Thursday, December 3, 2009
நானும் காரில்...
பதினாறே வயது நிரம்பிய
பருவப் பெண் நான்.
அழகான சொகுசுக் காரிலேயே
அனுதினமும் செல்கின்றேன்.
பின்னிருக்கையில் நான்,
பக்கத்திலே குழந்தை,
ஐயா காரை ஓட்டுகின்றார்,
அம்மா அவருக்கு பக்கத்தில்
ஐயாவும் அம்மாவும்
வெளிச்செல்லும் போதெல்லாம்
அவர்களுடன் நானும்
குழந்தையை கவனிப்பதற்காய்...
பதினாறே வயதான - மலையகத்துப்
பருவ மங்கை நான்
அழகான சொகுசுக்காரிலேயே
அனுதினமும் செல்கின்றேன்
(உண்மையாக கண்டகாட்சியை வைத்து எழுதியது, 2009-12-01)
Friday, January 23, 2009
நாயின் பதிலடி
நான் ஒரு பிச்சைக்காரனை போல கந்தை உடுத்து குறுகிய ஒழுங்கை வழியாக நடந்துசெல்ல கனவு கண்டேன்
நாய் ஒன்று எனக்குப்பின்னால் நின்று குலைக்கத்தொடங்கியது. நான் வெறுப்புடன் திரும்பிப் பார்த்து “ஏய் எச்சில் நக்கும் ஜென்மமே வாயை மூடு” என்று கத்தினேன். அது தனக்குள்ளேயே சிரித்தது.
ஓ இல்லை இந்த விசயத்தில் நான் மனிதனை போல் இல்லையே.
“என்ன!” கோபம் பொங்க அதனை இழைக்கப்பட்ட பெரிய அவமதிப்பாக கருதினேன்.
“எனக்கு கூற வெட்கமாக இருக்கிறது செப்பிற்கும் வெள்ளிக்கும் பேதம் காணவோ, பட்டுக்கும் பருத்திக்கும் இடையே வேற்றுமை காணவோ, அதிகாரவர்க்கத்தையும் பாமர மக்களையும் வித்தியாசம் காணவோ எசமானர்களையும் அடிமைகளையும் வேறுபடுத்திக்காணவோ எனக்கு தெரியவில்லையே….”
நான் திரும்பி ஓட்டம் பிடித்தேன்.
கொஞ்சம் பொறு நாமிருவரும் இன்னும் கொஞ்சம் பேசுவோமே என்று உரத்த குரலில் என்னை நிற்கும்படி கூறியது.
ஆனால் எவ்வளவு வேகமாக ஒடமுடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி எனது கனவிலிருந்து வெளிவந்து எனது கட்டிலில் சாய்ந்தேன்.
தமிழாக்கம் நடனசபாபதி, லூ ஷுன் போர்க்காலச்சிந்தனைகள், தேசிய கலை இலக்கியப்பேரவை
Tuesday, July 22, 2008
ஃபோனில் சார்ஜ் இல்லாட்டி ஜெயில் வாசம்
ஆமிக்காரன்ட செக் பொயின்ற் வருது. எல்லாரும் இறங்கி தங்கட அடையாளங்களை காட்டினம். மன்னிச்சுக்கொள்ளுங்கோ...எல்லாரும் எண்டே சொன்னனான், இல்லை இல்லை...தமிழாக்கள் மட்டும்தான்.
இப்ப மேலதிகமா ஆமிக்காரன் ஆக்களின்ட ஃபோனுகளை வாங்கி #132# எண்டு அடிச்சு கோல் பண்ணுறான். ஃபோனின்ட முகப்பில அந்த ஆளின்ட பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் எல்லாம் விழுகுது. ஒப்பிட்டுப் பாக்குறான். விடுறான்.
தப்பித்தவறி, உங்கட ஃபோன் பற்றறியில கரண்ட் குறைவாயிருந்து #132# வேலை செய்யாட்டி 1,2,3..எண்டு கம்பி எண்ண வேண்டியதுதான்.
நாங்கள் நல்லாக்கள். எதையும் தாங்குவம் எண்டு இந்த ஃபசிலிட்டியையும் அரசாங்கம் தந்திருக்குது. கீழ சிரிக்கிற பொம்பிளை எங்களைப் பாத்துதான் சிரிக்கிறா, பாருங்கோ.
- மதுவதனன் மௌ. -
Thursday, July 17, 2008
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...........
1995 ஆம் ஆண்டு துரதிஸ்டவசமாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டி வந்துட்டுது:(. அதுக்கு பிறகு சுமார் 13 வருடங்களாக சந்தர்ப்பம் சூழ்நிலையால் யாழ்பாணம் பக்கம் போக முடியாமல் போய்விட்டது என்பதை நினைக்கும் போது கவலையாத்தான் இருக்கு. எனியும் போக முடியுமோ என்பது சந்தேகமே. யாழ்ப்பாணத்தில் என்னுடைய சிறுவயதில் நிகழ்ந்த சம்பவங்களை அசைபோடும் போது ஏற்படும் சுகமே அலாதி தான். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவோம் என்ற நோக்கமே இந்த இடுகை
மு.கு:- இதில் நான் குறிப்பிடப்போகும் அனைத்தும் 1995 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் என்னுடைய பார்வையில். அதற்க்கு பின்னர் யாழ்ப்பாணம் என்ன நிறத்தில் இருக்கு என்று எனக்கு தெரியாது. மற்றும் சிலருக்கு இந்த இடுகை சுவாரசியம் குறைந்ததாக இருக்கும். காரணம் பல வட்டார வழக்கங்களை நான் பாவிக்க முற்படுகிறேன். அது உங்களுக்கு விளங்காமல் இருந்தால் தயவு செய்து மன்னிச்சு கொள்ளுங்கோ.
1995 இல் யாழ்ப்பாணம் என்னுடைய பார்வையில்.................
அது என்னுடைய சிறுபராயமாக இருந்தாலும் நிகழ்ச்சிகள் எல்லாம் பசுமரத்து ஆணிபோல மனசுல பதிந்துள்ளது. எங்கட lane இரண்டு கோயில்களுக்கு மத்தியில் இருக்கு. So நான் கோயில் வீதிகளில் தான் என்னுடைய பெரும்பாலான பொழுதை களித்தேன். ஒரு அரைகால்சட்டை மேலே கஞ்சி போட்டு துவைத்த shirt போட்டுக்கொண்டு பொடியலோட பிள்ளையார் கோயில் வீதியில் விண் கட்டிய 8 மூலை பட்டம் விட்டது galle face beach இல் யாரோ பட்டம் விடுவதை பார்த்து ரசிப்பத்ற்க்கு இணையாகுமா???? நல்லூர் கந்தன் கோயில் வருடாந்த உற்சவத்துக்கு போய் கந்தனைத்தரிசிக்காமல் லிங்கம் cool bar ல ice cream குடிக்கிறது queens cafe ல submarine சாப்பிட்டுட்டு உப்புக்கு சப்பையா எதோ ice cream குடிக்கனும் என்று குடிக்கிறதுக்கு ஈடு இணையாகுமா?????
அந்தநேரத்தில் தான் காதலன் படம் release. so பிரபுதேவா தான் அண்ணாமர்களின் role model.பெரிய பெரிய துளைகள் போட்ட உள்பனியன் வெளியில்தெரியத்தக்க கண்ணறயான மார்டின் shirt, பின் pocket ல கிளியின் உருவம் அல்லது இதயத்துக்குள்ளால அம்பு பாயும் உருவம் போட்ட baggy jeans,சோலாபுரி செருப்பு இவைதான் பெரும்பாலான இளைஞர்களின் costume ஆக இருந்துச்சு(நாங்களும் பெரிய ஆள வந்த பேந்து இப்படி எல்லாம் வெளிக்கிடனும் என்டு கனவுவெல்லாம் கண்டது வேறகதை:)). அண்ணாமார் சைக்கிள்ல doubles போடுற அழகே தனிதான்.doubles என்டா என்ன என்டு நீங்க கேக்குறது விளங்குது. doubles போடுறது என்றால் சைக்கிள்ல இருவர் போகும் போது முன்னால் இருப்பவர் சைக்கிள் ஒடுபவருக்கு உறுதுனையாக சைக்கிளின் இடப்பக்க பெடலை இருவரும் சேர்ந்து மிதிப்பது.அப்படி மிதிக்கும் போது செருப்பின் அரைவாசிக்கும் மேல் காலுக்கு வெளியே இருக்கும் வண்ணம் மிதிக்கும் அழகே அழகுதான்:)
புதுவருடப்பிறப்புக்கு சீன வெடி எல்லாம் அப்ப கிடையாது. நம்மட ஆக்கள் தானே புத்திசாலிகளுக்கு பிறந்த அதி புத்திசாலிகள்.so நம்மட ஆக்கள் கண்டு பிடிச்ச ஒரு வெடி இருந்துச்சு. சைக்கிள் ரிங் கம்பியின் நுனியில் உள்ள துவாரத்துக்குள் தீக்குச்சி மருந்தை உட்செலுத்தி தரையில் பலமாக அடிக்க பெருசா வெடிக்கும். அந்த நேரத்தில் அது தான் எங்கட சீன வெடி.
இப்படி கனக்க விசயங்கள் கிடக்கு பாருங்கோ. tution center ல அண்ணாமார் அடிக்கிற லூட்டிய பற்றி எல்லாம் பேந்து ஒரு நாளைக்கு சாகவாசமா சொல்லுறன். project வேலையா கொஞ்சம் busya இருக்கிறன்.இப்ப போய்ட்டு வராட்டா...........
அடுத்த பதிவில சந்திப்போம்........
Wednesday, May 28, 2008
நீங்கள் வாழ்கின்றீர்களா?
இலத்திரனியல் ஊடகங்களை கட்டியழுதுகொண்டிருக்கும் மக்களே....
நீங்கள் வாழ்வதாக நினைத்திருக்கும் வாழ்க்கை கணக்கை பாருங்கள்.
ஒரு நாளின் 24 மணிநேரத்தை
நித்திரை 8 மணித்தியாலம்,
வாழத்தேவையான பணத்தை சம்பாதிக்க 8 மணித்தியாலம்,
ஆக, உங்கள் வாழ்க்கை என்பது மீதியுள்ள 8 மணி நேரம் என்று பிரிக்கலாம்.
அதாவது, மொத்த வாழ்வில் மூன்றிலொரு பங்கை நித்திரையிலும் இன்னொரு மூன்றிலொரு பங்கை உழைப்பிலும் செலவிடும் நீங்கள், உண்மையாக வாழக்கூடியது மூன்றிலொரு பங்கு காலம்தான்.
கொழும்பில் வாழும் சராசரி மனிதனை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம்.
அவர் தினமும் சக்தி TV பார்க்கிறார்.
அதிலே 13 தொடர் நாடகங்கள், ஒரு திரைப்படம் என்பன காட்டப்படுகின்றன.
அதைவிட Good Morning Sri Lanka என்று அரை வேக்காடுகளின் அலம்பல் நிகழ்சசி, cine Choice நெஞ்சம் மர(ற)ப்பதில்லை, புத்தம் புதுசு...போன்றனவும் காட்டப்படுகின்றன.
இவற்றுக்கான மொத்த நேரம்
13 நாடகங்கள் = 6.5 மணித்தியாலங்கள்
1 திரைப்படம்= 3 மணித்தியாலங்கள்
செய்தி தவிர்ந்த ஏனய நிகழ்ச்சிகள் = 2.5 மணித்தியாலங்கள்
ஆக மொத்தம் 10 மணித்தியாலங்கள்.
இதில் வேலைக்கு செல்பவர் அரைவாசியைதான் பார்ப்பார் என்று வைத்துக்கொள்வோம்.
அவரது வாழ்க்கையில் மீதமிருப்பது 3 மணித்தியாலங்கள். அதிலும் இயற்கைத்தேவைகளான குளித்தல், காலைக்கடன்கள், உண்ணுதல் போன்றவற்றிற்கு 2 மணி நேரத்தை செலவிடுகிறார் என்றும் வைத்துக்கொள்ளுவோம்.
பயணத்தில் செலவிடும் நேரத்தை 30 நிமிடம் என்று வைத்துகொள்ளுவோம்.
ஆகவே அவர் வாழும் நேரம் நாளொன்றுக்கு 30 நிமிடம்.அதாவது 1/48 நாள்.
48 வயதான ஒருவர் வாழ்ந்த காலம் 1 வருடம்...
எனவே நீங்கள் வாழ்வதாக நினைக்கிறீர்களா?
எடுகோள்கள் : சராசரி மனிதனின் வாழ்வு தினமும் ஒரேமாதிரியாகத்தான் கழிகிறது.
மீதமிருந்த அரை மணி நேரத்துக்கு அவர் TV பார்க்கவில்லை.
Tuesday, May 27, 2008
பெண்ணியமெனும் பெயரினிலே.....
பெண்ணியம் என்ற பெயரில் கவிதை, கதை கட்டுரைகளூடாக விதைக்கப்படும் விஷ விதைகளை பார்த்து வெறுத்துப்போய் இப்பதிவை இடுகின்றேன். நான் பெண்ணியம் பற்றி எதிர்க்கருத்துக்களை கொண்டவனல்ல. பெண் விடுதலையின் அவசியம் பற்றியோ Gender Equality இன் அவசியம்பற்றியோ எந்தவிதமான எதிர்கருத்துக்கும் இடமில்லை. என்றாலும்,
அனேகமாக பெண்விடுதலை பற்றிக்கதைக்கும் எல்லோரும், ஆணாதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பதை விடுத்து, ஆண்களெல்லோரும் பெண்களின் எதிரிகள் என்கிறமாதிரியாகத்தான் கூப்பாடு போடுகின்றனர். ஆண்களும் பெண்களும் இப்பூமியில் ஒன்றாக வாழவேண்டியவர்கள். ஆண்களை ஒதுக்கி பெண்களோ பெண்களை ஒதுக்கி ஆண்களோ வாழமுடியாது/கூடாது. ஆண்களிலாமல் வாழ, சந்ததிகளை உருவாக்கமுடியும் என்று கூறும் பெண்களே! ஆண்களிலாத சமுதாயத்தை உங்களால் உருவாக்க முடியுமா? முடியாதல்லவா? ஆண்களை எதிரியாக்கிகொண்டு ஆண்களும் வாழும் ஒரு சமுதாயதில் பெண்கள்மீதான வன்முறை, குடும்ப வன்முறையிலிருந்து சமூக வன்முறையாய்ப்போகும் ஒரு சூழ்நிலைதான் உங்கள் எதிர்பார்ப்பா?
பண்பாட்டு புரட்சியொன்றால் வென்றெடுக்கப்படவேண்டிய பெண்ணுரிமையை, ஆணெதிர்ப்பு சிந்தனைகளை தூண்டி பிரச்சினையை இன்னும் சிக்கலாக்க நினைக்கும் உங்களின் உள்நோக்கம்தான் என்ன? பெண்கள் மீதான அடக்குமுறையும் வன்முறையும் சமுகத்தில் புரையோடிப்போயுள்ளது. இதற்கு காரணம் நிச்சயமாக இந்த ஆணாதிக்க சமுதாய அமைப்புத்தான். காலங்காலமக விஷமூட்டப்பட்டு வந்த எங்களின் சிந்தனைமுறையை மாற்றுவதென்பது இலகுவான காரியம் இல்லைத்தான். ஆனாலும் முடியாத காரியமல்லவே?
சமயங்களும், காலங்காலமாக சொல்லப்பட்டுவந்த புராணக்கதைகளும், தற்போது தொலைக்காட்சிகளில் சீரியல்களில் காட்டப்படும் பிற்போக்குத்தனமான கருத்துக்களும் விதைக்கும் பெண்ணடிமைத்தனமான கருத்துக்களை தாண்டி இச்சமுதாயம் (பெண்களும் ஆண்களும்) பயணிக்கவேண்டிய தூரம் மிக நெடிது.
இச்சமயத்தில் ஒட்டுமொத்த ஆணாதிக்க சிந்தனைக்கும், பெண்கள்மீது வன்முறைபுரியும் தனிமனிதர்களுக்கும்(இருபாலாரும் இதிலடங்குவர்) எதிராக ஒட்டுமொத்த சமுதாய, பண்பாட்டு, சிந்தனை மாற்றத்தை உருவாக்க முன்வரவேண்டும்.
அதை விடுத்து, ஆண் vs பெண் வாதங்கள், கடுமையான சொற்பிரயாகங்களால் ஆண்களை வசைபாடுதல், ஐரோப்பிய பெண்ணியத்தை இறக்குமதிசெய்தல், பின்நவீனத்துவ பெண்நிலைவாதம் என்றபெயரில் பெண்களை விளிம்புநிலை மனிதர்களாக்குதல் போன்ற முட்டாள் தனமான விடயங்களை விடுத்து, ஆண் பெண் முரன்பாட்டை பகை முரண்பாடாக்கி, எக்காலத்திலும் தீர்க்கமுடியாததாக ஆக்காமல், சினேக முரண்பாடாகவே தீர்ப்பதற்கு முன்வரவேண்டும்.
மனிதர்களை எந்தவொரு கோஷத்தின் கீழும் ஒன்றுசேரவிடாது, தனித்தனித் தீவுகளாக்கி சுலபமாக சுரண்டுவதற்கான வழிமுறைகளே இப்போது நடைபெறுகின்றன. அதற்கு பெருந்தடையாக இருப்பது குடும்பம் என்ற அடிப்படை அலகுதான். குடும்பக்கட்டமைப்பை உடைக்கும்படிக்குத்தான் இன்றய கருத்துக்கள் கட்டமைக்கப்படுகின்றன.
மனிதன் என்பவன் தனி அலகு, அவன் சமூக விலங்கு அல்ல.
குடும்பமே பெண்கள் மீதான வன்முறைக்கு அடிப்படை காரணம். அதனால் குடும்பத்தை உடையுங்கள்.
சேர்ந்து வாழும்(living together) கலாசாரத்துக்கு மாறுங்கள்.
ஆணுக்கு பெண்ணும்
பெண்ணுக்கு ஆணும் எதிரிகள்.....
மொத்தத்தில் இவர்கள் சொல்வதெல்லாம் மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துங்கள் என்பதுதான்.
இப்படியான கருத்துக்களை விதைப்பவர்கள் எல்லோரும் என்னைப்பொறுத்தவரையில் மக்களை பிரித்து தனி அலகுகளாக்கி சுரண்ட நினைக்கும் சக்தியொன்றின் ஏஜென்டுகளே. இப்படியான வரட்டு பெண்ணியம் கதைப்பவர்கள், தாங்கள் ஏஜென்டுக்களல்ல என்று நம்பினால், ஆண் எதிர் பெண் என்ற நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு, பெண்ணடிமைத்தனம், பெண்கள்மீதான வன்முறை, பால்நிலை சமமின்மை என்பவற்றுக்கு எதிராக போராட ஒன்றிணையவேண்டும்.
பி.கு:
இதுசம்பந்தமாக அண்மையில் படித்து வெறுத்துப்போன கவிதை ஒன்று...
வீரியம் குறைந்த ஆண்குறி...!
இதைவிட, தாயகம்(2008 ஏப்ரல்-ஜூன்) இதழில் சந்திரகாந்தா முருகானந்தன் என்பவர் எழுதிய கவிதையில் ஆண் என்ற கொடூரனால் குடும்ப வன்முறைக்குட்படுத்தப்பட்ட தான், முலை யோனி ஆகியவற்றை துறப்பதாக எழுதியிருந்தார். உண்மையில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் இவ்வாறு எழுதியிருந்தால் விரக்தியால் எழுந்த வார்த்தைகளெனலாம். ஆனால் இக்கவிஞர் பாதிக்கப்பட்டிராவிட்டால் இக்கவிதை போன்ற அயோக்கியத்தனம் வேறெதுவுமில்லை.
Wednesday, April 30, 2008
சாதி
இவன் காதிலும் விழுந்திருக்குமோ ?
ஈனப்பிறவிகள்-
காலாவதியான கட்டுப்பாடுகள்,
தொலைந்துபோன சம்பிரதாயங்கள்,
சில கற்பனைக் கோடுகள்-
இவற்றைப் பிடித்துக்கொண்டு,
படி தாண்டாத
அல்லதுதாண்டவிரும்பாத’வீரர்கள்’-
குரங்காயிருந்தபோது உறைக்காதவைகள்-
அப்படியே இருந்திருக்கலாம்.
நண்பனின் இலையில்
சோற்றை எறிந்துவிட்டு
குசினிக்குளிருந்து
குசுகுசுத்த வார்த்தைகள்-
‘என்ன எளிய சாதியோ தெரியாது’
இவன் காதிலும் விழுந்திருக்குமோ ?
Friday, April 4, 2008
வெறுப்பு
பேரூந்து இருக்கையில் அவனும் நானும் ஒரே சட்டையில்
அவனைப்பார்த்து எனக்கு வெறுப்பு
என்னைப்பார்த்து அவனுக்கு வெறுப்பு
Tuesday, April 1, 2008
Monday, March 31, 2008
எனக்கு 'விசா' கிடைத்து விட்டது!
அளவற்ற மகிழ்ச்சியுடன் சொல்கின்றேன் எனக்கு 'விசா' கிடைத்து விட்டது. இதுவரை நான் காத்திருந்த நாள் இப்போது எனக்காக மணித்துளிக்கணக்களவில் சுருங்கிக் கிடக்கின்றது. முருங்கை மரம் ஏறும் வேதாளமாக எத்தனையோ நிராகரிப்புக்களுடன் போராடி போராடி ஈற்றில் இன்று எனக்கு வெற்றி. இச்செய்தியைக் காவி வந்த என் நண்பனின் வாடிய முகம் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. என்னை விட அதிக தடவைகள் அவன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாய் உணர்கின்றானா? அல்லது பிரிவுத்துயரா?
ஊட்டி வளர்த்த அம்மா, ஓடி விளையாடிய கடற்கரை மணல், அறிவூட்டி இன்று யுத்த அழிவுச் சின்னமாய் மிளிரும் எனது பாடசாலை.... எப்படி இவை எல்லாவற்றையும் விட்டுப்போக உன்னால் முடிகிறது என வெளியிலிருந்து நீங்கள் தொடுக்கும் ஒவ்வொரு அறிவார்ந்த வினாக்களும் எனது காதுகளுக்கு கேட்கின்றது. எல்லோரையும் போல கடல் தாண்டி வேலை கிடைத்ததும் பணம் அனுப்புகின்றேன் என சொல்லமாட்டேன். ஆனால், இவைகளுக்காகத்தான் போகின்றேன்; என்னை நம்புங்கள்.
நேற்று வரை 'விசா' பெற்று ஒவ்வொரு தோழர்களும் விடை பெறுகின்ற போதும் பொறாமைப்பட்டேன்; பிரிவுத்துயர் தாங்காது கலங்கினேன். இன்று அந்தப் பாத்திரத்தை தாங்கும் உங்களுக்கு என்னால் என்ன கூற முடியும்?
தோழர்களே... இது ஒரு அமாவாசை இரவு... காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். ஆழ்கடலில் உலகதிரும் வெடியோசை... அது என் பயணச்செய்தியை சொல்லிச் செல்லும்...!
Wednesday, March 26, 2008
வணக்கம்
எல்லோருக்கும் வணக்கம்
நான் அபிமன்யு
இதோ எனது சிறு கிறுக்கல்
வறுமையின் நிறம் சிவப்பு
புது வருடம் சிவப்பு மற்றும் பச்சையில் பிறக்குதாம்.....
முதலாளியம்மா மனமுவந்து தரும் பாவித்த உடுப்புகளில் இருந்தால் எனக்கும்.....
சிவப்பு எமக்கு சொந்தமான நிறம்... பச்சைக்கு எங்கே போவது?
்
Wednesday, February 20, 2008
அவளுக்காக.....
கவிதை எழுத தெரியுமா எனக்கேட்டாள்
எழுத தெரியும் என்று பொய் சொன்னேன்
அவள் பெயரை எழுதி கவிதை என்றேன்
பல சினிமாவில் பார்த்துவிட்டேன் என்றாள்
பின்னால் என் பெயரையும் சேர்த்துக்கொண்டேன்
அருமையான ஹைகூ என்றாள்
அன்று தான் தெரியும் ஹைகூ இரண்டு வரி என்று
Wednesday, February 13, 2008
நாளை காதலர் தினம்!!!
நண்பன்: காதலைப் பற்றி ஏதாவது சொல்லடா...
நான்: அனுபவம் போதாதடா. இதுவரை நான் காதலித்தது இருபது பெண்களைத்தானடா.
நண்பன்: காதலர் தினம் பற்றி ஏதாவது சொல்லடா...
நான்: வழமையான வருடங்களில் நாற்பத்தாறு நாட்கழித்தும்; நான்கு வருடங்களுக்கொருமுறை நாற்பத்தேழு நாட்கழித்தும் வந்திருக்க வேண்டியது...
Sunday, February 10, 2008
சுதந்திர தினம்
சில வீதிகள் போக்குவரவுக்குத் தடை
பல இடங்களில் வழமைக்கதிகமான சோதனைகள்
வெளியே போனால் திரும்புவோமா மீண்டும்....?
வேறென்ன இன்று "சுதந்திர தினம்"