Monday, September 7, 2009

கடவுளரின் கவனத்திற்கு - 001 - பாவம் செய்த பலியாடுகள்!

நண்பர்களே,

கடவுளரின் கவனத்திற்கு வராதவை!

'கடவுளரின் கவனத்திற்கு' என்ற தலைப்பில், இது ஒரு தொடர் எழுத்தாக அமையப்போகின்றது. கடவுள், மத நம்பிக்கைகள் உலகம் முழுமைக்கும், பிரதேச, சமூக எல்லைகளை கடந்து பொதுவாக, ஏதோ ஒரு வடிவில் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. நம்பிக்கை என்ற நடத்தை, உயிரியல் பரிணாம பாதையில், மனித இனத்துக்கு, பிழைத்துக்கொள்வதற்கான(survival) ஒரு விடயமாக வரப்பெற்றது. அதற்கு மனித மூளையின் அமைப்பு, அதன் சில பகுதிகள் பொறுப்பாக இருக்கின்றன என்பது அண்மைய விஞ்ஞான ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பு. இந்த நன்மை புரிந்த 'நம்பிக்கை (Belief)' என்ற நடத்தையின் பக்கவிளைவாகவே கடவுள், மத நம்பிக்கைகள் மனித இனத்தில் ஏற்பட்டன. எவ்வாறு இசை, சங்கீதம் போன்றவை பரிணாம வளர்ச்சியின் (Biological Evolution) அம்சமான, தொடர்பாடலுக்கு துணைபுரிந்த 'மொழி (Language)' வளர்ச்சியின் பக்கவிளைவாக அமைந்ததோ, அவ்வாறே கடவுள், மத நம்பிக்கைகளும் நம்பிக்கை என்ற நடத்தையின் பக்கவிளைவே.

ஆனால் மத, கடவுள் நம்பிக்கைகள் என்ற பெயரில் அரங்கேறும் கொடுமைகள், பொருள் வீண்விரயங்கள், ஏமாற்று நடவடிக்கைகள், பாரபட்ச நடவடிக்கைகள் என்றுமே ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை. அவை சிந்திக்கத்தெரிந்த மனிதர்க்கு ஆத்திரமூட்டுபவன. அவ்வகையில், விழிப்புணர்வூட்டும் நோக்கோடு மத நம்பிக்கைகள் என்ற பெயரில் நடைபெறும் பைத்தியக்காரத்தனங்களை அவ்வப்போது வெளிப்படுத்துவதாக இத்தொடர் அமையப்போகின்றது.

பாவம் செய்த பலியாடுகள்???

இது இவ்வாண்டு (2009) சிலாபத்தில் அமைந்திருக்கின்ற முன்னேஸ்வரம் மகா பத்திரகாளி அம்மன் கோவிலில் அரங்கேறிய மகா கொடுமை. ஏறக்குறைய 200 ஆடுகள், கோயில் முன்றலில் பலநூறு மக்கள் முன்னிலையில், அக்கோயிலின் சமய சடங்கு என்ற பெயரில் வெட்டிக்கொல்லபட்டன, அதாவது பலியிடப்பட்டன. படங்களை பாருங்கள் அவையே கதை சொல்லும்.






ஒரு காலத்தில், உலகம் முழுவதும் மத சடங்குகளில் இந்த (கடவுளர்க்கு) பலியிடுதல் என்ற சடங்கு இருந்து வந்திருக்கின்றது. ஆடுகள், கோழிகள் போன்ற விலங்குகளை பலியிடுவதுடன் மட்டும் நிற்காமல், குழந்தைகள் உட்பட மனிதர்களை பலியிடும் வழக்கமும் இருந்திருக்கின்றது) ஆனால் காலப்போக்கில், இவற்றை பல மக்கள் ஏற்றுக்கொள்ளாமலும், தடைச் சட்டங்களாலும் இப்பலியிடுதல் என்பது அருகிப்போயுள்ளது.

ஆனாலும் இன்றுவரை இது எங்கோ ஒரு மூலையில் நடைபெற்றுவரும் நிகழ்வாகவே இருந்து வருகின்றது. இந்தியாவில் நகர்ப்பகுதிகளில் நடைபெறாவிட்டாலும், கிராமப்புறங்களில் அதிகமான அளவில் நடைபெறுவதாகவே அறியக்கிடைக்கின்றது.

ஆனாலும், இலங்கையிலும் இது நடைபெறுகின்றது என்பதை அறிந்தபோது மிக அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் ஏறக்குறைய 200 ஆடுகள், குழந்தைகள், சிறுவர்கள் முன்னிலையில், நீண்ட கூரிய வாள்களால் வெட்டிக்கொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வளவிற்கும் இந்நாட்டில், பொதுஇடங்களில் மிருகங்களை வெட்டிக்கொல்வதற்கு சட்டரீதியான தடை இருக்கின்றது. மதம் எல்லவற்றிலுமிருந்து தப்பிவிடுகின்றது.

எல்லா உயிர்களும் கடவுளின் படைப்பே, அவற்றிலும் கடவுள் வியாபித்திருக்கின்றார் என்று வலியுறுத்தும் இந்து மதத்தில், இக்கொலைகளை எவ்வாறு நியாயப்படுதமுடியும். அத்துடன் உயிக்கொலைகளையும், மாமிசமுண்ணலையும் இம்மதத்தில் மாபாதங்களாக குறிப்பிட்டிருக்கின்றார்கள். தங்கள் மீது கருணைகாட்டுவதாக பல்லாயிரக்கனக்கான மக்கள் நம்பும் இந்த கருணை மிக்க கடவுளர் (ஆகக்குறைந்தது நேரே பார்த்துக்கொண்டிருந்த மகா பட்திரகாளி அம்மன்) ஏன் இப்பாதகங்களை தடுக்கமுடியாமல் போனது. கடவுளரின் கவனத்திலிருந்து இவை தப்பிவிட்டனவா? அவ்வாறெனில் இதோ கடவுளரின் கவனத்துக்கு இவ்விடயம், எதிர்காலத்தில் இம்மாதிரியானவை நடைபெறாமல் தடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு...

மதுவர்மன் (2009-09-06)

நன்றி
படங்கள் மற்றும் செய்தி
Public slaughter of animals http://sundaytimes.lk/image_story.htm
Sacrificial goats http://sundaytimes.lk/090906/News/nws_04.html

உசாத்துணை
Belief and the brain's 'God spot' http://www.independent.co.uk/news/science/belief-and-the-brains-god-spot-1641022.html
Functional Neuroimaging of Belief, Disbelief, and Uncertainty http://richarddawkins.net/article,1994,Functional-Neuroimaging-of-Belief-Disbelief-and-Uncertainty,Sam-Harris-Sameer-A-Sheth-Mark-S-Cohen

Animal sacrifice http://en.wikipedia.org/wiki/Animal_sacrifice

Animal sacrifice: a corrective http://www.hindu.com/op/2003/09/16/stories/2003091600290300.htm
Significance of Anuimals in Hinduism http://www.hinduwebsite.com/hinduism/essays/animals.asp
Hinduism and animals http://www.bbc.co.uk/religion/religions/hinduism/hinduethics/animal.shtml
Ban on sacrificing animals in temples lifted http://www.hindu.com/2004/02/21/stories/2004022106220400.htm

11 பின்னூட்டங்கள்:

Nimal said...

உங்கள் முயற்சி தொடரட்டும்...!

ஆதித்தன் said...

தகவலுக்கு நன்றி மது!

இந்துமதத்துக்குள் கிடக்கிற இது போன்ற கேவலமான
சாக்கடைத்தன்மைகள் களைந்தெறியப்படவேண்டும்.

மு. மயூரன் said...

அடிப்படை விஷயங்களில் இந்த பதிவோடு எனக்கு உடன்பாடே என்பதை மதுவர்மனுக்கு தனியாக சொல்ல வேண்டியதில்லை.

ஆனால்,

கோவில்களில் லீற்றர்கணக்கான பால், மின்சாரம், மனிதவலு, பணம் விரயம் செய்யப்படுவதற்கும் கிராமிய, ஆதி வழிபாட்டு முறைகளில், சிறு தெய்வங்களுக்கு பலியிடுதலுக்கும் அடிப்படை வித்தியாசங்கள் இருகின்றன.

இது நடந்தது முன்னேஸ்வரத்தில் பிராமணர்கள் பூசை செய்யும் கோயிலில் என்றால் என்னுடைய இந்தக்கருத்து முற்றாக பொருந்தாது.

தமிழ்நாட்டில் மிருகபலி வழிபாட்டுக்கெதிராக சட்டம் கொண்டுவரப்பட்டது. ஞெயலலிதா காலத்தில். அந்தச்சட்டத்தில் அப்பட்டமான பார்ப்பனீய கண்ணோட்டம் இருந்தது. அதாவது பிராமணீய செல்வாக்குக்கு வெளியிலான வழிப்பாட்டு முறைகளை சட்ட ரீதியாக நசுக்கும் நோக்கம். கலாசார ஆக்கிரமிப்பு நோக்கம்.

கிராமிய வழிபாடுகளில் பலியிடும் விலங்குகளை பிறகு சமைத்து சாப்பிட்டு விடுவார்கள். அங்கே விரயம் கிடையாது. ஆனால் பார்ப்பனீய கோவில் முறைகளில் வீண் விரயம் அதிகம்.

மு. மயூரன் said...

விலங்குகளை கொன்று தின்பதென்பது இயற்கை வழிப்பட்ட சாதாரண நிகழ்வு. ஆதி மனிதரின் உணவுச்சடங்கின் நீட்சியாகவெ முனியாண்டி சாமிக்கு கடா வெட்டி பங்கு போட்டு எல்லோரும் தின்பது அமைகிறது. இங்கே மக்களின் எளிமையான வாழ்க்கை இருக்கிறது. இயற்கையோடு ஒன்றின போக்கு தெரிகிறது.

பார்ப்பனக்கோயில்கள் அவ்வாறில்லை. அது அதிகாரத்தின் மிகச்சிக்கலான சுரண்டல் ஏமாற்று வடிவமாகி நிற்கிறது.

இங்கே பார்ப்பனீயம் ஆக்கள் சாமியின் பெயரால் கடா வெட்டி கூடிச்சாப்பிடுவதை சட்டவிரோதமாக்கப்பக்கிறது.

பலியிட்டு பங்குபோட்டு சாப்பிடுவதில் எனக்கு எதிர்ப்பொன்றுமிலை. ஆனால் வீண்விரயமாக தேவைக்கு அதிகமாக (200 எல்லாம் அதிகம்) உணவு வளத்தை செலவழிப்பது தவறு.

விளிம்பு நிலை மக்களின் வழிபபடுகள் மீது பார்ப்பனீயம் வைக்கும் குற்றச்சாட்டுகளை நாமும் எதிரொலிப்பதில் எம்மையறியாமல் பார்ப்பனீய நலன்கள் காப்பாற்றப்படுகின்றன என்பதை குறிப்பிடவே விரும்பினேன்.

யோ வொய்ஸ் (யோகா) said...

இந்து சமயம் உயிர்களை கொல்வதை என்றுமே அனுமதிக்கவில்லை என்பதை எண்ணி பார்க்கையில் இதை ஏற்று கொள்ள முடியவில்லை.

அன்பே சிவமாக எண்ணியிருப்பவர் மிருகங்களை இவ்வாறு கொல்வது வேதனையானது

மதுவர்மன் said...

நிமல், ஆதித்தன் உங்கள் வருகைகளுக்கு நன்றி,

மயூரன்,

உங்களுடைய கருத்துக்களோடு நானும் உடன்படுகின்றேன். இந்த தடைச்சட்டங்கள் கொண்டுவருதலில் அரசியல் கலந்திருந்தது என்பதும் உண்மை தான். ஆனால், 2004 ஆண்டில் தமிழ் நாட்டில் இந்த தடைச்சட்டத்தை தூக்கவேண்டியதாக போயிற்று.

நீங்கள் சொல்வது போல பார்ப்பனீய வழிபாட்டு முறைகளில் மகா விரயங்கள் தான் இடம்பெறுகின்றன. அவை சம்பந்தமாகவும் அவ்வப்போது இத்தொடரில் எழுதவிருக்கின்றேன்.

இந்த பலியிடுதலில் வீண்விரயம் இல்லை என்பதற்காக, செய்வதை சரியென்று சொல்லமுடியாது தானே. குழந்தைகள், சிறுவர்கள் முன்னிலையில் குரூரமாக வெட்டிக்கொல்லப்படுவதை, நாகரிகமான மனிதர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்?

இது தொடர்பாக மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், பைத்தியத்தனமானது தானே, அவற்றை தான் இங்கு முக்கியமாக குறிப்பிடவிளைந்தேன்.

நாளை, இப்பலியிடல்களை செய்பவர்களில் ஒருவர் கனவில் கடவுள் வந்து ‘குழந்தை ஒன்றை பலிகேட்டு’ அடுத்தவருடம், இரகசியமாக அது நடந்தேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை மயூரன்.

காட்டுமிராண்டிகளாக திரிந்த காலத்தில் கைக்கொண்ட நடவடிக்கைகளை இப்போதும் நாம் கைக்கொள்ளவேண்டுமா என்பது ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டியது.

உணவிற்காக, இந்நாட்டில் அன்றாடம் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் கொல்லப்படுகின்றன். கொல்லுவதல்ல இங்கே பிரச்சினை. அது எதற்காக, எவ்வாறு செய்யப்படுகின்றது என்பது தான் பிரச்சினை.

அதையும் விட முக்கியமாக, கடவுளின் இருப்பை கேள்விக்குள்ளாக்குவது இத்தொடரின் முக்கிய நோக்கம். முக்கியமாக, மக்களை தங்களை தாங்களே கேள்விகேட்கச்செய்தல்.

புல்லட் said...

ம்ம்! அற்புதமான பதிவு.. மு.மயுரன் குறிப்பிட்டது தவறு.. பலியிடுதலை பகிரங்கமாக செய்தல் காட்டுமிராண்டித்தனமான சமூகத்தின் செயற்பாடு.. அது மனங்களில் ஒரு கோரத்தை வடித்துவிடுகிறது..

Anonymous said...

இந்த 200 ஆடுகள் எதை வேண்டி அல்லது எந்த நோக்கத்திற்காக பலியிடப்பட்டது என்பதை எழுதமுடியுமா?

MuLtIKiLLeR said...

hindhu mathathin unmaiyai puriyathe sila makkal seiyum kariyam ithu.....ithai vaitthu ellam ippadithan endru ennakkudhathu.....unmaiyai hindhu matha arraissiyil irukkum samaya pothakarai ketthu parunggal.!siru theivam illai enra ennam eppoluthu oru hindhuvukku varukiratho appoluthuthan hindhu samayam munnerum...anbe sivam...

மதுவர்மன் said...

புல்லட்,

உங்கள் கருத்துக்கு நன்றி.

anonymous..
வேறு என்ன, கடவுளர்களை திருப்திப்படுத்தவதற்காகத்தான், அதுவும் மகா பத்திரகாளி அம்மனை திருப்திப்படுத்தவதற்காக.

விசாரித்துபார்த்தீர்கள் என்றால், ஏதேதோ விநோத விளக்கமெல்லாம் வைத்திருபார்கள்..

ஆனாலும், இந்த குறிப்பிட்ட 200 ஆடுகள் சம்பவம் பற்றி விசாரணை செய்வது தனிப்பட்ட நபர்களை பொறுத்தவரை இங்கே கொஞ்சம் கடினம், அறியக்கிடைத்தால் குறிப்பிடுகின்றேன்..

Jeyamaran Ramathasan said...

Dear webmaster,
If i want to contact ur webpage, how can i contact??
can u pl give me ur e-mail address which i want to contact???
my e-mail address is
jeyamaran11@gmail.com

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி