Thursday, September 4, 2008

கடவுள் என்பது கற்பனையா, உண்மையா? - பரிசோதனை முடிவுகள்

புத்த மதம் சொல்கின்றது மற்ற மதங்கள் சொல்கின்ற கடவுள் என்ற விடயம் இல்லை என்று, அது ஒரு கற்பனை விடயம் என்று.

இந்து மதமும், ஏனைய மதங்களும் கடவுள் என்று பலவாறாக சொல்கின்றன. சரி விஞ்ஞான முறையில் இப்பிரச்சினையை அணுகினால் என்ன. அதற்கு ஒரே வழி பரிசோதனை செய்து பார்த்தால் தான் உண்டு.

மிக மிக அண்மைய பரிசோதனையொன்றின் முடிவுகள் இங்கே. (பதிவின் இறுதியில் முடிவுகள்)

கொழும்பு இந்து ஆலயம் மீது பௌத்த பிக்கு தலைமையிலான காடைக்கும்பல் தாக்குதல்

[வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2008, 04:55 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கிராண்ட்பாசில் உள்ள சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தை பௌத்த பிக்கு ஒருவர் தலைமையிலான காடைக்கும்பல் தாக்கி சேதமாக்கிள்ளது. இதில் ஆலயத்தின் முன்பக்க கோபுரமும் உட்பக்கத்தில் உள்ள விக்கிரகங்களும் சேதமடைந்துள்ளன.

இந்த இந்து ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு நேற்று புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2:00 மணியளவில் ஆலயத்துக்குச்சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான காடைக்கும்பல் ஆயலத்தை அடித்து நொருக்கி சேதமாக்கியுள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தாக்குதல் நடத்திய பௌத்த பிக்குவையும் மேலும் மூவரையும் கைது செய்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் கெமல் மாவத்தையில் அமைந்துள்ள சிறீ முத்துமாரி அம்மன் ஆலயப்பகுதியில் பெரும்பான்மையான தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர்.


இந்த ஆலயத்துக்கு அருகில் பௌத்த கோவில் ஒன்றும் உள்ளது. இந்த பௌத்த கோவிலைச் சேர்ந்த பௌத்த பிக்குவே சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பௌத்த பிக்கு சிறீ முத்துமாரி அம்மன் ஆயலத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களை அச்சுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பௌத்த பிக்கு பாலியல் வல்லுறவு உட்பட்ட வேறு பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

##################################################################################

எப்படியிருக்கின்றது. நாங்களெல்லாம் (என்னையும் சேர்த்துத்தான், நானும் ஒரு இந்து தான்) கடவுள் இருக்கு என்று நம்பி சிலையெல்லாம் செய்து, கோயில் கட்டி கும்பிடுறம், ஆனால் ஆருக்கு உண்மையான உண்மை தெரிஞ்சிருக்கு எண்டு பாருங்கோ. புத்த பிக்குவுக்கு தானே உண்மை தெரிஞ்சிருக்கு. ஏனெண்டால் புத்தர் அப்பிடி தானே சொல்லியிருக்கிறார். அதாலை தானே புத்த பிக்குவும், காடையர் கூட்டமும் ஒரு பயமும் இல்லாமல் வந்து உடைச்செறிஞ்சிருக்கினம்.

நாங்கள் கடவுள் உண்மை எண்டு நம்பிக்கொண்டு, அதுகளுக்கெல்லாம் எவ்வளவு பயப்பிடுறம், எவ்வளவு பணம், பொருளை அநியாயம் செய்யுறம். எவ்வளவு நேரத்தை வீணாக்கிறம்.

கடவுள் எண்டது கற்பனை எண்டதாலை தானே, சிவலிங்கம் இரண்டு துண்டாக போகும்வரைக்கும், முத்துமாரியம்மனின்ரை முகத்தை உடைக்கும் வரைக்கும், ஏன் அந்த புத்த பிக்கு பாலியல் வல்லுறவுகள் புரியும்வரைக்கும் ஒண்டுமே நடக்கேல்லை.

அதுக்குள்ளை வேற அதைத்தாறதுக்கு, இதைத்தாறதுக்கு என்டு அண்மையிலை பால்குட பவனியெல்லாம் எடுத்தவை. எங்கடை சனங்கள் எப்பதான் இப்பிடியான சம்பவங்களையெல்லாம் (மடுமாதா சொரூபம் உட்பட) தங்கடை நம்பிக்கைகளோடை தொடர்புபடுத்தி சிந்திக்கப்போகுதுகளோ!

அதுக்காக, நடந்த சம்பவம் சரியெண்டு நான் சொல்லவரவில்லை. புத்த மதத்தவர்கள் இந்து மதத்தவர்கள் மீது வெறுப்புக்கொண்டது, இந்தமாதிரி தாக்கினது பிழை. ஒருத்தரை ஒருத்தர் வெறுக்கவைக்கிறதிலை மதங்கள் பெரும் பங்காற்றுகின்றன. மதநூல்களே மற்ற மதத்தவரை 'விடாதே, பிடி, கொல்' என்று தானே சொல்கின்றன. சமூகத்தை பிளவுபடுத்துகின்றவேலைகளையும் இந்த மதங்கள் செய்கின்றன. ஆனால், இந்த மேற்படி சம்பவத்துக்கு, மதமல்லாமல், சிங்களவர்களுக்கு, இயல்பாகவே தமிழர்கள் மீதுள்ள வெறுப்பும் காரணமாகவிருக்கலாம். இனம் என்ற பரிமாணத்திலும் வைத்து சிந்திக்கவேண்டிய விடயம் இது. என்னவிருந்தாலும் கடவுள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது தானே. பரிசோதனை முடிவு விளங்கினால் சரி.

உதவி:
புதினம்.

20 பின்னூட்டங்கள்:

Anonymous said...

அருமையான விளக்கம் நன்றி.வாழ்த்துக்கள.

கோவி.கண்ணன் said...

வருத்தமான நிகழ்வு ! கண்டிக்கத்தக்கவை !

மதுவர்மன் said...

கோவி கண்ணன்,

உண்மை தான். கண்டிக்கத்தக்கவை.

ஆனால், அடிப்படையில் பெரிய மாறுதல்கள் நடைபெறவேண்டிய தேவையிருப்பதாக உணர்கின்றேன்.

மதங்கள், மக்கள் மத்தியில் வெறுப்பை வளர்க்கும் சாதனங்கள் என்ற நிலையிலிருந்து, நீதியை நேர்மையை போதிக்கும் மார்க்கங்களாக மாறவேண்டும்.

கடவுள், என்றது ஒரு விஞ்ஞான கேள்வி, உண்டா இல்லையா என்று விஞ்ஞானமே விடையளிக்கமுடியும். நீதியை, நல்நடத்தையை, சகிப்புத்தன்மையை மட்டும் போதிக்காமல், இந்த மதங்கள், விஞ்ஞானம் விடையளிக்கவேண்டிய கேள்விகளுக்கு (பிரபஞ்சம் எப்படி, எப்போது தோன்றியது, எத்தனை கோள்கள், பிரபஞ்சத்தின் மையம் எது, பூமியை சூரியன் சுத்துகின்றதா, அல்லது சூரியனை பூமி சுற்றுகின்றதா, உயிரினங்கள் எப்படி உருவாகின, யாரும் உருவாக்கிவிட்டார்களா, பூமி, உயிர்கள் தானே தோன்றினவா, அல்லது யாராவது படைத்து விட்டார்களா?) மதங்கள் ஒவ்வொரு மாதிரி விடையளிக்கவெளிக்கிட்டதும், மற்றைய மதத்தவர்கள் மீது வெறுப்புணர்வுகளை வளர்த்துவிட்டதும், இன்னும் மூட நம்பிக்கைகளையும் வளர்த்துவிட்டதும் தானே மனித குலத்துக்கு இன்று பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்த மதங்கள் எல்லாம் மாற்றியமைக்கப்படவேண்டும் என்பதே என்னுடைய வாதம். அப்போது ஒரு மதத்தாருக்கு, இன்னொரு மத்தார் மீது வெறுப்பு ஏற்படாதபடி மாற்றியமைத்தால் நன்றாக இருக்கும்.

மதுவர்மன் said...

Anonymous,
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

கோவி.கண்ணன் said...

//மதங்கள், மக்கள் மத்தியில் வெறுப்பை வளர்க்கும் சாதனங்கள் என்ற நிலையிலிருந்து, நீதியை நேர்மையை போதிக்கும் மார்க்கங்களாக மாறவேண்டும்.//

மதங்கள் என்றாலே ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் மாறுபட்டவை, இவை எப்படி ஒற்றுமையை போதிக்கும் ? இதற்கான சாத்திய கூறுகளே இல்லை, விஞ்ஞான யுகத்திலேயே முட்டாள்களாக மாற்று மதத்தினரை இந்த அளவுக்கு தாக்கும் போது முன்பெல்லாம் எப்படி இருந்திருக்கும் என்றுச் சொல்லத் தேவையில்லை.

நான் இறை பக்தியைக் குறைச் சொல்வது இல்லை, மதங்களும் அது சார்ந்த மூட நம்பிக்கைகளும், வலியுறுத்தல்களும் மக்களிடம் இருந்து விலக்கப்படவேண்டியவை.

மதுவர்மன் said...

//நான் இறை பக்தியைக் குறைச் சொல்வது இல்லை, மதங்களும் அது சார்ந்த மூட நம்பிக்கைகளும், வலியுறுத்தல்களும் மக்களிடம் இருந்து விலக்கப்படவேண்டியவை//

என்ன கோவி.கண்ணன்,

எந்த மதம் சொல்லுகின்ற இறை பக்தியை, சரியென்று எடுப்பது என்று சொல்வீர்களா? எந்த மதம் சொல்கின்ற இறைக்கொள்கை சரியானது?

இந்து மதம் சொல்கின்ற பலநூறா?, இஸ்லாம் சொல்கின்ற ஒன்றா? கிறிஸ்தவம் சொல்கின்ற ஒன்றாயிருக்கின்ற மூன்றா? அல்லது புத்த மதம் சொல்கின்ற ஒன்றுமில்லை என்பதா? எது?

அதை விட, ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று முரண்பாடாகவுள்ளனவே. ஒன்றையொன்று மறுதலிக்கின்றனவே. எல்லாம் உண்மையாக இருக்கமுடியுமா? அல்லது ஒன்றுமில்லை என்பது தான் உண்மையாக இருக்கமுடியுமா?

கடவுள் என்பதே ஒரு மூடநம்பிக்கை என்பதை நம் விளங்கிக்கொள்ளவேண்டும். ஆதாரமில்லாமல் நம்பும் விடயங்கள் எல்லாம் மூடநம்பிக்கைகள் தானே.

ஆராய்ந்து பார்த்தீர்களானால், மூட நம்பிக்கைகள் குறைந்த மதம் புத்த மதம். ஏனென்றால் அது கடவுள் இல்லை என்று சொல்கின்றது.

மூட நம்பிக்கைகளுக்கு அடிப்படையே, இந்த மதங்கள் சொல்கின்ற, ஆதாரமற்ற கடவுள் கொள்கை தான். அதை வைத்துக்கொண்டு மற்ற் அமூட நம்பிக்கைகளை முயன்றாலும் ஒழிக்கமுடியாது.

கோவி.கண்ணன் said...

//ஆராய்ந்து பார்த்தீர்களானால், மூட நம்பிக்கைகள் குறைந்த மதம் புத்த மதம். ஏனென்றால் அது கடவுள் இல்லை என்று சொல்கின்றது.//

புத்தர் இருந்தவரை தான் நீங்கள் சொல்வது உண்மை. மூடநம்பிக்கைகளில் பெளத்த மதத்தைப் பின்பற்றும் ஆசிய நாடுகள் முன்னனியில் இருக்கின்றன. என்ன ஒரு வேறுபாடு, அவர்களுடைய மூடநம்பிக்கையால் பிறரை தாழ்வாக சித்தரிப்பது இல்லை. இலங்கையில் புத்தமதத்தினர் நடந்து கொள்வது மிக இழிவானது. அரசியலில் அவர்களது தலையீடுகள் பெரும் தொல்லை.

எந்த த்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் அடுத்த மதத்தினரை அவமதிக்காமல் இருக்கும் வரை அவர்களைப் போற்றலாம். அவ்வாறு இருப்பவர்கள் வெகுசிலரே.

Anonymous said...

'இரை'யை விரட்டும் உயிரினமும் அழகாய் வடிவமைக்கப் பட்டுள்ளது.

'இரை'யாகும் உயிரினமும் அழகாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டையுமே வடிவமைத்தவன் 'இறைவன்' என்றால் அந்த 'இறைவன்' யார் பக்கம்?

இரையாகும் பரிதாபமான உயிரினத்தின் பக்கமா? அல்லது இரையைத் துரத்தும் ஆணவமிக்க உயிரினத்தின் பக்கமா?

யோசித்தால் கிடைக்கும் விடையென்ன?

இப்படியெல்லாம் யோசிக்கக் கூடாது என உபதேசிப்பது எது?

எந்த முன்முடிவுமின்றி யோசிப்போமா ?!

"இறைவன் இருக்கின்றானா?"

Anonymous said...

Araikuraiyaga samayathai padithuvitu intha katturai elutha kudathu...

மதுவர்மன் said...

//புத்தர் இருந்தவரை தான் நீங்கள் சொல்வது உண்மை. மூடநம்பிக்கைகளில் பெளத்த மதத்தைப் பின்பற்றும் ஆசிய நாடுகள் முன்னனியில் இருக்கின்றன. என்ன ஒரு வேறுபாடு, அவர்களுடைய மூடநம்பிக்கையால் பிறரை தாழ்வாக சித்தரிப்பது இல்லை. இலங்கையில் புத்தமதத்தினர் நடந்து கொள்வது மிக இழிவானது. அரசியலில் அவர்களது தலையீடுகள் பெரும் தொல்லை.//

நீங்கள் சொல்வது சரி கோவி.கண்ணன்.

கொள்கை ரீதியாக புத்த மதம் மூடநம்பிக்கைகள் குறைந்தது. ஆமாம், புத்தர் இருக்கும் வரை என்று சொல்வது சரியானது. ஆனால், எனக்கு அதிகம் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருக்கின்றார்கள். எங்கள் மற்ற மதத்தை சேர்ந்த நண்பர்களுடன் ஒப்பிடுகையில், புத்த மதத்து நண்பர்கள், மூட நம்பிக்கைகள் குறைந்தவர்கள், ஓரளவு பகுத்தறிவாக நடப்பவர்கள். இந்து மதத்திலுள்ள சில மூட நம்பிக்கைகள் அவர்களையும் ஆக்கிரமித்திருக்கின்றன தான். உதாரணத்துக்கு, இந்து மத தெய்வச்சிலைகளை வழிபடுதல், ஜோதிடம் பார்த்தல், நல்ல நேரம் பார்த்தல் (எல்லாமே புத்த மதத்துக்கு எதிரானவை) என்று, இந்து மதத்தின் ஆதிக்கம் அங்கேயும் இருக்கின்றது தான். ஆனால், ஒப்பீட்டளவில், மூட நம்பிக்கைகள் குறைந்தவர்கள் அவர்கள்.

இலங்கையில், இனமேலாதிக்கத்தின் ஆயுதமாக பௌத்த மதமும் பாவிக்கப்படுகின்றது. ஒரு காலத்தில் (சைவ மறுமலர்ச்சி காலத்தின் முன்) இலங்கையின் பெரும்பான்மையான தமிழர்கள், பௌத்தர்களாக இருந்தார்கள் என்று சொல்லப்படுகின்றது.

//எந்த மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் அடுத்த மதத்தினரை அவமதிக்காமல் இருக்கும் வரை அவர்களைப் போற்றலாம். அவ்வாறு இருப்பவர்கள் வெகுசிலரே.//

எப்படி ஒரு மதத்தவர் மற்ற மதத்தவரை அவமதிக்காமல் இருக்கமுடியும். என்னுடைய மதம் சொல்வதற்கு முரணான கருத்தை உன்னுடைய மதம் சொல்கின்றது. என்னுடைய மதம் சரியென்றால், உன்னுடைய மதம் பிழையானது தானே. பிழையான மதத்தையும், பிழையான கொள்கைகளையும் பின்பற்றும் உன்னை, நான் அவமதிக்காமல், வேறு என்ன செய்யமுடியும்.

இன்னொரு மதத்தை நான் அங்கீகரிக்கின்றேன் என்றால், என்னுடைய மதத்தை மறுதலிக்கின்றேன் என்று அர்த்தம். அதை என்னால் செய்ய முடியுமா?

மதுவர்மன் said...

//'இரை'யை விரட்டும் உயிரினமும் அழகாய் வடிவமைக்கப் பட்டுள்ளது.//

"இறைவன் இருக்கின்றானா?//

Anonymous,

உங்களுடைய கேள்விகள் , நியாயமானவை, பகுத்தறிவானவை.

மதங்கள் சொல்லுகின்ற படைப்புக்கொள்கைகளெல்லாம் எப்போதோ வலுவிழந்து போய்விட்டன. நாங்கள் அறிவியலில், எத்தனையோ விடயங்களை கண்டு, உண்மையென்று நிறுவியானபின்பு, யாரோ, ஆதாரமற்று எழுதிவைத்துவிட்டுப்போன, மூடக்கொள்கைகள் எப்படி உண்மையாக முடியும்.

'இரையும் இரைகௌவியும் இயற்கையின் வடிவமைப்பு'. இந்த இயற்கை வடிவமைத்த கூறுகள் தான், மரம், செடி, மாடு, ஆடு, நான், நீ, மலை, மடு எல்லாமே. அதவிடுத்து, முட்டாள்கள், ஏதோ ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி எல்லாவற்றையும் வடிவமைத்ததாய், அதாரமற்று பிதற்றிவிட்டு போயிருக்கின்றார்கள். அப்போ அந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை வடிவமைத்தவர் யார்??????????? இயற்கைக்கு செய்யும் துரோகம் இது. உயிரியல் பரிணாமம் என்ற மிகப்பெரும் உண்மையை நாம் ஆதாரங்களுடன் கண்டுபிடித்து வைத்திருக்கின்றோம்.

//இரண்டையுமே வடிவமைத்தவன் 'இறைவன்' என்றால் அந்த 'இறைவன்' யார் பக்கம்?

இரையாகும் பரிதாபமான உயிரினத்தின் பக்கமா? அல்லது இரையைத் துரத்தும் ஆணவமிக்க உயிரினத்தின் பக்கமா?//

அப்படியொன்று இருந்தால் தானே யார் பக்கம் என்று கேட்பதற்கு. என்னுடைய முந்தைய பின்னூட்டங்களையும் பாருங்கள்.

//யோசித்தால் கிடைக்கும் விடையென்ன?

இப்படியெல்லாம் யோசிக்கக் கூடாது என உபதேசிப்பது எது?//

உங்களை, எங்களை எல்லாம் மதங்களில் சொல்வதை தவிர்த்து மேலதிகமாக சித்திக்காதே என்று சொல்வனவும் இந்த மதங்கள் தானே. அப்படி நீங்கள் செய்தால் தெய்வ நிந்தனை, blasphemy என்றெல்லாம் சொல்லி, தண்டனைகளையும் சொல்லிவைத்திருக்கின்றார்கள்.

//"இறைவன் இருக்கின்றானா?//

இது ஒரு விஞ்ஞானக் கேள்வி. இந்த கேள்வியை, விடையளிக்க விஞ்ஞானத்திடம் விடுவோம்.

மதுவர்மன் said...

//Anonymous said...
Araikuraiyaga samayathai padithuvitu intha katturai elutha kudathu...
அரைகுறையாக சமயத்தை படித்துவிட்டு இந்த கட்டுரை எழுத கூடாது//

Anonymous,

இது சமயத்தை பற்றிய கட்டுரை யில்லையே. ஒரு விஞ்ஞான பரிசோதனை பற்றிய கட்டுரை :). சாதாரண ஒவ்வொருவருக்கும் இதிலுள்ள நியாயங்கள் இலகுவில் விளங்கும்.

இதிலே, என் சமய அறிவின் அரைகுறைத்தன்மை எங்கே புலப்படுகின்றது என்று கொஞ்சம் சொல்வீர்களென்றால், மிக்க வசதியாக இருக்கும்.

முடிந்தால், உங்கள் தரப்பு வாதங்களை பின்னூட்டமாக இடுங்கள், நீங்கள் முழுமையான சமய அறிவு படைத்தவரென்றால்.

நன்றி.

அறிவகம் said...

திரு. மதுவர்மன் தங்களை போல பலரும் எதார்த்த வாழ்க்கையில் இப்படி விஞ்ஞான பரிசோதனை செய்து பார்ப்பதுண்டு.

நான் எனது 10ம் வயது முதல் இந்த பரிசோதனையை திரும்ப திரும்ப செய்து பார்த்தவள். சரியான முடிவு தெரியாமல் நீண்ட இந்த பரிசோதனைக்கு என்மகன் பிறந்ததும் தெளிவான மிகச்சரியான பதில் கிடைத்தது. அந்த தீர்வின் மகத்துவத்தை பெருமைபடுத்ததான் என்மகனுக்கு அறிவு என பெயர்சூட்டியுள்ளேன். சரி பரிசோதனை முடிவுக்கு வருகிறேன்.

கடவுள் இருக்கிறார் என்றால் ஏன் இத்தனை அக்கிரமங்கள் நடக்கின்றன? இந்த கேள்விக்கு பல மதத்தினரும் பதில் சொல்ல தெரியாமல் மலுப்பலான விதண்டாவாதங்கள் பேசுகிறார்களே தவிர உண்மையை ஆராய யாரும் முற்படுவதில்லை.

உண்மையில் மதங்கள் சொல்லும் கடவுள் இருக்கிறார். இந்த மனிதகுலத்தை அவர் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார். ஏன் என்னையும் உங்களையும் கூட பலமுறை காப்பாற்றி வாழவைத்து இருக்கிறார்.

சரி அப்படியானால் அந்த கடவுள் யார்? கடவுளை காட்டமுடியா? கடவுள் இருந்தும் ஏன் உலகில் இத்தனை அக்கிரமங்கள் நடக்கின்றன? இந்த கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்லிவிடமுடியம்.

கடவுள் இருக்கிறார், கடவுளை காட்டமுடியும். கடவுளால் அக்கிரமங்களை தடுக்க முடியவில்லை.

இந்த பதில் நிச்சயம் எல்லோருக்கும் சிரிப்பை தான் தரும். கேரளாவில் இருந்து ஒரு புதுசாமியார் தோன்றிவிட்டார் என கேலிக்க தோன்றும். அனால் உண்மையில் கடவுளை அறிவியல் பரிசோதனைக்கு உட்படுத்தினால் அறிவியல் தான் தோற்றுப்போகும். தாங்களை போன்ற அறிவியலாளர்களின் அறிவியல் பரிசோதனையி«ல்யே கடவுளை நிரூபிக்கும் முயற்சி தான் அறிவகம்.

இங்கு இந்த பின்னூட்டத்திலேயே கடவுளை விளக்கிவிட முடியும். அதுவும் மதங்கள் சொல்லும் அதே கடவுளை. அதை உங்களால் மட்டுமல்ல யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அறிவியல் ரீதியில் விஞ்ஞான நீருபணங்களுடன் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள்.

அப்படி விஞ்ஞானம் தேடும் கடவுளை விஞ்ஞானரீதியாக விளக்கும் ஒரு முயற்சி தான் அறிவகம்.

தங்களை போன்ற ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகள் கேட்கும் சிந்தனையாளர்களை அறிவகம் பெரிதும் எதிர்பார்க்கிறது. வாருங்கள் இணைந்து சிந்திப்போம். நமது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் கடவுளை மனிதனாக அவதாரப்படுத்தலாம். மேலதிக விளக்கங்களுக்கு அறிவகத்துக்கு வாருங்கள்

www.tamilarivu.blogspot.com

பின்குறிப்பு: அறிவகம் குறித்து இங்கு குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும். தங்கள் பதிவின் கருத்துக்கும்,அதற்கான பின்னூட்டத்திற்கு நெருங்கிய சம்மந்தம் இருப்பதால் மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன். தவறு இருந்தால் எடுத்துவிடுங்கள். நன்றி.

மதுவர்மன் said...

அறிவகம்,

உங்கள் கருத்தை வரவேற்கின்றேன். உங்கள் வலைப்பதிவுகளை படிக்கவிருக்கின்றேன். கடவுள் என்பதன் மூலம் நீங்கள் என்னத்தை கருதுகின்றீர்கள் என்று விளங்கவில்லை. அல்பேர்ட் ஐன்ஸ்ரைன் (albert einstein) இனது கடவுளை பற்றி குறிப்பிடுகின்றீர்களோ என்று நினைக்கின்றேன்.

எதற்கும், உங்களுடைய வலைப்பதிவை படித்துவிட்டு, மேலதிக கருத்துக்களை தெரிவிக்கின்றேன்.

ஆனால், நீங்கள் உங்களது கடவுள் இருக்கின்றார் என்ற கருத்துக்களை இங்கே நிரூபிக்க முயற்சிக்கலாம். அது சிறந்த ஒரு கலந்துரையாடலுக்கு இட்டுச்செல்லும்.

அறிவகம் said...

// நீங்கள் உங்களது கடவுள் இருக்கின்றார் என்ற கருத்துக்களை இங்கே நிரூபிக்க முயற்சிக்கலாம். அது சிறந்த ஒரு கலந்துரையாடலுக்கு இட்டுச்செல்லும்.//

கடவுளை நிரூபிப்பது எளிது. ஆனால் எல்லோரும் அதாவது ஆன்மிகவாதிகள், அறிவியலாளர்கள், அனைத்து மதத்தை சேர்ந்தவர்கள், நாத்திகவாதிகள், எதுவும் அறியாத எதார்த்தவாதிகள் இப்படி எல்லோரும் ஏற்றுக்கொள்ளகூடிய ரீதியில் விளக்கவேண்டும்.

இது சாத்தியப்பட வேண்டுமானால் முதலில் பிரபஞ்சம் என்பது என்ன? அது எப்படி தோன்றியது, எப்படி இயங்குகிறது. ஏன் அப்படி இயங்குகிறது உட்பட பல கேள்விகளுக்கு விளக்கம் தெரிந்துகொள்ள வேண்டும். இதை ஒரே பதிப்பில் விவாதித்துவிட முடியாது. ஒன்றன் பின் ஒன்றாக விளக்கம்தேடி விவாதிப்போம்.

இதற்கு அறிவகம் கட்டுரை தொடரை கையில் எடுத்துள்ளேன். தங்களுக்கு அறிவகம் கட்டுரைகள் எளிமைபடாத பட்சத்தில் கருத்துக்களை இங்கு விவாதிக்கலாம். அதற்கு என தனி பதிவை கூட ஒதுக்கலாம்( இந்த படிவானாலாலும் சரி). நன்றி.

மதுவர்மன் said...

அறிவகம்,

சரி, எதற்கும் நான் உங்கள் கட்டுரைகளை முற்றுமுழுதாக வாசித்துவிட்டு வருகின்றேன். ஒரு சிலவற்றை வாசித்தேன். உங்கள் கட்டுரைகள் அருமையாக இருக்கின்றன.

உங்களுக்கு எனது சிறிய ஆலோசனை. அறிவியல், விஞ்ஞான விடயங்களை தமிழில் கொண்டுவரும்போது, ஏன் நீங்கள் அடைப்புக்குறிக்குள் ஆங்கில சொற்களையும் தரக்கூடாது? அவ்வாறு செய்தீர்களானால், மிக்க உதவியாக இருக்கும் இல்லையா. விஞ்ஞானம் என்றால், ஆங்கிலத்தை தவிர்த்துவிடமுடியுமா?

மதுவர்மன் said...

”அறிவகம் - ஆக்கபூர்வமான சிந்தனைகளே கடவுளின் அவதாரம்”

உங்களுடைய, வலைப்பதிவின் இந்த வசனத்தை கொஞ்சம் விளங்கப்படுத்துவீர்களா..

அவதாரம் என்பது இந்து மதத்தில் மட்டுமுள்ள விடயம்.. அந்த விடயத்தை அங்கேயிருந்து எடுக்கவேண்டிய தேவையுள்ளது...

'ஆக்கபூர்வமான சிந்தனைகள்' பற்றி யதார்த்தரீதியில் சிந்திக்கவேண்டியுள்ளது..

இரண்டையும் எவ்வாறு தொடர்புபடுத்துகின்றீர்கள், என்று விளக்கினீர்களென்றால் நன்றாக இருக்கும்.

அறிவகம் said...

அவதாரம் என்பது இந்து மதத்தில் மட்டுமல்ல இஸ்லாமியம், கிருஸ்துவம் உட்பட எல்லா மதங்களிலும் உள்ளது. ஆனால் தாங்கள் குறிப்பிடுவது போல இந்து மதத்தில் தான் அதுகுறித்த அதிக விடயங்கள் உள்ளன.

ஆக்கபூர்வமான சிந்தனைகளே கடவுளின் அவதாரம் என்பதற்கான சிறிய விளக்கத்தை இங்கு தருகிறேன்.

சிந்தனைகள் என்பது அறிவின் தொகுப்பு, ஆக்கபூர்வம் என்பது அழிவுக்கு எதிரானது. கடவுள் என்பதற்கான விளக்கத்தை தற்போதைக்கு சர்வ வல்லமையும் படைத்தவர் என எடுத்துக்கொள்ளலாம். அவதாரம் என்பது பிறப்பு தான். இங்கு பிறப்பு என்பதை கருவில் இருந்து குழந்தை பிறப்பதை மட்டும் எடுத்துக்கொள்ள கூடாது. அது உடல் பிறப்பு அவ்வளவே. உடலும் கணத்துக்கு கணம் புதிதாய் பிறந்துகொண்டிருக்கிறது என்பது தனி கதை. அறிவுபிறப்பை தான் இங்கு அவதாரமாக குறிப்பிடுகிறேன். அறிவு பிறப்புக்கும் ஒரு உடல் வேண்டும். எனவே உடலும் அறிவும் சேர்ந்த பிறப்பு அவதாரம்.

புரிந்து கொள்ள கொஞ்சம் கடினமான விளக்கம் தான். ஆனால் புரிந்துவிட்டால் பிரபஞ்சம் கடவுள் என எல்லா ரகசியங்களும் நமக்கு எளிதில் விளங்கிவிடும்.

தொகுதது சொல்கிறேன். அழிவு இல்லாத மேம்பட்ட அறிவுத்தொகுப்பு(அறிவுபரிபூரணம்) தான் கடவுளின் அவதாரமாகும். அறிவு, மறுபிறவி, கூடுவிட்டுகூடுபாய்தல், கடவுள், மனித உடல் இயங்கும் விதம், இதுகுறித்து எல்லாம் அறிவியல் ரீதியான விளக்கங்களை புரிந்து கொள்ளும் போது மேற்சொன்ன விளக்கம் இன்னும் எளிமையாகிவிடும்.தொடர்ந்து அறிவகம் கட்டுரையில் இது குறித்து தான் எழுதப்போகிறேன்.

அறிவியல் விளக்கங்களுக்கு ஆங்கில விளக்கங்களை எனக்கு தெரிந்த வரை தருகிறேன் நன்றி.

கோவி.கண்ணன் said...

//எப்படி ஒரு மதத்தவர் மற்ற மதத்தவரை அவமதிக்காமல் இருக்கமுடியும். என்னுடைய மதம் சொல்வதற்கு முரணான கருத்தை உன்னுடைய மதம் சொல்கின்றது. என்னுடைய மதம் சரியென்றால், உன்னுடைய மதம் பிழையானது தானே. பிழையான மதத்தையும், பிழையான கொள்கைகளையும் பின்பற்றும் உன்னை, நான் அவமதிக்காமல், வேறு என்ன செய்யமுடியும்.

இன்னொரு மதத்தை நான் அங்கீகரிக்கின்றேன் என்றால், என்னுடைய மதத்தை மறுதலிக்கின்றேன் என்று அர்த்தம். அதை என்னால் செய்ய முடியுமா?//

நான் மதத்தின் பிழையாக பார்க்கவில்லை, மாற்று மதத்தூற்றல்களெல்லாம் மதவாதிகளின் பிழை(ப்பு)தான்.

ஒருவர் தன் தாயைப் பற்றி பெருமையாக சொல்லும் போது அடுத்தவரின் தாயாரைத் தூற்றுகிறார் என்று கொள்ள முடியுமா ?
அப்படித்தான் இருக்க வேண்டும் !

ஆனால் மதவாதிகள் என் தாயே உத்தமி என்பது போல் சொல்லி அடுத்தவரின் தாய்களையும் பழிக்கின்றனர். அதனால் தான் பிரச்சனைகளே !

Anonymous said...

//மதுவர்மன் said...
”அறிவகம் - ஆக்கபூர்வமான சிந்தனைகளே கடவுளின் அவதாரம்”
உங்களுடைய, வலைப்பதிவின் இந்த வசனத்தை கொஞ்சம் விளங்கப்படுத்துவீர்களா..//
அன்பின் மதுவர்மன், அவர் சுற்றி சுற்றி எங்கே வருகிறார் என்பது தெரிகிறதா?

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி