Tuesday, August 5, 2008

நாராயணனும் நாரதரும் விக்கிரமாதித்தனும்...

பத்திரிகைகளில்> சஞ்சிகைகளில் என ஏராளமான பத்தி எழுத்துக்களை வாசிக்கக் கிடைக்கிறது. குறிப்பாக ஈழத்தில் தமிழில் வருகிற பத்தி எழுத்துக்கள் பல> பலவீனமானவை. அண்மைய சில அரசியல் நிகழ்வுகள் எனக்கு கடந்தாண்டு வாசித்த ஒரு பத்தியை நினைவுபடுத்தின. அப்பத்தியின் எள்ளல் தொனியும் நகைச்சுவையுமே அப்பத்தி என் மனதில் நிற்கக் காரணம். வாசித்துப் பாருங்கள்:

"வழக்கமாக நாராயணன் என்ற பேரைக் கேட்டால் எனக்கு நாரதர் தான் நினைவுக்கு வருவார். ஏனென்றால் நான் பார்த்த சினிமாப் படங்களிலெல்லாம் நாரதர் வரும் போது "நாராயணா" என்று சொல்லிக் கொண்டுதான் வருவார். இந்த முறை நாராயணனே திருவாய் மலர்ந்தருளியுள்ளார். ஆனாலும் அவர் பேச்சு நாரதருக்குத் தான் கூடப் பொருந்தும். இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு ஆலோசனை என்னவென்றால் இலங்கை தனது பாதுகாப்புத் தேவையான ஆயுதங்களைச் சீனாவிடமிருந்தோ பாகிஸ்தானிடமிருந்தோ பெறக்கூடாது. மாறாக இந்தியாவிடமிருந்தே பெற வேண்டும் என்பதுதான். அது ஆலோசனையோ ஆணையோ எனக்குத் தெரியாது. ஏனென்றால் இலங்கையில் தீக்ஷித் முதலாக நிருபம் சென் உட்பட நிருபமா ராய் வரை இந்தியத் தூதுவர்களே கொலனி யுகத்தின் வைஸ்ராய் தோரணையிலேயே பேசி வந்திருந்த போது நாராயணன் மட்டும் ஏன் வேறு விதமாகப் பேச வேண்டும்? அவர் இந்திய அரசாங்கத்தின் சார்பாகத் தான் பேசினாரா? அதற்கான அதிகாரத்தை யார் அவருக்கு வழங்கினார்கள்? அப்படி அவர் தனக்கு இல்லாத ஒரு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தால் உடனேயே அதை மறுத்து இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரோ வெளிவிவகார அமைச்சரோ ஒரு அறிக்கை விடுத்திருக்கலாம் அல்லவா! ஆனால் ஆகாசவாணியின் செய்தி ஒலிபரப்பு அந்த அறிவுரைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறதே! எனவே அந்த ஆலோசனையையோ ஆணையையோ நாம் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

நாராயணன் ஒரு நிபந்தனையுமல்லவா போட்டிருக்கிறார். ஆயுதங்கள் தற்காப்புக்கானவையாக இருக்க வேண்டும். இங்கே எனக்கு வேறு சந்தேகங்களும் எழுகின்றன. தற்காப்புக்கான ஆயுதம் எது? கத்தி, வாள், துவக்கு? எனக்குத் தெரியக் கேடயம் ஒன்று தான் தற்காப்புக்கான கருவி. அது ஆயுதமாகுமா? மகாபாரதத்தில் நிராயுதபாணியாக்கப்பட்ட அபிமன்யுவின் கையில் அகப்பட்ட தேர்ச்சில்லும் ஒரு ஆயுதமாகச் செயற்பட்டதாம். அப்படியானால் எவையெவை தற்காப்புக்கான ஆயுதங்கள் என்று ஒரு பட்டியலிட்டால் உதவியாக இருக்கும். இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்கா வழங்குகிற ஆயுதங்களும் போர் விமானங்களும் எந்த வகையில் அடங்கும்? ஒரு வகையிற் பார்த்தால் எதிரியிடம் உள்ள எந்த ஆயுதத்தையும் முறியடிக்கக் கூடிய வேறெந்த ஆயுதமும் தற்காப்புக்கானது தான். அந்த அடிப்படையில் இன்று ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனும் கையில் வைத்திருக்கும் உரிமையைக் கொண்ட பலவாறான துப்பாக்கிகள் முதலாக அமெரிக்காவின் அனைத்து அணு ஆயுதங்களும் அவற்றைக் காவிச் செல்ல வல்ல விமானங்களும் நீர் மூழ்கிக் கப்பல்களும் ஏவுகணைகளும் தற்காப்புக்கானவையே. நச்சு வாயுவும் இரசாயன ஆயுதங்களும் உயிரியல் ஆயுதங்களும் கூட அமெரிக்காவிடம் இருந்தால் தற்காப்புக்கானவையே.

எப்படியிருந்தாலும், இந்தியாவின் எஜமானர்களிடம் எந்தெந்த ஆயுதங்கள் தற்காப்புக்கானவை என்றும் எந்தெந்த ஆயுதங்கள் தாக்குதலுக்கானவை என்றும் ஒரு தெளிவான வரையறுப்பு இருக்கக்கூடும். அதன் அடிப்படையில் இந்தியா தனது காந்திய நெறிப்படி அதை நீங்கள் இந்திரா காந்திய, ராஜீவ் காந்திய, சோனியா காந்திய, ராகுல் காந்திய என்று எப்படி வைத்துக் கொண்டாலும், அந்த நெறிப்படியே, பாதுகாப்புக்கான ஆயுதங்களை மட்டுமே இலங்கைக்கு விற்கும் அல்லது விலைக்கு வழங்கி உதவும். சீனாவோ பாகிஸ்தானோ அத்தகைய ஆயுதங்களை இலங்கைக்கு விற்றால் இந்தியா யாரைத் தண்டிக்கும்? சீனாவையா? பாகிஸ்தானையா? இலங்கை அரசையா? விடுதலைப் புலிகளையா? இந்த மாதிரிக் கேள்வி ஒன்றை வேதாளம் விக்கிரமாதித்தனிடம் முதலிலேயே கேட்டிருந்தால் ஆறுதலாகத் தனது முருங்க மரத்தில் அலுப்பில்லாமல் சீவித்திருக்கலாம். விக்கிரமாதித்தனுக்குக் கதை சொல்ல ஒரு காட்டேரியோ கொள்ளிவாய்ப் பிசாசோ அகப்படாமலா போயிருக்கும்!"

ஞாயிறு தினக்குரலில் கோகர்ணன் எழுதிய "மறுபக்கம்" பத்தியிலிருந்து…..

3 பின்னூட்டங்கள்:

ISR Selvakumar said...

//நாராயணன் ஒரு நிபந்தனையுமல்லவா போட்டிருக்கிறார். ஆயுதங்கள் தற்காப்புக்கானவையாக இருக்க வேண்டும். இங்கே எனக்கு வேறு சந்தேகங்களும் எழுகின்றன. தற்காப்புக்கான ஆயுதம் எது? கத்தி, வாள், துவக்கு? எனக்குத் தெரியக் கேடயம் ஒன்று தான் தற்காப்புக்கான கருவி. அது ஆயுதமாகுமா? மகாபாரதத்தில் நிராயுதபாணியாக்கப்பட்ட அபிமன்யுவின் கையில் அகப்பட்ட தேர்ச்சில்லும் ஒரு ஆயுதமாகச் செயற்பட்டதாம். அப்படியானால் எவையெவை தற்காப்புக்கான ஆயுதங்கள் என்று ஒரு பட்டியலிட்டால் உதவியாக இருக்கும். இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்கா வழங்குகிற ஆயுதங்களும் போர் விமானங்களும் எந்த வகையில் அடங்கும்//
அருமையான வாதம்

Anonymous said...

Dear Ekalaiva,

Very good blog. An intelligent column, which has been written in a very sarcastic way. Keep updating with these kinds of columns whenever you come across, it will make it easy for blog readers to follow.

Why there are no blogs in the last few weeks. What happened, Hope everyone is fine. You all have disappointed me for the last two weeks. It has become a silent blog. Why?

Best regards,
Vinothini Kumaran

மதுவர்மன் said...

வினோதினி,

இங்கே கொழும்பில், நாங்களெல்லோரும், இரண்டு நாள் தேசிய மாநாடொன்றை (ஆகஸ்ட் 23, 24) நடாத்தவேண்டியிருந்தது. அது சம்பந்தமான தயாரிப்பு வேலைகளிலும், அதற்கு பின்னரான வேலைகளிலும் அதிகம் ஈடுபட்டிருந்தபடியால், பதிவெழுதலில் கொஞ்சம் தடங்கலேற்பட்டது.

இனி பழையபடி, எமது பணிகள் தொடரும். நீங்களும், தமிழ் பூங்காவில் எழுதுவது பற்றி கருத்தில் கொள்ளலாமே.

தமிழ் பூங்காவின் வலைப்பதிவர்களை கொண்டு ஆங்கிலத்தில் ஒரு கூட்டு பதிவை ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கின்றது. என்ன சொல்கின்றீர்கள். அதிலே எழுத உங்களுக்கு மிக வசதியாக இருக்கும் என் நம்புகின்றோம்.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி