Friday, April 4, 2008

தகவல் தொழிநுட்பத்துறை, மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுவதற்கு முதலாளித்துவத்திற்கு வாய்த்த புதிய தளமோ?அண்மையில் மின்னஞ்சல் வழியே பரிமாறப்பட்ட தகவலொன்று இலங்கையிலுள்ள தகவல் தொழிநுட்பத்துறை பணியாளர்களிடையே, பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. அதாவது, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அல்லது அதில் சேவையாற்றும் முக்கிய பிரமுகரொருவரின் ஊடக அறிக்கை என்று எண்ணத்தக்க வகையிலே தயாரிக்கப்பட்டிருந்த அந்த அறிக்கை, இலங்கையில் உள்ள, ஆளெண்ணிக்கையில் முதலிடத்திலுள்ள, அமெரிக்காவை தளமாக கொண்டியங்குகின்ற ஒரு மென்பொருள் உற்பத்தி நிறுவனத்தின் பணிச்சூழலில் காணப்படுகின்ற குறைபாடுகளையும், அதிர்ச்சியூட்டக்கூடிய சம்பவங்களையும், பணியாளர்கள் மீது சுமத்தப்படுகின்ற அழுத்தங்களையும் மிக விரிவாக, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கைகளின் தரத்துக்கு ஈடாக ஆராய்ந்து வெளிப்படுத்தியிருப்பதாக அமைந்திருந்தது. அவ்வறிக்கையின் தலைப்பு Business Process Outsourcing - 'Other side of the white-collar' என்றவாறும் அதை வெளியிடுபவர் Andrew Miller - Human Rights Watch என்றும் இருந்தது.

அதை வாசிக்கும் ஒருவர் எடுத்த எடுப்பிலேயே அதை முற்றுமுழுதான உண்மை என்று நம்பிவிடுவதில் ஆச்சரியமொன்றுமில்லை தான். அந்தளவுக்கு, அது கனகச்சிதமாக, உயர்தர ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது.

அது சம்பந்தமாக, இணையத்தில் ஆழமாக தேடிப்பார்த்ததில், அவ்வறிக்கைக்கும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது போலவே தோன்றியது எனக்கு.

யாரோ சிலர், அந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் (கணிசமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது கொசுறுச் செய்தி) சேர்ந்தோ அல்லது தனித்தோ, இப்படியொரு அறிக்கையை தயாரித்து மின்னஞ்சல் வழி பரப்பியிருக்கவேண்டும்.

இந்த அதிர்ச்சியூட்டக்கூடிய அறிக்கை அந்நிறுவனத்துக்குள்ளும் பரிமாறப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்நிறுவனம், இவ்விடயம் சம்பந்தமாக உடனடியாக பதிலளிக்கவேண்டியேற்பட்டது. அப்பதிலையும் மின்னஞ்சல் வழி காணக்கிடைத்தது. வழமையான மறுப்பறிக்கை, அவர்கள் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை தொடர்புகொண்டு விசாரித்ததாகவும், அப்படி அவ்வமைப்பு அறிக்கையெதனையும் வெளியிடவில்லையென தெரிவித்ததாகவும், இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட சம்பவங்களையும், தகவல்களையும் கொண்ட ஒரு அறிக்கை எனவும், மேலதிக தகவல்கள் தேவைப்படின் அந்நிறுவனத்தின் முக்கியமானவர்கள் சிலரை நேரடியாக தொடர்புகொண்டு (தொடர்பிலக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன) உறுதிப்படுத்திக்கொள்ளலாம் எனவும் அம்மின்னஞ்சலில் இருந்தது.

அம்மின்னஞ்சலில் தரப்பட்ட தகவல்கள் எல்லாம் உண்மையாக இருந்தாலும் அநநிறுவனத்திடமிருந்து வரப்போவது மறுப்பறிக்கைதான் என்பதை யாவருமறிவர்.

அவ்வறிக்கையின் சாரம்சத்தை சொல்லப்போனால், அந்நிறுவனத்திலே மென்பொருள் பணியாளர்கள் நியாயமற்ற ஊதியத்தில், மிக மோசமாக நடத்தப்படுவதாகவும், அவர்கள் மீது அளவுக்கதிகமாக வேலைப்பளு சுமத்தப்படுவதாகவும், அதன்காரணமாக ஓரிரண்டு மரணங்கள் நிகழ்ந்ததாகவும், நியாயமற்ற முறைகளிலே புதிய பணியாளர்கள் உள்வாங்கப்படுவதாகவும், நியாயமற்ற முறையிலே பெருமளவானவர்கள் பணியிலிருந்து துரத்தப்படுவதாகவும், மொத்தத்தில் ஆசை காட்டி மோசம் செய்வதாகவும் சாவகாசமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆச்சரியமென்னவென்றால், யாரிடம் இதைப்பற்றி கதைத்தாலும் அவ்வறிக்கையில்லுள்ள விபரங்களை ஆமோதிப்பவர்களாகவே இருக்கின்றார்கள். அத்தோடு மட்டுமல்லாமல் அவற்றிற்கான ஆதாரங்களையும் முன்வைத்தார்கள். விசாரித்துப் பார்த்ததில் மரணச்சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன,மரணத்திற்கான காரணங்கள் வேறுபடக்கூடும். அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒருசில தெரிந்தவர்களின் புலம்பல்கள் கூட, இவ்வறிக்கைக்கு வலுச்சேர்ப்பனவாகவே தெரிந்தன.

மொத்தத்தில் அவ்வறிக்கை, ஒரு சிலரால் திட்டமிட்டு, மனித உரிமைகள் கண்காணிப்பகத்திலிருந்து வெளியிடப்படுவது மாதிரி தயாரிக்கப்பட்டிருந்தாலும், அவ்வறிக்கையிலுள்ள விடயங்கள் பெரும்பான்மைக்கும் உண்மையானவையாகவே இருப்பதாகவே பலரும் பேசிக்கொள்வதை காணக்கூடியதாயிருந்தது.

இனி தலைப்புக்கு வருவோம். மேற்குலக நாடுகளின் தகவல் தொழிநுடப நிறுவனங்களெல்லாம் இப்போது மூன்றாமுலக நாடுகளிலேயே பெருமளவுக்கும் தங்கியிருக்கின்றன. அதன் அர்த்தம், மூன்றாமுலக நாடுகள் இல்லாவிட்டால் அவர்கள் இயங்க முடியாது என்பதல்லை, மூன்றாமுலக நாடுகளின் உழைப்பை இத்துறையினிலே இலகுவாக அவர்களால் சுரண்டிக்கொள்ளமுடிவதாகும்.

முதலாளித்துவத்துக்கும், சுரண்டலுக்கும் உள்ள தொடர்பை சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. முதலாளித்துவத்தின் வெற்றி சுரண்டலிலேயே பெருமளவில்ல் தங்கியிருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

அவ்வகையில் முதாலளித்துவத்துவத்தின், சுரண்டலுக்கான நவீன ஊடகமாக, மூன்றாம் உலக நாடுகளிலே எல்லோராலும் அண்ணாந்து நோக்கப்படுகின்ற, இந்த தகவல் தொழிநுட்பத்துறை விளங்குகின்றது. பொதுவாக மேற்குலகிலே இத்துறையிலே ஒருபணியாளருக்கு வழங்கப்படுகின்ற ஊதியத்தின் ஐந்தில் ஒரு பகுதியையோ அதற்கும் குறைவான தொகையையோ ஊதியமாக வழங்குவதன் மூலம், ஆசிய நாடுகளில் இலகுவாக பணியாளர்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதால், அதிக இலாபம் பெறும் ஆசைகொண்டு, மேற்குலக நிறுவனங்கள் யாவும் இங்கே படையெடுத்து தளமமைத்துக்கொள்வதில் ஆச்சரியமொன்றும் இல்லை தான். அத்துடன் இங்கேயுள்ள பணியாளர்களை கொண்டு, தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவகையில், அதிகமான அடைவுகளை அடையமுடியும் என்பது அவர்களுக்கிருக்கும் கூடுதல் வசதி. அதாவது காலநேரம் பாராது எந்நேரமும் பணியாற்றக்கூடிய தன்மை ஆசிய நாட்டு பணியாளர்களில் காணப்படும், அந்நிறுவனங்கள் விரும்புகின்ற முக்கிய விடயமாகும்.

இந்நாடுகளிலுள்ள ஏனை துறைகளை சேர்ந்த பணியாளர்களுடன் ஒப்பிடும்போது, கவர்ச்சிகரமான ஊதியத்தை வழங்குதல் இப்பணிக்கு இலகுவாக, பணியாளர்களை அமர்த்திக்கொள்வதற்கு அம்மேற்குலக நிறுவனங்களால் பாவிக்கப்படும் முக்கிய உத்தியாகும், ஆயுதமாகும். வேலைக்கு அமர்த்திக்கொளும் தருணங்களில் வழங்கப்படும் கவர்ச்சிகரமான உத்தரவாதங்கள், எவ்வளவுக்கு பின்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது கேள்விக்குறி. எதிர்காலக் கனவுகளோடு பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் முடித்து வெளியேறும் இளைஞர்களைதான் இவர்களின் முக்கியமாக குறிவைக்கின்றார்கள். அவர்களை, ஏட்டிக்கு போட்டியாக எப்படியாவது வேலைக்கெடுத்துக்கொள்ள முனைவார்கள், எடுத்தபின்பு எப்படியாவது பாவித்துக்கொள்ளலாம் என்ற உள்நோக்கத்தோடு. இங்கே ஒரு சில கம்பனிகள் ஓரளவு நியாயத்தன்மையோடு நடந்துகொண்டாலும், பல கம்பனிகள் மேற்படி உத்திகளையே பயன்படுத்துகின்றன.

வாரத்தில் ஐந்து நாட்கள், ஒரு நாழுக்கு 8 மணித்தியாலங்கள் பணிநேரம் என்ற உரிமை இத்துறையிலுள்ள எல்லா பணியாளர்களுக்கும் இந்நிறுவனங்களால் வழங்கப்படுகின்றதா என்றால் அது விவாதத்துக்குரிய விடயம். சில நிறுவனங்களால், பணியாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாளொன்றுக்கு 8 மணித்தியாலங்கள் என்ற அளவுக்கு அதிகமாகவோ, அல்லது வாரமொன்றுக்கு 40 மணித்தியாலங்கள் என்ற அளவுக்கோ அதிகமாகவோ பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். இப்பணித்துறையின் முக்கியமான அம்சம், எப்போதும், ஒரு சேவைக்கோ, பொருளுக்கோ காலஎல்லை (deadline) நிர்ணயிக்கப்பட்டு பணியாளர்கள் பணியாற்றவைக்கப்படுவதாகும். சில நிறுவனங்கள், அதிக இலாபம் பெறும் நோக்கோடு, கடுமையான, நடைமுறை சாத்தியமற்ற, வாரத்துக்கு 40 மணித்தியாலங்கள் என்ற அளவை கடுமையாக மீறுகின்ற கால எல்லைகளை விதித்துக்கொள்வார்கள். இங்கே தான், பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. கடுமையான விதிக்கப்படும் காலஎல்லைகளுக்குள் பணிகளை முடித்துக்கொள்வதற்காக, தங்கள் கொள்ளளவுக்கும் அதிகமாக, அதிகமான மணித்தியாலங்கள், ஓய்வொழிச்சலின்றி வேலையாற்றவேண்டிய கட்டாய நிலைமை பணியாளர்களுக்கு அவர்களையறியாமலேயே ஏற்படுத்தப்படுகின்றது.

அத்துடன், இத்துறையில் எப்போதும், problem-solving எனப்படும், பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு மென்பொருள் தீர்வளிக்கும் பணியே பிரதானமானது. மென்பொருள் அபிவிருத்தித் துறையில் பணியாற்றும் ஒருவர், பணியில் இலகுவாக, அதிக சோர்வடைந்து போவதற்கும் இந்த மூளைக்கு அதிக வேலையளிக்கும் தன்மையே காரணம். இத்துறையில் பணியாற்றுபவர்கள் ஒரு நாளின் பிற்பகுதியில், அதிகம் சோர்வடைந்தவர்களாகவே காணப்படுவார்கள். பிரச்சினைகளோடு எப்போதும் பணியாற்றிக்கொள்வதே அதற்கு காரணம். மற்றும் இத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு உடல்ரீதியான அதிக பாதிப்புக்கள் ஏற்பட நிறையவே சந்தர்ப்பங்கள் உள்ளன.

கணினி அதிகநேரம் பணியாற்றுவதாயின், அதற்கான தளவாட, சூழல் ஒழுங்மைப்புக்களில் அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும். மேசையின் உயரம் எபடியிருக்கவேண்டும், இருக்கை, இருக்கையின் உயரம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும், கணினித்திரை எவ்வாறு வைக்கப்படவேண்டும், கணினிமுன் பணியாற்றும் ஒருவர், எவ்வாறு இருக்கையில் அமரவேண்டும், எவ்வாறு கணனியை பாவிக்கவேண்டும், சூழலின் ஒளியமைப்பு எவ்வாறிருக்கவேண்டும் என்பவை சம்பந்தமாக மருத்துவ ரீதியாக ஆராய்ந்து சொல்லியிருக்கின்றார்கள். இவை சம்பந்தமாக ஒரு ஆலோசகர்களை (Ergoimic Consultants) பணிக்கமர்த்தி, ஏனைய பணியாளர்களை மேற்பார்வை செய்வது மேற்குலகில், மென்பொருள் நிறுவனங்களின் வழமை. ஆனால் இங்கே எந்த ஒரு நிறுவனமாவது இது சம்பந்தமாக கவனம் செலுத்தியிருப்பதாக நான் அறியவில்லை. மேற்படி விடயங்களை கவனத்திலெடுக்காது ஒருவர் கணினி முன் அதிகநேரம் பணியாற்றுவாராயின், அவரின் உடல்நலத்துக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்பட இடமுண்டு. முதுகுவலி, கழுத்து வலி, RSI, CTS போன்ற உடல்நல பாதிப்புக்கள் இட்துறையில் பணியாற்றுபவர்களிடையே அதிகம் காணப்படுவதாக ஆராய்ச்சிகளின் முடிவுகளிலே கண்டறிந்திருக்கின்றார்கள். அத்துடன், மன அழுத்தம் (Stress) இத்துறையிலே காணப்படும் மிக முக்கிய பிரச்சினையாகும். இத்துறையிலுள்ளவைகளிடையே விவாகரத்துக்கள் அதிக அளவில் காணப்படுவதாக ஒரு ஆராய்ச்சியறிக்கை கூறுகின்றது. இத்துறையிலே பணியாற்றுபவர்கள் ஏனை, சமூக, குடும்ப விடயங்களில் ஈடுபாடு குறைந்தவர்களாக மாறுகின்றார்கள், மனவழுத்தம் மனமுறிவுகளுக்கும், மணமுறிவுகளுக்கும் இட்டுச்செல்கின்றது.

மொத்தத்திலே சவால்கள் மிக்க ஒரு துறையிலே பணியாற்றுகின்றவர்களின் நலன்கள், உரிமைகள் எந்தளவிற்கு பேணப்படுகின்றன என்பது கேள்விக்குரிய விடயமாகும். ஏனை தொழில்களிலே, தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களும் தக்கவைத்துக்கொள்ளப்படுகின்றன எவ்வாறென்றால், அங்கே தொழிற்சங்க நடவடிக்கைகள் இருக்கும். தொழிலாளர்கள் அநீதியாக நடத்தப்படுவது தவிர்க்கப்படும்.

ஆனால், தகவல் தொழிநுட்பத்துறையில் இங்கே தொழிற்சங்க நடவடிக்கை என்ற கதைக்கே இடமில்லை. இந்நிலை, திட்டமிட்டு இந்நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். அதாவது, இத்துறையில் பணியாற்றுபவர்களெல்லோரும், ஏதோ ஒருவகையில் பல்கலைகழக பட்டம் பெற்றவர்களாகவும், சமூகத்தில் கல்வியிலே உயர்ந்தவர்களாகவும் இருப்பதால், அவர்களுக்கு தாங்களும் ஒருவகையில் தொழிலாளர்களே (workers) என்ற சிந்தனை போக்கடிக்கப்படுகின்றது. Professionals என்ற வகைக்குள் அடக்கப்பட்டு உயர்வாக காட்டப்படுகின்றார்கள். இதன்மூலம், தொழிலாளர்கள் என்ற சிந்தனை நீக்கப்பட்டு, தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான தேவை தன்பாட்டிலேயே அகற்றபடுகின்றது, இத்துறையில்.

ஆனால், இந்நாட்டில், வைட்தியர்களுக்கென்று, வக்கீலகளுக்கென்று, ஒவ்வொரு தொழில் செய்பவர்களுக்கென்றும் தொழிற்சங்கங்கள் உள்ளன. அதன் மூலம் தங்கள் உரிமைகளையும் நலன்களையும் அவர்கள் பேணிக்கொள்கின்றார்கள். ஆனால் அதிசயமாக தகவல் தொழிநுட்ப தொழிலாளர்களுக்கு மட்டும் அவ்வாறொன்றொன்றில்லை.

சரி, மேற்கு நாடுகளிலே இத்துறையிலே பணியாற்றுகின்றவர்களின் நிலை எப்படியுள்ளது என்று பார்த்தால், அங்கு நிலைமை வேறு. ஆச்சரியமாக, அங்கே இத்துறையில் பணியாற்றுபவர்களுக்கென்று தொழிற்சங்கங்கள் (Unios) உள்ளன. அத்தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள், அதன்மூலம் தங்கள் நலன்களை பேணிக்கொள்கின்றார்கள் என்பது நான் விசாரித்தறிந்த உண்மை.

ஆகவே, திட்டமிட்டு அந்நிலைமை இங்கே தவிர்க்கப்பட்டிருக்கின்றதென்றால், இதை நவீன முறை சுரண்டலென்று சொல்லாமல், வேறு என்னவென்பது. காலா காலமாக எங்கள் நாடுகளின் உடலுளைப்பாளர்களை சுரண்டிய மேற்குலகமும், மேற்குலகத்தின் கம்பனிகளும், காலப்போக்கில், இப்போது தந்திரமாக மூளையுளைப்பாளர்களையும் சுரண்டிக்கொண்டேயிருக்கின்றார்கள். நாங்கள் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பது தெரியாமலேயே எங்கள் வளங்களும் உழைப்புக்களும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்நிறுவனங்கள், எப்போதும் உயர்மட்ட முடிவெடுத்தல்களையும் , உயர்மட்ட பணிகளையும் (High-Level decision Makings, High-Level Tasks) தங்கள் நாடுகளில் வைத்துக்கொண்டு, அடிமட்ட பணிகளையே (Low-Level Tasks) எங்கள் நாடுகளுக்கு அனுப்புவார்கள். அதாவது உடலுளைப்பு கூடிய பணிகள் இங்கும், தீர்மானமெடுத்தல் சம்பந்தமான பணிகளை தங்களோடும் வைத்துக்கொள்வார்கள்.

மேறபடி சுரண்டல் நிலைமைகள் சில மேற்குலக நிறுவனங்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றுக்கு உடந்தைகளாக இருப்பவர்கள் எம்மவர்கள் தான். எம்மவர்களே எம்மவர்களை சுரண்டும் நிலைமையும் காணப்படுகின்றது. எம்மவர்களால் நடாத்தப்படுகின்ற இத்துறை நிறுவனக்களில் கூட, மேற்படி மேற்குலக சிந்தனை காணப்படுவது இன்னும் மோசமான நிலைமை.
(அரசாங்கம்)

முடிவாக, இத்துறையிலே பணியாற்றுபவர்கள் மேற்படி விடயங்களை சிந்தித்து செயலாற்றவேண்டிய கடப்பாடுடையவர்களாகின்றார்கள். எத்தொழில் செய்பவராக இருந்தாலும், தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களும் பேணப்படவேண்டும். இவற்றிற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்கத் தவறுவோமாயின், எதிர்காலத்தில் நிலைமை இன்னும் சீரழிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மொத்தத்தில் இவ்வறிக்கை, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்படவில்லை என்பது உண்மைதான், என்றாலும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டிருக்கவேண்டிய அறிக்கைபோலத்தான் தெரிகின்றது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்காணிக்கவேண்டிய விடயமாக இவ்விடயம் காணப்படுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

பிற்குறிப்பு: இந்நிலைமையை சீர்செய்வதற்கு அரசாங்கம் எத்தகைய நடைமுறைகளை, ஒழுங்குமுறைகளை மேற்கொள்ளமுடியும் என்பது சம்பந்தமாக தகவல்கள் கொஞ்சம் திரட்டவேண்டியுள்ளதால், அது சம்பந்தமாக பின்பு எழுதுகின்றேன். மேலே சிவப்பில் அரசாங்கம் என்று குறிப்பிடப்பட்ட பகுதியில் அப்பந்தி வரும்.

1 பின்னூட்டங்கள்:

Some one said...

வாங்கோ மதுவர்மன் வாங்கோ
ஆரம்பமே அட்டகாசமாக இருக்கு

அடிக்கடி பூங்காவுக்கு வந்து சலசலப்பை ஏற்படுத்துங்கோ

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி