Saturday, September 13, 2008

இன ஒடுக்கலும் போராட்டமும் அமெரிக்க அக்கறையும்

(சோஷலிஸ நாடுகளிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நாடுகளிலும் நிகழ்ந்த அமெரிக்கக் குறுக்கீடுகள் பலவும் தேசிய இனங்களினதும் தேசங்களதும் விடுதலைப் போராட்டங்கட்கு ஆதரவு என்ற தோற்றத்தைப் பெற்றன. ஆனால் விடுதலைப் போராட்டங்கட்குக் குழிபறிப்பதற்கும் தேசிய சிறுபான்மையினங்கள் தூண்டிவிடப்பட்டன. தமிழர் மீதான இன ஒடுக்கலுக்கும் போருக்கும் உதவி வந்த அமெரிக்காவின் தேவை, இலங்கை மீதான பூரண ஆதிக்கம் மட்டுமே.)

ஏகாதிபத்தியத்துக்குத் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக என்ன நிலைப்பாடு இருக்கிறது என்ற கேள்விக்குத், தேசங்களதும் தேசிய இனங்களதும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு விடை தேடுவது கடினம். ஏகாதிபத்தியம் தேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கும் திட்டவட்டமான ஒரு விடை கிடையாது. கொலனிய யுகத்திலிருந்தே தேசங்கள் மீதான ஒடுக்குமுறை பற்றிய கேள்விக்கான திட்டவட்டமான ஒரு விடையை ஒடுக்கப்படுகிற தேசத்தின் நோக்கிலோ ஒடுக்குகிற தேசத்தின் நோக்கிலோ கூடப் பெற இயலாமலே இருந்தது.

ஒவ்வொரு ஏகாதிபத்திய நாட்டினதும் (உண்மையில் அந்த நாட்டின் உண்மையான எசமானர்களான ஏகபோக முதலாளிய நிறுவனங்களதும்) நலன்களை முன்வைத்தே அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தமது உள்நாட்டு, அயல்நாட்டுக் கொள்கைகளை வகுக்கின்றனர்.

கொலனிய யுகத்தில் ஒரு கொலனிய வல்லரசு இன்னொரு கொலனிய வல்லரசின் கீழுள்ள நாட்டில் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்திருக்கிறது. ஆனால் அந்த ஆதரவுக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று தனக்குப் போட்டியாயிருக்கிற வல்லரசைப் பலவீனப்படுத்துவது. மற்றது கொலனி ஆட்சிக்குக் கீழ்ப்பட்ட நாட்டைத் தன் வசமாக்குவது. இவ்வாறான உலக ஆதிக்கத்திற்கான போட்டியே இரண்டு உலகப் போர்கட்குக் காரணமாயிருந்தது. இன்று ஏகாதிபத்தியங்களிடையே மேலாதிக்கத்திற்கான அப்படிப்பட்ட வெளிவெளியான மோதல் ஒன்றைக் காண முடியாது. ஏனெனில் அமெரிக்காவே உலகின் மிக வலிய மேலாதிக்க வல்லரசாக உள்ளது. நேரடியான கொலனி ஆட்சியின் இடத்தை நவகொலனியம் என்னும் பொருளியல் வழியிலான ஆதிக்கம் பிடித்துக் கொண்டுள்ளது. கொலனிய ஆட்சியாளரின் படைகள் செய்த காரியத்தை உள்ளுர் அரசின் படைகள் செய்கின்றன. நிலைமைகள் கட்டுக்கடங்காமற் போகும் போது, அதாவது ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிரான சவால்கள் வலுப்படும் போது, மட்டுமே ஏகாதிபத்தியம் தனது படைகளைப் பயன்படுத்துகிறது. முடிந்தால் அதையுங் கூட ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பேரில் செய்து கொள்கிறது.

இரண்டாம் உலகப் போரின் பின்பு மாறி மாறி எங்காவது பேரழிவு மிக்க போர்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்து வந்துள்ளன. கொலனிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்களும் அந்நிய ஆக்கிரமிப்புக்கும் மேலாதிக்கத்திற்கும் எதிரான போர்களும் அவற்றில் முக்கியமான ஒரு பகுதியாவன. உள்நாட்டு யுத்தங்கள் அதேயளவுக்கு முக்கியமானவையாக இருந்து வந்துள்ளன. இவற்றியெல்லாம் ஏகாதிபத்தியம் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏதோ வகையில் ஒரு முக்கியமான பங்கு வகித்துள்ளது. சோவியத் யூனியன் வலிமையும் பின்னைக்காலத்தில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிரான ஒரு உலக வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தும் முனைப்பில் சோவியத் யூனியன் மூன்றாம் உலகில் மேலாதிக்கப் போக்கில் நடந்து கொண்டதுவும் சோவியத் யூனியனுக்கு எதிரான அமெரிக்கக் குழிபறிப்பு வேலைகளைத் தீவிரப்படுத்தியது. அந்த நோக்கத்திற்காகவும் பொதுவாகவே சோஷலிஸ ஆட்சிகள் நிலவிய நாடுகளிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஆட்சிகள் இருந்த நாடுகளிலும் பலவாறான குறுக்கீடுகள் நிகழ்ந்தன. இவற்றுட் பல தேசிய இனங்களினதும் தேசங்களதும் விடுதலைக்கான போராட்டங்கட்கு ஆதரவு என்ற தோற்றத்தைப் பெற்றன. விடுதலைப் போராட்டங்கட்குக் குழிபறிப்பதற்குக் கூடத் தேசிய சிறுபான்மையினங்கள் தூண்டிவிடப் பட்டுள்ளன.

சோவியத் யூனியனின் ஆதிக்கத்திற்கு எதிராக நேரடியாகவோ மறைமுகமாகவோ அமெரிக்கா குறுக்கிட்ட மூன்று நிகழ்வுகளைப் பார்ப்போம். ஒன்று அங்கோலா. அங்கே விடுதலை இயக்கங்களாகத் தொடங்கிய இரண்டு அமைப்புக்களிடையிலான மோதல் விடுதலையின் பின்பு உள்நாட்டுப் போராக இருபது ஆண்டுகட்கு மேலாகத் தொடர்ந்தது. சோவியத் சார்பான அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவினதும் நிறவாத தென்னாபிரிக்காவினதும் நேரடி ஆதரவுடன் யோனாஸ் சவிம்பியின் தலைமையில் தொடர்ந்த கிளர்ச்சியில் சோவியத் யூனியனுக்கு ஆதரவாகக் கியூபாவின் குறுக்கீடு அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவை வென்றெடுத்ததால் அமெரிக்க நோக்கங்கள் நிறைவேறவில்லை. எதியோப்பியாவின் கொடுங்கோலனான மன்னன் ஹெய்லே சலாசியைத் தூக்கி எறிந்து மிரியம் மெங்கிற்சு தலைமையிலான ராணுவ ஆட்சி வெளியே இடதுசாரித் தோற்றங்காட்டினாலும் வேகமாகவே ஒரு அடக்குமுறை ஆட்சியாக மாறி கொலனிய ஆட்சியாளரால் எதியோப்பியாவுக்குள் சேர்க்கப்பட்ட எரித்திரியாவை கொடிய தேசிய இன ஒடுக்கலுக்கு உட்படுத்தியது. எரித்திரிய மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவின் நோக்கம் வஞசகமானது. எதியோப்பியாவில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த பின்பு, எரித்திய மக்களுக்கு ஆதரவு வழங்கிய அமெரிக்கா எரித்தியா மீது குண்டு வீசுவதற்கு எதியோப்பியாவுக்கு உதவியது. அமெரிக்காவின் ஆதரவுபெற்ற ஒரு விடுதலை இயக்கம் ஒரே நாளில் ஒரு பயங்கரவாதப் பிரிவினை இயக்கமாக உருமாறியது.

ஆஃப்கானிஸ்தானில் இருந்த நிலப்பிரபுத்துவக் கொடுங்கோலாட்சியைத் தூக்கி எறிந்து உருவான ஆட்சிக்கு அண்டை நாடான சோவியத் யூனியனின் ஆதரவு இருந்தது. ஆஃப்கானிஸ்தானின் பிற்போக்குச் சக்திகளைக் கொண்டு ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த அமெரிக்கா இஸ்லாமிய மதவாத அரசியலை நாடியது. ஆஃப்கானிஸ்தானின் கேந்திர முக்கியத்துவங் காரணமாக அதன் மீது தனது செல்வாக்கைக் கைவிட விரும்பாத சோவியத் யூனியன் முதலில் ஆஃப்கானிய அரசாங்கத்திற்கு இராணுவ உதவி வழங்கியது. பின்பு நேரடியாகவே தனது படைகளை அங்கு அனுப்பியதன் மூலம் அமெரிக்காவும் இஸ்லாமிய தீவிரவாதிகளும் வைத்த பொறியிற் சிக்கிக் கொண்டது. ஆஃப்கானிஸ்தானில் சோவியத் குறுக்கீட்டின் விளைவாக ஏற்பட்ட ராணுவத் தோல்வி உள்நாட்டிலும் வெளியிலும் சோவியத் ஆட்சியாளர்கட்குக் கிடைத்த ஒரு பெரிய அடியாக அமைந்தது. சோவியத் யூனியனின் உடைவைத் துரிதப்படுத்திய ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆஃப்கானிஸ்தானின் உள்நாட்டுப் போர் எனலாம். அங்கு, தான் ஆட்சிக்கு வர உதவிய மதவாத ஆட்சியைத் தன்னாற் கட்டுப்படுத்த இயலாத நிலையில், தான் ஊட்டி வளர்ந்த தலிபானிகளை ஆட்சியிலிருந்து விரட்ட அமெரிக்கா எடுத்த முயற்சிகள் இன்று ஒரு போராகி அமெரிக்காவை அல்லற்படுத்துகின்றன.

இவை அமெரிக்கா விடுதலைப் போராட்டங்களுக்கு வழங்குகிற 'ஆதரவின்" உண்மையான வடிவத்தை விளக்கப் போதுமானவையல்ல என்று யாரும் நினைத்தால் யூகோஸ்லாவியாவைப் பிளவுபடுத்திச் சிதைத்துப் பிரித்துப் போடுவதில் அமெரிக்கா தேசியவாதத்தை எவ்வாறு பயன்படுத்தியது என்பதைக் கவனிக்கலாம். அங்கு அமெரிக்கா விரும்பாத ஆட்சி எஞ்சியிருந்த சேர்பியாவினுள் அல்பானிய தேசிய இனத்தவர் செறிவாக வாழும் கொசொவோவினுள் பிரிவினைவாதச் சக்திகளை சி.ஐ.ஏ. மூலம் அமெரிக்கா ஆயுதபாணிகளாக்கி ஒரு இன மோதலுக்கும் இனப் படுகொலைகட்கும் வழி செய்தது.

தேசிய இன ஒடுக்கலை மிகக் கொடிய முறையில் அனுபவிப்பவர்கள் குர்திய இனத்தவர். துருக்கியின் தெற்கிலும் ஈராக்கின் வடக்கிலும் ஈரானின் வடமேற்கிலும் மூன்று நாடுகளிடையே குர்திய பிரதேசம் பிரிவுண்டுள்ளது. ஒரு சிறு பகுதியினர் சிரியாவின் வடகிழக்கில் வாழுகின்றனர். சதாம் ஹ{ஸேன் குர்திய மக்களைக் கொடுமைப்படுத்தியது பற்றி நமக்கு நிறையவே சொல்லப்பட்டாலும் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளி நாடான துருக்கியிலேயே குர்திய மக்களின் மீதான ஒடுக்குமுறை மிகக் கொடுமையானது. அங்கு தான் விடுதலைப் போராட்டம் மிக வலிமைபெற்றுக் காணப்பட்டது. துருக்கிய குர்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகவும் உதவியுள்ளன. அதே வேளை சதாம் ஹ{ஸேன் 1990க்குப் பின்பு அமெரிக்காவின் எதிரியாக உருமாறிய பின்பு அமெரிக்கா சதாம் ஹ{சேனுக்கு எதிராக ஈராக்கிய குர்திய தேசியவாதிகளைப் பயன்படுத்தியது. இன்று ஈராக்கில் அமெரிக்காவின் அதி நம்பகமான நட்புச்சக்தியாக குர்திய தேசியவாதிகள் இருக்கின்றனர். எனினும் ஒரு தனியான ஈராக்கிய குர்திஸ்தானோ ஒரு பூரண சுயாட்சியோ உருவாகுமானால் இது துருக்கியினுள் சிக்கல்களை உருவாக்கும். எனவே ஈராக்கில் அமெரிக்காவுக்கு முழு ஆதரவான ஒரு சூழ்நிலை இல்லாதளவில் குர்திய தேசியவாதிகளை அமெரிக்கா அரவணைக்கும். ஆனால் குர்திய அதிகாரம் துருக்கியின் குர்திய இன ஒடுக்கலுக்கு ஒரு சவாலாக அமையுமளவுக்கு வளர அமெரிக்கா அனுமதிக்க மாட்டாது.

இன்னொருபுறம் தனது சர்வதேசக் காய் நகர்த்தல்கட்கு வசதியாகவும் உலகமயமாதல் திட்டத்திற்கு உடன்பாடாகவும் அமைகிற ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேசிய இன ஒடுக்கலுக்கு அமெரிக்காவின் பூரண ஆசிகள் இருந்து வந்துள்ளன. ஆக மிஞ்சினால் மனித உரிமை மீறல்கள் பற்றிய மெலிதான கண்டனங்கள் அல்லது கவலை தெரிவிப்பதற்கு மேலாக எதையும் கேட்க இயலாது. முன்னைய இந்தோனீசிய ராணுவ ஆட்சி கிழக்கு திமோரிலும் அச்சே மாகாணத்திலும் நடத்திய வெறியாட்டங்கள் பற்றிய அமெரிக்க மௌனம் முதல் இலங்கையின் தேசிய இன ஒடுக்கல் வரையும் இதற்கான உதாரணங்கள் பல உள்ளன.

இன்று இலங்கையில் அதிகாரப்பரவலாகத்தையும் அமைதியான தீர்வையும் வற்புறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சில விமர்சனங்கள் வெளிவெளியாக மேலை நாடுகளிலிருந்தும் சாடைமாடையாக அமெரிக்காவிலிருந்தும் வருவதையிட்டுத் தமிழ் மக்களிடையே புதிய எதிர்பார்ப்புக்களை உருவாக்குகிற ஒரு போக்கைத் தமிழ் ஊடகங்களிற் காண்கிறோம். எனினும் தமிழ் மக்கள் மிக மோசமான விமானக் குண்டுவீச்சுக்கும் எறிகணைத்தாக்குதல்கட்கும் உட்பட்ட ஒரு வருடக்காலத்தில் நடந்த இடப்பெயர்வுகளும் உயிரிழப்புக்களும் பற்றி அமெரிக்காவோ ஐரோப்பிய நாடுகளோ இந்தியாவோ ஏன் எதுவுமே செய்யவில்லை என்பதற்கான காரணங்களையும் நாம் ஆராய வேண்டும். ஆனால்; அமெரிக்க ராஜாங்க திணைக்களம் மனித உரிமை மீறல்கள் பற்றி வெளியிட்ட அறிக்கையில் இலங்கை பற்றி கடுந்தொனியில் குறிப்பிட்டுள்ளமை கூட மக்கள் சார்பு நிலைப்பாடு எனக் கொள்ள முடியாது. அமெரிக்காவின் ஆதிக்க நோக்கமே மனித உரிமை மீறல்களின் மீதான கண்டனத்திற்குப் பின்னால் படிந்து காணப்படுகின்றமை பிரிந்துப் பார்க்கப்பட வேண்டியவையாகும்.

அமெரிக்கா ஈழத் தமிழரின் சுயநிர்ணயத்தை எந்த நிலையிலும் ஆதரிக்கவில்லை. மாறாக, 25 ஆண்டுகளாகத் தமிழர் மீதான இன ஒடுக்கலுக்கும் போருக்கும் உதவிய அமெரிக்காவின் இறுதித் தேவை, இலங்கை மீதான பூரண ஆதிக்கம் மட்டுமே. அது உடனடியாக இயலாத போது இடைக்காலத்தில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் கூடிய மேலாதிக்கம் இயலுமாகலாம். விடுதலைப் புலிகள் ஒரு வலிய ஆயுதப் போராட்டச் சக்தியாகவும் அரசாங்கத்துக்குச் சவாலாகவும் இருப்பது அமெரிக்காவுக்கு உடன்பாடானதல்ல. இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் முரண்டுபிடித்தால் அல்லது அதன் உலகமயமாதல் கொள்கைக்குக் கேடான முறையில் நடந்து கொண்டால் விடுதலைப் புலிகளைப் பற்றிச் சிறிது பரிவுடன் நடந்து கொள்ளுவது போல ஒரு தோற்றங் காட்டப்படும். அதற்கும் மேலாக அமெரிக்காவிடமிருந்தோ எந்த மேலாதிக்க வல்லரசிடமிருந்தோ தமிழ்த் தேசிய இனமோ அல்லது ஏனைய தேசிய இனங்களோ எதையும் எதிர்பார்க்க நியாயமில்லை.

2 பின்னூட்டங்கள்:

சண்சுதா said...

சரியாக சொன்னீர்கள் ஏகலைவா, மத்திய கிழக்கில் ஒரு இஸ்ரேலைப்போல தென்னாசியாவுக்கு ஒரு இந்தியா. கையில ஆப்போட பாத்துக்கொண்டு இருக்கிறாங்கள். இந்த கறுமத்தில இந்தியாவும் அவையிண்ட எசமானரான அமெரிக்காவும் சுதந்திரம் வாங்கி(?)த் தருவினம் என்டு அவைய நக்கிக்கொண்டிருக்கினம். வரலாற்றில இருந்து பாடம் படிக்கமாட்டம் என்டு நின்டா என்ன செய்யிறது? கெடுகுடி சொற்கேளாது, சாபிணம் மருந்து தின்னாது. கெடுகிறன் பிடி பந்தயம் என்டு நிக்கிறதுகளை என்ன செய்யிறது?
எல்லாம் இந்த த.தே.கூ வைப்பற்றித்தான்.

சண்சுதா said...

தொடர்ந்து எழுதுங்கோ. உலக விசயங்களை கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்கோ.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி