Sunday, May 4, 2008

மூடத்தனமான சிந்தனைகளும் பகுத்தறிவான விளக்கங்களும் 1

இத்தொடர் நாம் அன்றாடம் சந்திக்கின்ற மூடத்தனமான சிந்தனைகளைப்பற்றி பகுத்தறிவுடன் அலசப்போகின்றது.

உதாரணமாக, சமூகத்திலே பெரியமனிதர்களாக மதிக்கப்படுபவர்கள் யாரேனும் எப்போதாவது ஏதொவொரு விடயத்தைப்பற்றி சுவாரசியமாக சொல்லிவிட்டு போய்விடுவார்கள். எம்மில் அநேகர் என்ன செய்வரென்றால், அதைப்பற்றி துளியும் ஆராயாமல், அதை அப்படியே தாரகமந்திரமாக எடுத்துக்கொள்வர்.

இந்த எங்கள் மனோநிலையே, மூடப்பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கைகள் எங்களிடையே பல்கிப்பெருகவும், நிலைபெறவும் காரணமாயிற்று. எஙகள் சமுதாயத்தில் எத்தனையோபேர் இன்றும், சொல்லிலும் செயலிலும் மூடத்தனங்களை சுமந்துதிரிகின்றார்கள்.

அவைபற்றிய விழிப்புணர்வுக்காக இத்தொடர் எழுதப்படுகின்றது. இதிலே என்னுடைய கருத்து மட்டும் என்றாகாமல், பலருடைய கருத்துக்களையும் உள்வாங்கி இத்தொடர் பரிணாமமடைய காத்திருக்கின்றது. உங்கள் கருத்துக்களும் இங்கே காத்திரமாக இடம்பெறட்டும்.

இது என்னுடைய நண்பரொருவர், Google Talk அரட்டை மென்பொருளில், Personal Message ஆக இட்டிருந்தார்.

"நீ எந்த சமுதாயத்தில் வாழ்கிறாயோ அந்த சமுதாய மக்கள் உன் மரணத்திற்காகக் கண்ணீர் சிந்துவார்களானால் மரணத்தை பிச்சைஎடுத்தாவது பெற்றுக்கொள்."
அவருக்கே சொந்தமான கருத்தா எனக்கு தெரியாது. அல்லது யாரும் பிரபலமானவரொருவர் சொன்ன கருத்தா தெரியவில்லை.

எவ்வளவு மூடத்தனமான செய்தியை இது காவுகின்றது என்பது தான் என்னை ஆச்சரியப்படவைத்தது.

இதுதொடர்பான பகுத்தறிவு விளக்கத்தை தந்துவிட்டு இதன் முட்டாள்தனத்தை பற்றி அலசுவோம்.

இதற்கு பதிலளிப்பதாக அதே பாணியில் சொல்வதானால்..

"உன் மரணத்திற்காக உனது சமுதாய மக்கள் கண்ணீர் சிந்துவார்களானால், அது வாழும்போது உனது சமுதாயத்துக்கு நீ ஆற்றிய பணியினாலாகும். சமுதாயத்துக்கு நீ பெறுமதியானவன். ஆகவே முடிந்தவரை வாழ முயற்சி செய். சமுதாயம் உன் மரணத்துக்காக கண்ணீர் சிந்தப்போவதை கொஞ்சம் நீ பிற்போட்டுக்கொள்ளலாம்"
முன்னையது மூடத்தனமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. அழகான, அருமையான வாழ்க்கையை அழித்துக்கொள்ள சொல்கின்றது. ஒருவேளை மதங்கள் சொல்கின்ற மூடத்தனமான சிந்தனைகளை அடிப்படையாக இது கொண்டிருக்கலாம்.

இந்து மதமும், பௌத்தமதமும் பல பிறப்புக்கள் உண்டு என்கின்றன. இம்மூடச்சிந்தனை இந்த அருமையான மனிதப்பிறவியை பெறுமதியற்றதாக்கும் நோக்கத்திலானது.

பரீட்சையொன்றுக்கு படித்துக்கொண்டிருக்கின்றீர்கள். அப்பரீட்சையை ஒருதரம் மட்டுமே எழுதலாம் என்றிருந்தால், நீங்கள் அப்பரீட்ட்சைக்கு இயன்றவரை சிறப்பாக படித்து, அவ்வொருதரத்திலேயே சித்தியடைய முயற்சிப்பீர்கள்.

அவ்வாறில்லாமல், அப்பரீட்சையை எத்தனை தரமும் எழுதமுடியும் என்றிருந்தால், இம்முறை படித்துக்கொண்டிருக்கும் ஒருவர், 'இம்முறை விட்டால் அடுத்தமுறை' என்று சந்தர்ப்பங்களை வீணே கழிப்பதற்கு இடமேற்படுகின்றது.

அவ்வாறே இந்த மறுபிறப்பு கொள்கையும், மனிதவாழ்க்கையை நாசப்படுத்துகின்றது.

அநேகமான தற்கொலைகளுக்கு இது கூட ஒரு முக்கிய காரணமாக் அமையலாம். வாழ்க்கையிலே பிரச்சினைகளுக்கு ஆளாகி, மன உளைச்சலடைந்த ஒருவர், இந்த மறுபிறப்பை நம்பிக்கொண்டு, பின்வருமாறு ஒரு அபரிமிதமான முடிவை எடுக்கக்கூடும்.

"அட, இந்த பிறப்பிலை தான் எனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவில்லை. இவ்வாழ்க்கை ஒரே துன்பம் நிறைந்ததாக போய்விட்டது. அடுத்தபிறவியிலாவது ஒரு நல்ல, சந்தோசமான வாழ்க்கை கிடைக்கும். இறப்பதே இந்த துன்பங்களுக்கெல்லாம் ஒரே முடிவு"
பாருங்கள், எப்படியான நிலைக்கு இந்த மறுபிறவி என்ற மூடத்தனம் ஒருவரை இட்டுச்செல்லலாம்.

அவ்வாறே, இந்த சொர்க்கம், நரகம் என்ற கொள்கையும். இது அனேகமாக அனைத்து மதங்களும் சொல்லும் ஒன்று. மக்களை ஏமாற்ற மதவாதிகளால் பயன்படுத்தப்படும் முக்கிய ஆயுதமும் இதுவே.

இன்று உலகமெங்கும், மதத்துக்காக குண்டைக்கட்டிக்கொண்டு, தம்மையும் கொன்று, சூழவுள்ள அப்பாவிகளையும் கொன்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞனும் தான் சொர்க்கத்துக்கு செல்வதாகவே நினைத்துக்கொள்கின்றான். அதுமட்டுமல்லாமல், தன்னுடன்சேர்த்து, தான் கொல்பவர்களையும் சொர்க்கத்துக்கு தான் அனுப்புவதாக அவன் நினைத்துக்கொள்கின்றான். இதற்கு அவன் திட்டமிட்டவகையிலே நஞ்சூட்டப்படுகின்றான்.

அருமையான, விஞ்ஞானரீதியாக நிகழ்தகவு மிக முக குறைந்த இந்த மனித வாழ்க்கையை, அழித்துக்கொள்ளச்சொல்பவைதான், இந்த மறுபிறவி, சொர்க்கம் என்ற கொள்கைகளெல்லாம். இவைகள் மூடநம்பிக்கைகளைத்தவிர வேறொன்றுமல்ல.

இன்னும் வரும்....

-மதுவர்மன்

2 பின்னூட்டங்கள்:

மதுவதனன் மௌ. said...

மதுவர்மன்,

நல்லவொரு தொடர். தொடர்ந்து எழுதுங்கள்.

மதுவதனன் மௌ.

மதுவர்மன் said...

நன்றி மதுவதனன்,

மற்றவர்களும் இப்படியான விடயங்களை ஆராய்த்து தந்துதவினார்கள் என்றால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.

பார்ப்போம்..

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி