Saturday, May 17, 2008

இலங்கை, கிழக்கு மாகாணசபைத்தேர்தல்(2008) சொல்லும் பாடம் என்ன (தேர்தலுக்கு பின்)?

(2008-05-16, தமிழ் பூங்கா) கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் ஒருவாறாக முடிந்துவிட்டது. யாரை முதலமைச்சராக நியமிப்பது என்பதில் பெரிய இழுபறிகளும், கருத்துமோதலகளும், ஆரூடங்களும் முடிவுக்கு வந்து, அந்நியமனமும், பதவியேற்புவைபவமும் அண்மையில் (2008-05-16) நடந்துவிட்டது. இறுதியில் ஜானாதிபதி எடுத்த முடிவே நடைமுறைப்படுத்தபட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால், அதிகம் கோபமடைந்திருப்பவர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள். முக்கியமாக ஹிஸ்புல்லாவும் அவரது ஆதரவாளர்களும். அரசாங்கத்தின் முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், ஒன்று சேர்ந்து ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக நியமிக்காவிட்டால் தாங்கள் அரசாங்கத்திலிருந்து விலகப்போவதாக அறிவித்திருந்தும், அரசாங்கத்தை சேர்ந்த சிங்கள அமைச்சர்கள் பலரும் பிள்ளையான் முதலமைச்சராக வருவதையே விரும்பியிருந்தனர்.

இப்பொழுது, பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதானது, அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அங்கத்தவர்களை விசனமடையச்செய்துள்ளது. கிழக்குமாகாண சபையிலே ஹிஸ்புல்லாவுடன் சேர்ந்து, இன்னும் மூன்று அரச கூட்டணி முஸ்லிம் வேட்பாளர்கள் தனித்தியங்க முடிவெடுத்திருப்பதாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அத்துடன், பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், ஒட்டுமொத்த முஸ்லிம்கள் (எதிர்க்கட்சிகள், ஆளும்கட்சி வேட்பாளர்களை சேர்த்து) என்று பார்த்தால் முஸ்லிம் வேட்பாளர்களே பெரும்பான்மையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள், இந்நியமனத்திற்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளார்கள் என்றும் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

மொத்தத்திலே இத்தேர்தல், சுமுகமாக நடந்ததாக அரசாங்கம் பிரச்சாரப்படுத்திக்கொண்டாலும், சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் இதை ஒரு மோசமான தேர்தல் என வர்ணித்திருக்கின்றன. அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் இது குறித்து தமது கவலையையும் தெரிவித்திருந்தன. எதிர்க்கட்சிகள் தலைநகரிலே இந்த தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தியிருந்தன. சராசரியாக் 55-60 வீதமான மக்களே வாக்களிதிருந்தனர். திருகோணமலையில் சில பிரதேசங்களில் தமிழமக்கள் தேர்தலை புறக்கணிததிருந்த நிலையும் காணக்கூடியதாக இருந்ததாக தமிழ் தேசிய கூட்ட்மைப்பினர் தெரிவித்திருந்தனர். தேர்தலுக்கு முன்பான பிரச்சார நடவடிக்கைகளில் ஆளும்தரப்பு தவிர்ந்த ஏனைய கட்சி வேட்பாளர்கள் பல சிரமக்களுக்கு மத்தியிலே தமது பிரச்சார பணிகளை செய்திருந்தனர். வாக்காளர்களும், அரச எதிர் வேபாளர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தனர். அரச கட்சியினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக, அரச ஊடகங்கள் பக்கச்சார்பாகவே பாவிக்கப்பட்டிருந்தன, தேர்தல் நாளில் சில வாக்குச்சவடிகளிக் சுயாதீனகண்காணிப்பாளர்களோ, எதிர்க்கச்சி உறுப்பினர்களோ அனுமதிக்கப்படவில்லை, என்பன போன்ற விடயங்களை மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலைய தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து, மோர்ணிங் லீடர் பத்திடிரிகைக்கு வழங்கிய பேட்டியிலே தெரிவித்திருந்தார்.

தேர்தலின் முன், தேர்தலில் போட்டியிட்ட பலருக்கும் அரசினால் பல்வேறு வாக்குறுதிகள் வழக்கப்பட்டிருந்த போதிலும், அவை வாய்வழி வாக்குறுதிகாளாக இருந்தபடியால், அவ்வாக்குறுதிகள் பலராலும் பலவாறாக விளங்கிக்கொள்ளப்பட்ட நிலையில், இறுதியில் அரச தலைவர் எடுத்த சுயாதீன் முடிவே நடைமுறைப்படுத்தபட்டிருக்கின்றது. முஸ்லிம் தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டு, தமிழ் தரப்பிலொருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதானது, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயுள்ள விரிசலை மேலும் அதிகமாக்கும் என பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளநிலையில், இது சம்பந்தமான விளைவுகளை இனிவரும் காலங்களிலேயே அவதானிக்கமுடியும். அதிலும் ஹிஸ்புல்லாவும், இன்னும் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் தனித்தியங்க முடிவெடுத்திருப்பது மாகாணசபையை நிர்வகிப்பது சம்பந்தமாக பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாமென தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதானது, எதிர்காலத்தில் அவர்கள் பெயரில் இடம்பெறுகின்ற வன்முறைகள் குறைந்துபோவதற்கு வழிவகுக்கலாம் என சில ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.கடந்த காலங்களிலே பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும், பல்வேறு நாடுகளும் அவர்களை பலமுறை, மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும், சிறுவர்களை படையணிகளில் சேர்த்தல் சம்பந்தமாகவும் குற்றம்சாட்டியிருந்தன. அவர்கள் இப்போது சட்டரீதியாக ஆட்சியில், ஜனநாயகத்தில்(?) இணைந்திருப்பதானது, அவர்கள் கொஞ்சமாவது வன்முறைகளை குறைக்கும்படி தூண்டலாம் என்பதே எதிர்பார்ப்பு. அவ்வாறு ஒரு மாற்றம் நிகழ்ந்தால் அது கிழக்கு மாகாண மக்களுக்கு நன்மையாகவே அமையும். அதன் ஒரு சமிக்ஞையாகத்தான், தேர்தலுக்கு முன்பாக இரண்டொரு தடவைகளில், அவர்களது அமைப்பிலிருந்த ஐம்பதிற்கும் அதிகமான சிறுவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

யாரை முதலமைச்சராக நியமிப்பது என்று, அரசதலைவர் செயலகத்தில் கலந்துரையாடல்கள் நடந்தபோது, முஸ்லிம்களும் தமிழர்களும் சுழற்சிமுறையில் முதலமைச்சர் பதவிவகிப்பது என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டபோது, 'அப்படியானால் சிங்களவர்களுக்கும் அவ்வுரிமை வழக்கப்படவேண்டும்' என அரசதலைவர் தெரிவித்திருந்ததாக ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தார். அப்படியான சுழற்சிமுறயிலும், ஹிஸ்புல்லவே முதலில் முதலமைச்சராக நியமிக்கப்படவேண்டும் என முஸ்லிம் தரப்பினர் கேட்டுக்கொண்டபோதிலும், அரசதலைவர் பிள்ளையானே முதலில் முதலமைச்சராக நியமிக்கப்படவேண்டும் என பிடிவாதமாக நின்றதால், சுழற்சிமுறை என்ற வாக்குறுதியிலும் ஹிஸ்புல்லா நம்பிக்கையீனத்தை வெளியிட்டிருந்தார். அதற்காகவே தாம் தனித்தியங்கப்போவதாக அறிவித்திருந்தார்.

மொத்தத்தில், இப்பகுதியில், கிழக்கு மாகாணசசபை தேர்தலின் முன் எழுதிய ”இலங்கை, கிழக்கு மாகாணசபை தேர்தல் சொல்லும் பாடம் என்ன (தேர்தலுக்கு முன்)” என்பதில் குறிப்பிட்டதுபோன்று, தேர்தலும் சரி, தேர்தலின் பின்னான நியமனங்களும் சரி, மூவினங்களுக்குமிடையிலான, யார் ஆள்வது என்பது தொடர்பான தீவிர போட்டியையே காட்டுகின்றது. இனங்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கையீனத்தையே காட்டுகின்றது. மக்களை கையாலாகாத நிலைமையையே காட்டுகின்றது.

இங்கே இந்நாட்டில் தங்களுக்கான தலைவர்களை தீர்மானிப்பது, மக்களல்ல, மாறாக ஒருசில மனிதர்களே தீர்மானிக்கின்றார்கள். இதுதான் இலங்கையில் நாம் காணக்கூடிய ஜனநாயகம். ஒருசில ஜனங்களின் நாயகம்.

மதுவர்மன் - Mathuvarman (2008-05-16)

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி