Monday, September 1, 2008

பாலியல் வன்புணர்வு, இயற்கையானது தானே!

இன்னும் பல புதிய (தேடியறிந்த) விடயங்களை உள்வாங்கி, இக்கட்டுரை மேலும், ஆதாரங்களுடன் செம்மைப்படுத்தப்படவுள்ளது. எனினும், ஒரு பொதுவான கருத்துருவைப்பெற்றுக்கொள்ள, இக்கட்டுரையை தொடர்ந்து நீங்கள் வாசிக்கலாம்.

பெரும்பாலும் பாலியல் வன்புணர்வு என்று வரும்போது, வன்புணர்வுக்கு உள்ளாகுபவர்கள் பெண்களாகவும், வன்புணர்வை மேற்கொள்பவர்கள் ஆண்களாகவும் இருப்பதை காணலாம். அதற்காக, ஒரேயடியாக, பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்படுபடுவது பெண்களே என்று சொல்லமுடியாது, ஏனென்றால் ஆண்களும் பெண்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன, சிறிய அளவில், பெரும்பாலும் மேலை நாடுகளில். என்றாலும், பாலியல் வன்புணர்வுக்கு அதிகம் இரையாகுபவர்கள் பெண்களே.

ஒப்பீட்டளவில், பலியல் வன்புணர்வுக்கு பெண்கள் அதிகளவில் இரையாக்கபடுவதற்கு முக்கிய காரணம், ஒரு ஆணினால் ஒரு பெண்ணின்மீது நிகழ்த்தப்படும் வன்புணர்வில் கூட, அந்த பெண்ணினால் ஆணை உடல்ரீதியாக எதிர்த்துப்போரிட முடியாமையாகும். ஒரு ஆணையே எதிர்த்துப்போரிட முடியாத நிலை நிலவும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பாலியல் வன்புணர்வில் ஈடுபடும்போது, பெண்ணொருத்தி ஒன்றுமே செய்யமுடியாதவளாகின்றாள்.

அத்துடன், சமூகரீதியாக, ஆண்களோடு ஒப்பிடுகையில், போரிடும் திறன்குறைந்தவர்களாகவும், கபடபுத்தி குறைந்தவர்களாகவும் வளர்க்கப்படுவதும் இன்னொரு காரணம். ஏனெனில் அநேக வன்புணர்வுகளில், ஆண்களால் பெண்கள் கபடத்தனமாக ஏமாற்றப்பட்டே வன்புணர்விற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அத்துடன், உயிரியல் பரிணாம (Biological Evolution) மாற்றத்தில் (இயற்கைத்தேர்வு - Natural Selection மூலம்) அடைந்துகொண்ட ஆண்பெண் உடல்ரீதியான வேறுபாடுகள் (இயல்பாக ஆணின் உடலமைப்பு, பெண்ணைவிட பலம்பொருந்தியதாக இருத்தல், உடலுறவில் பெண்கள் பெற்றுக்கொள்ளும் அந்தத்தில் (Receiving End) இருத்தல், பாலுறுப்புக்களின் அமைப்பு என்பன) ஆணினால் பெண்மீதான வன்புணர்வுகளை அதிகமாக்கியிருகின்றது.

சரி, இத்தகைய, பாரிய சமூககுற்றமாக கருதப்படுகின்ற, பாதிக்கப்படுபவருக்கு உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற, குற்றம் புரிந்தவரை சிறைக்குள் தள்ளக்கூடிய இந்த பாலியல் வன்புணர்வு என்ற நடத்தை இயற்கையானதா, அல்லது மனிதனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற ஒரு நடவடிக்கையா?

இலகுவாக சொல்லப்போனால், மனிதனை மறந்துவிட்டு மற்ற விலங்கினங்களை அவதானித்துப்பருங்கள். பெரும்பாலும் அவை பாலியல் வன்புணர்விலேயே ஈடுபடுகின்றன. அதாவது ஆண்விலங்கு, பெண்விலங்கை வலிந்தே உடலுறவு கொள்கின்றது. உதாரணத்துக்கு, நாம் அன்றாடம் அவதானிக்கக்கூடிய, நாய்கள், கோழிகள், மாடுகள், ஆடுகள், பூனைகள் போன்ற விலங்குகளை பார்த்தீர்களானால், வன்புணர்வே இடம்பெறுவதை அவதானிக்கலாம். அங்கே பெண்விலங்கு முடிந்தவரை உடலுறவை தவிர்க்கவே முயற்சிக்கும், ஆனாலும் ஆண்விலங்கின் ஆதிக்கத்தால் இறுதியில் வன்புணர்வுக்கு உள்ளாகின்றது. ஆடு, மாடு, நாய், கோழி, பூனை போன்ற விலங்குகள் மட்டுமல்ல, அநேகமாக எல்லாவிலங்குகளிலுமே இந்த உடலுறவுக்கு முந்திய போராட்டம் நிகழ்வதை காணலாம்.

கலாச்சார மாற்றத்தில், சொத்துடைமை என்ற கண்ணோட்டத்தில், ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற வரையறையை மனிதன் என்ற விலங்கு ஏற்படுதிக்கொண்டது. ஆனால் இந்நிலைமை மற்ற விலங்கினங்களில் காணப்படுவதில்லை. பெரும்பாலும் ஒரு பெண்விலங்குடன் எந்த ஆண்விலங்கு உடலுறவு கொள்வதென்பதில், ஆண்விலங்குகளிற்கிடையில் ஒரு பெரும் போட்டியே (சண்டையே) இடம்பெறும். நாய்களிலும், பூனைகளிலும் இந்த போட்டி உச்சக்கட்டமாக இருக்கும். அந்த போட்டியில் முன்னிற்கும் ஆண்விலங்கு, பின்னர் பெண்விலங்கை அடக்கி வன்புணர்வை மேற்கொள்ளும். ஆனாலும் எல்லாநேரத்திலும் ஆண்விலங்கே உடலுறவை தீர்மானிப்பதில்லை. ஆகக்குறைந்தது எந்த ஆண்விலங்குகளுடன் உடலுறவு கொள்ளக்கூடாது என்பதை பெண்விலங்குகளும் தீர்மானிக்கின்றன தான். அதாவது, பாலியல் உறவுக்கான ஜோடியை தெரிவுசெய்தல் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாகவே இருக்கின்றது. ஏனென்றால், பெண்நாய்கள், சில ஆண்நாய்களை முற்றுமுழுதாக எதிர்ப்பதையும், சில ஆண்நாய்களுக்கு ஓரளவு இடம்விட்டுக்கொடுப்பதையும், சில ஆண்நாய்களுக்கு எந்தவித எதிர்ப்பை காட்டாதிருப்பதையும் அவதானித்தால், இந்நிலைமை புலப்படும்.

அதிலும், சில சமூக விலங்குகளில் (Social Animals) நிலைமை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். கூட்டம் கூட்டமாக அவை வாழ்வதால், பெரும்பாலும் வலிமையுள்ள ஒரு ஆண்விலங்கு கூட்டத்துக்கு தலைமை தாங்குவதை காணலாம். கூட்டத்திலுள்ள பெரும்பாலான பெண்விலங்குகளுடன் உடலுறவு கொள்வது இந்த தலைமை தாங்கும் ஆணாகத்தான் இருக்கும். அதுவும் வன்புணர்வாக தான் இருக்கும். ஏனைய ஆண்விலங்குகள், பெரும்பாலும் அந்த கூட்டத்துக்கு பணிபுரிபவையாகவே இருக்கும். இந்த சமூக கட்டமைப்புகளுக்கிடையில் சிறிது சிறிது மாற்றங்கள் காணப்படலாம். எவ்வாறாக இருந்தாலும், இறுதியாக பெண்விலங்கு மீது புரியப்படுவது, வன்புணர்வாகவே இருக்கும். இந்த சமூக கட்டமைப்புக்களை பல்வேறு குரங்கு வகைகள், சிங்கம், புலி போன்ற விலங்குகளில் அவதானிக்கலாம்.

மனித இனத்தின் ஆரம்பகட்ட வளர்ச்சியில்கூட (உதாரணத்துக்கு எமது மூதாதை மனித இனங்கள்) இந்த மேற்படி அடிப்படை சமூகக்கட்டமைப்பே காணப்பட்டது. அப்போதும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற முறை இருக்கவில்லை. வலிமையுள்ள ஆண், தனக்கு பிடித்த பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் நிலைமையே காணப்பட்டது. அந்த உடலுறவை தீர்மானிப்பது ஆணாகவே பெரும்பாலும் இருக்கும். அதாவது ஒரு வன்புணர்வு நிலையே காணப்பட்டது.

மனிதனைப்போலன்றி ஏனைய விலங்குகளில், பாலியல் வேட்கையென்பது சிந்தித்து வருவதல்ல, முற்றுமுழுதாக ஓமோன்களில் (Hormones) ஆதிக்கத்தாலேயே அவ்விலங்குகளில் பாலியல் நடத்தை என்பது கட்டுப்படுத்தப்படுகின்றது. காலநிலை மாற்றங்கள் போல, ஆண்டின் சில பகுதிகளிலேயே விலங்குகள் பெரும்பாலும் உடலுறவு கொள்கின்றன. ஆண்விலங்கும், பெண்விலங்கும் இனப்பெருக்க உடலுறவில் ஈடுபடுவதற்கான ஒரு காலப்பகுதி இருக்கும், அக்காலப்பகுதியில் அவற்றில் உடல்ரீதியான(அக, புற) மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆணிற்கு வேட்கையேற்படும்போது, பெண்விலங்குமீது வன்புணர்விலீடுபடுகின்றது. ஏனென்றால் அவ்விலங்குகள், சிந்தித்து, ஒன்றையொன்று புரிந்து, புரிந்துணர்வினடிப்படையில் புணர்ச்சியிலீடுபடுவதில்லை. உடலுறவை, மனிதனைபோல (டொல்பினயும் சேர்த்து) கிளர்ச்சியூட்டம் விடயமாக அவை புரிவதில்லை. மாறாக அவற்றின் உடலுறவு நடத்தை ஓமோன்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன.

மனிதனிலோ, நினைத்தவுடன் உடலுறவு கொள்ளக்கூடிய தன்மை காணபடும். பகுத்தறிவு, சிந்தித்து செயலாற்றல் என்ற பண்புகளால் இது சாத்தியமாகின்றது. அதை பெரும் கிளர்ச்சியூட்டும் விடயமாகவும் மனிதன் பார்க்கின்றான். டொல்பின்களும் இவ்வாறே நடந்துகொள்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

விலங்கு இராச்சியத்தை பார்த்தால், ஆணாதிக்க நிலைமையையே எங்கும் காணலாம். அதனால் தான், மனித இனத்தில் கூட, அண்மைக்காலம்வரை, ஆணாதிக்கம் அதிகமாகவே காணபட்டது. இற்றைக்கு இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் எவ்வளவுக்கு ஆண்களால் அடக்கியொடுக்கபட்டார்கள், எவ்வளவுக்கு உரிமைகள் மறுக்கபட்டார்கள் என்பது வரலாற்று நிகழ்வுகளையும், நூல்களையும் அறிந்தவர்களுக்கு புரியும். விலங்குகளில் காணப்படும் இந்த ஆணாதிக்கநிலைமை கூட, பரிணாம வளர்ச்சியில் பெற்றுக்கொண்ட ஒரு நடத்தையோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

ஏனென்றால், பரிணாம வளர்ச்சிக்கு உடலுறவு என்பதே அடிப்படை. ஆண் பெண் உடலுறவினூடாகவே பரிணாமம் என்ற மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. நான், நீங்கள், நாய், பூனை, மரம், செடி என்பனவெல்லாம் இந்த ஆண்-பெண் உறவின்மூலமே உருவாகியிருக்கின்றன. ஆகவே இந்த ஆண்-பெண் உடலுறவை நிச்சயப்படுத்திகொள்ள, ஒருசாரார் (ஆண்) ஆதிக்கசக்தியாக உருப்பெறவேண்டிய தேவையேற்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு செயல் நடைபெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ள ஆதிக்கம் ஒரு ஆயுதமாக பாவிக்கப்பட்டிருக்கின்றது. ஏனென்றால், சிந்தித்து செயலாற்றல், பகுத்தறிவு என்பவையெல்லாம், பரிணாமத்தின் மிக மிக பிற்பட்ட காலப்பகுதியிலேயே ஏற்பட்டவை. அதனால் தான், மனித இனத்துக்கு மட்டும் இந்த ஆதிக்கம் (ஆணாதிக்கம்) இறுதியில் ஒரு பெரும் பிரச்சினையாகிவிட்டது.

ஆதிக்கம் செலுத்தி, வன்புணர்வில் ஈடுபடக்கூடிய ஆண்விலங்கே, தன்னுடைய சந்ததியை உருவாக்கிக்கொள்ள அதிக சாத்தியக்கூறுகள் காணப்பட்டது. அடுத்து உருவாகும் சந்ததிகூட ஆதிக்கம்செலுத்திய ஆண்விலங்கினதும், அடங்கிப்போன பெண்விலங்கினதும் இயல்புகளைக்கொண்டதாகவே இருக்கும். அவ்வகையில் அடுத்து வரும் சந்ததியிலுள்ள ஆண்விலங்குகள், இன்னும் ஆதிக்க தன்மையுடையவைகளாக இருக்கும். இவ்வாறே ஆண்விலங்குகள், ஆதிக்கத்துக்கான உடற்கூறுகளை பெற்றுகொண்டன என்று எண்ணத்தோன்றுகின்றது. பரிணாமத்தின் அடிப்படையான ‘தக்கன பிழைத்தல், இயற்கை தேர்வு' என்பது இந்த ஆண்பெண் வேறுபாடுகளுக்கு வழிசமைத்தது.

ஆகவே பாலியல் வன்புணர்வு என்பது, அடிப்படையில் மிக மிக இயற்கையான ஒரு நடத்தை. விலங்கினங்களின் பரிணாம வளர்ச்சிப்பாதையில் இந்நடத்தை ஒரு அவசியமான நடத்தையாகவும் இருக்கின்றது. பாலியல் வன்புணர்வு, மனிதனை தவிர ஏனைய விலங்கினங்களில் ஒரு குற்றமாகவோ, பிரச்சினையாகவோ நோக்கப்படுவதில்லை. அவைக்கு அது ஒரு பிரச்சினையான விடயமுமல்ல.

நாகரிகத்தில் வளர்ச்சியடைந்துவிட்ட மனிதர்கள் நாம், பாலியல் வன்புணர்வை ஒரு பாரிய குற்றமாகவே சடடப்புத்தகங்களில் கூட எழுதிவைத்துவிட்டோம். ஆண்-பெண் சம்த்துவம் என்பது நாகரிக நிலையில் நல்ல நிலையை அடைந்துகொண்டே வந்திருக்கின்றது. இன்னும் முழுமையான ஆண்-பெண் சமத்துவத்தை காண்முடியவில்லை தான். ஆண்-பெண் சமத்துவம் மிக மோசமாக உள்ள நாடுகளில், பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வு அதிக அளவில் இடம்பெறுவதை அவதானிக்கலாம். அதாவது ஆணாதிக்கம் அதிகமாகவுள்ள சமுதாயங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வுகள் அதிகமாக இருக்கும்.

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற முறைமைகள் ஏற்படுத்தப்பட்டு, திருமண முறைகளை ஏற்படுத்திய பின்பு, சந்ததியை பெருக்க்கிக்கொள்ள பாலியல் வன்புணர்வு என்ற நடத்தைக்குரிய தேவை இல்லாமலேயே போய்விட்டது. மனித இனத்தில், புரிந்துணர்வினடிப்படையிலான உறவுமுறைகள் என்றானபின்பு, வன்புணர்வுக்கு வேலையில்லாமல் போய்விட்டது தான். ஆனாலும் அடிமனதிலுள்ள வன்புணர்வு என்னும் அபரிமித இச்சை இன்னும் பலரை விட்டு போய்விடவில்லை.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வுகள் இடம்பெற்றுகொண்டிருக்கின்றன. முக்கியமாக, பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் பெண்கள் அகப்படும்போது ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அத்த்துடன், உலகெங்கும் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில், பெண்களுக்கெதிரான ஒரு வன்முறை ஆயுதமாக, ஒரு இன அழிப்பு ஆயுதமாக இராணுவ வீரர்களால் பெண்கள்மீது பாலியல் வல்லுறவுகள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தகையதொரு நிலைமையை இலங்கையிலும் காணலாம். இலங்கையில் நடைபெறும் பாலியல் வல்லுறவுக்குற்றங்களில் அதிகமானவை ஆயுதம் தாங்கியவர்களாலேயே (இராணுவம், பொலிஸ், ஆயுதக்குழுக்கள்) நிகழ்த்தப்படுகின்றன.

அறிமுகமில்லாதா ஆணினாலோ/ஆண்களினாலோ பெண்களின்மீது புரியப்படும் உடலுறவு மட்டுமல்ல பாலியல் வன்புணர்வு. கட்டிய கணவனால் கூட எத்தனையோ மனைவிகள் (பெண்கள்) பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அதாவது, கணவன் மனைவியாக இருந்தால் கூட, பெண்ணின் விருப்பத்திற்கெதிராக ஆண் உடலுறவிலீடுபடுவானாயின் அதுவும் பெண்ணின்மீது புரியப்படும் பாலியல் வல்லுறவு தான், குற்றம்தான். இத்தகைய குற்றங்களுக்கும் நீதிபெற்றுக்கொள்ள சட்டத்தில் இடமிருக்கின்றது.

மனித சமுதாயம் இன்னுமே ஆணாதிக்க சமூகக்கட்டமைப்பிலிருந்து விடுபடுவதாயில்லை. அதனால் தான், இன்று எண்ணுக்கணக்கற்ற பெண்கள், தங்கள் கட்டிய கணவனாலேயே வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்றார்கள். இன்று எத்தனை ஆண்கள், தங்களுடைய மனைவிக்கு, கட்டிலிலாவது சமபங்கு வகிக்கும் உரிமையை வழங்கக்கூடிய புரிந்துணர்விலிருக்கின்றார்கள். அல்லது அத்தகை உரிமையை எடுத்துக்கொள்ள எத்தனை பெண்கள் துணிவுடன் தயாராயிருக்கின்றார்கள். கட்டிலிலும் ஆணாதிக்கத்தின் அரசாட்சி தான். ஆணாதிக்க சமுதாயத்தில் வாழ்ந்து பழகிவிட்ட ஆண்களும், அதே சமுதாயத்தில் வாழ்ந்து பழகிவிட்ட பெண்களுமே இந்நிலைமைகளுக்கு காரணம். ஆகக்குறைந்தது கட்டிய கணவனால் பெண்கள் வல்லுறவுக்குள்ளாக்கப்படுவதேனும் இல்லாமல் செய்யப்படலாமே.

பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தோன்றாதவரை [சிந்தித்து செயலாற்றும் தன்மை (Rationality, Setting up goals and working towards them) அமையப்பெறாதவரை], பாலியல் வன்புணர்வு ஒரு இயற்கையான, அவசியமான நடத்தை தான். இருப்புக்கு இன்றியமையாததொன்றாக அது இருந்தது, ஆனால், இன்று மனித இனத்துக்கு அது தேவையில்லாததொன்று, பிரச்சினையானதொன்று. ஆண்-பெண் சமத்துவம் பேணப்படவேண்டிய தேவையிருக்கின்றது. பெண்ணினதும், ஆணினதும் உரிமைகள், உணர்வுகள் சமமாக மதிக்கப்படவேண்டிய தேவையிருக்கின்றது. பெண்ணை ஆணின் அரைவாசியென்றும், தரம் குறைந்தவளென்றும், ஆணிற்கு அடங்கிநடக்கவேண்டுமென்றும், பெண்களின் குரல்வளையை நசுக்கிய மதநூல்களை ஒருபுறம் தூக்கிப்போட்டுவிட்டு, எது நீதி, எது சரி என்று ஆராய்ந்தொழுகவேண்டிய காலமிது. பாலியல் வன்புணர்வின்மூலம் இனத்தை பெருக்கவேண்டிய தேவை மனித இனத்துக்கு என்றோ இல்லாமல் போய்விட்டது. அதற்கான உரிய சமூகக்கட்டமைப்புக்களை நாங்கள் வளர்த்தெடுத்துவிட்டோம். பாலியல் வன்புணர்வு, மனித இனத்தில் அடக்குமுறையின் சின்னமாக மாறிவிட்டது. வெட்கக்கேடான விடயமாக மாறிவிட்டது. ஆகவே இந்த பாலியல் வன்புணர்வு என்ற துர்நடத்தையை, குற்றத்தை மனித இனத்திலிருந்து முற்றுமுழுதாக அகற்றுவதற்கு, ஆண், பெண் வேறுபாடின்றி அனைவருமே பாடுபடவேண்டிய தேவையிருக்கின்றது.

13 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ஒரு ஆராய்ச்சி கட்டுரையை / புத்தகத்தை வாசித்த திருப்தியோடு இந்த பதிவில் இருந்து வெளியேறுகிறேன்...

மதுவர்மன் said...

செந்தழல் ரவி,

உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி

Anonymous said...

ஓர் ஆய்வுப்பார்வையில் எழுதப்பட்ட இக்கட்டுரை படிக்க நிறைவாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் !

ஆ.ஞானசேகரன் said...

மிகவும் நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள்... வாழ்த்துகள்! ஆதிமனிதர்களில் பெண்ணை தலைமையேற்று குழுக்களாக வாழ்ந்ததாக படித்த ஞாபகம்.. அப்படிப்பட்ட காலங்களில் வன்புணர்வு எப்படி இருந்திருக்கும்... உங்களின் விளக்கம்

sukan said...

பாலியல் வன்புணர்வு குறித்த உங்கள் பார்வை நன்றாக உள்ளது.
பாலியல் வன்புணர்வு உளவியல் அடிப்படையில் ஒரு குற்றமில்லை என்றும் கூறுவார்கள்.
மனிதன் இயற்கையிடம் இருந்து நீண்ட தூரம் விலகி வந்துவிட்டான். இன்றய காலகட்டத்தில் மனிதனிடம் இருந்து இயற்கையை காப்பாற்றுவதற்கு பெரும் பாடுபட வேண்டியுள்ளது.

மதுவர்மன் said...

நவீன், ஞானசேகரன், நர்மதா,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஞானசேகரன், உங்கள் கருத்து சம்பந்தமாக கொஞ்சம் ஆராய்ந்து பார்த்துவிட்டு பின்னூட்டமிடுகின்றேன்.

நர்மதா, ஆம், பாலியல் வன்புணர்வு, ஆணிடம் இயற்ற்கையாக அமர்ந்துவிட்ட ஒரு நடத்தை தான். ஒவ்வொரு ஆணுக்குள்ளும், ஒரு பாலியல் வன்புணர்வாளன் ஒளிந்திருக்கின்றான் (Inside every man, hidden a rapist - Men have got the genetic code responsible for the rapist behaviour). அதற்காக அந்த நடத்தையை யாரும் இப்போது நியாயப்படுத்திவிட முடியாது.

முயன்றால், சமூகத்திலிருந்து இந்த குற்றத்தை இல்லாதொழிக்கலாம்.

Anonymous said...

//ஆதிமனிதர்களில் பெண்ணை தலைமையேற்று குழுக்களாக வாழ்ந்ததாக படித்த ஞாபகம்.. அப்படிப்பட்ட காலங்களில் வன்புணர்வு எப்படி இருந்திருக்கும்...//


அந்தகாலத்தில் வன்புணர்பு எப்படி என்று தெளிவாகத்தெரியவில்லை ஆனால் தாயே மகன்களோடும் தகப்பன்களோடும் உறவு கொண்டதுடன் தற்போது ஆண்களின் போர்வெறி வன்முறைக்குணங்களைத் தலமையேற்று நடத்தியாதாகராகுல் சாங்கிருத்தியனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது
விரிவான கட்டுரையை எதிர்பார்கிகிறேன் உரையாடவேண்டிய விடயங்களளை எடுத்தாளுகின்றமைக்கு எனது நன்றிகள்

புருனோ Bruno said...

பாலியல் வல்லுறவு - வன்புணர்ச்சி - Rape - என்றால்

விருப்பத்திற்கு எதிராக
சம்மதத்திற்கு எதிராக

மேற்கொள்ளப்படும் உடலுறவு

--
A man is said to commit "rape" who, except in the case hereinafter excepted, has sexual intercourse with a woman under circumstances falling under any of the six following descriptions: -

First: - Against her will.

Secondly: -without her consent.

Thirdly: - With her consent, when her consent has been obtained by putting her or any person in whom she is interested in fear of death or of hurt.

Fourthly: -With her consent, when the man knows that he is not her husband, and that her consent is given because she believes that he is another man to whom she is or believes herself to be lawfully married.

Fifthly: - With her consent, when, at the time of giving such consent, by reason of unsoundness of mind or intoxication or the administration by him personally or through another of any stupefying or unwholesome substance, she is unable to understand the nature and consequences of that to which she gives consent.

Sixthly: - With or without her consent, when she is under sixteen years of age.

Explanation: - Penetration is sufficient to constitute the sexual intercourse necessary to the offence of rape.

Exception: -Sexual intercourse by a man with his wife, the wife not being under fifteen years of age, is not rape].

-
விருப்பம் - will வேறு
சம்மதம் - consent வேறு

உங்கள் கட்டுரையில் இந்த வித்தியாசம் விவாதிக்கப்படவில்லை
-
சம்மதம் இருந்தும் விருப்பம் இல்லையென்றாலும் அது கூட சட்டப்படி பாலியல் வல்லுறவு தான்.

விருப்பம் இருந்து சம்மதம் இல்லையென்றால் அது கூட சட்டப்படி பாலியல் வல்லுறவு தான்
-

புருனோ Bruno said...

//மிகவும் நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள்... வாழ்த்துகள்! ஆதிமனிதர்களில் பெண்ணை தலைமையேற்று குழுக்களாக வாழ்ந்ததாக படித்த ஞாபகம்.. அப்படிப்பட்ட காலங்களில் வன்புணர்வு எப்படி இருந்திருக்கும்... உங்களின் விளக்கம்//

ஒரு வேளை விருப்பம் இல்லாத ஆணை பெண் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியிருக்கலாம்

Anonymous said...

a guy never says NO :)) so its a rare a girl raping a guy.

மதுவர்மன் said...

எஸ் சத்யன்,

உங்கள் கருத்துக்கும் தகவல்களுக்கும் நன்றி. நீங்கள் குறிப்பிட்ட அந்த நூலை கிடைத்தால் வாசிக்க முயற்சிக்கின்றேன். இங்கே நான் எழுதியவை, என்னுடைய இரு நாள் சிந்தனையில் உருவானவை (கற்பனையல்ல, நான் பெற்ற அறிவினடிப்படையில்).

அதன் பின்னர் தான் இவ்விடயம் பற்றி தேடிப்பார்த்தேன், நிறைய, சமூகவியல், மனிதவியல், விஞ்ஞான ஆராய்ச்சிகளை செய்திருக்கின்றார்கள் என்று பார்த்தபோது சந்தோசமாக இருந்தது. அவற்றையும் உள்ளடக்கி, கட்டுரை மிக விரைவில் செம்மைப்படுத்தப்படும்.

மதுவர்மன் said...

புரூனோ,

உங்கள் கருத்துக்கள் அருமை.

பாலியல் வல்லுறவு என்பத்ற்கான சட்டரீதியான வரைவிலக்கணம் நாடுகளுக்கு நாடு வேறுபடும்.

உங்கள் முதல் பின்னூட்டத்தில், ஆண் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவது பற்றியும், விசேடமாக ஆண்குறி-பெண்குறி உடலுறவு (Vaginal) சம்பந்தமாகவுமே குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கேயிருந்து இந்த தகவலை பெற்றீர்கள் என்று சொல்வீர்களா?

பாலியல் வல்லுறவிலே, வாய்வழி (Oral), ஆசனவாய்வழி (Anal) வல்லுறவுகளும் உள்ளடங்குகின்றன. அத்துடன், ஆண்குறியை செலுத்துவது மட்டுமல்ல வலுறவு, ஆண்குறி தவிர்ந்த மற்றைய உடற்பாகங்களையோ, பொருட்களையோ கூட செலுத்துவதும், வன்புணர்வாக கொள்ளப்படலாம். எனினும் இவை இடத்துக்கிடம் வேறுபடும்
http://en.wikipedia.org/wiki/Rape
http://en.wikipedia.org/wiki/Sexual_intercourse
http://en.wikipedia.org/wiki/Sexual_penetration

இந்த வித்தியாசங்களை முன்வைத்து கட்டுரையை மாற்றியமைக்கின்றேன், விரைவில். உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி.

மதுவர்மன் said...

//a guy never says NO :)) so its a rare a girl raping a guy.//

Anonymous,

அப்படியல்ல, ஆண்கள் கூட எந்த பெண்ணுடனும் உடலுறவு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. பாலியல் தெரிவென்பது இடம்பெற்றே தீரும்.

பெண்ணினால், பெண்களினால் ஆண் மீது புரியப்படும் பாலியல் வல்லுறவுகளில், ஆண் அங்கே வலிமையற்ற ஒருவனாக காணப்படுவான்.

உதாரணத்துக்கு என்னுடைய சிங்கள நண்பனொருவன், தரம் 7 இலே கல்வி பயிலும்போது, பலதடவைகள் உயர்தர வகுப்பு மாணவிகளால் பாலியல் தேவைகளுக்காக பாவிக்கப்பட்டிருக்கின்றான். தென்னிலங்கையில் சில கிராமப்புற பாடசாலைகளில் இது பரவலான விடயமென்பதையும் அறிந்தேன்.

வயது வந்த பெண்கள், அனேகமாக சின்ன பையன்களை பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

ஆணொருவன் சுய நினைவில்லாத நிலையில் கூட சாதாரண ஒரு பெண்ணினால் இது இடம்பெறலாம்.

நீங்கள் சொல்வதுபோல, மிக மிக குறைந்த அளவிலேயே, அதற்கான காரணங்களை கட்டுரையிலே விளக்கியிருக்கின்றேன் என நினைக்கின்றேன். பெண்கள் பெற்றுக்கொள்ளும் அந்தத்தில் இருப்பது ஒரு முக்கிய காரணம்.

சமூக கட்டுபாடுகள், ஆணையும் கட்டுப்படுத்தியே வைத்திருக்கின்றன. இங்கே தமிழ் சமூகத்திலே, மிக சொற்பமான ஆண்களே திருமணத்துக்கு முந்திய உடலுறவு வைத்துக்கொள்ள முயலுகின்றார்கள். ஏனையவர்கள் சமூகத்துக்கு கட்டுப்பட்டு அவ்வாறு செய்வதில்லை.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி