Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Thursday, February 26, 2009

பயில்நிலத்தின் மீள் வருகை: மீண்டும் தொடங்கும் மிடுக்கு (ஈழத்து இலக்கியச் சூழலும் இளைய தலைமுறையின் இதழ் வெளியீட்டு முயற்சிகளும்)

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பயில்நிலத்தின் மீள் வருகை மகிழ்வளிக்கிறது. 2004 முதல் 2006 வரை தொடர்ச்சியாக 12 இதழ்களை இக் குழுவினர் வெளியிட்டு உள்ளனர். 3 வருட மௌனத்தின் பின்னர் புதிய இளம் குழுவால் பயில்நிலம் புதுப் பொலிவுடன் மீண்டும் வருகிறது. இன்றைய சூழலில் கூட்டுச்செயற்பாடு என்பது எவ்வளவு கடினமானது என்பதை எல்லோரும் நன்கு அறிவோம். தனி மனித வாதமும் தனி மனித முனைப்பும் முன்னிலைப்படுத்தபடுகின்ற சூழலில் இளையோர் ஒரு இதழைக் கொண்டு வருவது மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ் வகையில் பயில்நிலத்தின் மீள் வருகை எமது இளம் தலைமுறை குறித்த நம்பிக்கைகளைத் தக்க வைக்க உதவுகிறது.


இன்றைய சூழல் மிகுந்த சவால் மிக்கதாக இருக்கிறது. கூட்டுச்செயற்பாடும் தனி மனிதப் பொறுப்பும் சரியாக விளங்கிக் கொள்ளப்படவேண்டிய தேவையும் கூட்டுச்செயற்பாட்டின் அவசியமும் மிகவும் முக்கியமானது. இளைய தலைமுறையால் ஒரு தரமான இதழைக் கொண்டு வர முடியும் எனப் பயில்நிலம் தனது 12 இதழ்கள் மூலம் நிரூபித்து இருக்கிறது. இப்போது மீண்டும் வந்துள்ள பயில்நிலம் இதழும் அதன் தொடர்ச்சி என்றே கூறமுடியும்.

பயில்நிலத்தின் ஆசிரியத் தலையங்கம் இவ்வாறு சொல்கிறது. "இன்று நடைமுறையிலுள்ள கல்வி முறைமை இளைஞர்களைக் குறுகிய வட்டத்திற்குள் வரையறுத்து விடுகின்றது. இதற்குச் சமூகத்தின் திணிப்பும் காரணமாகின்றது. அத்தகைய பலவீனத்திலிருந்து வெளிவரும் நோக்கில் அவர்களது சிந்தனை, செயற்பாடு, கண்ணோட்டத்தைப் புதிய பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் முயற்சியே எமது பயில்நிலம்."

குறைந்த அளவான கவிதைகள் பல வேறுபட்ட விடயப் பரப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள், சிறுகதைகள், பத்திகள், குட்டிக் கதைகள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் என பல்வேறுபட்ட புதிய பரிணாமங்களுடன் பயில்நிலம் மலர்ந்து இருக்கிறது. இவ்விடத்தில் சில முக்கியமான விடயங்களைக் கூறவேண்டும். அந்நிய மேலாதிக்கத்துக்கு எதிரான எந்தப் போராட்டத்திலும் பண்பாட்டுத் துறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் முக்கியமானவை. முற்போக்குச் சிந்தனையாளர்கள் கலை இலக்கியங்கள் சமூகச்சார்பானதும் சமூக முன்னேற்றத்துக்குமான பங்களிப்பைச் செலுத்த வேண்டுமென வற்புறுத்துவர். சமூக விடுதலை இலக்குடையோர் கலை இலக்கியங்கள் அந்த இலக்கிற்குப் பணி செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பர். அது போலவே அடக்குமுறையாளர் தமது நோக்கங்களைக் கலை இலக்கியங்களூடு முன்னெடுக்கத் தயங்க மாட்டார்கள். அந்த அளவுக்கு, ஆனால் அந்தளவுக்கு மட்டுமே, கலை இலக்கியங்கள் பற்றிய பார்வையில் சமூக விடுதலையாளர்கட்கும் அடக்குமுறையாளர்கட்கும் ஒற்றுமை உண்டு. அதற்கப்பால் அணுகுமுறையிலும் உள்ளடக்கத்திலும் எதிர்மாறான தன்மைகளையே நாம் காணலாம்.

சமூக விடுதலையை வேண்டுவோர் கலை இலக்கியங்கள் சமூகச் சார்புடையனவாக இருப்பதை விரும்புவர். மனிதரின் உரிமைகளையும் மனிதரிடையே சமத்துவ அடிப்படையிலான ஒற்றுமையையும் நீதியையும் நியாயத்தையும் அவற்றுக்கான எழுச்சிகளையும் பேசுவதை வற்புறுத்துவர். அந்த இலக்குடைய படைப்பாளிகள் அவற்றை உணர்த்துகிற விதமாகக் கலை இலக்கியங்களை உருவாக்குவர். ஒடுக்குமுறையாளர்கள் தங்களது நோக்கங்களை அந்த விதமாக வெளிப்படுத்த இயலுமா? இயலாது. எனவே சமூக விழிப்புணர்வை வேண்டி நிற்கிற படைப்புக்களை எதிர்க்க அவர்கள் சமூக உணர்வை மழுங்கடிக்கிற விதமான படைப்புக்களை ஊக்குவிப்பர். பொது மக்களின் இரசனையையும் சிந்தனை ஆற்றலையும் வளர்த்தெடுக்கிற படைப்புகளின் இடத்தில் அவற்றைக் கீழ்த்தரமானவை ஆக்குகிற காரியங்களை அவர்கள் செயற்படுத்துவர். மனிதரைச் சமூகக் கூட்டுணர்வு உடையோராக மாற்றும் முயற்சிகட்கு மாறாகத் தனிமனிதவாதத்தையும் சுய நலப்போக்கையும் வற்புறுத்துவர்.

ஏகாதிபத்தியமோ பிற்போக்காளர்களோ கலை, இலக்கியம், பண்பாட்டுத் துறைகளிற் தங்களது மக்கள் விரோதச் செயல்களை நேரடியாகச் செய்வதில்லை. அவற்றுக்குப் பல்வேறு முகவர்களைப் பாவிப்பர். சமூக உணர்வு போதாத, ஆழமான சமூகச் சிந்தனையற்ற அல்லது சுயநலத்திற்கும் தற்பெருமைக்கும் சுயவிளம்பரத்திற்கும் ஆட்பட்ட ஆய்வறிவாளர்களும் படைப்பாளிகளும் அறிந்தோ அறியாமலோ அவ்வாறான காரியங்களைச் செய்யுங் கருவிகளாகின்றனர்.

இலங்கையில் சமூக உணர்வுள்ள இலக்கிய எழுச்சியில் மட்டுமன்றிப் பொதுவான இலக்கிய எழுச்சியிலும் இடதுசாரிகளும் பிற முற்போக்குச் சிந்தனையாளர்களும் ஒரு தலைமைப் பங்காற்றினர். அதை மறுப்பதற்கான பழமைவாதப் பிற்போக்குவாத முயற்சிகள் படுதோல்வி கண்டன. தேசியவாத இலக்கியத்தின் எழுச்சி கூட முற்போக்கு இலக்கியப் போக்கிலிருந்து எழுந்த சமூகச்சார்பான எழுத்தை உள்வாங்கியே தன்னை அடையாளப்படுத்துமளவுக்குச் சமூகச் சார்பான கலை இலக்கியங்கள் என்ற கருத்தாக்கம் நிலை கொண்டிருந்தது. தூய கலை இலக்கியம் பற்றிப் பேசி முற்போக்கு இலக்கியத்தை நிராகரித்தவர்களே தூய கலை இலக்கியக் கோட்பாட்டை மறந்து தேசியவாதக் கலை இலக்கியங்களைத் தூக்கிப் பிடித்தமை பற்றியும் இங்கு குறிப்பிடலாம். இப்போது எல்லாத் தளங்களிலும் ஏகாதிபத்தியவாதிகள் தங்களது தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். அவர்களது முகவர்கள் போலி மனிதாபிமான முகத்தைக் காட்டுகின்றனர். இதன் நோக்கங்கள் எப்படியானவையோ அப்படியானவையே கலை இலக்கியத் துறைகளில் நடைபெறும் ஊடுருவல்களின் நோக்கங்களும். இவை குறித்துப் பயில்நிலம் அவதானமாக இருக்க வேண்டும்.

பயில்நிலம் இதழ் பல புதிய விடயங்களைப் பேசுகிறது. பல அறிவியல் செய்திகளைச் சொல்கிறது. விண்ணியல் பற்றி எழுதப்பட்டிருக்கும் ஒரு பத்தியும், சுய ஆளுமை பற்றி எழுதப்பட்டிருக்கும் ஒரு பத்தியும் எமது இளம் தலைமுறை புதிய ஒளியை எம் சமூகத்தில் பாய்ச்சும் என்பதற்கு கட்டியம் கூறுவது போல உள்ளது. குறிப்பாக விண்ணியல் பற்றி எழுதத் தொடங்கியிருக்கும் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. இது விண்ணியல் பற்றி நாம் அறியாத பல விடயங்களை அறிந்து கொள்ள உதவும் என எதிர்பார்க்கமுடியும். சுய ஆளுமை பற்றி எழுதப்பட்டிருக்கும் பத்தி சில அடிப்படையான செய்திகளைச் சொல்கிறது. குடும்பம் என்ற நிறுவனத்தின் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் இன்றும் மனித சமூகத்தின் முக்கிய கூறாகவும் தனிமனித வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அலகாகவும் குடும்பம் இருக்கின்றது. இந்த ஏற்றத்தாழ்வான சமூகத்திற்கு மாறாக புதிய சமத்துவமான, சமநீதியை நிலைநாட்டக்கூடிய ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தைப் படைக்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டுள்ளவர்கள் சுய ஆளுமை தொடர்பான பிரச்சனைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளவற்றைத் தட்டிக்கழித்து விடமுடியாது. அவை வெறுமனே தனிப்பட்ட பிரச்சனைகளல்ல. சமூகத்தின் ஏற்றத் தாழ்வான வளர்ச்சியினால் பல்வேறு விதமான சில திட்டமிட்ட நடவடிக்கைகளினால் வளர்க்கப்பட்டுள்ள பிரச்சனைகளுமாகும். எனவே சுய ஆளுமை பற்றி எழுதப்பட்டிருக்கும் பத்தி ஒரு புதிய பார்வையை முன்வைக்கிறது.

புதிய விடயங்களை மட்டும் அல்ல பழைய விடயங்களிலும் பயில்நிலம் அக்கறையாய் இருக்கிறது என்பதை பயில்நிலம் இதழைத் திறந்த உடனேயே தெரிந்து கொண்டேன். இதழில் முதலாவதாக இருக்கும் கட்டுரை பொப்பிசைப் பாடல்கள் பற்றியது ஆகும். கட்டுரையின் முடிவில் "கள்ளுக்கடைப் பக்கம் போகாதே/ காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன், கண்ணும் புகைந்திடும்/ நெஞ்சும் வரண்டிடும்/ கைகால் உலர்ந்திடும் இந்தக் கள்ளாலே, ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்/ அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்/ விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே/ விட்டேனோ கள்ளுக்குடியை நான்" என்ற நித்தி கனகரத்தினத்தின் பாடல் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.

ஒரு விடுதலைப் போரின் போக்கில் நடக்கும் தவறுகள் விடுதலைப் போராட்டத்துக்குக் கேடானவை. போராட்டத்தின் போக்கில் நிகழும் தவறுகள் உடனுக்குடன் திருத்தப்படாவிடின் போராட்டம் பலவீனமடையும். போராட்டம் பற்றிய விமர்சனங்களிற் சினேகமானவற்றையும் பகைமையானவற்றையும் வேறுபடுத்திக் காணும் தேவையைப் பலரும் மறந்து விடுகின்றனர். பகைமையான விமர்சனங்களிற் கூடப் பயனுள்ள அம்சங்களை எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் ஒரு விடுதலை இயக்கத்துக்கு மிக அவசியம். இது குழவாகச் செயற்படும் எல்லோருக்கும் பொருந்தும். பயில்நிலம் குழுவுக்கும் கூட நான் இதை இங்கே சொல்ல முனைவதன் நோக்கம் பயில்நிலம் குழு விமர்சனங்களைக் கவனமாக அணுகவேண்டும் என்பதாலேயே. விமர்சனம் என்பது அழகியல் சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டும் என்பது அழகியல்வாதிகளது நிலைப்பாடு. ஒரு படைப்பின் அரசியற் சமுதாய முனைப்பை விமர்சிப்பதை இவர்கள் விரும்புவதில்லை.நிறவாதத்தையோ மதவெறியையோ தூண்டும் இலக்கியத்தையோ ஆணாதிக்கத்தையோ சாதியத்தையோ நியாயப்படுத்தும் ஒரு படைப்பையோ வெறுமனே அழகியற் கண்ணோட்டத்தில் விமர்சிப்பது எவ்வகையிலும் நேர்மையான காரியமல்ல. சமூகச் சீரழிவை ஊக்குவிக்கும் படைப்புக்களை அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்கொள்ள முடியும். பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்திலான படைப்பக்களை ஊக்குவிப்பதும் கலை இலக்கியங்களைப் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டதினின்று விமர்சிப்பதும் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுப்பணி சார்ந்தது.

மனிதத் தேவைகளையும் உணர்வுகளையும் புறக்கணித்துக் கலை இலக்கியங்களைப் படைக்க முடியாது. இந்தத் தேவைகளையும் உணர்வுகளையும் தனிமனிதருக்கே உரியனவாக்கி மனிதரைச் சமூகத்தினின்று பிரித்துத் தனிமனிதத்துவத்தை சமுதாயத்துக்கு முரண்பட்டதாக வளர்க்கும் போக்கு மனித இருப்பின் முக்கியமான ஒரு பகுதியை மறுக்கிறது. பாட்டாளி வர்க்கப் பார்வை மனிதனது இருப்பின் சமுதாயத் தன்மையை வலியுறுத்தி மனிதரது தனித்துவத்தை அங்கீகரிக்கிறது. தனிமனிதரது தேவைகளும் உணர்வுகளும் சமுதாயத்தினின்று பிரித்துப் பார்க்கப்படாமல் உறவுபடுத்திப் பார்க்கப் படுகின்றன. ஒரு படைப்பின் தொனி அதன் படைப்பாளியின் சமுதாயச் சார்பாலும் குறிப்பாக சமுதாயச் சூழலாலும் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. மனித இருப்பையே நெருக்கடிக்குள்ளாக்கிவரும் ஒரு சமுதாய அமைப்பிற்கு எதிரான போராட்ட உணர்வை வலியுறுத்துவது எமது வரலாற்றுக் கடமை. இதைப் பயில்நிலம் சரியாகச் செய்யும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த இடத்தில் நவீன உலகின் நாடகமேதைகளுள் ஒருவராகக் கருதப்படும் ஹென்றிக் இப்சன் எழுதிய மக்களின் எதிரி" என்ற நோர்வீஜிய நாடகத்தின் கதை நினைவுக்கு வருகிறது. ஒரு விஞ்ஞானி மனிதருக்குத் தீங்கான ஒன்றைக் கண்டறிகிறார். அதை உலகறியச் செய்வதன் மூலம் தான் மனித இனத்திற்கு நன்மை செய்வதாகவும் அதற்காகத் தனக்கு நன்றியாவது கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார். மாறாக, ஊரில் உள்ள சிலரது நலன்கட்கு அந்த உண்மை பாதகமாக உள்ளதன் விளைவாகத் தனது கண்டுபிடிப்பைத் ‘திருத்தி’ எழுதுமாறு விஞ்ஞானி கட்டாயப்படுத்தப்படுகிறார். அதை அவர் ஏற்க மறுத்து அதன் விளைவுகளை எதிர்கொள்கிறார். இதன் மூலம் வலியுறுத்தப்படுவன இரு விடயங்கள்: உண்மைகள் பங்கப்படுத்தக் கூடாதன. உண்மையைத் திரிப்பதற்கு முற்படுகிறவர்கள் தவிர்க்க இயலாமல் வக்கிர நடத்தை உள்ளவர்களாகிச் சீரழிகின்றனர்.

உண்மை என்பது பெரும்பான்மை வலிமையால் நிறுவப்படுவதல்ல என நாம் அறிவோம். எந்தச் சரியான கருத்தும் முதலில் சிறுபான்மைக் கருத்தாகவே தொடங்கிக் காலப்போக்கில் பெரும்பான்மையினரைத் தன் வசமாக்குகிறது. இதற்கு மனித இன வரலாற்றில் நிறைய ஆதாரங்களைக் காட்டலாம். இதைத் தனிநபர்வாத நியாயங்களுடன் நாம் குழம்பிக் கொள்ள அவசியமில்லை. எந்த ஒரு உண்மையின் பெறுமதியும் அதன் சமூகச் சார்பாகவே தீர்மானிக்கப்படுகிறது என்பது சமூகத்தின் உடனடியான அங்கீகாரத்தை ஒரு உண்மையினதோ அதன் பெறுமதியினதோ அளவுகோலாக்கி விடாது. இதுவும் பயில்நிலம் விளங்கி கொள்ள வேண்டிய ஒன்று. "போர் எங்களை முகத்தில் உற்றுநோக்கியவாறு இருக்கையில், ஆக்கங்களில் அதன் முகமே அதிகம் வரையப்படுவது இயல்பானதே. எனினும் இளம் படைப்பாளிகள் சோர்ந்துவிடக்கூடாது. ஒடுக்குமுறைப்போருக்கு எதிரானதும் நியாயத்திற்கானதுமான குரலாகவே படைப்புக்கள் ஒலிக்க வேண்டும் என்பது எம் எண்ணம்." என்று பயில்நிலத்தின் ஆசிரியத் தலையங்கம் சொல்கிறது.

இந்தப் பயில்நிலம் இதழின் முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால் மிகக் குறைவான கவிதைகளே இடம் பெற்று இருக்கின்றன. மற்ற எல்லா இலக்கிய வடிவங்களையும் போலன்றி நீண்டகால மரபு (முறிவுகளுடன் தான்) உள்ள தமிழ்க் கவிதையின் பின்னணியில் அதிகமாக எதிர்பார்க்க எல்லாரையும் போல் எனக்கும் உரிமை உண்டு. இன்று கவிதைத் துறையில் பலரும் புதுக்கவிதையை ஒரு இலகுவான மார்க்கமாகப் பயன்படுத்த முனைந்துள்ளார்களே ஒழிய மரபின் குறைபாடுகட்கு ஈடுகட்டும் ஒரு வலிய ஆயுதமாகப் பயன்படுத்தவில்லையோ என்ற கேள்வி சில சமயம் பயனுள்ள பதில்களைத் தரலாம். ஆனால் இதற்கான பதிலைப் பயில்நிலம் குழுவினரே தரவேண்டும். அதேவேளை இலங்கைத் தமிழ்க் கவிதை பற்றி எனக்குச் சில அச்சங்களும் ஐயங்களும் இருக்கின்றன. கவிதையின் பல்வேறு பரிமாணங்களையும் சாத்தியக் கூறுகளையும் துணிவுடன் அலசி ஆராய்வதில் உள்ள போதாமை, 'சாதனைகள்” பற்றிய சுயதிருப்தி, விமர்சனங்களை ஏற்பதில் தயக்கம், பரஸ்பரம் புகழ்மாலை சூட்டும் குறுகிய வட்டங்கள், எல்லா இலக்கியத் துறைகளையுமே பாதிக்கும். கிணற்றுத் தவளை மனோபாவம் போன்ற பலவற்றை என்னால் உணரமுடிகிறது. இடதுசாரி அரசியல் கோஷங்களையே கவிதையாக்கும் பலவீனத்தை எளிதாகக் கண்டு கொள்ளும் பலரால் சிந்தனைத் தேக்கத்தை அடையாளங் கண்டுகொள்ள முடிவதில்லை.

அலங்கார வார்த்தைகளையும், படிமங்களையும், குறியீடுகளையும் கொண்டு சிந்தனைத் தேக்கத்தை யாருக்கும் தெரியாமல் மூடுவதில் ஒருவரது கவிதை வெற்றி காணலாம். ஆனால் கவிதையின் வளர்ச்சியைச் சிந்தனையின் வளர்ச்சியினின்று பிரிக்க முடியாது. முடங்கிய சிந்தனைச் சூழலில் கவிதையும் முடங்கியே போகும். அவ்வாறு முடங்கிய சிந்தனையின் வழிப்பட்ட கவிதைகளை பிரசுரிப்பதை விட பிரசுரிக்காமல் விடுவது மேல்.

பேசக்கூடாத, பேசப்படாத விடயமாக இருக்கும் பல விடயங்களைப் பேசவே 'பேசப்படாதவை” என்ற பத்தி தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில் இம்முறை கோழியா முட்டையா எது முதலில் வந்தது? என்ற கேள்விக்கான விஞ்ஞான பூர்வமான பதில் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. இது வாசித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. இதே போல அறிவியல் நோக்கில் இரு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஒன்று நனோ தொழில்நுட்பம் மற்றையது பிறப்புரிமைசார் ஆலோசனைகள். இரண்டும் பல புதிய உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய பல பயனுள்ள தகவல்களைத் தருகிறது.

கலப்பு என்ற தலைப்பில் உள்ள லாங்ஸ்டன் ஹியூசின் கவிதை பல கேள்விகளை என்னுள் எழுப்பியது. இன உணர்வு பற்றி யாருமே அதிகம் கூச்சப்படுவதில்லை. சில சமயம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய விஷயமாகவே இன உணர்வு இருந்துள்ளது. என்னளவில் இன உணர்வு என்பது ஆழ்ந்த நோக்கில் அர்த்தமற்ற ஒன்று. ஆயினும் சமுதாயத்தில் இனவேறுபாடுகள் உள்ளபோது அவ்வவ்வேறுபாடுகள் வாழ்வின் வெவ்வேறு துறைகளைப் பாதிக்கும்போது அந்த உணர்வைப் பெரும்பாலானோரால் தவிர்க்க முடிவதில்லை.

இன உணர்வு என்பது ஒரு மனிதனது தன்னடையாளங்களில் ஒன்றாகச் செயற்படுகிறது. அது மொழி, மதம், கலாசாரம் போன்ற பல்வேறு வகையில் வெளிப்படும். அது முற்றாகப் புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல. மனித சமுதாயமும் சிந்தனையும் மேலும் வளர்ச்சியடையும்போது இன உணர்வுகள் சற்றே ஒதுங்கி வழிவிடவே செய்யும். ஆயினும் மனிதனை அவன் உள்ளவாறே ஏற்றுக்கொள்ளும் எந்தச் சிந்தனையும் இன உணர்வுகளை மதியாமல் இருக்கமுடியாது. இன்றைய சூழ்நிலையில் இன உணர்வு என்பது இயல்பான ஒன்று என்ற அளவில் மதிக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. இதைக் கடப்பவர்கள் குறுகிய சுயநலனுக்காக கடப்பவர்களாக இருக்கலாம் அல்லது பரந்துபட்ட மனித இன முழுமையினது நலன் நாடுபவர்களாக இருக்கலாம். எனவே இன உணர்வு இல்லாமை என்பது மட்டும் முற்போக்கான ஒன்றாகிவிடாது. அதன் இடத்தில் பரந்துபட்ட மானுட உணர்வு உள்ளதா அல்லது வெறும் சுயநலமோ சுரண்டும் வர்க்க நலமோ உள்ளதா என்பதையொட்டியே இன உணர்வு இல்லாமையை மதிப்பிட முடியும்.

மனிதர் மத்தியில் இன உணர்வுகள் வேறுபடும் அளவுகளில் இருக்கலாம். தன் இனத்தின் நலனை மற்ற இனங்களின் நலன்கட்கு முரணானதாகக் காணவும் காட்டவும் முனையும் போதும் தன் இனத்தின் இயல்புகளை இன்னொரு இனத்தினதும் மேலான ஒன்றாகக் காட்ட முனையும் போதும் இன உணர்வு இனவாதமாகிறது. இது மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு, கலாசார வேறுபாடுகளை ஏற்றத்தாழ்வுகளாகத் தரம் பிரித்தல், பிரச்சினைகளை இனமொன்றின் கண்ணோட்டத்தில் மட்டுமே தனிமைப்படுத்திக் காண முனைதல் போன்று தன்னை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. இன உணர்வு இனவாதமாகும்போது முரண்பாடுகள் பகைமைத் தன்மை பெற ஆரம்பிக்கின்றன. பகைமை உணர்வுகள் வளர்ந்து சகிப்புத் தன்மையின் எல்லை மீறப்படும்போது இனவாதம் இன வெறியாகிறது.

ஒரு சமுதாயம் முன்னேறிய “நாகரிக” சமுதாயம் என்பதால் அங்கே இனவாதமும் இனவெறியும் இல்லை என்றாகாது. ஐக்கிய அமெரிக்காவில் நீக்கிரோக்களுக்கு எதிரான இனவெறி, தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி, ஹிட்லரின் ஜேர்மனியில் ஆரிய இனவெறி இவையெல்லாம் பின்தங்கிய சமுதாயங்கட்குரியவல்ல. இனவாதமும் இனவெறியும் தொற்று நோய்களைப் போல் பரவுகின்றன. ஒரு இனத்தின் இனவாதமும் இனவெறியும் மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி வளர்த்து, அதன் மூலம் தம்மையும் வளர்த்துக் கொள்கின்றன. இன்றைய காலகட்டத்தில் தேசியவாதத்தின் அடிப்படையையும் அதன் வளர்ச்சிப் போக்கினையும் மக்கள் விளங்கிக்கொள்ளும் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாகத் தேசியவாதத்தினுள் அடங்கியிருக்கும் சாதக-பாதக அம்சங்களைப் பகுத்தறிந்து கொள்வது அவசியமாகிறது. தேசியவாதத்தின் எல்லைகளையும் அதனால் எவ்வளவு தூரம் சாதகமான பாதையில் பயணிக்க முடியும், அதற்கு அப்பால் அது ஏற்படுத்தக் கூடிய ஆக்கபூர்வமற்ற அழிவுகளின் தன்மை எத்தகையவை என்பதைத் தூரநோக்குடன் கண்டறிதல் தேவையாகிறது.

படைப்புக்கும், படைப்பாளிகளுக்குமான உறவும் உருவாக்கமும் முக்கியமானது. அடுத்து படைப்புக்கும் வாசகனுக்குமான உறவும், உரையாடலும் முக்கியத்துவம் பெறுகிறது. இவை அனைத்தையும் சாத்தியமாக்கப் பயில்நிலம் முனைய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
எல்லாவித அதிகாரங்களுக்கும் வாய்பேசா மௌனியாக இருந்துவிட்டு அதிகாரம் தமது இருப்பை அசைக்கின்றபோது கிணற்றுக்குள் இருந்து வெளியில் வந்த மனிதனைப் போல் சமூகத்தை எதிர்கொள்கிற மனநிலையிலிருந்து புதிய இளம் தலைமுறை வெளியேற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மாற்றங்களை வேண்டிப் பயணிக்கும் பயில்நிலம் தடைகளைக் கடந்து பயணிக்கும் என்ற நம்பிக்கையில்......
இது தொடர்பான மயூரனின் பதிவு: http://mauran.blogspot.com/2009/02/blog-post.html

Friday, February 29, 2008

சுஜாதா...என்றும் தமிழோடு.

இருக்கும்வரை அருமை தெரிவதில்லை இறந்தவுடன்தான் இழப்பை உணர்கின்றோம். அல்லது இருக்கும்போது அருமை பெருமைகளைப் பேசி புகழ்மாலை சூட்டும் வழமை தமிழனிடம் இல்லை. உண்மையில் சுஜாதா, வாழ்நாட்சாதனையாளன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு எழுத்தாளன்.

தனது கடைசிக் காலம்வரை எழுதிக்கொணடேயிருந்த ஒரு வெற்றி எழுத்தாளன். எனக்குத் தெரிந்தவரை இன்றுவரை தமிழில் விஞ்ஞானச் சிறுகதைகளுக்காக ஒரு எழுத்தாளன் சஜாதாவேதான். அவரது என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ என்னும் நாவல்கள் ஒரு சிறிய இயந்திர நாய்க்குட்டிக்கு மனிதர்கள்போல உணர்ச்சிகள் வருவதுபற்றிய ஒரு அருமையான விஞ்ஞானப் புனைகதை (Science Fiction) கள். இது ஒரு உதாரணமே. அவரது ஒவ்வொரு படைப்புக்களும் தனித்துநின்று வாழக்கூடியவை.

இங்கே ஆனந்தவிகடனில் மிகவும் வெற்றிபெற்ற தொடராக வந்த அவரது கற்றதும் பெற்றதும் இனைப் பற்றிக் கூறியாகவேண்டும். கற்றதும் பெற்றதும் தமிழுக்குப் புதிது. அது கட்டுரையல்ல, கவிதையல்ல, விமர்சனமுமல்ல. அது ஒரு புதுமாதிரியான ஒரு எழுத்துநடை. வாசித்து மட்டுமே அனுபவிக்கக்கூடிய படைப்பு.

அவர் தனது எண்ணங்களையும் எழுத்துக்களையும் குறிப்பிட்ட வகைகளுக்குள் மட்டும் மட்டுப்படுத்திக் கொண்டவரல்லர். விஞ்ஞானம், வாழ்க்கை, ஆன்மீகம் (அவரது சில ஆன்மீக்க கட்டுரைகளுடன் எனக்கு உடன்பாடில்லை), தமிழிலக்கண இலக்கியம், கவிதை, விமர்சனம் மற்றும் சினிமா என எல்லாத்துறைப் படைப்புக்களிலும் வெற்றியீட்டிய ஒரு படைப்பாளி.

தமிழில் எழுத்துச் சீர்திருத்தங்கள் மற்றும் மொழி ஆராச்சிகளில் சிறந்த முடிவுகளையும் விமர்சனங்களையும் தந்தவர்.

மொத்தத்தில் எழுத்துத்துறைக்கும் தமிழுக்கும் அவரது மறைவு (27. 02 2007 அன்று) ஒரு ஈடுசெய்யமுடியாத இழப்பு.

தமிழ்ப்பூங்கா சார்பாக எமது அஞ்சலிகளை அவருக்குக் காணிக்கையாக்குகிறோம்.
____________________________________________________

சுஜாதா எங்கோவொருமுறை எழுதியது: தமிழ்ப் புணர்ச்சி விதிகளில் எனக்கு இன்னமும் புரியாதவொன்று,

தங்கம் + காசு = தங்கக்காசு (திரிதல் விகாரம்)

சங்கம் + காலம் = சங்ககாலம் (கெடுதல் விகாரம்)

சங்கக்காலம் எனப்படவேண்டியது ஏதோவொரு காரணத்தால் சங்ககாலம் எனப்படுகிறது
____________________________________________________

சுஜாதாவின் 'கடவுள்' கட்டுரை தொகுப்பிலிருந்து,

மனிதனைப்
பொறுத்தவரை உயிர் என்பது உடல் இயக்கமா ? அவன் நினைவுகளா ?........
உயிர்
என்பது என்ன அன்று ஆதாரமாக சிந்திக்கும் பொழுது, நம் ஞாபகங்கள் தான் உயிர்...



Wednesday, February 27, 2008

உள்ளொன்று வைத்துப் புறமொன்று...

பழமொழி: "பந்திக்கு முந்து படைக்கு பிந்து"

வெளிப்படை விளக்கம் : உணவு சம்மந்தப்பட்ட விடயங்களுக்கு உடனடியாக செல்; சண்டை சம்மந்தப்பட்ட விடயங்களுக்கு போவதை குறை.

உண்மை விளக்கம் : எப்பொழுதும் கல்வி கலைகளில் சிறந்து விளங்கு.

உண்மை விளக்க விளக்கம் : எமது பண்டைய வரலாறுகளில் ஒரு பந்திக்கு முதலில் அழைப்பது கல்வி கலைகளில் சிறந்து விளங்கிய ஒருவரையே அத்துடன் ஒரு படைக்கு பின்னால் தலைவனாக நின்று அதை வழிநடத்தி செல்வதும் கல்வி கலைகளில் சிறந்து விளங்கும் ஒருவரே.