Sunday, August 17, 2008

எனது சமூகத்தின் ஒரு கோரப்பக்கம்

உலக மதங்களில் இந்து மதம் மட்டுமே வலியுறுத்துகின்ற சமத்துவமின்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்ற ஆவணப்படம் இது. இந்து மதத்தின் சாதி முறைமையின் (சதுர் வர்ணம்) கோரமுகத்தை வெளிப்படுத்துகின்ற படம். இதை இந்து மதத்தின் ஒரு கோரப்பக்கம் என்றே சொல்லவேண்டியிருக்கின்றது ஏனென்றால், இந்த சாதியமைப்பு முறையென்பது, நாளாந்தம் (முக்கியமாக இந்தியாவில்) பல கோர சம்பவங்களுக்கு முற்றுமுழுதான காரணமாக அமைகின்றது.

இதை எனது சமூகத்தின் ஒரு கோரப்பக்கம் என்று தலைப்பிடவேண்டியதாயிற்று. ஏனென்றால், நான் பிறந்து வளர்ந்த மதமும் இந்த மதம் தான். என்னுடைய, பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள் பலர் பின்பற்றும் மதமும் இதுதான்.வெறும் மூடநம்பிக்கைகள், ஒரு கூட்டத்தார் இன்னொரு கூட்டத்தாரை அடக்கியாள உருவாக்கப்பட்ட வரைமுறைகள், எவ்வளவு கோரத்தாண்டவமாடுகின்றது என்பதற்கு இப்படம் சாட்சி.

நானறிந்தவரையில், வேறு எந்தமதமும் சமமின்மையை வலியுறுத்திச்செல்லவில்லை. வேறு எந்த மதமும், பிறப்பால் ஒரு கூட்டத்தாரை உயர்ந்தவர்களென்றும், இன்னொரு கூட்டத்தாரை தாழ்ந்தவர்களென்றும் சொல்லுவதை காணமுடியவில்லை.

கடவுள் இல்லை என்பதற்கு உள்ள ஏனைய ஆதாரங்களுடன், கடவுளின் மதம் என்று சொல்லப்படுகின்ற இந்த இந்து மதத்திலுள்ள கேவலம் இன்னொரு உறுதியான ஆதாரமாகும். இன்னும் தன்னை ஒரு இந்து என்று சொல்லிக்கொள்கின்ற ஒவ்வொருவனும் வெட்கப்படவேண்டும்.

அடிமைக்குணமும், அறியாமையாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்ற நம்மவர்களில் பலர், இன்னும் இந்து மதம், உயரிய பண்புகளை வலியுறுத்துகின்றமதம், உலகின் தலை சிறந்த மதம் என்று பெருமையடித்துக்கொள்வதில் ஒன்றும் ஆச்சரியமில்லை தான்.

பாரபட்சமும், கொடுமைகளும், பாலியல் வக்கிரங்களும், ஏமாற்று வித்தைகளும் நிறையப்பெற்றதே இந்த இந்து மதம். இன்றைக்கும், பல பிழைக்கவழியில்லாத மனிதர்கள் (சாயி பாபா, அம்மா, கல்கி பகவான், மேல்மருவத்தூர் அம்மா, அமிர்தானந்த மயி, இன்னும் பலர்) பலர், பல ஏமாற்று வித்தைகளை புரிந்து, மக்களை மயக்கி, தம்மை கடவுள்கள் என்று சொல்லி, ஏமாற்றுகின்றார்களென்றால், அதுவும் இந்து மதத்தில் காணக்கூடிய ஒரு சிறப்பே.

உதவி.
http://sinnakuddy1.blogspot.com/2008/07/blog-post_9318.html

Saturday, August 16, 2008

எனக்குள் எழும் கேள்விகள்

வணக்கம்! எப்படி இருக்கிறியள்...?

என்னுடைய பிரார்த்தனையும் எல்லோரும் சுகமாக இருக்க வேணுமென்றுதான். சுகம் விசாரிக்கின்ற இவன் யாரென்று நீங்கள் கேட்டீர்கள் என்றால், என்னுடைய அனுமானமும் சரியாகவே இருக்கின்றது என்று அர்த்தம் பாருங்கோ...

நான் ஒன்றும் வெளியூர்க்காரனல்ல. இப்ப எல்லாம் போறாங்களே சந்திரன், செவ்வாய், வியாழனென்று... அங்க இருந்து வரவில்லை. ஏன் அமெரிக்கா என்ன நிறமென்று கூட எனக்கு சத்தியமாக தெரியாது பாருங்கோ. உங்களில் ஒருத்தனாக உங்களில் இருந்தே வருகின்றேன்.

எனக்கு சில விசயங்களை நீங்கள் 'கிளியர்' பண்ண வேண்டும். இல்லாட்டில் தலை வெடித்துவிடும் போல இருக்கு. அதுதான் நீங்கள் மணித்தியாலக்கணக்காக தூங்கிக் கொண்டிருக்கும் தொ(ல்)லைக்காட்சி நாடகங்களில் வந்து கேட்பம் என்றால், என்னுடைய முகத்துக்கு அது 'கொஞ்சம்' ஓவராம்! அதுதான் இந்த புளொக்கில தரிசனம் தாறன்.

சரி, என்ர டவுட்டுக்களை சொல்லிறன். தெரிஞ்சால் 'கொமென்ட்' அடிச்சு பதில் தாங்கோ... அதி கூடின smsகளை அனுப்பி அதிபெறுமதியான பரிசில்களை வெல்லுங்கள். மன்னிக்கவும்... வானொலி கேட்கிற பழக்கம் தன்னாலே வந்திட்டுது...

மைக்கல் பெல்ப்ஸ், இவரை உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் என்று நம்புறன். அதுதான் அவருடைய நண்பரே அவருக்கு 'உன்னுடைய கேவலமான முகத்தை எத்தனை தடவையடா ரி.வியில பார்க்கிறது' என்று sms அனுப்பியும் திருந்தாத ஜென்மம். அவர் இன்றைக்கு எத்தனை தங்கத்துக்கு சொந்தம் சொல்லுங்கோ. ஒன்று..? இரண்டு..? இல்லை எட்டுக்கு குறி வைத்திருக்கிறார். நல்லதுதான். வாழ்த்துக்கள். ஆனால், எங்கட பள்ளிக்கூடத்தில படிக்கும்போது ஒருத்தர் மூன்று போட்டிக்கு மேல் பங்குபற்றமுடியாது என்று எழுதப்படாத சட்டமொன்று இருக்கல்லோ..? அப்படியிருக்கும்போது, ஒலிம்பிக்கில் எப்படி ஒருத்தரால் இத்தனை போட்டிகளில் பங்குபற்ற முடியும்? அமெரிக்க ஜனநாயகப் பத்திரிகைகளே... சீனாவின் ஒலிம்பிக்கில் நடைபெறும் இந்த தில்லுமுல்லுகளையும் வெளிக்கொணர்வீர்களாக. ஓ... மறந்திட்டேனே....
மைக்கல் பெல்ப்ஸ் அமெரிக்கனா..? அதுதானே மெளனம்!

அடுத்த டவுட்டு என்னென்றால், அந்த நாரதரைப்பற்றினது. விளங்கியிருக்கும் என்று நினைக்கின்றேன். நடந்து வந்த பாதை தன்னை திரும்பியும் பார்க்காதவர்... ஆயிரக்கணக்கில் பாதுகாப்புக்கு வருவம் என்டினம்... கடலில் பீரங்கிக்கப்பல் நிற்கும் என்டினம்... மாநாட்டுக்கு முதல் வந்து பாதுகாப்பை ஒழுங்கு பண்ணினவரே காற்று வாங்க ஒய்யாரமாக நடக்கும் போது...................

போன வெள்ளிக்கிழமை இந்தியாவின் சுதந்திர தினமாம். ஒருத்தர் சொன்னார் இந்தியாவையும் அகிம்சையையும் பிரிக்க முடியாதாம். எனக்கு ஏனென்று இன்னும் விளங்கவில்லை. நான் நினைக்கின்ற இந்தியாவும் அவர் சொன்ன இந்தியாவும் வேறுவேறாக இருக்குமோ? எங்களிட்ட சாப்பாட்டுப் பொட்டலங்களுடன் வந்து... பிறகு தில்லுமுல்லு செய்து... நல்லூரில் நடந்த நீராகாரமின்றிய உண்ணாநோன்புப் போராட்டத்திலேயும், மட்டு-மாமாங்கத்தில் நடந்த அகிம்சைப் போராட்டத்திலேயும் தோற்று... பின்னர் கந்தகப் பலப்பரீட்சையில் சொந்த நாடு திரும்பின இந்தியாவைத்தான் நான் நினைக்கின்றேன். அவர் யாரை நினைக்கின்றார்..?

உங்களில் யாருக்கும் தமிழ்நாட்டுடன் 'கனெக்சன்' இருக்கா? இருந்தால் தயவுசெய்து இப்ப தமிழ் பேப்பரில வருகுதே... வன்னியில் எங்கட பிஞ்சுகள் பசிக்கொடுமையால் துடிக்கிற படங்கள்... அதைக் கத்தரிச்சு நெடுமாறன் ஐயாவுக்கும் மாண்புமிகு முதல்வர் கருணாநிதி ஐயாவுக்கும் அனுப்பிவையுங்கோ. முதலாமவர் உணவு சேகரிப்பார்... இரண்டாமவர் அதை தடுத்து விட்டு நல்லதொரு கவிதை சமைப்பார்....

அப்ப நான் போய் வரட்டா..........................?

Friday, August 8, 2008

சுத்தமான குடிதண்ணீர், தாகம்தீர்க்க மட்டும்தானா?

தாகம்தணிக்க சுத்தமான குடிநீரை அருந்தும் நாங்கள், எங்களுக்கு தெரியாமல், வேறெந்த வழிகளில் அசுத்தமான நீரை உள்ளெடுக்கின்றோம் என்பது பற்றி இங்கே ஆராயப்படுகின்றது.

இப்போதெல்லாம் குடிப்பதற்கான தண்ணீர், சுத்தமாக, கிருமிகளற்று இருக்கவேண்டுமென்பதில் பரவலான விழிப்புணர்வு இருப்பது மனதுக்கு ஆறுதலளிக்கும் விடயம். குடிக்கின்ற தண்ணீரில் கவனமெடுப்பதன்மூலம், எத்தனையோவிதமான நோய்களின் தொற்றுக்களுக்கு ஆளாவதிலிருந்து எம்மை தவிர்த்துக்கொள்ளலாம். ஆனால் நான் இங்கு சொல்லவருவது என்னவென்றால், சுத்தமான குடிநீரை, குடிப்பதற்கு மட்டுமே பாவிப்பது சரியா என்பது பற்றி.

குடிக்கின்ற தண்ணீர் சுத்தமாக இருக்கவேண்டுமென்பதற்காக, குழாய் நீரை, கிணற்று நீரையோ கொதித்தாறிய நீராகவோ, இன்னும் வடிகட்டும் சாதனங்கள்மூலம் வடிகட்டியோ பருகுவதுண்டு. அதைவிடவும் இப்போது, பரவலாக போத்தல்களில் அடைத்துவிற்கப்படும் நீரை வாங்கி குடிப்பதற்கு பாவிக்கும் வழக்கமும் உண்டு. எதை செய்வதென்பது, அவரவர் பொருளாதார நிலையை பொறுத்தது. இன்னுமே குழாய்நீரையோ, கிணற்று நீரையோ அப்படியே குடிதண்ணீராக அருந்துபவர்களும் உண்டு. கிணற்று நீரையோ, குழாய் நீரையோ, அல்லது இயற்கையில் எவ்வழியிலாவது கிடைக்கும் நீரை அப்படியே அருந்தும்போது நோய்க்கிருமிகளின் தொற்றுக்களுக்கு ஆளாகநேரிடுவதோடு, அசுத்தநீரினால் மேலும்பல பிரச்சினைகள் ஏற்பட வழியுண்டு.

சரி, சுத்தமான, கிருமிகளற்ற குடிநீரை அருந்துகின்றோமென்றால், அதில் எங்கள் நோக்கம், நாங்கள் உள்ளெடுக்கும் நீருடன் அசுத்தப் பொருட்களோ, நோய்க்கிருமிகளோ உடலினுட்சென்று, நோயேற்படக்கூடாது என்பதுவே. அருந்தும் நீரில் மட்டுமல்ல, உண்ணும் எத்தகைய உணவிலும் இந்தக் கவனம் இருக்கவேண்டிய தேவையிருக்கின்றது.

ஆனால், சிலவிடயங்களில் எவ்வளவுதான் நாம் கவனமாக இருந்தாலும், மேலும் சிலவிடயங்களில் முட்டாள்தனமாக நடந்துகொள்வதால், முன்னையதுகூட பயனற்றுப்போய்விடுகின்றது.

தாகத்துக்கு குடிப்பதற்கு சுத்தமான தண்ணீரருந்தும் நாம், வாய் கொப்பளிப்பதற்கு, உணவு உண்ணமுன் வாய்கழுவுவதற்கு சுத்தமான குடிநீரை பாவிக்கின்றோமா? கைகளால் உணவுண்ணுபவர்கள் உணவுண்ணமுன் கைகளை கழுவுவதற்கு சுத்தமான குடிநீரை பாவித்து கைகழுவுகின்றார்களா? அல்லது உணவுண்ணும் பாத்திரங்களை கழுவும்போதுதான் சுத்தமான குடிநீரை பாவிக்கின்றோமா? இன்னும், அப்பிள், திராட்சை போன்ற பழங்களை உண்ணமுன் சுத்தமான நீரில் கழுவுகின்றோமா?இல்லை.

குடிப்பதற்கு உகந்ததல்ல என்று நீங்கள் ஒதுக்கிய குழாய்வழிவரும் நீரில்தானே மேற்படி வேலைகளையெல்லாம் செய்கின்றீர்கள். வாய்கொப்பளித்தபின்பு உங்கள் வாய்க்குள் இருக்கப்போவது சுத்தமற்ற குழாய்வழி தண்ணீர்தானே. கைகளை கழுவிவிட்டு உணவுண்ணுகின்றீர்களென்றால், கைகளிலிருந்து உங்கள் உணவுடன் சேரப்போவதும் அதே அசுத்த குழாய்நீர்தானே. அப்பிள், திராட்சை பழங்களை கழுவிவிட்டு உண்ணும்போது, அதே குழாய் நீரைத்தானே உள்ளெடுக்கின்றீர்கள்.

உங்களையே கேட்டுப்பாருங்கள். இவையனைத்தையும், எப்போதாவது நீங்கள் நினைத்துப்பார்த்ததுண்டா? இவைகளிலும் கவனமாக இருப்பதன்மூலம், இன்னும் உங்களுக்கு ஏற்படக்கூடிய, நீர்மூலம் பரம்பலடையக்கூடிய தைபோயிட்டு, கொலரா போன்ற இன்னும் பல நோய்களையும் தடுக்கலாமல்லவா.

குடிப்பதற்கே, சுத்தமான தண்ணிரை பெற்றுக்கொள்வதற்கு படாதபாடுபடும்போது, கைகழுவுவதற்கும், பாத்திரம் கழுவுவதற்கும், பழங்களை கழுவுவதற்கும் சுட்டாறிய, வடிகட்டிய தண்ணீருக்கு எங்கேயையா போவது, என்று நீங்கள் கேள்வியெழுப்பக்கூடும். ஏற்றுக்கொள்கின்றேன், நடைமுறைச்சிக்கல்கள் நிறைய இருக்கின்றன தான். ஆனாலும், வசதியுடையவர்கள், வீட்டிலிருப்பவர்கள், முடிந்தவரை முயற்சிக்கலாமே. ஆகக்குறைந்தது வாய் கொப்பளிப்பதற்கு, வய்கழுவுவதற்கேனும் சுத்தமான குடிதண்ணீரையே பாவியுங்கள். ஆகக்குறைந்தது வாய்வரையாவது சுத்தத்தை பேணலாமே. அதனால் உங்களுக்கு விளையப்போவது நன்மை தானே!

பிற்குறிப்பு: மூன்றாமுலக நாடுகளுக்கு பயணம்செய்யும் மேற்குலகநாட்டவருக்கு வழங்கப்படும் பயண அறிவுரைகளில் முக்கியமான ஒன்று, இந்த அருந்தும் நீரின் சுத்தம் பற்றி. போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது கொதித்தாறிய நீரையே அருந்தும்படி அவர்கள் கேட்கப்படுகின்றார்கள்.

அத்துடன், வாய்கொப்பளிப்பதற்கும், கைகழுவுவதற்கும் அதே நீரையே பயன்படுத்துமாறும் கேட்கப்படுகின்றார்கள். ஏனென்றால், இத்தகைய மூன்றாமுலக நாடுகளில், நீர்மூலம் தொற்றுநோய்கள் பரவக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகம்.

Wednesday, August 6, 2008

நம்பிக்கைகள் பற்றி ஒரு ஆய்வு

முற்குறிப்பு: இக்கட்டுரை, 1.கட்டுரைக்கான காரணம், 2.நம்பிக்கை என்றால் என்ன, 3.மூடநம்பிகை என்றால் என்ன என்று மூன்று பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. '1.கட்டுரைக்கான காரணம்', இலங்கை, கொழும்பில் நடந்த தமிழ் நிகழ்வொன்று பற்றியது. அதுவே இக்கட்டுரையை எழுதத்தூண்டியது. நிகழ்வை தவிர்த்து, நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள் பற்றிய ஆய்வை மட்டும் படிக்கவிரும்புபவர்கள் 2 ஆம் 3ஆம் பகுதிகளுக்கு தாவுங்கள்.

1. கட்டுரைக்கான காரணம்

அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நிகழ்ந்த, இலங்கையின் கவிஞர், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை மொழிபெயர்த்த அரபுக்கவிஞர் ஒமர் ஹையாமின் (உமர் கையாம்,
Omar Khayyam) கவிதைகள் பற்றிய ஒரு கலந்துரையாடலிலே, மதங்களிலுள்ள மூடநம்பிக்கைகள் பற்றியும் கருத்துக்கள் கூறவேண்டியதாயிற்று.

ஏனென்றால், ஒமர் ஹையாம், இஸ்லாம் கூறிய மதமூடநம்பிக்கைகளையும், கடவுள், சொர்க்கம் என்ற கொள்கைகளையும் சாடிய, பதினோராம் நூற்றாண்டில் அரேபியாவில் வாழ்ந்த ஒரு அரபுக்கவிஞர். அத்துடன் அவர் ஒரு, கணிதவியலாளரும், வானிலையாளரும், தத்துவஞானியும் கூட. ஆனால் அவரது சில கவிதைகளை தேசிகவிநாயகம்பிள்ளை மொழிபெயர்த்திருந்த விதமோ (ஆகக்குறைந்தது அன்றைய நிகழ்வில் பேச்சாளர் நயந்த விதமோ), இந்து மத கருத்துக்களை வலியுறுத்துவதாக, ஒமர் ஹையாமின் கருத்துக்களுக்கு முரணாக இருக்கவே, ஒமர் ஹையாமை காப்பாற்ற வேண்டியதாகி, பின்பு அது மத மூடநம்பிக்கைகள் பற்றிய கலந்துரையாடலாயிற்று. பிரதான உரையை (கவிமணியில் மொழியாக்க கவிதைகளை நயந்தவர்) வழங்கியவரோ, இலண்டனிலிருந்து வந்திருந்த, இலண்டன் தமிழ்சங்கத்தில் உறுப்பினரொருவர்.

நிகழ்வுக்கு தலைமை தாங்கியிருந்தவர் ஒரு சட்டத்தரணி. வழக்கமாக பிரதான பேச்சாளர் உரையாற்றி முடிய, அவையினர் கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். அவையினர் தங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் தெரிவித்தபின்பு, இறுதியில் பிரதான பேச்சாளர் அவையினரின் கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளிப்பார். ஆனால் பலமுறை, அவையினரின் கேள்விகளாலும், கருத்துக்களாலும், பிரதான பேச்சாளர், அவரின் உரை மறுதலிக்கப்பட்டு, தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாகும்போது, அவரை காப்பாற்றிவிடுவது நிகழ்வின் தலைமையின் கடமையாக இருக்கும். இக்கட்டான இச்சந்தர்ப்பங்களில், அவையினரின் கருத்துக்களுக்கு பின்பு, பிரதான பேச்சாளரை பதிலளிக்கவிடாது, தலைவரே உரிமையெடுத்து, அவரே தனுடைய கருத்துக்களை தெரிவித்து, அவையினரை மடக்கி, பேச்சாளரை காப்பாற்றிவிடவேண்டிய பரிதாபநிலையும் ஏற்பட்டிருக்கின்றது.

அவ்வாறே, கடந்த இந்த ஒமர் ஹையாம் பற்றிய நிகழ்விலும்கூட, மத மூடநம்பிக்கைகள் பற்றிய பேச்செழுந்த்போது, அவையினரை மடக்கவே தலைவர், ‘மூடநம்பிக்கைகள் என்று ஒன்றில்லை, அவ்வாறு சொல்வது பிழை. கண்ணதாசனே ஒரு தரம் சொல்லியிருக்கின்றார். நம்பிக்கை என்றாலே அது மூடம் தான். மூடியது. அதென்னய்யா பிறகு அதற்குள் மூட நம்பிக்கை. மூடநம்பிக்கை என்று குறிப்பிடுவது பிழையானது' என்று போட்டார் ஒரு போடு. (அத்தோடு இன்னும் பல பேசினார், ஆனாலும் நம்பிக்கை என்ற விடயம் சம்பந்தமாகவே இங்கே அலசவேண்டியிருப்பதால் நடந்த சம்பவத்தை இத்துடன் நிறுத்தி விடயத்துக்கு வருகின்றேன்) ஆகவே நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், மூடமற்ற நம்பிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தவேண்டிய ஒரு தேவையிருப்பதை உணர்ந்தேன். அதன் பயனாக தேடிப்படித்தறிந்த விடயங்கள் இங்கே தரப்படுகின்றன.

2. நம்பிக்கை (Belief) என்றால் என்ன?
தமிழில் வருவதுக்கு முதல், ஆங்கிலத்தில் Oxford Concise Dictionary (ஆங்கிலேயர்களுக்கென்றே வெளியிடப்படுவது) நம்பிக்கை (Belief) என்றால் எப்படி வரைவிலக்கணபடுத்துகின்றது என்று பார்ப்போம்.

Belief (n): 1. An acceptance that something exists or is true, especially one without proof.
                     * A firmly held openion or convicton
                     * A religious conviction
                 2. (belief in) trust or confidence in

Believe(v): 1. feel sure that (something) is true.
                      * accept the statement of (someone) as true.
                      * have religious faith
                   2. (believe in) Have faith in the truth or existence of
                   3. (believe in) have confidence in
                   4. think or suppose
                      * (believe in) think that (something) is right or acceptable.

ஆகவே மேற்படி ஆங்கில வரைவிலக்கணங்களிலிருந்து நம்பிக்கை என்றால் என்னவென்று பார்ப்போம்.

அதாவது, ஒரு விடயம் உண்மை என்றோ, அல்லது அது இருக்கின்றது என்றோ, நிறுவப்படாமல், ஏற்றுக்கொள்ளப்படுதல் நம்பிக்கை. இவற்றுள் மதவிசுவாசம், ஒருவரின் கருத்தை சரியென்று ஏற்றுக்கொள்ளல், ஒருவிடயம் சரியென்றோ, ஏற்றுக்கொள்ளத்தக்கதென்றோ நினைத்தல், கருதுதல், ஒருவரை, அவரின் பேச்சை, எதிகால நிகழ்வுகளை நம்புதல் என்பனவும் நம்பிக்கை என்பதற்குள் அடங்கும்.

அதாவது. மத, கடவுள் நம்பிக்கைகள் மட்டுமல்ல, நம்பிக்கை என்பதில் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஓடுகின்றது. அதாவது நாளை பற்றிய நம்பிக்கை தான், இன்றைய நாளை மகிழ்ச்சிப்படுத்துகின்றது. விஞ்ஞானம் கூட இந்த நம்பிக்கைக்கு விதிவிலக்கல்ல. விஞ்ஞானத்திலுள்ள எடுகோள்களெல்லாம் (Hypothesis) ஒருவித நம்பிக்கைகள் தாம். விஞ்ஞானிகளும் பலவிடயங்களை நம்புகின்றார்கள், நம்பிக்கை வைத்துள்ளார்கள். விஞ்ஞான எடுகோள்களென்ற அந்த நம்பிக்கைகள் நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களையும், உண்மைகளையும் அடிப்படையாகக்கொண்டவை. விஞ்ஞான முறையிலமைந்தவை.

எவ்வாறாகினும், நம்பிக்கை எனப்படுவது ஒரு நிரூபிக்கப்படாத விடயமென்று விளங்குகின்றது. ஒரு விடயம் நிரூபிக்கபடாது, சரியென ஏற்றுக்கொள்ளப்படும்போது அது நம்பிக்கை, அதுவே நிரூபிக்கபடும்போது (விஞ்ஞானரீதியில்) அது ஒரு 'உண்மை' ஆகின்றது. இவுண்மைகளே விஞ்ஞானத்தில் விஞ்ஞான் கண்டுபிடிப்புக்களாகின்றன. இவ்விஞ்ஞான கண்டுபிடிப்புக்களுக்கு வழிவகுப்பவை பெருமளவில் விஞ்ஞான எடுகோள்கள் தாம்.

3. மூடநம்பிகை (Superstitious Belief) என்றால் என்ன?

அப்படியானால், நம்பிக்கை என்ற விடயம் நிரூபிக்கப்படாததொன்றாக இருக்கும்போது, மூடநம்பிக்கை, மூடமற்ற நம்பிக்கை என்ற வார்த்தைப்பிரயோகங்கள் சரியானவையா. அப்படி நம்பிக்கைகளுக்குள்ளும் வகைகள் இருக்கின்றனவா?

சரி, மூடநம்பிக்கை என்றால் என்னவென்று பார்ப்பதற்கு முன்னால், மூடம் (மூடத்தனம், stupidity) என்றால் என்னவென்று பார்க்கவேண்டும். மூடத்தனம் என்றால், அறிவின்மை, அறியாமை (ignorance), முட்டாள்தனம் (foolishness) என்று பல பொருள் காணலாம். ஆகவே இதிலிருந்து மூடநம்பிக்கை என்றால் அறியாமையால் ஏற்பட்ட நம்பிக்கை அல்லது முட்டாள்தனத்த்தால் ஏற்பட்ட நம்பிக்கை என்று பொருள்கொள்ளலாம்.

அப்போ, மூடமற்ற நம்பிக்கைகள் என்றால் என்ன? இதை வரைவிலக்கணப்படுத்துவதை விட உதாரணங்களுடன் பார்ப்போம். போர்க்களத்துக்கு போரிடச்சென்ற தன்னுடைய மகன், உயிருடன் திரும்பிவருவான் என்று தாயொருத்தி நம்பிக்கை வைத்திருந்தால் அத்தாயின் நம்பிக்கையை பார்த்து அது ‘மூடநம்பிக்கை' என்று சொல்வீர்களானால், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் அனைத்தும் .மூடநம்பிக்கைகள்' என்று அறுதியிட்டு கூறுகின்றேன். எனக்கு கீழ் வேலைசெய்பவனின் செலவு கணக்கறிக்கையை நம்புகின்றேன், அதை மூடநம்பிக்கை என்று சொல்லமுடியுமா? 'இக்கட்டுரையை வாசிக்கும் நீங்கள் ஒரு சமூக ஆர்வமுள்ளவர் என்று நான் நம்புகின்றேன். அதை மூடநம்பிக்கை என்று சொல்லமுடியுமா? இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கையாகுமா? பூமிதவிர்ந்த கிரகங்களில் உயிர்கள் வாழலாம், இன்னும் ஐந்தாண்டுகள் கழித்தும் நான் உயிர்வாழ்வேன், என்னுடைய காதல் வெற்றிபெறும் என்றெல்லாம் நம்புவது மூடநம்பிக்கையாகாது தானே.

ஆகவே இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும். எப்படியான நம்பிக்கைகள் மூடநம்பிக்கைகள், எப்படியான நம்பிக்கைகள் மூடமற்ற நம்பிக்கைகள் என்று. பூமிதோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள், பிரபஞ்சம் உருவாகி 14.5 பில்லியன் ஆண்டுகள் என்று விஞ்ஞான முறையில் நிறுவியபிறகும், இல்லையில்லை கிறிஸ்தவ பைபிளின்படி, இந்த பூமியும், பிரபஞ்சமும் உருவாக்கப்பட்டு 6000 ஆண்டுகள் தான் என்று நம்புவது அறியாமையால் விளைந்த நம்பிக்கையல்லவா. அது மூடநம்பிக்கையல்லவா. ஆணின் விந்தணுவும், பெண்ணின் முட்டையும் உடலுறவின் மூலம் சேர்ந்துதான் குழந்தை உருவாகமுடியும் என்றானபின்பு, அவ்வாறுதான் இயற்கைமுறையில் கருத்தரிக்கமுடியாவிட்டாலும், இன்று விஞ்ஞான் மருத்துவமுறைகளில் எப்படியாவது குழந்தைப்பேறை அடைந்துகொள்ளலாம் என்றானபின்பும், அறியாமையால், சில ஏமாற்றுக்காரரின் சொல்கேட்டு, விரதமிருந்து, விக்கிரகங்களை வழிபட்டால் தான் குழந்தை கிடைக்கும் என்று நம்பினால், அதை மூடநம்பிக்கை என்று சொல்லாமல் வேறு என்னவென்பது.

(விஞ்ஞானத்தை துணைக்கழைத்தால்) ஈர்ப்புவிசைதான் காரணமென்றால், நீ அன்றாடம் கடந்துசெல்லும் ஒவ்வொரு மாடிக்கட்டடமும் உன்மீது ஏற்படுத்தும் ஈர்ப்புவிசையுடன் ஒப்பிடும்போது, புறக்கணிக்கத்தக்க, மிக மிக தூரத்திலுள்ள கோள்கள் உன்மீது ஏற்படுத்தும் தாக்கத்தால் உனது வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகின்றதென்றால் இதைவிடவுமா மூடநம்பிகை வேண்டும். அதற்குள் பௌர்ணமி தினத்தில் பைத்தியம் கூடுகின்றது என்ற மூடநம்பிக்கை வேறு.

சூரியன் ஒரு கிரகமல்ல, அது ஒரு நட்சத்திரம், சந்திரனும் ஏனைய கிரகங்கள் போல ஒரு கிரகமல்ல, அது பூமியின் உபகோள் என்று நிறுவியபின்பும், இல்லையில்லை அவையிரண்டும் நவக்கிரகங்களும் அடங்கும் என்று நீ நம்புவாயானால், அது அறியாமையால் ஏற்பட்ட மூடநம்பிக்கை.

பூமி கோளவடிவானது, பூமியும் ஏனைய கோள்களும் சூரியனேயே சுற்றிவருகின்றன, நாமிருக்கும் இந்த சூரியத்தொகுதி அகண்ட பிரபஞ்சத்தின் சிறியதொரு பகுதி என்று நிரூபணமானபின்பும், இல்லையில்லை பூமி தட்டையானது, சூரியனும், சந்திரனும் பூமியையே சுற்றிவருகின்றன, பிரபஞ்சத்தின் மையம் பூமியே என்று, மதநூல்கள் சொல்வதுபோல் நம்புவாயானால் அது அறியாமையால் வரும் நம்பிக்கை, மூடநம்பிக்கை.

அகவே இப்போது சொல்லுங்கள், நம்பிக்கைகளில், மூடநம்பிக்கைகள், மூடமற்றநம்பிக்கைகள் என்று உள்ளன தானே! ஒரு நம்பிக்கை அறிவுபூர்வமாக ஏற்பட்டால் அது மூடத்தனமற்ற நம்பிக்கை, அதுவே அறியாமையால் ஏற்பட்டால் அது மூடநம்பிக்கை. விஞ்ஞான எடுகோள்கள் (Hypothesis) அறிவுபூர்வமான நம்பிக்கைகள். உதாரணத்துக்கு, பூமிதவிர்ந்த அண்டத்தின் மற்றைய பகுதிகளிலும் உயிரினங்கள் வாழலாம் என்ற எடுகோள் (நம்பிக்கை) பூமியில் எப்படி உயிரினங்கள் தோன்றின, பரிணாமமடைந்தன என்பன பற்றிய ஆராய்ச்சிகளில் முடிவிலும், அண்டம் பற்றிய ஆராய்ச்சியின் முடிவிலும் ஆதாரங்களின்மேலும் எடுக்கப்பட்ட எடுகோள். அவற்றை உண்மையென்று நிரூபிப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆகவே மூடநம்பிக்கைகள் கட்டிக்காக்கப்படுவதற்கும், கட்டியெழுப்பப்படுவதுக்கும் காரணம் மனிதர்களின் அறியாமையே. மக்களை அறிவுடையவர்களக்குவதன்மூலம் மூடநம்பிக்கைகள் இலகுவில் ஒழிக்கப்படலாம். முடிந்தவரை, ஒவ்வொருவரும் உங்கள் அருகிலிருப்பவர்களின் அறியாமைகளை நீக்கி நல்லதொரு, மூடநம்பிக்கைகளற்ற, மூடநம்பிக்கைகள் குறைந்த, ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்புவோம்.

பிற்குறிப்பு
மூடநம்பிக்கை என்பதற்கு தமிழ் அகராதியொன்றில் கிடத்த வரைவிலக்கணம்.

மூடநம்பிக்கை: அறிவுக்கு பொருந்தாத, பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து அல்லது கோட்பாடு. Superstitious belief, widly held but unjustified belief about man and nature.

Pals Tamil e-Dictionary

உதவி
1. Concise Oxfor Dictionary.
2. Pals Tamil e-Dictionary
3.
Omar Khayyám on Wikipedia
4. Rubaiyat of Omar Khayyam
5. http://en.wikipedia.org/wiki/Universe
6. http://en.wikipedia.org/wiki/Earth
7. http://en.wiktionary.org/wiki/hypothesis
8. http://www.merriam-webster.com/dictionary/hypothesis
9.Young Earth creationism
10. Lunar Effect 
11. Planets in Astrology 
12. Flat Earth

Tuesday, August 5, 2008

நாராயணனும் நாரதரும் விக்கிரமாதித்தனும்...

பத்திரிகைகளில்> சஞ்சிகைகளில் என ஏராளமான பத்தி எழுத்துக்களை வாசிக்கக் கிடைக்கிறது. குறிப்பாக ஈழத்தில் தமிழில் வருகிற பத்தி எழுத்துக்கள் பல> பலவீனமானவை. அண்மைய சில அரசியல் நிகழ்வுகள் எனக்கு கடந்தாண்டு வாசித்த ஒரு பத்தியை நினைவுபடுத்தின. அப்பத்தியின் எள்ளல் தொனியும் நகைச்சுவையுமே அப்பத்தி என் மனதில் நிற்கக் காரணம். வாசித்துப் பாருங்கள்:

"வழக்கமாக நாராயணன் என்ற பேரைக் கேட்டால் எனக்கு நாரதர் தான் நினைவுக்கு வருவார். ஏனென்றால் நான் பார்த்த சினிமாப் படங்களிலெல்லாம் நாரதர் வரும் போது "நாராயணா" என்று சொல்லிக் கொண்டுதான் வருவார். இந்த முறை நாராயணனே திருவாய் மலர்ந்தருளியுள்ளார். ஆனாலும் அவர் பேச்சு நாரதருக்குத் தான் கூடப் பொருந்தும். இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு ஆலோசனை என்னவென்றால் இலங்கை தனது பாதுகாப்புத் தேவையான ஆயுதங்களைச் சீனாவிடமிருந்தோ பாகிஸ்தானிடமிருந்தோ பெறக்கூடாது. மாறாக இந்தியாவிடமிருந்தே பெற வேண்டும் என்பதுதான். அது ஆலோசனையோ ஆணையோ எனக்குத் தெரியாது. ஏனென்றால் இலங்கையில் தீக்ஷித் முதலாக நிருபம் சென் உட்பட நிருபமா ராய் வரை இந்தியத் தூதுவர்களே கொலனி யுகத்தின் வைஸ்ராய் தோரணையிலேயே பேசி வந்திருந்த போது நாராயணன் மட்டும் ஏன் வேறு விதமாகப் பேச வேண்டும்? அவர் இந்திய அரசாங்கத்தின் சார்பாகத் தான் பேசினாரா? அதற்கான அதிகாரத்தை யார் அவருக்கு வழங்கினார்கள்? அப்படி அவர் தனக்கு இல்லாத ஒரு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தால் உடனேயே அதை மறுத்து இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரோ வெளிவிவகார அமைச்சரோ ஒரு அறிக்கை விடுத்திருக்கலாம் அல்லவா! ஆனால் ஆகாசவாணியின் செய்தி ஒலிபரப்பு அந்த அறிவுரைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறதே! எனவே அந்த ஆலோசனையையோ ஆணையையோ நாம் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

நாராயணன் ஒரு நிபந்தனையுமல்லவா போட்டிருக்கிறார். ஆயுதங்கள் தற்காப்புக்கானவையாக இருக்க வேண்டும். இங்கே எனக்கு வேறு சந்தேகங்களும் எழுகின்றன. தற்காப்புக்கான ஆயுதம் எது? கத்தி, வாள், துவக்கு? எனக்குத் தெரியக் கேடயம் ஒன்று தான் தற்காப்புக்கான கருவி. அது ஆயுதமாகுமா? மகாபாரதத்தில் நிராயுதபாணியாக்கப்பட்ட அபிமன்யுவின் கையில் அகப்பட்ட தேர்ச்சில்லும் ஒரு ஆயுதமாகச் செயற்பட்டதாம். அப்படியானால் எவையெவை தற்காப்புக்கான ஆயுதங்கள் என்று ஒரு பட்டியலிட்டால் உதவியாக இருக்கும். இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்கா வழங்குகிற ஆயுதங்களும் போர் விமானங்களும் எந்த வகையில் அடங்கும்? ஒரு வகையிற் பார்த்தால் எதிரியிடம் உள்ள எந்த ஆயுதத்தையும் முறியடிக்கக் கூடிய வேறெந்த ஆயுதமும் தற்காப்புக்கானது தான். அந்த அடிப்படையில் இன்று ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனும் கையில் வைத்திருக்கும் உரிமையைக் கொண்ட பலவாறான துப்பாக்கிகள் முதலாக அமெரிக்காவின் அனைத்து அணு ஆயுதங்களும் அவற்றைக் காவிச் செல்ல வல்ல விமானங்களும் நீர் மூழ்கிக் கப்பல்களும் ஏவுகணைகளும் தற்காப்புக்கானவையே. நச்சு வாயுவும் இரசாயன ஆயுதங்களும் உயிரியல் ஆயுதங்களும் கூட அமெரிக்காவிடம் இருந்தால் தற்காப்புக்கானவையே.

எப்படியிருந்தாலும், இந்தியாவின் எஜமானர்களிடம் எந்தெந்த ஆயுதங்கள் தற்காப்புக்கானவை என்றும் எந்தெந்த ஆயுதங்கள் தாக்குதலுக்கானவை என்றும் ஒரு தெளிவான வரையறுப்பு இருக்கக்கூடும். அதன் அடிப்படையில் இந்தியா தனது காந்திய நெறிப்படி அதை நீங்கள் இந்திரா காந்திய, ராஜீவ் காந்திய, சோனியா காந்திய, ராகுல் காந்திய என்று எப்படி வைத்துக் கொண்டாலும், அந்த நெறிப்படியே, பாதுகாப்புக்கான ஆயுதங்களை மட்டுமே இலங்கைக்கு விற்கும் அல்லது விலைக்கு வழங்கி உதவும். சீனாவோ பாகிஸ்தானோ அத்தகைய ஆயுதங்களை இலங்கைக்கு விற்றால் இந்தியா யாரைத் தண்டிக்கும்? சீனாவையா? பாகிஸ்தானையா? இலங்கை அரசையா? விடுதலைப் புலிகளையா? இந்த மாதிரிக் கேள்வி ஒன்றை வேதாளம் விக்கிரமாதித்தனிடம் முதலிலேயே கேட்டிருந்தால் ஆறுதலாகத் தனது முருங்க மரத்தில் அலுப்பில்லாமல் சீவித்திருக்கலாம். விக்கிரமாதித்தனுக்குக் கதை சொல்ல ஒரு காட்டேரியோ கொள்ளிவாய்ப் பிசாசோ அகப்படாமலா போயிருக்கும்!"

ஞாயிறு தினக்குரலில் கோகர்ணன் எழுதிய "மறுபக்கம்" பத்தியிலிருந்து…..