Monday, April 7, 2008

அற்புதமேதும் நிகழாதோ! - கவிதை




















மருதமடு கருணைமாதா
இடம்பெயர்க்கப் பட்டபின்பு
இருதய நாதருக்கு
இடதுகையும் ஒடிந்ததுவோ.

அன்னைமாதா பெயர்ந்ததனால்
அநாதையாக ஆகிப்போன
மன்னுலகின் மைந்தனுக்கும்
மார்பிலும்ஷெல் பாய்ந்ததுவோ!

அருளளித்தவர் கரத்திலொன்றை
அறுத்துவீழ்த்திய பாவிகள் யார்?
கருணைநாதர் நெஞ்சினில்கூட
காயம்படுத்திய வஞ்சகர் யார்?

மனிதரிடை சண்டைகளில்
மனிதர்கள் மட்டுமல்ல
கடவுளரும் காயம்பட்டு
காணாமல்போகும் காலமிது.

மனிதமிங்கே மாண்டுபோக
இனிதெம்வாழ்வு இருண்டுபோக
புனிதநிறை பதியின்வாசலிலும்
மனிதக்கொலைகள் மலிந்துபோயின.

பொன்னப்பல வாணேச்சரத்தில்
பொன்னம்பவாணர் முன்னிலையில்
என்னமாய் கொல்லப்பட்டார்
எங்கள் எம்பி மகேஸ்வரன்

எங்கே போனார் அம்பலவாணர்?

சிவபக்தனாம் மகேஸ்வரன்...
சிவபூசையிலே கொல்லப்பட
சிவனெங்கே போயிருந்தார்
செத்துத்தான் தொலைந்தாரோ!

சிவன் தான் வேண்டாமே
கரடியாவது புகுந்திருந்தால்
கொலையாளி ஒருகணம்
குறிதவறிப் போயிருப்பான்.

அழித்தல் தொழில்தான்
உன்தொழிலானால் - சிவனே
அழிக்கவருபவரையாதல்
அழித்துத்தான் தொலையேன்.

நத்தார் நாளொன்றின்போது
நடந்துகொண்டிருந்த திருப்பலியில்
நரபலியெடுக்கப் பட்டாரே
நம்ஜோசப் பரராஜசிங்கம்.

உன்பிறந்த தினத்தினிலே
உன்னுடைய விசுவாசி
உன்னிரண்டு கண்முன்னே
உயிர் பறிக்கப் பட்டபோது

எங்கேயாண்டவா பார்த்திருந்தாய்,
ஏன் நீவந்து தடுக்கவில்லை?

சிவராத்திரி தினத்தினை
சிறப்பாக அனுஷ்டிக்க
அவசரமாய் சென்றவேளை
அய்யகோ சிவனே...!

சிவனேசனை காத்திட - நீ
சிறிதேனும் முயன்றாயா?
இல்லையே சிவனே - உனக்கு
இல்லையா இதயமே!

காத்தான்குடிப் பள்ளியி(வாசலி)ல்
கொத்துக்கொத்தாய் உன்னவர்கள்
கொலைசெய்யப் பட்டபோது
காப்பாற்ற வில்லையே நீ...

அல்லாவே உன்கிருபை
இல்லையோ இலங்கைமண்ணில்?

யாகப்பர் கோவிலிலும்
நவாலிசென் பீட்டரிலும்
ஏனப்பா யேசப்பா
எம்மவரை கைவிட்டாய்?

யாரிடமவர்கள் வந்தார்கள்?
உன்னிடம்தானே அடைக்கலமாய்!

உன்னிடமே அடைக்கலமாய்
ஓடிவந்து புகுந்தவரை
ஏன்காக்க மறந்தனையோ
இன்றில்லை அவருலகில்.

நல்லூரானே!
உன் தேர்த்திருவிழாவென்றால்,
உன் தேர்வடம் பிடிக்காத கைகள்
உள்ளனவா யாழ்ப்பாணத்தில்?

இல்லையே!

உன் தேர்பிடித்தகைகளெல்லாம்
குருதிதோய்ந்து போகும்போது
என்னையா செய்கின்றாய்
ஒருக்காலும் தடுத்திலையே

தேரோடிய வீதியிலும்
பிணவாடை அடித்தபோதும்
பாராமல் இருந்தாயே
பயந்திட்டாயோ நீயுமங்கே!

இல்லை.

எங்கள் மண்ணில் மட்டும்.
எந்தவித அற்புதமும்
இதுவரை நடந்ததில்லை.
இனியும் நடக்கப்போவதில்லை.

ஆண்டவனின் அற்புதம்
இனிமேலும் நிகழுமென்று
வீண்பொழுது போக்கிடில்
வீழ்ச்சிதவிர மீட்சியில்லை

கடவுளர்கள் இனியுமெம்மை
காப்பாற்றப் போவதில்லை
இடர்களைய நாங்களாய்
எழுந்தால்தான் உண்டுவழி.

ஆண்டவன் பெயரில் அரசியல் செய்வோரும்
கடவுளின் பெயரில் காசுபணம் உழைப்போரும்
இறைவன் பெயரில் வெறிபிடித் தலைவோரும்
மதத்தின் பெயரில் மக்களை ஏய்ப்போரும்

இருக்கும் வரைக்கும் இறைவனும் இல்லை
அற்புதம் நிகழ்ந்திட வழியும் இல்லை

பின்னணி: அண்மைக்காலமாக (2008, மார்ச் இறுதிப்பகுதியிலிருந்து) மடு தேவாலயப்பகுதியை கைப்பற்றுவதற்காக அரச படைகளும், அதை தடுப்பதற்காக விடுதலைப்புலிகளும் தீவிரமாக போரிட்டுக்கொண்டிருக்கும்போது, மடுமாதா (சீமெந்து சொரூபம்) பரிதாபகரமாக இடையில் அகப்பட்டுக்கொள்ளவேண்டியதாயிற்று. கடவுளை காப்பாற்றவேண்டிய பாரிய வரலாற்றுக்கடமை இப்போது மனிதர்கள் முன். அப்பகுதி கத்தோலிக்க ஆயர்கள் ஒன்றுசேர்ந்து, மடுமாதாவை பாதுகாப்பான ஒரு இடத்துக்கு நகர்த்தவேண்டியதாயிற்று. மடுமாதா பாதுகாக்கப்பட்டாலும் இருதய நாதர் பதுகாக்கப்படவில்லை. மடுமாதா சென்றபின்பு, மடு இருதய நாதர் கோவில் ஷெல் தாக்குதலுக்கு இலக்கானது. அத்தாக்குதலில், அக்கோவில் பலத்தசேதமடைந்ததுடன், இருதயநாதர் சிலையும் சேதமடைந்தது. இருதயநாதரின் இடக்கையொன்று உடைந்துபோக, அவர் நெஞ்சிலும் சன்னம் துளைத்திருந்தது. இவற்றின் பின்னணியில், சாதாரண ஒரு குடிமகனாக, என் முன் எழும் கேள்விகள் மேலே கவி வடிவில்................
தொடர்புபட்ட தகவல்கள்:
மடு இருதயநாதர் கோவில் மீது சிறிலங்காப் படையினர் எறிகணை வீச்சு

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி