Tuesday, May 27, 2008

பெண்ணியமெனும் பெயரினிலே.....

பெண்ணியம் என்ற பெயரில் கவிதை, கதை கட்டுரைகளூடாக விதைக்கப்படும் விஷ விதைகளை பார்த்து வெறுத்துப்போய் இப்பதிவை இடுகின்றேன். நான் பெண்ணியம் பற்றி எதிர்க்கருத்துக்களை கொண்டவனல்ல. பெண் விடுதலையின் அவசியம் பற்றியோ Gender Equality இன் அவசியம்பற்றியோ எந்தவிதமான எதிர்கருத்துக்கும் இடமில்லை. என்றாலும்,

அனேகமாக பெண்விடுதலை பற்றிக்கதைக்கும் எல்லோரும், ஆணாதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பதை விடுத்து, ஆண்களெல்லோரும் பெண்களின் எதிரிகள் என்கிறமாதிரியாகத்தான் கூப்பாடு போடுகின்றனர். ஆண்களும் பெண்களும் இப்பூமியில் ஒன்றாக வாழவேண்டியவர்கள். ஆண்களை ஒதுக்கி பெண்களோ பெண்களை ஒதுக்கி ஆண்களோ வாழமுடியாது/கூடாது. ஆண்களிலாமல் வாழ, சந்ததிகளை உருவாக்கமுடியும் என்று கூறும் பெண்களே! ஆண்களிலாத சமுதாயத்தை உங்களால் உருவாக்க முடியுமா? முடியாதல்லவா? ஆண்களை எதிரியாக்கிகொண்டு ஆண்களும் வாழும் ஒரு சமுதாயதில் பெண்கள்மீதான வன்முறை, குடும்ப வன்முறையிலிருந்து சமூக வன்முறையாய்ப்போகும் ஒரு சூழ்நிலைதான் உங்கள் எதிர்பார்ப்பா?

பண்பாட்டு புரட்சியொன்றால் வென்றெடுக்கப்படவேண்டிய பெண்ணுரிமையை, ஆணெதிர்ப்பு சிந்தனைகளை தூண்டி பிரச்சினையை இன்னும் சிக்கலாக்க நினைக்கும் உங்களின் உள்நோக்கம்தான் என்ன? பெண்கள் மீதான அடக்குமுறையும் வன்முறையும் சமுகத்தில் புரையோடிப்போயுள்ளது. இதற்கு காரணம் நிச்சயமாக இந்த ஆணாதிக்க சமுதாய அமைப்புத்தான். காலங்காலமக விஷமூட்டப்பட்டு வந்த எங்களின் சிந்தனைமுறையை மாற்றுவதென்பது இலகுவான காரியம் இல்லைத்தான். ஆனாலும் முடியாத காரியமல்லவே?

சமயங்களும், காலங்காலமாக சொல்லப்பட்டுவந்த புராணக்கதைகளும், தற்போது தொலைக்காட்சிகளில் சீரியல்களில் காட்டப்படும் பிற்போக்குத்தனமான கருத்துக்களும் விதைக்கும் பெண்ணடிமைத்தனமான கருத்துக்களை தாண்டி இச்சமுதாயம் (பெண்களும் ஆண்களும்) பயணிக்கவேண்டிய தூரம் மிக நெடிது.

இச்சமயத்தில் ஒட்டுமொத்த ஆணாதிக்க சிந்தனைக்கும், பெண்கள்மீது வன்முறைபுரியும் தனிமனிதர்களுக்கும்(இருபாலாரும் இதிலடங்குவர்) எதிராக ஒட்டுமொத்த சமுதாய, பண்பாட்டு, சிந்தனை மாற்றத்தை உருவாக்க முன்வரவேண்டும்.

அதை விடுத்து, ஆண் vs பெண் வாதங்கள், கடுமையான சொற்பிரயாகங்களால் ஆண்களை வசைபாடுதல், ஐரோப்பிய பெண்ணியத்தை இறக்குமதிசெய்தல், பின்நவீனத்துவ பெண்நிலைவாதம் என்றபெயரில் பெண்களை விளிம்புநிலை மனிதர்களாக்குதல் போன்ற முட்டாள் தனமான விடயங்களை விடுத்து, ஆண் பெண் முரன்பாட்டை பகை முரண்பாடாக்கி, எக்காலத்திலும் தீர்க்கமுடியாததாக ஆக்காமல், சினேக முரண்பாடாகவே தீர்ப்பதற்கு முன்வரவேண்டும்.

மனிதர்களை எந்தவொரு கோஷத்தின் கீழும் ஒன்றுசேரவிடாது, தனித்தனித் தீவுகளாக்கி சுலபமாக சுரண்டுவதற்கான வழிமுறைகளே இப்போது நடைபெறுகின்றன. அதற்கு பெருந்தடையாக இருப்பது குடும்பம் என்ற அடிப்படை அலகுதான். குடும்பக்கட்டமைப்பை உடைக்கும்படிக்குத்தான் இன்றய கருத்துக்கள் கட்டமைக்கப்படுகின்றன.

மனிதன் என்பவன் தனி அலகு, அவன் சமூக விலங்கு அல்ல.
குடும்பமே பெண்கள் மீதான வன்முறைக்கு அடிப்படை காரணம். அதனால் குடும்பத்தை உடையுங்கள்.
சேர்ந்து வாழும்(living together) கலாசாரத்துக்கு மாறுங்கள்.
ஆணுக்கு பெண்ணும்
பெண்ணுக்கு ஆணும் எதிரிகள்.....

மொத்தத்தில் இவர்கள் சொல்வதெல்லாம் மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துங்கள் என்பதுதான்.

இப்படியான கருத்துக்களை விதைப்பவர்கள் எல்லோரும் என்னைப்பொறுத்தவரையில் மக்களை பிரித்து தனி அலகுகளாக்கி சுரண்ட நினைக்கும் சக்தியொன்றின் ஏஜென்டுகளே. இப்படியான வரட்டு பெண்ணியம் கதைப்பவர்கள், தாங்கள் ஏஜென்டுக்களல்ல என்று நம்பினால், ஆண் எதிர் பெண் என்ற நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு, பெண்ணடிமைத்தனம், பெண்கள்மீதான வன்முறை, பால்நிலை சமமின்மை என்பவற்றுக்கு எதிராக போராட ஒன்றிணையவேண்டும்.

பி.கு:

இதுசம்பந்தமாக அண்மையில் படித்து வெறுத்துப்போன கவிதை ஒன்று...
வீரியம் குறைந்த ஆண்குறி...!

இதைவிட, தாயகம்(2008 ஏப்ரல்-ஜூன்) இதழில் சந்திரகாந்தா முருகானந்தன் என்பவர் எழுதிய கவிதையில் ஆண் என்ற கொடூரனால் குடும்ப வன்முறைக்குட்படுத்தப்பட்ட தான், முலை யோனி ஆகியவற்றை துறப்பதாக எழுதியிருந்தார். உண்மையில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் இவ்வாறு எழுதியிருந்தால் விரக்தியால் எழுந்த வார்த்தைகளெனலாம். ஆனால் இக்கவிஞர் பாதிக்கப்பட்டிராவிட்டால் இக்கவிதை போன்ற அயோக்கியத்தனம் வேறெதுவுமில்லை.

14 பின்னூட்டங்கள்:

மதுவர்மன் said...

சுதா,

வீரியம் குறைந்த ஆண்குறி.. கவிதை படித்தேன்.. தலையங்கத்தை பார்த்தவுடனேயே இது தமிழச்சியினுடையதாக தான் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். சரியாகத்தான் இருந்தது.

தமிழச்சியின் பெரியார் மைய புரட்சிகர கருத்துக்களை நானும் வரவேற்கின்றேன்.

ஆனால் பாருங்கள், அவ்வப்போது பலரும் தமிழச்சியின் பதிவுகளை, தமிழச்சியை திருத்தவேண்டியுள்ளது

எனக்கென்னவோ அவர் கொஞ்சம் அவசரபுத்தியுள்ளவரோ, அல்லது நிதானம் குறைந்தவரோ என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது தோண்றுகின்றது.

அவர் பதிவுகளில் நான் கூட அவரை திருத்தியிருக்கின்றேன்.

தமிழச்சியின் பெண்ணியம் சம்பந்தமான கோட்பாடு 'ஆணெதிர்ப்பு' என்பது வெளிப்படை. அது சம்பந்தமாக விளக்கமாக நீங்கள் எழுதியுள்ளீர்கள்.

ஏதோ பெண்ணியம் என்றால் ‘ஆண்கள் செய்யும் அநியாயங்களையும், கேவலங்களையும் பெண்களும் செய்யவேண்டும்' என்று நினைக்கும் கூட்டத்துக்குள் தான் தமிழச்சியும் அடங்குகின்றாரோ என்று எனக்கு நினைக்கத்தோன்றுகின்றது.

உங்கள் இடுகை சம்பந்தமான விளக்கமான பின்னூட்டமொன்றை கொஞ்சம் தாமதித்து இடுகின்றேன்.

மதுவர்மன் said...

இதைப்பாருங்கள், அண்மையில் நான் பார்த்த ஒரு செய்திக்குறிப்பு.

ஆண்களுக்கெதிரான குடும்ப/வீட்டு வன்முறை.

பத்து ஆண்களில் மூன்று ஆண்கள் வாழ்க்கைத்துணையின் வன்முறையாலோ, வீட்டு வன்முறையாலோ பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று புள்ளிவிபரமொன்று கூறுகின்றதாம்.

மேலதிக தகவல்களுக்கு
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=15798

அதிஷா said...

//
ஆண்களும் பெண்களும் இப்பூமியில் ஒன்றாக வாழவேண்டியவர்கள். ஆண்களை ஒதுக்கி பெண்களோ பெண்களை ஒதுக்கி ஆண்களோ வாழமுடியாது/கூடாது. ஆண்களிலாமல் வாழ, சந்ததிகளை உருவாக்கமுடியும் என்று கூறும் பெண்களே! ஆண்களிலாத சமுதாயத்தை உங்களால் உருவாக்க முடியுமா? முடியாதல்லவா? //


நிதர்சனமான உண்மை....

Anonymous said...

// மதுவர்மன் said...

அவ்வப்போது பலரும் தமிழச்சியின் பதிவுகளை, தமிழச்சியை திருத்தவேண்டியுள்ளது

எனக்கென்னவோ அவர் கொஞ்சம் அவசரபுத்தியுள்ளவரோ, அல்லது நிதானம் குறைந்தவரோ என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது //


யாரும் யாரையும் திருத்தவில்லை என்பதை மதுவர்மன் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். முடிந்தால் உங்களுடைய கருத்துக்களை தமிழச்சியிடம் நேரடியாக சொல்லலாமே! எதற்காக வேறொரு இடத்தில் வந்து கக்கிக் கொண்டிருக்க வேண்டும். நானும் ஒரு பதிவர் தான். (ஆண்) ஆனால் தமிழச்சி ஆபாசமாக எழுதுவதாக சொல்வது தவறான வாதமாகும். அதே போல் பெண்ணீயம் குறித்து பேசும் பெண்களில் இருந்தும் அவர் மாறுபடுகிறார். சமீபத்தில் வால் பையன் அவர்களின் ஒரு பதிவை படிக்க நேர்ந்தது. அதன் லீங்க் தான் இத்துடன் இணைத்து வைத்துள்ளேன். பார்க்கவும் மதுவர்மன். அதன்பிறகும் தமிழச்சியைப்பற்றிய அபிப்பிராயம் மாறலாம் என்று எண்ணுகின்றேன்.

நன்றி
http://valpaiyan.blogspot.com/2008/05/blog-post_16.html

மதுவர்மன் said...

பெயரிலி (Anonymous),

கருத்துக்களை உங்கள் பெயருடன் முன்வைக்கும்போது அதற்கு இருக்கும் பெறுமதியே தனி. சரி பரவாயில்லை...

//யாரும் யாரையும் திருத்தவில்லை என்பதை மதுவர்மன் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். முடிந்தால் உங்களுடைய கருத்துக்களை தமிழச்சியிடம் நேரடியாக சொல்லலாமே! எதற்காக வேறொரு இடத்தில் வந்து கக்கிக் கொண்டிருக்க வேண்டும்//

சாதாரண பாரம்பரிய ஊடகங்களிலிருந்து, வலைப்பதிவுகள் சிறந்து வேறுபட்டு நிற்கும் முக்கியமான விடயமே இந்த ‘பின்னூட்டங்களின் மூலம் சரிப்படுத்திக்கொள்ளுதல்'.

ஏனென்றால், ஒருவரின் பார்வை பிழைத்துப்போவதற்கு சந்தர்ப்பம் அதிகம். அதுவே ஒரு வலைப்பதிவு பலரின், பல்வேறு பின்னணியுடையவர்களின் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு திருத்தப்படும்போது, சொல்லப்படும் கருத்து பிழைத்துப்போவதற்கான சந்தர்ப்பங்கள் மிக மிக குறைவு. வலைப்பதிவுகளின் இந்த பண்பை நான் மிக மிக வரவேற்பவன்.

வலைப்பதிவராக இருக்கும் நீங்கள் 'யாரும் யாரையும் திருத்தவில்லை' என்று சொல்வது எனக்கு ஆச்சரியமாக படுகின்றது.

முன்னைய எனது பின்னூட்டத்தில் குறிப்பிட்டமாதிரி, நான் கூட இரண்டொரு தடவை தமிழச்சிக்கு சில விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றேன். அதற்கேற்ப அவர் மாற்றங்களையும் செய்திருக்கின்றார்.

இங்கே இந்த் அவலைப்பதிவு 'தமிழ் பூங்கா'வில், பலர் எழுதுகின்றார்கள், இங்கேயுள்ள விதிகளின் ஒன்று என்னவென்றால, பதிவரொருவர், தன்னுடைய பதிவுக்கு இடப்படும் பின்னூட்டங்களுக்கு ஏற்றவகையில், ஆக்கபூர்வமான திருத்தங்களை அவ்வலைப்பதிவில் மேற்கொள்ளவேண்டும் என்பது.

இது ஒரு வரவேற்கத்தக்க நல்லவிடயம் இல்லையா சொல்லுங்கள்?

//முடிந்தால் உங்களுடைய கருத்துக்களை தமிழச்சியிடம் நேரடியாக சொல்லலாமே! எதற்காக வேறொரு இடத்தில் வந்து கக்கிக் கொண்டிருக்க வேண்டும்//

இங்கே பதிவிட்டவர், தமிழச்சியை பற்றி குறிப்பிட்டார், ஆகவே நானும் அவர் சம்பந்தமாக குறிப்பிடவேண்டியதாயிற்று.


இங்கே இவ்வலைப்பதிவின் ஒரு இடுகையில் தமிழச்சியைப் பற்றி குறிப்பிட்டுவிட்டு, யாருக்கும் தெரியாமல் என்ன மறைத்து வைக்கவாமுடியும். இணையம் என்பதே இணைக்கப்பட்ட, தேடுபொறியில் அகப்படக்கூடைய பக்கங்கள் என்று தானே பொருள்படும். அவ்வாறிருக்கையில் இங்கே மறைமுகம் என்று மறைத்து வைக்கவா முடியும்.

இங்கே நேரடி, மரைமுகம் என்று கதைப்பது எனக்கொன்றும் பொருத்தமானதாக படவில்லை. தேவை கருதி இங்கே குறிப்பிட்டேன் அவ்வலவு தான். தமிழச்சிக்கு ஏதாவது ஆலோசனைகளை நேரே சொல்லவேண்டுமாயின், அவற்ரை அவருக்கே நேரே சொல்வதில் எனக்கு தயக்கமொன்றும் இல்லையே.

//தமிழச்சி ஆபாசமாக எழுதுவதாக சொல்வது தவறான வாதமாகும். அதே போல் பெண்ணீயம் குறித்து பேசும் பெண்களில் இருந்தும் அவர் மாறுபடுகிறார். சமீபத்தில் வால் பையன் அவர்களின் ஒரு பதிவை படிக்க நேர்ந்தது. அதன் லீங்க் தான் இத்துடன் இணைத்து வைத்துள்ளேன். பார்க்கவும் மதுவர்மன். அதன்பிறகும் தமிழச்சியைப்பற்றிய அபிப்பிராயம் மாறலாம் என்று எண்ணுகின்றேன்.//

நண்பரே இங்கே எங்கேயாவது தமிழச்சி ஆபாசமாக எழுதுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதா? பாருங்கள் தமிழச்சியைப்பற்றி எழுதியிருந்தால அப்படித்தான் எழுதியிருப்பார்கள் என்று நீங்கள் கற்பனை பண்ணியிருக்கின்றீர்கள். தமிழச்சியின் எழுத்துக்களில் பலர் அசௌகரியப்பட்டுள்ளார்கள் அவ்வளவே!.

பெண்ணியம் என்று பேசுவதே தவறு. இதைப்பற்றி தனியொரு பதிவு எழுத எண்ணம். பெண்ணியம் (Feminism) என்பதை விட, பால்நிலை சமத்துவம் (Gender Equality) என்பதே பாவிக்கப்படவேண்டும் என்பதே இப்போது வலியுறுத்தப்படுகின்றது. ஒரு பால் சார்ந்த, வெறியூட்டக்கூடிய சொற்பிரயோகங்களையும், நடவடிக்கைகளையும் தவிர்த்துகொள்வதற்காகவே இம்மாற்றம். பெண்ணியம் என்ற சொல் பாவனையிலிருந்து இல்லாதொழிக்கப்படவேண்டும்.

இங்கெ சுதா குறிப்பிட்டுள்ளது போன்று 'பெண்ணியத்தின் நோக்கம் பால்நிலை சமத்துவமேயன்றி ஆணெதிர்ப்பல்ல'.

பெண்ணியம் என்ற சொல், இனவாதத்தை , ஒரு பால் வெறியை ஏற்படுத்துகின்றது. பால்நிலை சமத்துவத்துக்கான நடவடிக்கைகள், பெண் ஆணை இணங்கிவாழச்செய்யவேண்டுமேயொழிய, ஆண் பெண்ணை எதிரியாக்கக்கூடாது. அந்நடவடிக்கைகள் ஆண் பெண் இருபாலாரையும் இணைத்துக்கொண்டே செய்யவேண்டுமேயொழிய, பெண்கள் மட்டும் பெண்ணியம் என்ற போர்வையில், ஆணெதிர்ப்பை வலியுறுத்துவதால் அல்ல. அவற்றால் அடையப்போவது ஒன்றுமில்லை என்பதே நிதர்சனம்.

தென்றல்sankar said...

வணக்கம் சுதா,
நானும் இதே கருத்தைத்தான் சொல்ல விரும்புகிறேன்.ஆனாதிக்கம் இருக்குதான் இல்லை என்று முழுமையாக என்னால் கூறிவிட முடியாது.அதற்காக இப்படி ஆபசமாக எழுதிதான் ஆணாதிக்கதை சொல்ல வேண்டுமா?.அவர் வேறேதோ சொல்ல விரும்புகிறார்.தாங்க முடியாமல் போட்ட பதிவு மனது வலிக்கிறது.
http://thendralsankar.blogspot.com/2008/05/blog-post_25.html

சுதா said...

வணக்கம் வாருங்கள் மது, ஆதிஷா, சங்கர்... அத்துடன் அனானி(?) உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

நான் எந்த இடத்திலும் ஆப்பாசத்தை பற்றி குறிப்பிடவில்லை. ஆண்களை பெண்களின் எதிரிகளாக கருதும் போக்கையே குறிப்பிட்டிருந்தேன். அதையே தவறு என்று விமர்சித்திருந்தேன். பெண்களிடம் தூவப்படும் ஆணெதிரிப்பு சிந்தனைகளும் அதனால் ஆண்களிடம் ஏற்படும் பெண்ணெதிர்பு மனோநிலையும் இச்சமுதாயத்தை அழிவுக்கே இட்டுச்செல்லும். பலவருடங்களுக்கு முன்பிருந்த காட்டுமிராண்டித்தனமான ஆணாதிக்க அடக்குமுறைகளும் வன்முறைகளும் இப்பொழுது ஒப்பீட்டளவில் குறைந்த்துள்ளமைக்கு காரணம் என்ன? காலத்துக்கு காலம் ஏற்பட்ட போராட்ட வெற்றிகளே. இன்னுமின்னும் போராடி வென்றெடுக்க வேண்டிய இந்தப்பிரச்சனைகளை, தமிழச்சி போன்றோர் விதைக்கும் ஆணெதிர்ப்பு/ பெண்ணெதிர்பு விஷ கருத்துக்களால் மேலும் குழப்பி, தீர்க்கவே முடியாத பிரச்சினைகளாக்குகிறார்களே என்பதுதான் என் கவலை.

தமிழச்சி இப்படி குழப்பியடிப்பதையே நோக்கமாக கொண்டு செய்ற்படுகிறாரா அல்லது உண்மையிலேயே ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து விடுபட்டு தன் மனக்குமுறல்களை இப்படியாக வெளிக்கொணர்கிறாரா? இதை தமிழ்ச்சிதான் சொல்லவேண்டும்.
உயர் வர்க்கத்திலிருந்த்துகொண்டு, ஆணாதிக்கத்தால் அடக்குமுறைக்குட்படுத்தப்படாமல், தன் சக பெண்களுக்காக குரல் கொடுக்கிறேன் என்று அவர் சொன்னால், அவரைவிட அயோக்கியர் இருக்கமுடியாது. அவர் நான் முன்னர் சொன்னது போன்று ஏதோ ஒன்றின் ஏஜென்டு என்றே கருத வேண்டியுள்ளது.

Anonymous said...

தமிழச்சியை தெரிந்துக் கொள்ளுங்கள்

சூடான இடுகைகள் என உங்கள் பதிவு வர வேண்டுமா? தமிழச்சி என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவ போட்டால் போதும்.இதுதான் இன்றைய பல பதிவாளர்கள் எண்ணம்.ஊருக்கு இளைத்தவன்(ள்)பிள்ளையார் கோவில் ஆண்டி.
தமிழச்சி...ஒரு இலக்கியவாதியா?ஆபாச எழுத்தாளரா?பெரியாரின் மறு உருவமா? அல்லது தெரியாதா?
இதுதான் வாக்களிப்போருக்கு கொடுக்கப்பட்டுள்ள options.ஒவ்வொன்றாகப் பார்ப்போம்..
இலக்கியவாதி - தமிழச்சியின் பதிவுகள் பெரும்பாலும்..பெரியாரின் பேச்சுகளை கொண்டதாகவே இருக்கும்.சமீப காலமாக பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளை சுட்டிக்காட்டி வருகிறார்.அவர் இன்னும் இலக்கியவாதி என்ற நிலைக்கு
வர சில காலம் பிடிக்கும்.இது என் கருத்து(கருத்து வேறு..விமரிசனம் வேறு)அவர் முயன்றால்..அவர்cheap
popularityக்கு ஆசைப்படாமல் இருந்தால்..எதிர்காலத்தில் அவரால் பல சிறந்த இலக்கிய படைப்புக்களை படைக்கமுடியும்.அதற்கு அவருக்கு ஒரு சிறந்த வழிகாட்டி வேண்டும். கிடைப்பார்கள் என நம்புவோம்.
பெரியாரின் மறு உருவம் - பெரியாரின் கருத்துக்களை ..ஒருவர் சொன்னால்..அவரது கொள்கைகள் மீது
ஈடுபாடு கொண்டால் பெரியாரின் மறு உருவம் என்ற பட்டம் கிடைத்து விடுமா?சிரிப்புத்தான் வருகிறது.
இந்த option தேவையற்றது என்பதே என் கருத்து.
ஆபாச எழுத்தாளரா - ஆபாசம் என்பது என்ன?அதை தீர்மானப்பது யார்?அதன் அளவுகோல் என்ன?இந்த கேள்விக்கான சரியான பதில் யாருக்குத் தெரிகிறதோ அவர்களால்தான் பதில் சொல்ல முடியும்.
சினிமாவுக்குப்போன சித்தாளு(ஜயகாந்தன்) கதையில் வராத கெட்ட வார்த்தைகளா?கிராமப்புறங்க்களில் மக்கள்
உபயோகிக்கும் slang வார்த்தைகள்.அவரை ஏன் ஆபாச எழுத்தாளர் என்று சொல்லவில்லை?
நமது இதிகாசம்,புராணங்களில் இல்லாத ஆபாசமா?தமிழச்சியின் எழுத்தில் வந்துவிட்டது?சுஜாதா கதைகளில் சொல்லப்படாத ஆபாச வர்ணணைகளா? இவர் சொல்லிவிட்டார்.எழுத்து சித்தர்(!)சொல்லாததா?
இவர்கள் எல்லாம் சொன்னால் யதார்த்தம்..ஆனால் தமிழச்சி சொன்னால் ஆபாசமா?
இன்று தமிழ் பெண்கவிஞர்கள் எழுத்தில் ஆபாசம் இல்லையா?
மொழி படத்தில்..வேட்டி அவிழ்வது கூட தெரியாமல்..மனைவியை அடிக்கும் ஒரு குடிகாரனை ஜோதிகா பின்னி
எடுப்பாரே..அதை கை தட்டி ரசித்தோமே ..அதையேத்தான்..தமிழச்சி தன் எழுத்துக்களில் செய்கிறார்.
தன் பதிவுகளை அதிகம் படிக்கவேண்டும் என அவர் தன் பதிவுகளுக்கு சூடான தலைப்பிட்டார் என்பதை மறுக்க முடியாவிட்டாலும்..அவர் ஒரு ஆபாச எழுத்தாளர் என்பதை வன்மையாக மறுக்கிறேன்.
தெரியாது- அவரை தெரியாதவர்களுக்கு அவரை தெரியாது..ஆனல் அவரை தெரிந்துக்கொண்டவர்களுக்கு..
அவர் ஒரு தைர்யசாலி
அவர் தன் கொள்கைகளை யாருக்காகவும்விட்டுக்கொடுக்க மாட்டார்
அவர் ஒரு பெண்ணியவாதி
ஆணாதிக்கத்தை எதிப்பவர்
தான் செய்தது தவறு என்றாலும் ..அதை ஒப்புக்கொள்ளாத பிடிவாதக்காரி
தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என சாதிப்பவர்
பாதகஞ் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்திடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்திடுடி பாப்பா என்ற பாரதியின் புதுமைப்பெண்
தன் தனித்துவத்தை இழக்காதவர்
தமிழச்சி பற்றி வாக்கெடுப்பு நடத்தும் அளவுக்கு இணையதளம் மூலம் வளர்ந்துள்ளதே அவர் சாதனையை விளக்கும்.///////////////////////////////////////////
http://tvrk.blogspot.com/2008/05/blog-post_28.html

தென்றல்sankar said...

//அடக்குமுறைக்குட்படுத்தப்படாமல், தன் சக பெண்களுக்காக குரல் கொடுக்கிறேன் என்று அவர் சொன்னால், அவரைவிட அயோக்கியர் இருக்கமுடியாது. அவர் நான் முன்னர் சொன்னது போன்று ஏதோ ஒன்றின் ஏஜென்டு என்றே கருத வேண்டியுள்ளது.//
வணக்கம் சுதா!
நானும் அப்படிதான் கருதுகிறேன் உண்மமைதான் அவர் ஏஜென்டுதான்.அவர் இப்போதும் 1967லேயே இருக்கிறார் இப்போது 2008 ஆணாதிக்கம் இப்போது மிகவும் குறைந்துள்ளது.ஆண்களை மிஞ்சும் பெண்களின் கல்வி அறிவு இதற்கு விழிப்புனர்வுதான் காரணம்.ஆனால் இவர்போல எழுதினால் நீங்கள் சொல்வதுபோல் குழப்பம்தான் மிஞ்சும்.

Angel said...

Hiii Anonymous,
Guess you are a strong supporter of Thamizhichi... Why dont you write with your name than hiding as anonymous.

Karthik said...

I think I can agree with your views. Thanks.

சண்சுதா said...

வாங்கோ ஏஞ்சல், கார்திக், வருகைக்கு நன்றி. கருத்துக்களுக்கும் நன்றி.

Anonymous said...

r u using vango for welcome.... ppl use my pleasure nowadays... why dont you guys just say "thanks for dropping by / thanks for you comments" in tamil.. vango sounds odd... just a suggestion.... direct translations konjam comedya irukkum (silla velaikalil)Yaraiyum kaya padutha naan sollavillai....
Angel

மதுவர்மன் said...

ஏஞ்சல்-தேவதை,

சண்சுதாவின் பின்னூட்டத்தில் உள்ளதுபோல்

‘வருகைக்கு நன்றி. கருத்துக்களுக்கும் நன்றி.'

என்பது, உங்கடை
"thanks for dropping by / thanks for you comments"

என்பதின் தமிழ் இல்லையா?

வாங்கோ என்பது, ஒரு வரவேற்பு முறைதான், இலங்கைத்தமிழில்.

எனக்கு விளங்கவில்லை, அச்சொல் வேறு ஏதேனும் கூடாத பொருள் தருகின்றதா என்று.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி