Friday, February 27, 2009

பயில்நிலம் இதழ் வெளியீடு

பயில்நிலத்தின் இதழ் வெளியீடு கடந்த 22ம் திகதி கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது.

கருத்துரைகளை பேராசிரியர் சி. சிவசேகரம் மற்றும் மு. மயூரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

பின்னர் "யாரோடு நோக? யார்க்கு எடுத்துரைக்க?" என்ற தலைப்பிலான கவிதா நிகழ்வும் இடம் பெற்றது.

பயில்நிலம் தொடர்புகளுக்கு payilnilam@gmail.com




Thursday, February 26, 2009

பயில்நிலத்தின் மீள் வருகை: மீண்டும் தொடங்கும் மிடுக்கு (ஈழத்து இலக்கியச் சூழலும் இளைய தலைமுறையின் இதழ் வெளியீட்டு முயற்சிகளும்)

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பயில்நிலத்தின் மீள் வருகை மகிழ்வளிக்கிறது. 2004 முதல் 2006 வரை தொடர்ச்சியாக 12 இதழ்களை இக் குழுவினர் வெளியிட்டு உள்ளனர். 3 வருட மௌனத்தின் பின்னர் புதிய இளம் குழுவால் பயில்நிலம் புதுப் பொலிவுடன் மீண்டும் வருகிறது. இன்றைய சூழலில் கூட்டுச்செயற்பாடு என்பது எவ்வளவு கடினமானது என்பதை எல்லோரும் நன்கு அறிவோம். தனி மனித வாதமும் தனி மனித முனைப்பும் முன்னிலைப்படுத்தபடுகின்ற சூழலில் இளையோர் ஒரு இதழைக் கொண்டு வருவது மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ் வகையில் பயில்நிலத்தின் மீள் வருகை எமது இளம் தலைமுறை குறித்த நம்பிக்கைகளைத் தக்க வைக்க உதவுகிறது.


இன்றைய சூழல் மிகுந்த சவால் மிக்கதாக இருக்கிறது. கூட்டுச்செயற்பாடும் தனி மனிதப் பொறுப்பும் சரியாக விளங்கிக் கொள்ளப்படவேண்டிய தேவையும் கூட்டுச்செயற்பாட்டின் அவசியமும் மிகவும் முக்கியமானது. இளைய தலைமுறையால் ஒரு தரமான இதழைக் கொண்டு வர முடியும் எனப் பயில்நிலம் தனது 12 இதழ்கள் மூலம் நிரூபித்து இருக்கிறது. இப்போது மீண்டும் வந்துள்ள பயில்நிலம் இதழும் அதன் தொடர்ச்சி என்றே கூறமுடியும்.

பயில்நிலத்தின் ஆசிரியத் தலையங்கம் இவ்வாறு சொல்கிறது. "இன்று நடைமுறையிலுள்ள கல்வி முறைமை இளைஞர்களைக் குறுகிய வட்டத்திற்குள் வரையறுத்து விடுகின்றது. இதற்குச் சமூகத்தின் திணிப்பும் காரணமாகின்றது. அத்தகைய பலவீனத்திலிருந்து வெளிவரும் நோக்கில் அவர்களது சிந்தனை, செயற்பாடு, கண்ணோட்டத்தைப் புதிய பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் முயற்சியே எமது பயில்நிலம்."

குறைந்த அளவான கவிதைகள் பல வேறுபட்ட விடயப் பரப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள், சிறுகதைகள், பத்திகள், குட்டிக் கதைகள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் என பல்வேறுபட்ட புதிய பரிணாமங்களுடன் பயில்நிலம் மலர்ந்து இருக்கிறது. இவ்விடத்தில் சில முக்கியமான விடயங்களைக் கூறவேண்டும். அந்நிய மேலாதிக்கத்துக்கு எதிரான எந்தப் போராட்டத்திலும் பண்பாட்டுத் துறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் முக்கியமானவை. முற்போக்குச் சிந்தனையாளர்கள் கலை இலக்கியங்கள் சமூகச்சார்பானதும் சமூக முன்னேற்றத்துக்குமான பங்களிப்பைச் செலுத்த வேண்டுமென வற்புறுத்துவர். சமூக விடுதலை இலக்குடையோர் கலை இலக்கியங்கள் அந்த இலக்கிற்குப் பணி செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பர். அது போலவே அடக்குமுறையாளர் தமது நோக்கங்களைக் கலை இலக்கியங்களூடு முன்னெடுக்கத் தயங்க மாட்டார்கள். அந்த அளவுக்கு, ஆனால் அந்தளவுக்கு மட்டுமே, கலை இலக்கியங்கள் பற்றிய பார்வையில் சமூக விடுதலையாளர்கட்கும் அடக்குமுறையாளர்கட்கும் ஒற்றுமை உண்டு. அதற்கப்பால் அணுகுமுறையிலும் உள்ளடக்கத்திலும் எதிர்மாறான தன்மைகளையே நாம் காணலாம்.

சமூக விடுதலையை வேண்டுவோர் கலை இலக்கியங்கள் சமூகச் சார்புடையனவாக இருப்பதை விரும்புவர். மனிதரின் உரிமைகளையும் மனிதரிடையே சமத்துவ அடிப்படையிலான ஒற்றுமையையும் நீதியையும் நியாயத்தையும் அவற்றுக்கான எழுச்சிகளையும் பேசுவதை வற்புறுத்துவர். அந்த இலக்குடைய படைப்பாளிகள் அவற்றை உணர்த்துகிற விதமாகக் கலை இலக்கியங்களை உருவாக்குவர். ஒடுக்குமுறையாளர்கள் தங்களது நோக்கங்களை அந்த விதமாக வெளிப்படுத்த இயலுமா? இயலாது. எனவே சமூக விழிப்புணர்வை வேண்டி நிற்கிற படைப்புக்களை எதிர்க்க அவர்கள் சமூக உணர்வை மழுங்கடிக்கிற விதமான படைப்புக்களை ஊக்குவிப்பர். பொது மக்களின் இரசனையையும் சிந்தனை ஆற்றலையும் வளர்த்தெடுக்கிற படைப்புகளின் இடத்தில் அவற்றைக் கீழ்த்தரமானவை ஆக்குகிற காரியங்களை அவர்கள் செயற்படுத்துவர். மனிதரைச் சமூகக் கூட்டுணர்வு உடையோராக மாற்றும் முயற்சிகட்கு மாறாகத் தனிமனிதவாதத்தையும் சுய நலப்போக்கையும் வற்புறுத்துவர்.

ஏகாதிபத்தியமோ பிற்போக்காளர்களோ கலை, இலக்கியம், பண்பாட்டுத் துறைகளிற் தங்களது மக்கள் விரோதச் செயல்களை நேரடியாகச் செய்வதில்லை. அவற்றுக்குப் பல்வேறு முகவர்களைப் பாவிப்பர். சமூக உணர்வு போதாத, ஆழமான சமூகச் சிந்தனையற்ற அல்லது சுயநலத்திற்கும் தற்பெருமைக்கும் சுயவிளம்பரத்திற்கும் ஆட்பட்ட ஆய்வறிவாளர்களும் படைப்பாளிகளும் அறிந்தோ அறியாமலோ அவ்வாறான காரியங்களைச் செய்யுங் கருவிகளாகின்றனர்.

இலங்கையில் சமூக உணர்வுள்ள இலக்கிய எழுச்சியில் மட்டுமன்றிப் பொதுவான இலக்கிய எழுச்சியிலும் இடதுசாரிகளும் பிற முற்போக்குச் சிந்தனையாளர்களும் ஒரு தலைமைப் பங்காற்றினர். அதை மறுப்பதற்கான பழமைவாதப் பிற்போக்குவாத முயற்சிகள் படுதோல்வி கண்டன. தேசியவாத இலக்கியத்தின் எழுச்சி கூட முற்போக்கு இலக்கியப் போக்கிலிருந்து எழுந்த சமூகச்சார்பான எழுத்தை உள்வாங்கியே தன்னை அடையாளப்படுத்துமளவுக்குச் சமூகச் சார்பான கலை இலக்கியங்கள் என்ற கருத்தாக்கம் நிலை கொண்டிருந்தது. தூய கலை இலக்கியம் பற்றிப் பேசி முற்போக்கு இலக்கியத்தை நிராகரித்தவர்களே தூய கலை இலக்கியக் கோட்பாட்டை மறந்து தேசியவாதக் கலை இலக்கியங்களைத் தூக்கிப் பிடித்தமை பற்றியும் இங்கு குறிப்பிடலாம். இப்போது எல்லாத் தளங்களிலும் ஏகாதிபத்தியவாதிகள் தங்களது தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். அவர்களது முகவர்கள் போலி மனிதாபிமான முகத்தைக் காட்டுகின்றனர். இதன் நோக்கங்கள் எப்படியானவையோ அப்படியானவையே கலை இலக்கியத் துறைகளில் நடைபெறும் ஊடுருவல்களின் நோக்கங்களும். இவை குறித்துப் பயில்நிலம் அவதானமாக இருக்க வேண்டும்.

பயில்நிலம் இதழ் பல புதிய விடயங்களைப் பேசுகிறது. பல அறிவியல் செய்திகளைச் சொல்கிறது. விண்ணியல் பற்றி எழுதப்பட்டிருக்கும் ஒரு பத்தியும், சுய ஆளுமை பற்றி எழுதப்பட்டிருக்கும் ஒரு பத்தியும் எமது இளம் தலைமுறை புதிய ஒளியை எம் சமூகத்தில் பாய்ச்சும் என்பதற்கு கட்டியம் கூறுவது போல உள்ளது. குறிப்பாக விண்ணியல் பற்றி எழுதத் தொடங்கியிருக்கும் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. இது விண்ணியல் பற்றி நாம் அறியாத பல விடயங்களை அறிந்து கொள்ள உதவும் என எதிர்பார்க்கமுடியும். சுய ஆளுமை பற்றி எழுதப்பட்டிருக்கும் பத்தி சில அடிப்படையான செய்திகளைச் சொல்கிறது. குடும்பம் என்ற நிறுவனத்தின் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் இன்றும் மனித சமூகத்தின் முக்கிய கூறாகவும் தனிமனித வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அலகாகவும் குடும்பம் இருக்கின்றது. இந்த ஏற்றத்தாழ்வான சமூகத்திற்கு மாறாக புதிய சமத்துவமான, சமநீதியை நிலைநாட்டக்கூடிய ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தைப் படைக்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டுள்ளவர்கள் சுய ஆளுமை தொடர்பான பிரச்சனைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளவற்றைத் தட்டிக்கழித்து விடமுடியாது. அவை வெறுமனே தனிப்பட்ட பிரச்சனைகளல்ல. சமூகத்தின் ஏற்றத் தாழ்வான வளர்ச்சியினால் பல்வேறு விதமான சில திட்டமிட்ட நடவடிக்கைகளினால் வளர்க்கப்பட்டுள்ள பிரச்சனைகளுமாகும். எனவே சுய ஆளுமை பற்றி எழுதப்பட்டிருக்கும் பத்தி ஒரு புதிய பார்வையை முன்வைக்கிறது.

புதிய விடயங்களை மட்டும் அல்ல பழைய விடயங்களிலும் பயில்நிலம் அக்கறையாய் இருக்கிறது என்பதை பயில்நிலம் இதழைத் திறந்த உடனேயே தெரிந்து கொண்டேன். இதழில் முதலாவதாக இருக்கும் கட்டுரை பொப்பிசைப் பாடல்கள் பற்றியது ஆகும். கட்டுரையின் முடிவில் "கள்ளுக்கடைப் பக்கம் போகாதே/ காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன், கண்ணும் புகைந்திடும்/ நெஞ்சும் வரண்டிடும்/ கைகால் உலர்ந்திடும் இந்தக் கள்ளாலே, ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்/ அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்/ விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே/ விட்டேனோ கள்ளுக்குடியை நான்" என்ற நித்தி கனகரத்தினத்தின் பாடல் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.

ஒரு விடுதலைப் போரின் போக்கில் நடக்கும் தவறுகள் விடுதலைப் போராட்டத்துக்குக் கேடானவை. போராட்டத்தின் போக்கில் நிகழும் தவறுகள் உடனுக்குடன் திருத்தப்படாவிடின் போராட்டம் பலவீனமடையும். போராட்டம் பற்றிய விமர்சனங்களிற் சினேகமானவற்றையும் பகைமையானவற்றையும் வேறுபடுத்திக் காணும் தேவையைப் பலரும் மறந்து விடுகின்றனர். பகைமையான விமர்சனங்களிற் கூடப் பயனுள்ள அம்சங்களை எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் ஒரு விடுதலை இயக்கத்துக்கு மிக அவசியம். இது குழவாகச் செயற்படும் எல்லோருக்கும் பொருந்தும். பயில்நிலம் குழுவுக்கும் கூட நான் இதை இங்கே சொல்ல முனைவதன் நோக்கம் பயில்நிலம் குழு விமர்சனங்களைக் கவனமாக அணுகவேண்டும் என்பதாலேயே. விமர்சனம் என்பது அழகியல் சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டும் என்பது அழகியல்வாதிகளது நிலைப்பாடு. ஒரு படைப்பின் அரசியற் சமுதாய முனைப்பை விமர்சிப்பதை இவர்கள் விரும்புவதில்லை.நிறவாதத்தையோ மதவெறியையோ தூண்டும் இலக்கியத்தையோ ஆணாதிக்கத்தையோ சாதியத்தையோ நியாயப்படுத்தும் ஒரு படைப்பையோ வெறுமனே அழகியற் கண்ணோட்டத்தில் விமர்சிப்பது எவ்வகையிலும் நேர்மையான காரியமல்ல. சமூகச் சீரழிவை ஊக்குவிக்கும் படைப்புக்களை அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்கொள்ள முடியும். பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்திலான படைப்பக்களை ஊக்குவிப்பதும் கலை இலக்கியங்களைப் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டதினின்று விமர்சிப்பதும் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுப்பணி சார்ந்தது.

மனிதத் தேவைகளையும் உணர்வுகளையும் புறக்கணித்துக் கலை இலக்கியங்களைப் படைக்க முடியாது. இந்தத் தேவைகளையும் உணர்வுகளையும் தனிமனிதருக்கே உரியனவாக்கி மனிதரைச் சமூகத்தினின்று பிரித்துத் தனிமனிதத்துவத்தை சமுதாயத்துக்கு முரண்பட்டதாக வளர்க்கும் போக்கு மனித இருப்பின் முக்கியமான ஒரு பகுதியை மறுக்கிறது. பாட்டாளி வர்க்கப் பார்வை மனிதனது இருப்பின் சமுதாயத் தன்மையை வலியுறுத்தி மனிதரது தனித்துவத்தை அங்கீகரிக்கிறது. தனிமனிதரது தேவைகளும் உணர்வுகளும் சமுதாயத்தினின்று பிரித்துப் பார்க்கப்படாமல் உறவுபடுத்திப் பார்க்கப் படுகின்றன. ஒரு படைப்பின் தொனி அதன் படைப்பாளியின் சமுதாயச் சார்பாலும் குறிப்பாக சமுதாயச் சூழலாலும் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. மனித இருப்பையே நெருக்கடிக்குள்ளாக்கிவரும் ஒரு சமுதாய அமைப்பிற்கு எதிரான போராட்ட உணர்வை வலியுறுத்துவது எமது வரலாற்றுக் கடமை. இதைப் பயில்நிலம் சரியாகச் செய்யும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த இடத்தில் நவீன உலகின் நாடகமேதைகளுள் ஒருவராகக் கருதப்படும் ஹென்றிக் இப்சன் எழுதிய மக்களின் எதிரி" என்ற நோர்வீஜிய நாடகத்தின் கதை நினைவுக்கு வருகிறது. ஒரு விஞ்ஞானி மனிதருக்குத் தீங்கான ஒன்றைக் கண்டறிகிறார். அதை உலகறியச் செய்வதன் மூலம் தான் மனித இனத்திற்கு நன்மை செய்வதாகவும் அதற்காகத் தனக்கு நன்றியாவது கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார். மாறாக, ஊரில் உள்ள சிலரது நலன்கட்கு அந்த உண்மை பாதகமாக உள்ளதன் விளைவாகத் தனது கண்டுபிடிப்பைத் ‘திருத்தி’ எழுதுமாறு விஞ்ஞானி கட்டாயப்படுத்தப்படுகிறார். அதை அவர் ஏற்க மறுத்து அதன் விளைவுகளை எதிர்கொள்கிறார். இதன் மூலம் வலியுறுத்தப்படுவன இரு விடயங்கள்: உண்மைகள் பங்கப்படுத்தக் கூடாதன. உண்மையைத் திரிப்பதற்கு முற்படுகிறவர்கள் தவிர்க்க இயலாமல் வக்கிர நடத்தை உள்ளவர்களாகிச் சீரழிகின்றனர்.

உண்மை என்பது பெரும்பான்மை வலிமையால் நிறுவப்படுவதல்ல என நாம் அறிவோம். எந்தச் சரியான கருத்தும் முதலில் சிறுபான்மைக் கருத்தாகவே தொடங்கிக் காலப்போக்கில் பெரும்பான்மையினரைத் தன் வசமாக்குகிறது. இதற்கு மனித இன வரலாற்றில் நிறைய ஆதாரங்களைக் காட்டலாம். இதைத் தனிநபர்வாத நியாயங்களுடன் நாம் குழம்பிக் கொள்ள அவசியமில்லை. எந்த ஒரு உண்மையின் பெறுமதியும் அதன் சமூகச் சார்பாகவே தீர்மானிக்கப்படுகிறது என்பது சமூகத்தின் உடனடியான அங்கீகாரத்தை ஒரு உண்மையினதோ அதன் பெறுமதியினதோ அளவுகோலாக்கி விடாது. இதுவும் பயில்நிலம் விளங்கி கொள்ள வேண்டிய ஒன்று. "போர் எங்களை முகத்தில் உற்றுநோக்கியவாறு இருக்கையில், ஆக்கங்களில் அதன் முகமே அதிகம் வரையப்படுவது இயல்பானதே. எனினும் இளம் படைப்பாளிகள் சோர்ந்துவிடக்கூடாது. ஒடுக்குமுறைப்போருக்கு எதிரானதும் நியாயத்திற்கானதுமான குரலாகவே படைப்புக்கள் ஒலிக்க வேண்டும் என்பது எம் எண்ணம்." என்று பயில்நிலத்தின் ஆசிரியத் தலையங்கம் சொல்கிறது.

இந்தப் பயில்நிலம் இதழின் முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால் மிகக் குறைவான கவிதைகளே இடம் பெற்று இருக்கின்றன. மற்ற எல்லா இலக்கிய வடிவங்களையும் போலன்றி நீண்டகால மரபு (முறிவுகளுடன் தான்) உள்ள தமிழ்க் கவிதையின் பின்னணியில் அதிகமாக எதிர்பார்க்க எல்லாரையும் போல் எனக்கும் உரிமை உண்டு. இன்று கவிதைத் துறையில் பலரும் புதுக்கவிதையை ஒரு இலகுவான மார்க்கமாகப் பயன்படுத்த முனைந்துள்ளார்களே ஒழிய மரபின் குறைபாடுகட்கு ஈடுகட்டும் ஒரு வலிய ஆயுதமாகப் பயன்படுத்தவில்லையோ என்ற கேள்வி சில சமயம் பயனுள்ள பதில்களைத் தரலாம். ஆனால் இதற்கான பதிலைப் பயில்நிலம் குழுவினரே தரவேண்டும். அதேவேளை இலங்கைத் தமிழ்க் கவிதை பற்றி எனக்குச் சில அச்சங்களும் ஐயங்களும் இருக்கின்றன. கவிதையின் பல்வேறு பரிமாணங்களையும் சாத்தியக் கூறுகளையும் துணிவுடன் அலசி ஆராய்வதில் உள்ள போதாமை, 'சாதனைகள்” பற்றிய சுயதிருப்தி, விமர்சனங்களை ஏற்பதில் தயக்கம், பரஸ்பரம் புகழ்மாலை சூட்டும் குறுகிய வட்டங்கள், எல்லா இலக்கியத் துறைகளையுமே பாதிக்கும். கிணற்றுத் தவளை மனோபாவம் போன்ற பலவற்றை என்னால் உணரமுடிகிறது. இடதுசாரி அரசியல் கோஷங்களையே கவிதையாக்கும் பலவீனத்தை எளிதாகக் கண்டு கொள்ளும் பலரால் சிந்தனைத் தேக்கத்தை அடையாளங் கண்டுகொள்ள முடிவதில்லை.

அலங்கார வார்த்தைகளையும், படிமங்களையும், குறியீடுகளையும் கொண்டு சிந்தனைத் தேக்கத்தை யாருக்கும் தெரியாமல் மூடுவதில் ஒருவரது கவிதை வெற்றி காணலாம். ஆனால் கவிதையின் வளர்ச்சியைச் சிந்தனையின் வளர்ச்சியினின்று பிரிக்க முடியாது. முடங்கிய சிந்தனைச் சூழலில் கவிதையும் முடங்கியே போகும். அவ்வாறு முடங்கிய சிந்தனையின் வழிப்பட்ட கவிதைகளை பிரசுரிப்பதை விட பிரசுரிக்காமல் விடுவது மேல்.

பேசக்கூடாத, பேசப்படாத விடயமாக இருக்கும் பல விடயங்களைப் பேசவே 'பேசப்படாதவை” என்ற பத்தி தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில் இம்முறை கோழியா முட்டையா எது முதலில் வந்தது? என்ற கேள்விக்கான விஞ்ஞான பூர்வமான பதில் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. இது வாசித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. இதே போல அறிவியல் நோக்கில் இரு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஒன்று நனோ தொழில்நுட்பம் மற்றையது பிறப்புரிமைசார் ஆலோசனைகள். இரண்டும் பல புதிய உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய பல பயனுள்ள தகவல்களைத் தருகிறது.

கலப்பு என்ற தலைப்பில் உள்ள லாங்ஸ்டன் ஹியூசின் கவிதை பல கேள்விகளை என்னுள் எழுப்பியது. இன உணர்வு பற்றி யாருமே அதிகம் கூச்சப்படுவதில்லை. சில சமயம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய விஷயமாகவே இன உணர்வு இருந்துள்ளது. என்னளவில் இன உணர்வு என்பது ஆழ்ந்த நோக்கில் அர்த்தமற்ற ஒன்று. ஆயினும் சமுதாயத்தில் இனவேறுபாடுகள் உள்ளபோது அவ்வவ்வேறுபாடுகள் வாழ்வின் வெவ்வேறு துறைகளைப் பாதிக்கும்போது அந்த உணர்வைப் பெரும்பாலானோரால் தவிர்க்க முடிவதில்லை.

இன உணர்வு என்பது ஒரு மனிதனது தன்னடையாளங்களில் ஒன்றாகச் செயற்படுகிறது. அது மொழி, மதம், கலாசாரம் போன்ற பல்வேறு வகையில் வெளிப்படும். அது முற்றாகப் புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல. மனித சமுதாயமும் சிந்தனையும் மேலும் வளர்ச்சியடையும்போது இன உணர்வுகள் சற்றே ஒதுங்கி வழிவிடவே செய்யும். ஆயினும் மனிதனை அவன் உள்ளவாறே ஏற்றுக்கொள்ளும் எந்தச் சிந்தனையும் இன உணர்வுகளை மதியாமல் இருக்கமுடியாது. இன்றைய சூழ்நிலையில் இன உணர்வு என்பது இயல்பான ஒன்று என்ற அளவில் மதிக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. இதைக் கடப்பவர்கள் குறுகிய சுயநலனுக்காக கடப்பவர்களாக இருக்கலாம் அல்லது பரந்துபட்ட மனித இன முழுமையினது நலன் நாடுபவர்களாக இருக்கலாம். எனவே இன உணர்வு இல்லாமை என்பது மட்டும் முற்போக்கான ஒன்றாகிவிடாது. அதன் இடத்தில் பரந்துபட்ட மானுட உணர்வு உள்ளதா அல்லது வெறும் சுயநலமோ சுரண்டும் வர்க்க நலமோ உள்ளதா என்பதையொட்டியே இன உணர்வு இல்லாமையை மதிப்பிட முடியும்.

மனிதர் மத்தியில் இன உணர்வுகள் வேறுபடும் அளவுகளில் இருக்கலாம். தன் இனத்தின் நலனை மற்ற இனங்களின் நலன்கட்கு முரணானதாகக் காணவும் காட்டவும் முனையும் போதும் தன் இனத்தின் இயல்புகளை இன்னொரு இனத்தினதும் மேலான ஒன்றாகக் காட்ட முனையும் போதும் இன உணர்வு இனவாதமாகிறது. இது மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு, கலாசார வேறுபாடுகளை ஏற்றத்தாழ்வுகளாகத் தரம் பிரித்தல், பிரச்சினைகளை இனமொன்றின் கண்ணோட்டத்தில் மட்டுமே தனிமைப்படுத்திக் காண முனைதல் போன்று தன்னை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. இன உணர்வு இனவாதமாகும்போது முரண்பாடுகள் பகைமைத் தன்மை பெற ஆரம்பிக்கின்றன. பகைமை உணர்வுகள் வளர்ந்து சகிப்புத் தன்மையின் எல்லை மீறப்படும்போது இனவாதம் இன வெறியாகிறது.

ஒரு சமுதாயம் முன்னேறிய “நாகரிக” சமுதாயம் என்பதால் அங்கே இனவாதமும் இனவெறியும் இல்லை என்றாகாது. ஐக்கிய அமெரிக்காவில் நீக்கிரோக்களுக்கு எதிரான இனவெறி, தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி, ஹிட்லரின் ஜேர்மனியில் ஆரிய இனவெறி இவையெல்லாம் பின்தங்கிய சமுதாயங்கட்குரியவல்ல. இனவாதமும் இனவெறியும் தொற்று நோய்களைப் போல் பரவுகின்றன. ஒரு இனத்தின் இனவாதமும் இனவெறியும் மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி வளர்த்து, அதன் மூலம் தம்மையும் வளர்த்துக் கொள்கின்றன. இன்றைய காலகட்டத்தில் தேசியவாதத்தின் அடிப்படையையும் அதன் வளர்ச்சிப் போக்கினையும் மக்கள் விளங்கிக்கொள்ளும் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாகத் தேசியவாதத்தினுள் அடங்கியிருக்கும் சாதக-பாதக அம்சங்களைப் பகுத்தறிந்து கொள்வது அவசியமாகிறது. தேசியவாதத்தின் எல்லைகளையும் அதனால் எவ்வளவு தூரம் சாதகமான பாதையில் பயணிக்க முடியும், அதற்கு அப்பால் அது ஏற்படுத்தக் கூடிய ஆக்கபூர்வமற்ற அழிவுகளின் தன்மை எத்தகையவை என்பதைத் தூரநோக்குடன் கண்டறிதல் தேவையாகிறது.

படைப்புக்கும், படைப்பாளிகளுக்குமான உறவும் உருவாக்கமும் முக்கியமானது. அடுத்து படைப்புக்கும் வாசகனுக்குமான உறவும், உரையாடலும் முக்கியத்துவம் பெறுகிறது. இவை அனைத்தையும் சாத்தியமாக்கப் பயில்நிலம் முனைய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
எல்லாவித அதிகாரங்களுக்கும் வாய்பேசா மௌனியாக இருந்துவிட்டு அதிகாரம் தமது இருப்பை அசைக்கின்றபோது கிணற்றுக்குள் இருந்து வெளியில் வந்த மனிதனைப் போல் சமூகத்தை எதிர்கொள்கிற மனநிலையிலிருந்து புதிய இளம் தலைமுறை வெளியேற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மாற்றங்களை வேண்டிப் பயணிக்கும் பயில்நிலம் தடைகளைக் கடந்து பயணிக்கும் என்ற நம்பிக்கையில்......
இது தொடர்பான மயூரனின் பதிவு: http://mauran.blogspot.com/2009/02/blog-post.html

Friday, February 13, 2009

நேபாள மக்கள் போராட்டத்தின் 13வது ஆண்டு நிறைவு: நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

நேபாள மாஓவாதிகள் தங்களது மக்கள் போராட்டங்களை தொடங்கி இன்றுடன் 13 வருடங்கள் ( 1996 பெப்ரவரி 13) முடிவடைன்றன. நேபாள மக்களாலும் மாஓவாதிகளாலும் பத்து வருட இடைவிடாத மக்கள் போராட்டத்தின் விளைவாக மிகப் பெரிய மாற்றத்தை நேபாளத்தில் கொண்டு வர முடிந்து இருக்கிறது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்று ஒரு மிக முக்கியமான சந்தியில் நிற்கிறது. நேபாள மக்கள் போராட்டத்தின் 13வது ஆண்டு நிறைவின் நினைவாக இக் கட்டுரை எழுதப்படுகிறது.

நேபாளம் தென்னாசியாவின் மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள நாடாயிருப்பதற்கான காரணங்கள் பல. அவற்றுள் நிலவுடைமைச் சமூகத்திற்குப் பாதுகாவலாய் இருந்த முடியாட்சியினது பங்கு பெரியது. நேபாளத்தில் மன்னராட்சியின் வரலாறு முடிவுக்கு வந்தது மக்கள் போராட்டத்தின் விளைவாலேயே. அந்த முடியாட்சி ஒரு பயங்கரமான கொடுங்கோன்மையாக நடந்து கொண்டபோது கூட அதை ஆதரித்து வந்தவர்கள் இருக்கிறார்கள். மன்னராட்சினின்று நேபாளத்தின் விடுதலையின் பயனை மக்கள் அனுபவிக்காமல் தடுப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் மும்முரமாயிருந்தன. அமெரிக்கா வெளிவெளியாகவே மன்னராட்சியை ஆதரித்தது. மன்னராட்சி தடுமாறித் தத்தளித்த நிலையில் றிச்சட் பௌச்சர் என்கிற அமெரிக்காவின் தென்னாசிய அலுவற் பொறுப்பாளர் நேபாள ராணுவத் தலைமையுடன் கலந்தாலோசனைகளை நடத்தினார். ஆனால் நேபாள மக்களின் போராட்டம் இதை எல்லாம் தாண்டி வெற்றி பெற்றது.

இந்தியா மன்னராட்சிக்கு மிகவும் உடந்தையாயிருந்தது. பழைய மன்னரது குடும்பத்தின் படுகொலையிலும் இந்தியாவின் பங்கு பற்றிப் பேசப்பட்டமை நினைவிலிருத்தத்தக்கது. முழு அதிகாரங்களையும் மன்னர் க்யானேந்திரர 1-2-2005 அன்று தனதாக்கிய பின்பும் இந்தியா அவருக்கு ஆதரவாயிருந்தது. மன்னராட்சிக்கு எதிரான வெகுசன இயக்கம் வலுவடைந்த பின்பும் மன்னராட்சியின் கீழான பாராளுமன்ற சனநாயகம் என்ற நிலைப்பாட்டையே இந்தியா ஆதரித்தது. மன்னராட்சி பாராளுமன்ற சனநாயகத்தை மீட்க மறுத்தால் மாஓவாதிகள் தலைமையிலான ஒரு மக்கள் குடியரசு உருவாகும் என்ற ஒரு சூழ்நிலையிலேயே இந்திய ஆளும் நிறுவனம் மாற்று வழிகளைத் தேடியது.

சீன, வியற்நாமிய, பிலிப்பினிய கம்யூனிஸ்றுக்கள் உட்பட்ட மாக்ஸிய லெனினியர்கள் யாவரும் எல்லாக் காலத்திலும் அமைதியான முறையில் நியாயமான தீர்வுகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் பெற ஆயத்தமாகவே இருந்துள்ளனர். வீணான உயிரிழப்புக்களைத்
தவிர்ப்பதில் மிக அக்கறையுடன் இருந்து வந்துள்ளனர். போராட்டம் என்பதை அவர்கள் பல வேறு தளங்களிலும் நிகழ்த்துவதற்கு ஆயத்தமாயிருந்துள்ளனர். அமைதியாக வென்றெடுப்பதை எதிரி குழப்புவான் என்று அறிந்து எச்சரிக்கையுடன் செயற்படுவதும் குழப்புகிற சூழ்நிலையில் தேவைக்கேற்ப ஆயுதம் ஏந்தியோ ஏந்தாமலோ போரிடுவதும் தான் மாக்ஸிய லெனினிய போராட்ட அணுகுமுறை.

க்யானேந்திராவை எதிர்க்கத் திராணியில்லாது, 1-2-2005க்குப் பின்பும் மன்னருடன் சமரசம் செய்தவை தான் நேபாள பாராளுமன்றக் கட்சிகள். இதில் நேபாள ஐக்கிய மா. லெ கம்யூனிஸ்ற் கட்சியும் குற்றவாளியே. இப்படிப்பட்ட கட்சிகளால் எதுவுமே இயலாத நிலையில் மாஓவாதிகளது போராட்டம் நேபாள அரசாங்கத்தை விரும்பிய போது செயலற்றதாக்கக் கூடியதாக வலிமை பெற்று வந்தது. நம்பிக்கைத் துரோகியான க்யானேந்திராவை எதிர்த்து முறியடிக்கும் வலிமை பாராளுமன்றக் கட்சிகட்கு இருக்கவில்லை. ஏழுகட்சிகள் ஒரு கூட்டணி அமைத்துப் போராடினாலும் மன்னராட்சியை அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. 2005 நவெம்பர் மாதம் மாஓவாதிகளுடன் ஒரு உடன்படிக்கை செய்த பின்னரே அவர்களால் மன்னருக்கு எதிராகத் தைரியமாகப் போராட முடிந்தது.

இந்திய ஆளும் வர்க்கத்தில் ஒரு பகுதியினர் ஏழு கட்சிக்கூட்டணிக்கும் மாஓவாதிகட்குமிடையிலான உடன்படிக்கைக்கு ஒத்துழைத்தனர். அதன் மூலம் மாஓவாதிகளைச் 'சனநாயக நீரோட்டத்திற்கு" கொண்டுவரலாம் என்பதும் பாராளுமன்ற அரச அதிகாரத்தில் அவர்கள் பங்காளிகளான பின்பு அவர்களை வளைத்துப் போடலாம் என்பதும் ஒரு பகுதியினரது கணிப்பு. இன்னொரு பகுதியினர் மாஓவாதிகளைப் பாவித்து பாராளுமன்ற ஆட்சியை நிறுவிய பின்பு மாஓவாதிகளை ஓரங்கட்டலாம் என்பதாகும். அதைவிட ஏழுகட்சிக் கூட்டணி மாஓவாதிகளுடன் ஒத்துழைப்பதை இந்திய அரசாங்கம் விரும்பவில்லை. அந்த ஒத்துழைப்பை முறியடிக்கத் தமது கையாளான கொய்ராலாவைப் பாவித்தார்கள். எதிர்பார்த்ததை விட வேகமாகவே நேபாள அரசர் பின்வாங்க நேரிட்டது. அந்த நிலையில் அவர்கள் அடுத்த ஆண்டு தேர்தல்களை நடத்துவது, உடனேயே தேர்தல் என்று பேரம்பேசி எதுவும் எடுபடாமல் பழைய பாராளுமன்றத்தைக் கூட்டுவது என்று சொன்னவுடனேயே அதை ஏற்குமாறு கொய்ராலாவையும் ஏழுகட்சிக் கூட்டணியையும் இந்தியா வற்புறுத்தியது. அவர்கள் அதற்கு உடன்பட்டனர். அதையே இறுதித் தீர்வாக்கி, மன்னராட்சிக்குக் கீழ்ப்பட்ட பாராளுமன்ற சனநாயகத்தை நிறுவுவதற்கு இந்தியா சொன்னபடி நடக்க கொய்ராலா ஆயத்தமானார். இதற்கு எதிராக மாஓவாதிகள் எச்சரித்துக் கடுங் கண்டனம் தெரிவித்தனர்.

மாஓவாதிகள் 2005 யூன் மாதத் தொடக்கத்தில் இரண்டு லட்சம் மக்களை நேபாளத்தின் தலை நகரத்தில் அணிதிரட்டி ஒரு மாபெருங் ஆர்ப்பாட்டக் கூட்டத்தை நடாத்தினர். தமது
மாபெரும் மக்கள் பொதுக்கூட்டத்தின் மூலம் முடியாட்சியைப் படியிறங்கச் செய்தது யாருடைய வலிமை என்பதை மாஓவாதிகள் உலகிற்குத் தெளிவாக்கியுள்ளனர்.

புதிய அரசியல் யாப்பை வரையவும் மக்கள் தீர்ப்புக்கமைய ஒரு புதிய ஆட்சி முறையையும் பல கட்சிச் சனநாயகத்தையும் உருவாக்குவதற்கான அரசியல்யாப்பு அவை ஒன்றைத் தெரிவுசெய்து உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் வற்புறுத்தினர். அதை ஏற்பதற்குத் தயங்குகிறவர்கள் மக்களை ஏமாற்றத் தயங்கமாட்டார்கள் என்று அறிந்த மாஓவாதிகள் 2005 யூன் மாதத் தொடக்கத்தில் இரண்டு லட்சம் மக்களை நேபாளத்தின் தலை நகரத்தில் அணிதிரட்டி ஒரு மாபெருங் ஆர்ப்பாட்டக் கூட்டத்தை நடாத்தினர். மன்னருக்கெதிரான போராட்டத்தின் எக் காலகட்டத்திலும் திரண்டதை விடப் பல மடங்கான மாபெரும் மக்கள் திரட்சியின் பின்பு ஏழு கட்சிகள் கூட்டணியினர் மாஓவாதிகளுடன் பேசி ஒரு புதிய அரசியல் யாப்புக்கான நடவடிக்கைகள் பற்றி உடன்பாடு கண்டுள்ளனர். மாஓவாதிகள் தமது மாபெரும் மக்கள் பொதுக்கூட்டத்தின் மூலம் முடியாட்சியைப் படியிறங்கச் செய்தது யாருடைய வலிமை என்பதை உலகிற்குத் தெளிவாக்கியுள்ளனர்.

இப்போது மாஓவாதிகளை மெச்சிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிற முயற்சியில் பலர் இறங்கியுள்ளனர். மாஓவாதிகள் என்ன அடிப்படைகளின் கீழ் பாராளுமன்ற முறையை ஏற்க முன்வந்தனர் என்றோ அவர்கள் உருவாக்க முயலுகிற பாராளுமன்ற முறை எப்படியிருக்கும் என்றோ இதுவரை சாதித்த சமூக விடுதலைகளின் எதிர்காலம் என்ன என்றோ இவர்களுக்கு அக்கறையில்லை. ஆயுதப் போராட்டப் பாதையை மறுத்தால் அதுவே போதுமானது.

இதில் இன்னொரு விடயமும் முக்கியமானது. மாஓவாதிகள் வெறுமனே ஆயுதப் போராட்டம் மட்டும் நடத்தவில்லை. அவர்கள் காணிச் சீர்திருத்தம் பெண்ணுரிமை, சாதிய ஒழிப்பு, இன சமத்துவம் போன்ற பல வேறு நடவடிக்கைகளையும் மக்களின் கூட்டு முற்சியால் ஒரு நெடுஞ்சாலை உட்பட்ட நிர்மாண வேலைகளையும் முன்னெடுத்துள்ளனர். இவை பற்றிப் பேசாமல் விடுவதன் மூலம் மாஓவாதிகளது செல்வாக்கு அவர்களது கைகளிலிருக்கிற துப்பாக்கியிலேயே தங்கியுள்ளது என்ற பொய்யான பிரசாரம் வலுப்பெறுகிறது.

சீன, வியற்நாமிய, பிலிப்பினிய கம்யூனிஸ்றுக்கள் உட்பட்ட மாக்ஸிய லெனினியர்கள் யாவரும் எல்லாக் காலத்திலும் அமைதியான முறையில் நியாயமான தீர்வுகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் பெற ஆயத்தமாகவே இருந்துள்ளனர். வீணான உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதில் மிக அக்கறையுடன் இருந்து வந்துள்ளனர். போராட்டம் என்பதை அவர்கள் பல வேறு தளங்களிலும் நிகழ்த்துவதற்கு ஆயத்தமாயிருந்துள்ளனர். அமைதியாக வென்றெடுப்பதை அமைதியாக வென்றெடுப்பதும் அதை எதிரி குழப்புவான் என்று அறிந்து எச்சரிக்கையுடன் செயற்படுவதும் குழப்புகிற சூழ்நிலையில் தேவைக்கேற்ப ஆயுதம் ஏந்தியோ ஏந்தாமலோ போரிடுவதும் தான் மாக்ஸிய லெனினிய போராட்ட அணுகுமுறை.
மாஓவாதிகள் வெறுமனே ஆயுதப் போராட்டம் மட்டும் நடத்தவில்லை. அவர்கள் காணிச் சீர்திருத்தம் பெண்ணுரிமை, சாதிய ஒழிப்பு, இன சமத்துவம் போன்ற பல வேறு நடவடிக்கைகளையும் மக்களின் கூட்டு முற்சியால் ஒரு நெடுஞ்சாலை உட்பட்ட நிர்மாண வேலைகளையும் முன்னெடுத்துள்ளனர். இவை பற்றிப் பேசாமல் விடுவதன் மூலம் மாஓவாதிகளது செல்வாக்கு அவர்களது கைகளிலிருக்கிற துப்பாக்கியிலேயே தங்கியுள்ளது என்ற பொய்யான பிரசாரம் வலுப்பெறுகிறது.
மாஓவாதிகளின் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லுகிற திரிபுவாதிகள் அவர்கள் எந்தச் சமூக நீதிக்காக ஆயுதம் ஏந்தினார்களோ அந்தச் சமூக நீதியை மக்களுக்குக் கிடைக்கச் செய்கிற சூழ்நிலை உண்டு என்று சொல்வார்களா? அதற்கான உத்தரவாதம் அவர்களிடம் உண்டா? திரிபுவாதிகள் பெரிதும் அஞ்சுவது மாஓவாதிகளது ஆயுதப் போராட்டத்துக்கல்ல. அவர்களது போராட்ட வெற்றிகள் மக்களை ஒரு மாபெரும் போராட்டச் சக்தியாக மாற்றிவிடும் என்பதையிட்டே அவர்கள் அஞ்சுகிறார்கள்.

2008 மார்ச் மாதம் 10ம் திகதி நேபாளத்தில் நடந்த பொதுத் தேர்தல் பாராளுமன்றத்திற்கான ஒன்று அல்ல. அரசியல் அமைப்பு ஒன்றினை வரைவதற்கான அரசியல் நிர்ணய சபையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகும். இவ்வாறு ஒரு தேர்தல் இடம் பெறுவதை நேபாளத்தின் மன்னராட்சி ஆதரவாளர்களும் நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ பிற்போக்கு சக்திகளும் விரும்பவில்லை. அவ்வாறே இந்திய அமெரிக்க மேலாதிக்க சக்திகளும் தேர்தலை ஒத்திப் போடவே முயன்றன. ஏற்கனவே இரு தடவைகள் அவ்வாறு பின் போடப் பட்டது. ஆனால் மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியினதும் ஏனைய ஜனநாயக சக்திகளதும் வெகுஜனப் போராட்ட வற்புறுத்தலின் விளைவாகவே தேர்தல் இடம் பெற்றது.

இத் தேர்தலில் மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சி தனிப் பலமுடைய கட்சியாக வெற்றி பெற்றிருக்கிறது. அது ஏனைய மாக்சிச, ஜனநாயக, தேசிய இனக் கட்சிகளுடன் இணைந்து அரசியல் நிர்ணய சபையின் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் இரண்டரை நூற்றாண்டு கால மன்னராட்சிக்கு முடிவு கட்டி விட வாய்ப்பு உருவாகி உள்ளது. மக்கள் ஜனநாயகம் தோற்றுவிக்கப்பட்டுப் புதிய ஜனநாயகத்தின் ஊடாக சோ~லிசத்தை நோக்கி வீறு நடைபோடக் கூடிய ஆரம்ப வெற்றி இத் தேர்தலில் மூலம் கிடைத்திருக்கிறது.

நேபாள மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி குறுக்கு வழிகளில் பெறப்பட்ட ஒன்று அல்ல. பன்னிரண்டு ஆண்டுகளாக அக் கட்சி திட்டவட்டமான தொலை நோக்குத் தெளிவுடன் கூடிய கொள்கைத் திட்டத்தை முன் வைத்து நடாத்தி வந்த மக்கள் யுத்தப் பாதையிலான ஆயுதப் போராட்டத்தின் பின்பாகப் பெறப்பட்ட தேர்தல் வெற்றியாகும். அங்கு ஆயுதப் போராட்டம் என்பது வெறும் கண்மூடித்தனமான வழிகளில் முன்னெடுக்கப் படவில்லை. வர்க்கப் போராட்டப் பாதையில் வழிநடந்து விவசாயிகள், தொழிலாளர்கள், நிலமற்றோர், தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர், ஒடுக்கப் படும் தேசிய இனத்தவர், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், புத்திஜீவிகள், மற்றும் தேசப் பற்று மிக்கோர் எனப் பலதரப்பட்ட மக்களையும் கொள்கை வேலைத்திட்ட அடிப்படையில் அணி திரட்டிய போராட்டமாகவே முன்னெடுக்கப் பட்டது. கட்சியின் உறுதியான தலைமைத்துவத்தின் கீழ் வெகுஜன அமைப்புகள் மக்கள் மத்தியில் அர்ப்பணிப்பு மிக்க வேலை முறைகளை முன்னெடுத்தன. அதே வேளை மாஓசேதுங் சிந்தனை அடிப்படையில் மக்கள் படை தோற்றுவிக்கப் பட்டு மக்கள் யுத்தத்தின் பன்முகப் போர்த் தந்திரங்களும் பயன்படுத்தப் பட்டன. கிராமப்புறத் தளப் பிரதேசங்கள் தோற்றுவிக்கப் பட்டன. கெரில்லா யுத்த வழி முறைகள் பின்பற்றப்பட்டன.

நிலப் பிரபுத்துவத்தின் கீழ் ஒடுக்கப்பட்டிருந்த விவசாயிகள் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்தனர். ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களும் பெண்களும் இளந் தலைமுறையினரும் போராட்டக்களத்தில் முன்னின்றனர். ஒரு முழுமையான விடுதலைப் போராட்டமாக விருத்தி பெற்றுக் கொண்டமையைப் பொறுக்க முடியாத அமெரிக்கா, நேபாள மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியை தனது பயங்கரவாதப் பட்டியலில் பதிவு செய்து கொண்டது.

இத்தகைய நேபாள மக்களின் போராட்டத்தால் பல பிரதேசங்கள் கட்சியினதும் படைகளினதும் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அவ்வாறு அமைந்த பிரதேசங்களில் நிலச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு விவசாயிகளுக்கும் நிலமற்றோருக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. விடுதலைப் பிரதேசங்களின் அபிவிருத்தி குறிப்பிட்டளவு ஏற்படுத்தப்பட்டதுடன் கல்வி சுகாதாரம் உட்பட சமூக பண்பாட்டு அம்சங்கள் திட்டமிட்ட புதிய வழிகளில் மேற்கொள்ளப் பட்டன. குறிப்பாக சாதிய ஏற்றத் தாழ்வுகள் நிராகரிக்கப்பட்டுச் சமத்துவ நிலை வலியுறுத்தப்பட்டது. தேசிய இனங்களின் தனித்துவங்கள் பேணப்பட்டன.

மேலும் பெண்கள் மீதான அடக்கு முறைகள் பல நிலைகளிலும் ஒழிக்கப் படுவதற்கான முன் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. பெண் விடுதலைக்கான ஆரம்பச் செயற்பாடுகள் திட்டமிட்டுச் செயல் வடிவம் பெற்றன. இவை யாவும் சுமார் பத்தாண்டுக் கால விடுதலைப் போராட்டச் சூழலில் மேற்கொள்ளப்பட்டவையாகும். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான விடுதலைப் போராட்டத்தில் பின் பற்ற வேண்டிய வழிமுறைகள் யாவும் நேபாளத்தின் விசேட நிலைமைகளுக்கு ஏற்றவாறு முன்னெடுக்கப்பட்டன. மன்னராட்சியை வீழ்த்தி ஒழிப்பது என்பது குறிக்கோளாக்கப்பட்டு அதற்கான ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட அதே வேளை நிலப் பிரபுத்துவத்தின் சகல பழைமைவாதப் பிற்போக்குக் கருத்தியல்களும் சிந்தனை செயல் முறைகளும் மக்களுக்கு எடுத்து விளக்கி நிராகரிக்க வைக்கப்பட்டன. ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி பயத்தின் காரணமாகக் காரியங்கள் முன்னெடுக்கப்படுவது தவிர்க்கப்பட்டு அறிவியல் பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் மக்கள் அறிவூட்டப்பட்னர். இதனை வெகுஜன அரசியல் மயப்படுத்தல் மூலமே சாத்தியமாக்கினர். ஒரு நிலவுடைமை மன்னராட்சியில் இந்து ராச்சியம் என்ற பெயரில் நிலவுடைமைக் காலக் கருத்தியல் சிந்தனை இறுக்கத்தின் கீழ் நேபாளக் கம்யூனிஸ்ட்டுக்களின் வேலை முறையானது மக்களை வென்றெடுக்கத்தக்க வகையில் கடுமையான வேலை முறைகளினால் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அவர்களது வேலை முறை தென்னாசியச் சூழலில் உள்ள நாடுகளின் போராட்ட சக்திகளால் படிக்கப்பட வேண்டியதாகும்.
ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி பயத்தின் காரணமாகக் காரியங்கள் முன்னெடுக்கப்படுவது தவிர்க்கப்பட்டு அறிவியல் பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் மக்கள் அறிவூட்டப்பட்னர். இதனை வெகுஜன அரசியல் மயப்படுத்தல் மூலமே சாத்தியமாக்கினர். ஒரு நிலவுடைமை மன்னராட்சியில் இந்து ராச்சியம் என்ற பெயரில் நிலவுடைமைக் காலக்கருத்தியல் சிந்தனை இறுக்கத்தின் கீழ் நேபாளக் கம்யூனிஸ்ட்டுக்களின் வேலை முறையானது மக்களை வென்றெடுக்கத்தக்க வகையில் கடுமையான வேலை முறைகளினால் அமைந்திருந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.

அதே வேளை மன்னராட்சியையும் நேபாள முதலாளித்துவ பிற்போக்கு சக்திகளையும் பாதுகாத்து நிலை நிறுத்த இந்திய அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் சதா முயன்று வந்துள்ளன. அமெரிக்காவின் 'சி.ஐ.ஏ." இந்தியாவின் 'றோ" போன்ற உளவு அமைப்புகள் நேபாளத்தில் தமது கைவரிசைகளைக் காட்டியே வருகின்றன. அவற்றை எல்லாம் முறியடிக்கும் வகையில் கம்யூனிஸ்ட்டுக்களின் தலைமையிலான வெகுஜன அரசியல் மார்க்கம் உறுதியானதாக இருந்து வருகின்றது.

இவை அனைத்தினதும் ஒட்டுமொத்த வெற்றியைத் தான் அண்மைய தேர்தல் வெற்றி எடுத்துக் காட்டுகிறது. அமெரிக்க மேற்குலகு சாராது இந்தியாவின் ஆதரவு இன்றி சீனாவின் அரவணைப்புப் பெறாது முற்றிலும் நேபாள மக்களின் மீது நம்பிக்கை வைத்தே அங்கு விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப் பட்டது. சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசம் வீழ்ச்சி கண்ட சூழலில், சீனாவில் சோ~லிசப் பாதையில் விலகல் ஏற்பட்ட நிலையில், மாக்சிசமும் சோ~லிசமும் மரித்துவிட்டதாக ஊடகங்கள் ஊளையிட்டு வந்த சூழலிலேயே இமயமலை உச்சியில் செங்கொடி பட்டொளி வீசிப் பறக்க விடப் பட்டுள்ளது. தென்னாசியக் கம்யூனிஸ்டுக்களும் புரட்சிகர மக்களும் விடுதலைக்காக முயன்று வரும் மக்களும் நேபாளத்தின் செங்கொடிகளால் உற்சாகமும் உறுதியும் பெற்று நிற்கின்றனர். பல ஆயிரம் கம்யூனிஸ்ட்டுக்களாலும் போராடிய மக்களாலும் அர்ப்பணிக்கப்பட்ட உயிர்த் தியாகத்தால் அங்கு செங்கொடிகள் உயர்ந்து நிற்கின்றன. நேபாளத்தின் விடுதலைப் போராட்டம் சமகால விடுதலைப் போராட்டங்களுக்கு முன்னுதாரணம் காட்டி நிற்கின்றது. இருபத்தியோராம் நூற்றாண்டிற்கான புதிய ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான போராட்டப் பாதையில் நேபாளத்திலிருந்து படிக்க நிறையவே உண்டு.

இருப்பினும் இதுவரையான நேபாள மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிகரமான புரட்சிகரப் பாதையைத் திசை திருப்பிக் கொள்ள உள் நாட்டிலும் உலக அளவிலும் பல்வேறு பிற்போக்கு சக்திகள் கடும் முயற்சிகள் மேற்கொள்வார்கள். அதே வேளை பல்வேறு சவால்கள் சோதனைகள் தடைகள் என்பனவற்றை எதிர் கொண்டு சரியான புரட்சிகர நிலைப்பாட்டில் நேபாள மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சி வீறு நடைபோட வேண்டும் என்பதே உலக மக்கள் அனைவரினதும் பெரு விருப்பாகும்.

நேபாள மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியானது நேபாளத்தின் விசேட நிலைமைகளுக்கு ஏற்பவும் மாக்சிச லெனினிசக் கோட்பாட்டு நிலையிலும் கொள்கைகளை முன்னெடுக்கும் வழிமுறைகளிலும் பயணிக்க வேண்டிய இமாலயப் பொறுப்பைச் சுமந்து நிற்கிறது. ஏனெனில் வீழ்த்தப்படும் நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சக்திகள் அமெரிக்க இந்திய ஆளும் வர்க்க சக்திகளுடன் இணைந்து சும்மா இருக்கப் போவதில்லை. இந்திய மக்கள் உள்ளிட்ட தென்னாசிய மக்களும் உலக மக்களும் நேபாளத்தின் வென்றெடுக்கப்பட்டு வரும் மக்கள் சக்திக்கு உறுதுணையாக இருப்பது அவசியமாகிறது.

இந்த இடத்தில் நேபாள மாஓவாதி மையக் குழு உறுப்பினர் தோழர் கஜுரேல் சொல்லிய ஒரு விடயத்தை இங்கு நினைவூட்டல் பொருத்தம்.

"எங்களுடைய மக்கள் விடுதலை இராணுவம் 20,000 வீரர்களைக் கொண்டிருக்கிற வலிமையான இராணுவம். ஐ.நா. படைகளை விட இரு மடங்கு பெரிய இராணுவம். இதைக் கண்டு அமெரிக்க ஏகாதிபத்தியமே அஞ்சக் கூடிய நிலை இங்கிருக்கிறது. அந்த இராணுவம் முகாம்களிலே அடைக்கப் பட்டிருக்கிறது. எங்களுடைய ஆயுதங்கள் பெட்டகங்களிலே வைத்து பூட்டப் பட்டிருக்கின்றன. சில புரட்சியாளர்கள் நாங்கள் எங்களுடைய ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டோம். ஆயுதங்களைக் கையளித்து விட்டோம் என்று கருதிக் கொண்டு குழப்பம் அடைந்திருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.

பத்தாண்டுக் காலம் நடந்து வந்திருக்கிற மக்கள் போர் அங்கே இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலைத் தோற்றுவித்து இருக்கிறது. அந்த ஆயுதப் போராட்டம் தோற்றுவித்த அரசியல் சூழல் எத்தகையது என்றால் ஆயுதமேந்தி நாங்கள் அடையக் கூடிய நோக்கத்தை அமைதியான முறையிலே அடைகிற வாய்ப்பை அது ஏற்படுத்தி இக்கிறது. எனவே தான் நாங்கள் ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம். தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோமே தவிர ஆயுதப் போராட்டத்தை ஒரேயடியாக கைவிட்டு விடவில்லை என்பதைத் தெளிவாக்க விரும்புகிறேன்.

எங்களுடைய நண்பர்களும் தோழர்களும் கவலைப் படுகிறார்கள். எங்களுடைய மக்கள் விடுதலைப் படை பாசறைகளுக்குள்ளே அடைபட்டு இருக்கிறனவே ஆயுதங்கள் பெட்டகங்களிலே பூட்டி வைக்கப்பட்டு இருக்கின்றனவே என்று அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்கிறேன். கவலைப்பட வேண்டாம். பெட்டகங்களைப் பூட்டி அதனுடைய சாவி எங்களுடைய படைத் தளபதியின் கையிலேதான் இருக்கிறது. எப்போது தேவை என்றாலும் திறந்து எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரியப்படுத்த விரும்புகிறேன்.

மறு தரப்பிலேயே வேறு சிலர் இருக்கிறார்கள். ஊதாரணமாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் மாஓவாதிகள் மாறிவிட வில்லை என்று சொல்கிறது. மாஓவாதிகள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று பிற்போக்காளர்கள் சொல்கிறார்கள். மாஓவாதிகள் மாறாவில்லை. அவர்களை மாற்ற வேண்டும் என்று இந்திய அரசும் அப்படித்தான் சொல்கிறது. நேபாளத்திலே இருக்கிற பிற்போக்கு அமைப்புகள் சொல்கின்றன. நேபாள காங்கிரஸ் நேபாள (ஐக்கிய மார்க்சிய-லெனினிய) கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகளெல்லாம் சொல்கிறார்கள். மாஓவாதிகள் மாறவில்லை என்று நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நாங்கள் வந்திருப்பது எங்களை மாற்றிக் கொள்வதற்காக அல்ல. உங்கள் மாற்றுவதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம்.

எங்கெல்லாம் தேசிய ஒடுக்குமுறை நிலவினாலும் அதை எதிர்த்து விடுதலைக்காகப் போராடுகிற உரிமை மக்களுக்கு உண்டு. நேபாளத்திலேயே சின்னஞ சிறு தேசிய இனங்கள் சில இருக்கின்றன. அந்த தேசிய இனங்கள் தங்கள் விடுதலைக்காகப் போராடுகின்றன. ஏனென்றால் அவை தேசிய ஒடுக்கு முறைக்கு உள்ளாகியிருக்கின்றன. அந்த தேசிய இனங்களின் போராட்டத்தை எங்கள் கட்சி தான் தலைமை ஏற்று நடத்துகிறது. தேசிய விடுதலைக்காக நாங்கள் போராடுகிறோம். உலகெங்கும் தேசிய விடுதலை இயக்கங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்."

நேபாள மக்கள் போராட்டம் நமக்கு சொல்லும் பாடங்கள் பல. வெறுமனே ராணுவப் பதிலடிகள் மூலம் தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாக்க இயலாது. இது இன்று வரையிலான போராட்ட அனுபவம். மக்களின் பாதுகாப்பையும் நலன்களையும் முதன்மைப்படுத்துகிற விதமாகக் காரியங்கள் மேற்கொள்ளப்பட்ட காலங்கள் இருந்துள்ளன. ஆனாலும் அவை மக்களை முதன்மைப்படுத்துகிற முறையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூற இயலாது. தமிழ்; மக்களுக்குத் துரோகமாக நடக்கிறவர்கள் எனக் கருதப்படும் எல்லாரையும் அழித்தும் விடுதலையை வெல்ல இயலாது. மனிதர்களது தவறுகளை அவர்களது சூழ்நிலைகளில் வைத்துப் பார்ப்பதும் அவர்களை விடுதலைப் போராட்டத்தின் தரப்பிற்கு வென்றெடுப்பதும் ஒரு விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான தேவை. இவ் விடயத்தில் தமிழ் மக்களின் நலனும் பாதுகாப்பும் பற்றி அக்கறையுள்ள அனைவருமே கவனங் காட்டவேண்டும். தவறினாற் போரை யார் வென்றாலும் வெல்லாவிட்டாலும் மிக அதிகம் இழப்போர் தமிழ் மக்களாகவே இருப்பர்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்று தவிர்க்க இயலாத ஒரு வரலாற்றுத் தேவை. ஆனால் அது ஆயுதம் தாங்கிய போர் என்ற ஒற்றைப் பரிமாணத்திலிருந்து விடுபட வேண்டும். அதைப் பரந்துபட்ட மக்கள் போராட்டங்களாகவும் மக்கள் யுத்தமாகவும் வெகுசன அரசியல் இயக்கமாகவும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் தேடப்பட வேண்டும். அதன் மூலமே தமிழ்மக்களிடையே அதிக பட்ச போராட்ட ஒற்றுமையையும் பங்குபற்றலையும் பெற இயலும்.

இலங்கையின் பொருளாதாரம் பூரணமாகவே சீரழிந்தாலும் பரவாயில்லை, இலங்கை முழுவதும் அந்நியரது ஆதிக்கத்துக்குட்பட்டுப் போனாலும் பரவாயில்லை, ஒரு தேசிய இனமாகத் தமிழ் மக்களின் இருப்பையும் அவர்களது சமத்துவத்தையும் அடிப்படை உரிமைகளையும் ஏற்க மாட்டோம் என்ற நோக்குடனேயே இன்று ஆட்சியிலுள்ள பேரினவாதிகள் செயற்படுகின்றனர். எதிர்க் கட்சிப் பேரினவாதிகளிற் சிலருக்கு அது போதாததாயுள்ளது. வேறு சிலருக்கு அது பற்றிய அக்கறை இல்லை. இதை விடத் திறமையாகப் போரை நடத்தக் கூடியவர்களையே யூ.என்.பி. தேடுகிறது. பேரினவாதப் பாராளுமன்றக் கட்சிகளையும் தலைவர்களையும் பாராளுமன்ற அரசியலையும் நம்பி ஏமாற இனியும் இயலாது.

ஏகாதிபத்திய 'சர்வதேச சமூகத்தின்" ஆசிகளுடன் பேரினவாதம் தமிழ் மக்களை ஒடுக்குகிற காரியத்தில் முனைப்பாக இயங்குகிறது. எனவே அதில் எப் பகுதியினதும் நல்லெண்ணத்தை நம்பித் தமிழ் மக்கள் ஏமாற இயலாது. ஆனால் தனது அடக்குமுறையைத் தமிழ் மக்களுடன் நிறுத்திக் கொள்ள இயலாமல் பேரினவாத அதிகார பீடம் தடுமாறுகிறது. சிங்கள மக்கள் எதிர் நோக்குகிற பொருளாதாரப் பிரச்சனைகள் புதிய எதிர்ப்புச் சக்திகளைக் கிளறிவிடுகிற அபாயம் பற்றி அது அறியும். எனவே சிங்களப் புலிகள், தொழிற்சங்கப் புலிகள், ஊடகப் புலிகள் என்று முத்திரை குத்தி அந்த எதிர்ப்பின் விதைகளை முளை விடாமலே சாகடிக்க முயல்கிறது. இதைத் தமிழ்த் தலைமைகள் என்றுமே உணருமா என்பது பற்றி மிகுந்த ஐயத்துக்கு இடமுண்டு.

எனவே தான், மூன்றாவது சக்தி ஒன்று எழுச்சி பெறுவதற்கான தேவையை மட்டுமில்லாமல் அதற்கான வாய்ப்பையுங் கொண்டதாக இன்றைய காலகட்டம் அமைந்துள்ளது. இடதுசாரித் தோழர்களும், சமூக அக்கறையும் துணிவுமுள்ள பத்திரிகையாளர்களும் தொழிற்சங்கவாதிகளும் கடத்தப்படுவது பொது எதிரியின் வலிமையின் அடையாளமல்ல. அவை எதிரியின் இயலாமையின் வெளிப்பாடுகள். அதைக் கண்டு நாட்டின் சனநாயக முற்போக்கு இடதுசாரிகள் தயங்கி நின்றால் நாடு ஃபாஸிஸத்தை நோக்கித் தள்ளப்படும். மாறாக அவற்றை எதிர்த்து நிற்கப் புதிய தந்திரோபாயங்களையும் புதிய வகையிலான வெகுசனப் போராட்டங்களையும் வகுத்து முன்னேற முயல்வார்களாயின் பொது எதிரியின் பலவீனங்கள் வேகமாகவே அம்பலமாகி நாட்டின் மக்கள் புது நம்பிக்கை பெறுவர்.

இது சோதனை மிகுந்த காலமாகத் தோன்றலாம். ஆனால் இதுவே எதிர்காலத்தின் வெற்றிகட்கான உறுதியான அத்திவாரங்களை இடுவதற்கான காலமுமாகும். நேபாள மக்கள் போராட்டம் சொல்லும் முக்கியமான செய்தியும் அதுதான்.