த புத்தங்களுக்கு நூலாசிரியர்கள் காசு தராததால் நட்டப்பட்ட நூல் வெளியிட்டாளர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து நட்டப்பட்டு விரக்தியால் நூல் வெளியீட்டுத் துறையிலிருந்தே ஒதுங்கிப் போனவர்களும் இருக்கிறார்கள். மணிமேகலைப் பிரசுரத்தின் வியாபாரி மாதிரி எல்லாரையும் முட்டாளாக்குகிறவர்களை விட்டுவிட்டு ஏன் யாரோ முன்னாள் இடதுசாரியை நினைத்து 'பல' பொதுவுடைமைவாதிகளை சுதர்சன் தாக்க வேண்டும்? இப்படி பொத்தம் பொதுவான தாக்குதல்களை விட்டு குறிப்பான விமர்சனங் களை முன்வைப்பது நல்லது. முழுத் தமிழினத்தையுமே விற்றுக் கொண்டிருக்கிற தமிழ்த் தேசியவாத இலக்கிய வியாபாரிகளைப் பற்றி அப்போது பேச வேண்டி வராதா? பழைமையும் ஆன்மீகமும் பேசி ஆலயங்கள் எழுப்பிக் காசு சம்பாதிக்கிற இலக்கியச் செம்மல்கள் பற்றியும் அப்போது பேச வேண்டி வராதா?

நடுநிலை பற்றி மிகவும் பேசிவருகிற ஒரு சஞ்சிகை ஞானம். இப்போது அதனுடைய நடுநிலையின் லட்சணம் பளபளவென்று ஜொலிக்கிறது.

புதிய பூமியில் வசந்தன் எழுதிய விமர்சனம்

Tuesday, October 7, 2008

இயற்பியலுக்கான நோபல் பரிசு
இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நேபல் பரிசு 3 பேருக்கு கிடைத்துள்ளது. இவை யாவும் அணு பற்றியது (sub atomic ).

யப்பானை பிறப்பிடமாகவும் ஜக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட இய‌ற்பியல் பேராசிரியர் Yoichiro Nambu . இவருக்கு நேபல் பரிசு கிடைப்பதற்கான காரணம் "for the discovery of the mechanism of spontaneous broken symmetry in subatomic physics " (மன்னிக்க வேண்டும் இதை என்னால தமிழ் ஆக்க முடியவில்லை)

இவருடைய சுயவிபரம்பிறந்தது 1921 யப்பானில் தலைநகரம் டோக்கியோ...

அமெரிக்கா பிரயாவுரிமை..

University of Chicago

இக்கே இவருடைய முடிவை ஆங்கிலத்தில் தருகிறேன்.

The fact that our world does not behave perfectly symmetrically is due to deviations from symmetry at the microscopic level

" ஒரு உண்மையான விசயம் என்னவென்றால் இந்த உலகத்தில் எதுவும் அச்சொட்டான சமச்சீரில்லை. காரணம் என்னவென்றால் சமச்சீர் என்பது விலத்தி நிற்க்கின்றது துணிக்கை மட்டத்தில் " (மொழி பெயர்ப்பில் பிழையிருந்தால் மன்னிக்கவும் மற்றும் திருத்தவும்).

இந்த நேபல் பரிசு அறிவித்த போது. அவர் துக்கத்தில் இருந்தார். இவருக்கான பரிசுத்தொகை சுமார் $1.4 மில்லியன் அமெரிக்க டோலர்.

மற்றாவர்கள் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள்.

முதலாம்மவர் பேராசிரியர் Makoto Kobayasஇரண்டாம்மவர் பேராசிரியர் Toshihide Maskawa


இரண்டுபேருடைய பங்களிப்பு ஒன்று சார்ந்ததாகவே இருக்கின்றது. அதாவது "for the discovery of the origin of the broken symmetry which predicts the existence of at least three families of quarks in nature"

Makoto Kobayas, இவருக்கான நோபல் பரிசு 0.7 மில்லியன் அமெரிக்க டோலார்.

Toshihide Maskawa ,இவருக்கான நோபல் பரிசு 0.7 மில்லியன் அமெரிக்க டோலார்.

Monday, October 6, 2008

நேபாளம்: பெண்களின் போராட்டப் பங்களிப்பும் அரசியல் பிரதிநிதித்துவமும்

"எங்களுடைய பெண்கள் இயக்கம் ஆண்களுக்கு எதிரானதல்ல. அது ஒடுக்கு முறை நடைமுறைகளைக் கொண்ட நேபாள பழைமைவாத சமூகத்திற்கு எதிரானதாகும். இத்தகைய சமூகத்தில் 300 பெண்கள் பாராளுமன்றத்திற்கு வந்தாலும் அதனை மாற்றியமைக்க முடியாது. உண்மையான மாற்றம் போராட்டம் மூலமே சாத்தியமாகும்." இவ்வாறு நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் இயக்கத்தின் அரசியல் நிர்ணயசபைக்குத் தெரிவான பெண் உறுப்பினர் ஒருவர் கூறினார்.

அண்மையில் நேபாளத்தில் இடம் பெற்ற அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் சிறுபான்மை இனத்தவர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பின்தங்கிய மக்கள் பிரிவினரின் பிரதிநிதிகள் பலர் வெற்றி பெற்றனர். குறிப்பாகப் பெண்களுக்குரிய பிரதிநிதித்துவம் மேற்படி சபையில் 33.21 வீதமாக உள்ளது. அதாவது 575 உறுப்பினர்கள் கொண்ட அரசியல் நிர்ணய சபையில் 191 பேர் பெண் பிரதிநிதிகளாவார். இவர்களில் 30 பேர் நேரடித் தேர்தல் மூலமும் மிகுதி 161 பேர் விகிதாசாரத் தேர்தல் அடிப்படையிலும் தெரிவாகியுள்ளனர். ஆனால் 1999ம் ஆண்டு பழைய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பெண்கள் வெறும் 6 சதவீதம் மட்டுமே அதாவது 205 உறுப்பினர்கொண்ட பாராளுமன்றத்தில் 12 பேர் மட்டுமே பெண்களாக இருந்தனர்.

ஆனால் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களாக 74 பேர் போட்டிக்கு நின்றனர். 39 பெண்கள் நேபாளக் காங்கிரஸிலும் 36 பேர் ஐக்கிய மாக்ஸிஸ லெனினிஸக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் 13 பெண்கள் மாதேசிக் கட்சியிலும் வேட்பாளர்களாக இருந்தனர். இத்தகைய பெண் வேட்பாளர்கள் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றனர். இவ்வாறு வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மாஓவாதக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.

அவர்களில் ஒருவர் ஹகாற்றி மாகர் என்பவர். அவரது கணவர் முடியாட்சியை எதிர்த்த மாஓவாதிகள் நடாத்திய போராட்டத்தில் தியாகியானார். தனது கணவனது இறப்பிற்கு பின்பும் கைக் குழந்தையுடன் நேபாளத்தின் பல பிரதேசங்களிலும் சென்று மக்கள் யுத்தப் போராட்டப் பணிபுரிந்த ஒரு போராளியாவார். அவரைப் போன்ற பெண்களின் பிரதிநிதிகள் நேபாளத்தின் 12.5 மில்லியன் பெண்களுடைய உரிமைகளுக்கான பிரதிநிதிகளாக உள்ளனர். அவர் கூறுகையில் 33 வீதத்துடன் நின்றுவிடாது எதிர்காலத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50 வீதமாக உயர வேண்டும் என்றார்.

பெண்கள் பிரதிநிதித்துவம் என்பது வெறும் பதவிப் பிரச்சினை அல்ல. நடப்பில் இருக்கும் சமூக அமைப்பில் உள்ள பெண்கள் மீதான ஒடுக்கு முறைகள் உட்பட அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடும் கொள்கையையும் நடைமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும் என்பதே பிரதானமானதாகும்.

மேற்படி பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இலங்கை, இந்திய நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றதாகும். குறிப்பாக இந்தியாவில் இதுவரை பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதி என்ற பொம்மைப் பதவிக்கு ஒருவரை நியமித்துவிட்டுத் தம்பட்டம் அடிக்கும் பிற்போக்கு நிலைதான் அங்கு காணப்படுகிறது. இங்கும் சிறிமாவோ, சந்திரிகாவைக் காட்டி பெண்களுக்கு அந்தஸ்து கிடைத்ததாகப் பெருமை பேசுவோர் உள்ளனர். ஆனால் நேபாளத்தின் பத்து வருட ஆயுதப் போராட்டமும் கிளர்ந்தெழுந்த ஐந்து பிரதான வெகுஜன எழுச்சிப் போராட்டங்களும் பெண்களின் பங்களிப்பைச் சாத்தியமாக்கிக் கொண்டன.

நேபாளத்தில் மாஓவாதக் கட்சியின் பெண்கள் இயக்கம் சகல நிலைகளிலும் ஒடுக்கப்பட்டு வந்த பெண்கள் மத்தியில் சமூக மாற்றம் நோக்கிய வெகுஜன அரசியல் வேலைகளை முன்னெடுத்து வந்ததன் விளைவே அங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க காரணமாகும்.

Saturday, October 4, 2008

இப்போது பேஸ்புக் (Facebook) தமிழில்


நண்பர்களை இணைக்கின்ற வலையில் பேஸ்புக்கும் (Facebook) ஒன்று. இது இப்பொழுது தமிழில் மொழிமாற்றப்பட்டு (முதலாம் கட்டத்தை தாண்டி) பாவனைக்கு விடப்பட்டுள்ளது. இப்பொழுது இரண்டாம் கட்டத்தின் வாக்களிப்புக்காக விடப்பட்டுள்ளது.

இது பற்றி ஆர்வம் உள்ளோர் உங்களாலான பங்களிப்பை செய்யலாம்.