Saturday, May 10, 2008

கவனம், நகைக்கடைகளில் நீங்கள் கொள்ளையடிக்கப்படலாம்! (சம்பவத்தின் ஒலிப்பதிவுடன்)

தங்கநகைகள் வாங்கும்போது நாங்கள் என்ன என்ன விடயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று உண்மையான சம்பவங்களுடன் இங்கே விளக்கப்படுகின்றது. மிகச்சரியான விடயங்கள் கட்டுரையின் இறுதியிலேயே குறிப்பிடப்படுகின்றன, ஆகவே கடைசிவரை வாசியுங்கள். சம்பவத்தின் ஒலிப்பதிவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

(2008 - 05 - 06 செவ்வாய்க்கிழமை) என்னுடைய நண்பரொருவருக்கு (சக பணியாளர் - பெண்) பரிசளிப்பதற்காக, தங்கத்தினாலான பதக்கமொன்று வாங்குவதற்கு, அண்மையில், நானும், இரண்டு நண்பர்களும் (சக பணியாளர்கள் - பெண்கள்) கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள பிரபல்யமான (நான்கைந்து மாடிகள் கொண்ட) ‘வெள்ளவத்தை நித்தியகல்யாணி' நகைக்கடைக்கு (Wellawatta Nithyakalyani Jewellery) சென்றிருந்தோம். தங்கத்தின் விலை உலக அளவில் அதிகரித்திருப்பதால், ஆபரணத்தின் விலையும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம்.

கடையிலே பலவேறுபட்ட பதக்கங்களையும் பார்த்துவிட்டு, ஓரளவு மனதுக்கு பிடித்த ஒன்றை எடுத்து அங்கே நின்ற இளஞரிடம், விலையை கேட்டபோது, கணிப்பானை (Calculator) எடுத்து கண்டபடி தட்டிவிட்டு, விலை 7100 ரூபாய்கள் என்று சொன்னார்.

என்னுடைய சந்தேகம், விலை கொஞ்சம் அதிகமாகவே பட்டது எனக்கு. ஆகவே ஆராயும் நோக்கத்தோடு ‘எப்படி விலையை கணிக்கின்றீர்கள்?” என்று அவ்விளைஞரிடம் கேட்டேன்.

அவர் சொன்னார் “இப்போது நகையிலுள்ள (22 கரட்) தங்கத்த்தின் அளவுக்கான விலை + 12% சேதாரமான தங்கத்தின் விலை + செய்கூலி என்ற கூட்டுத்தொகையுடன், அக்கூட்டுத்தொகைக்கான 6% வரியையும் உள்ளடக்கவேண்டும்” என்றார். (இப்படி வரியெதுவும் நடைமுறயில் இல்லை என்பது பின்பு அறிந்துகொண்டது)

அவர் சொன்னவற்றை உள்வாங்கிக்கொண்டு, அவரிடமே கணிப்பானை (Calculator) வாங்கி நானே கணிக்க ஆரம்பித்தேன். ஆபரணத்திலுள்ள தங்கத்தின் அளவு அதிலே குறிப்பிடப்பட்டிருந்தது (1.36g)

8 g தங்கத்தின் விலை இப்போது (2008 மே) ரூபா 23 120/=

ஆகவே 1.5 g தங்கத்தின் விலை = ரூ (23 120/8) x 1.36 = ரூ 3930 --------- (1)

12% சேதாரமான் தங்கத்தின் அளவு = (1.36/100) x 12 g = 0.1632 g

சேதாரமான தங்கத்தின் விலை = (23 120/8) x 0.1632 = ரூ 471.648 --------(2)

செய்கூலி (அவர் சொன்னது) = ரூ 1200.00 --------(3)

இப்போது கூட்டுத்தொகை = 3930.00 + 471.648 + 1200.00 = ரூ 5601.648

6% வரித்தொகை = ரூ (5601.648/100) x 6 = 336.09888 ----------(4)
(வரி 6% தான் என்பதை இன்னொருவரிடமும் உறுதிப்படுத்திக்கொண்டேன்)

ஆகவே இப்போது பதக்கத்த்தின் இறுதி விலை = (1) + (2) + (3) + (4)
= ரூ 3930.00 + 471.648 + 1200.00 + 336.09888
= ரூ 5937.75
பார்த்தீர்களா இப்போது விலை, அவ்ர் சொன்ன விலையைவிட 1162 ரூபாய்கள் குறைவாக வருகின்றது. இப்படித்தான் அப்பாவி மக்கள் இந்த வியாபாரிகளால் ஏமாற்றப்படுகின்றார்கள். முக்கியமாக, புடவைக்கடைக்காரர்களும், நகைக்கடைக்காரர்களும் இவ்விடயத்தில் விண்ணர்கள்.

இறுதியில், பதக்கத்திற்கு 7100 ரூபா விலை சொன்ன இளைஞரை பார்த்து நாங்கள் மூவரும் நக்கலாக சிரிக்கவேண்டியதாயிற்று. அவருக்கு சூடாக இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டு அப்பால் நகர்ந்தோம்.

அதே நகைக்கடையின், தங்க மோதிரங்கள் விற்கும் பகுதிக்கு சென்று மோதிரங்களை பார்த்தோம். அங்கே வேறொரு இளைஞர், நாங்கள் மோதிரமொன்றை காட்டி விலையை கேட்க, கணிப்பானை (Calculator) எடுத்து வேகமாக தட்டிவிட்டு, 5500 ரூபாய்கள் என்றார். முந்தைய சம்பவத்தை பற்றி அறிந்திராதவர் அவர்.

இங்கேயும் விலை கணித்த விதத்தை விபரமாக கேட்கவேண்டியதாயிற்று. முன்னர் கேட்டது போலவே இவ்விளைஞரிடம் கேட்க ஆரம்பித்தபோது, சுதாகரித்துக்கொண்ட இளைஞர், மீண்டுமொருமுறை கணிப்பானை (Calculator) கடுமையாக தட்டிவிட்டு, இப்போது 4500 ரூபாய்கள் என்றார். எங்கள் மூவருக்குமோ சிரிப்பை அடக்கமுடியவில்லை :). அவருக்கும் நக்கலாக இரண்டு வார்த்தைகள் சொல்லவேண்டியதாயிற்று. அவரும் கூட 6% வரியை உள்ளடக்கியதாக சொன்னார்.

(2008 - 05 - 10 சனிக்கிழமை) மேற்படி விடயம் சம்பந்தமாக வேறுசில பிரபல்யமான நகைக்கடைகளுடன் கலந்தாலோசிக்கவேண்டி, சுவர்ணமஹால் (Swarna Mahal Jewellers) நகைக்கடைக்கு தொலைபேசி எடுத்தேன். அவர்களை, 'எவ்வாறு நீங்கள் ஆபரணங்களுக்கு விலைகளை மதிப்பிடுகின்றீர்கள்' என்று கேட்டபோது, ஆபரணத்தில் காணப்படும் தங்கத்தின் விலை (8g 24000.00) + சேதாரமான (அங்கே 10%) தங்கத்தின் விலை + செய்கூலி (சராசரி 1000 ரூபாய்) என்று சொன்னார்கள்.

நித்தியகல்யாணியில் குறிப்பிட்டமாதிரி, வரியெதுவும் எனக்கு சுவர்ணமஹாலில் சொல்லப்படவில்லையாதலால், சந்தேகத்தோடு மீண்டும் அவர்களிடம் கேட்டேன், ‘நீங்கள் வரியெதுவும் புறம்பாக உள்ளடக்குகின்றீர்களா?' என்று. அப்படியெதுவும் இல்லை என்று எனக்கு சொல்லப்பட்டது. இது சுவர்ணமஹாலின் விலை மதிப்பு முறை.

பின்பு பிரபல்யமான வொக் (Vogue Jewellers Ltd) நகைக்கடையுடனும் தொடர்புகொண்டு கேட்டபோது, சுவர்ணமஹாலில் சொல்லப்பட்ட அதேமுறை எனக்கு சொல்லப்பட்டது. வெளிநாட்டவர்கள் என்றால் சிறுவரி மேலதிகமாக சேர்ப்பதாக சொன்னார்கள் அங்கே. இலங்கையர்களுக்கு அப்படியெதிவும் இல்லை. அத்துடன் நகையிலே கற்ற்களெதுவும் பதிக்கப்பட்டிருந்தால், அதன் சிறிய விலையொன்றும் சேர்க்கப்படுவதாக சொன்னார்கள்.

இதற்குப்பின், மீண்டும் நித்திய்கல்யாணி நகைக்கடையுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, பிரேம் என்பவர் என்னுடன் கதைத்தார். அவரிடமும் மேற்படி கேள்வியை கேட்டபோது, அவரும் சுவர்ணமஹாலிலும், வொக்கிலும் எப்படி சொன்னார்களோ அப்படியே சொன்னார், ஆனால் சேதாரத்தை 14% என்றார் (கவனிக்க, முன்பு அங்கே 12% என்று எனக்கு சொல்லப்பட்டது. ஆச்சரியத்தோடு அவரிடம் கேட்டேன், 'வரியெதுவும் இல்லையா' என்று. அப்படியெதுவும் இல்லை என்றார். ‘உங்களது கடையில், போன செவ்வாய்க்கிழமை வந்தபோது 6% வரி என்று ஒரு புறம்பான தொகையை சொன்னார்களே” என்றபோது, மீண்டும் அவர் “அப்படியெதுவும் இல்லை” என்றார்.

Get this widget
Track details
eSnips Social DNA


ஆகவே இந்த குழப்பங்களை பற்றி மேலும் விசாரிக்க, நித்தியகல்யாணி நகைக்கடைக்கு நேரில் சென்றேன் (சம்பவத்தின் முழு ஒலிப்பதிவும் மேலே). சென்றமுறை நின்ற அதே இளைஞர் விற்பனையாளராக நின்றார். அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார். அவரிடம் ஒரு பதக்கத்தை எடுத்து விலையை கேட்டபோது, மீண்டும் கணிப்பானை பலமுறை தட்டிவிட்டு, 6950.00 ரூபாய்கள் என்றார். தங்கத்தின் நிறை 1.49g என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் அவரிடம் 'எப்படி விலையை கணித்தீர்கள்' என்று கேட்டபோது ‘தங்கத்தின்விலை + செய்கூலி + சேதாரம் + 6% வரி' என்றார். ஆகா, எனக்கு பிடி கிடைத்தமாதிரி.

முன்பு என்னுடன், தொலைபேசியில் கதைத்த பிரேம் என்றவரை கூப்பிடவேண்டியதாயிற்று. அவரிடம் கேட்டபோது அப்படி வரியெதுவும் இல்லை என்றதுடன், எனக்கு முன்பு விலை சொன்ன இளைஞருக்கும் இரகசியமாக ஏசினார். அவருடன் நான் சிறிது வாக்குவாதப்படவேண்டியதாயிற்று. அதன் பின், பிரேம் போய் இன்னொருவரை கூட்டிவந்தார். அவர்ர் நித்தியகல்யாணியின் முக்கிய பொறுப்பிலுள்ளவராக இருக்கவேண்டும். அவர் பல நியாயங்களை சொல்லத்தொடங்கினார். தாங்கள் விபரமான விலையெதுவும் குறிப்பிடுவதில்லையாம், மிகக்குறைந்த விலைகளிற்கே விற்பதாகவும். ஆகவே அவரிடம், முன்பு எனக்கு 6950.00 ரூபாய்கள் என்று சொல்லப்பட்ட பதக்கத்தை காட்டி, இதன் விலை என்ன என்று சொல்லுங்கள் என்றபோது, ஆச்சரியமாக 5700 என்று சொன்னார். பாருங்கள் முன்பு சொன்ன விலையைவிட, இந்நபர் சொன்ன விலை எவ்வளவு வித்தியாசமாக இருக்கின்றது என்று.

இவ்வளவுக்கும் இந்நகைக்கடை, கொழுப்பு வெள்ளவத்தையிலுள்ள மிகப்பெரியதொரு, பல மாடிகளை கொண்ட நகைக்கடை. அங்கே பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் தமிழர்களே, அங்கு நகை வாங்கப் போகின்றவர்களும் பெரும்பாலும் தமிழர்களே. தமிழர்களை இலகுவாக ஏமாற்றலாம் என்று தமிழர்கள் ந்ன்றாக அறிந்திருப்பார்களோ? ஏமாறக்கூடியவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

ஏமாற்றங்களை தவிர்க்கவேண்டுமாயின், நாம் ஒவ்வொருவரும் இது போன்ற விடயங்களில் விழிபுணர்வடையவேண்டும். நான் பெற்ற அனுபவத்தை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்வதன் மூலம், மற்றவர்களும் ஏமாற்றப்படுவதை தவிர்க்கலாம் என்ற நோக்கத்த்தில் இதை எழுதியுள்ளேன். ஆகவே தங்க நகை வாங்கும்போது, மேற்படி விடயங்களை கவனித்தீர்கள் என்றால், ஏமாற்றமடைவதை தவிர்த்துக்கொள்ளலாம்.

நகை வாங்கும்போது நீங்கள் கவனமாக இருக்கவேண்டிய விடயங்கள்:

1. ஆபரணத்திலுள்ள தங்கத்த்தின் நிறை, அதன் விலை.
- 8g (ஒரு பவுண்) தங்கத்தின் அன்றைய சந்தைவிலையை நகைக்கடைக்காரரிடமே கேட்டுதெரிந்துகொள்ளுங்கள், அதன்பின் ஆபரணத்த்தில் உள்ள தங்கத்தின் விலையை கணிக்கலாம்

உ+ம் - 8g தங்கத்தின் விலை 24000.00 எனறால்
1.5g தங்கத்தின் விலை (24000/8)x1.5 = 4500.00


2. சேதார வீதம்
- நகைக்கடக்காரரிடமே கேட்டுதெரிந்துகொள்ளுங்கள். இடத்துக்கிடம் சிறிது வேறுபடலாம்.

உ+ம் - 10% சேதாரம் என்றால்
1.5 g இல சேதாரமான தங்கத்தின் அளவு = (10/100)x1.5g = 0.15g
சேதாரமான தங்கத்தின் விலை = (24000/8)x0.15 = 450.00


3. செய்கூலி
-2008 இல் அண்ணளவாக பதக்கமொன்றுக்கு 1000 ரூபாவில் இருக்கின்றது

4.கற்கள் பதிக்கப்பட்டிருந்தால் கற்களின் விலை.

மேற்படி நான்கு பெறுமானங்களையும் கூட்டிவருவதே இறுதி விலையாக இருக்கமுடியும். ஆகவே நகைவாங்கும்போது மிகக்கவனமாக இருங்கள்.


மதுவர்மன் - mathuvarman (2008-05-10)

11 பின்னூட்டங்கள்:

ambi said...

மிகவும் பயனுள்ள பதிவு. இந்தியாவிலும் இது போன்ற கொள்ளைகள் நடைபெறுகின்றன.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. :))

Anonymous said...

மிகவும் விளக்கமான தெளிவான ஒரு ஆய்வு.

மதுவர்மன் said...

வாருங்கள் ambi,

இன்னும் இன்னும் இப்படியான விடயங்களை எழுத்வேண்டும் என நினைக்கின்றேன்.

அனுபவங்கள் மற்றவர்களுக்கு சிறந்த பாடங்களாக அமையும்.

நிறைய விடயங்கள் இருக்கின்றன எழுத, எழுதுகின்றேன்...

மதுவர்மன் said...

நன்றி talkouttamil,

இப்பதிவை எழுதுவதற்கு, ஒலிப்பதிவு செய்வதற்காக தான், அந்த நகைக்கடைக்கு இரண்டாவது தடவை சென்றேன்..

மக்களின் அப்பாவித்தனத்தை வைத்துக்கொண்டு ஏமாற்றுபவர்கள் தானே அதிகம் இருகின்றார்கள்.

முடிந்தவரை முயற்சிப்போம்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இவ்வாறான சிறு சிறு பதிவுகளே கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்றும் என நம்புவோம்

மதுவதனன் மௌ.

Anonymous said...

Awesome da anna

Anonymous said...

Can you write it in English as well... People should know it. I know they are cheaters. But, people believe them as the best jewels.

என்.கே.அஷோக்பரன் said...

மிகச்சிறந்த புலனாய்வுப் பதிவு. உடனடியாக அம்மாவுக்கு இதைக்காட்ட வேண்டும். வருஷா வருஷம் ஒழுங்கா கலண்டரும், டயறியும் அனுப்பியே வாடிக்கையாளர்களைக் கவர்ந்துவிடுகிறார்கள் வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜீவலர்ஸ். இதுல கொள்ளையடிக்கிறது 100 டயறிக்கும், கலண்டருக்கும் செலவழிக்கிறது 10 ஆக எங்களுக்கு 90 நட்டம்தான்.

நன்றி!

மதுவர்மன் said...

அஷோக்பரன்,

உங்கள் கருத்துக்கு நன்றி,
இறுதியாக நடந்து முடிந்த சம்பவங்களுடன், இதை மேலும் இற்றைப்படுத்துவதாக இருக்கின்றேன்...

விரைவில்...

யோ வொய்ஸ் (யோகா) said...

நேந்யை பதிவர் சந்திப்பில் நீங்கள் இந்த பதிவு சம்பந்தமாக கூறிய போது நான் அதை வாசிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இன்று வாசித்து விட்டேன். நீங்கள் கூறிய விடயம் உண்மைதான் எனக்கு இது வரை இந்த நகை வாங்கும் அனுபவம் இல்லை, இனி வாஙகும் போது கவனமாக இருந்து கொள்கிறேன்.

அருமையான பதிவு தொடருங்கள். (உங்கள் பாதுகாப்பும் முக்கியம், மீண்டும் போலிஸ் காவலில் போய் கஷ்ட படாமல் இருக்க கவனமாய் துப்பறியவும்)

மதுவர்மன் said...

யோ வாய்ஸ்,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இன்னும் எழுதொவோம் இப்படியான விடயங்களை...

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி