Tuesday, August 5, 2008

நாராயணனும் நாரதரும் விக்கிரமாதித்தனும்...

பத்திரிகைகளில்> சஞ்சிகைகளில் என ஏராளமான பத்தி எழுத்துக்களை வாசிக்கக் கிடைக்கிறது. குறிப்பாக ஈழத்தில் தமிழில் வருகிற பத்தி எழுத்துக்கள் பல> பலவீனமானவை. அண்மைய சில அரசியல் நிகழ்வுகள் எனக்கு கடந்தாண்டு வாசித்த ஒரு பத்தியை நினைவுபடுத்தின. அப்பத்தியின் எள்ளல் தொனியும் நகைச்சுவையுமே அப்பத்தி என் மனதில் நிற்கக் காரணம். வாசித்துப் பாருங்கள்:

"வழக்கமாக நாராயணன் என்ற பேரைக் கேட்டால் எனக்கு நாரதர் தான் நினைவுக்கு வருவார். ஏனென்றால் நான் பார்த்த சினிமாப் படங்களிலெல்லாம் நாரதர் வரும் போது "நாராயணா" என்று சொல்லிக் கொண்டுதான் வருவார். இந்த முறை நாராயணனே திருவாய் மலர்ந்தருளியுள்ளார். ஆனாலும் அவர் பேச்சு நாரதருக்குத் தான் கூடப் பொருந்தும். இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு ஆலோசனை என்னவென்றால் இலங்கை தனது பாதுகாப்புத் தேவையான ஆயுதங்களைச் சீனாவிடமிருந்தோ பாகிஸ்தானிடமிருந்தோ பெறக்கூடாது. மாறாக இந்தியாவிடமிருந்தே பெற வேண்டும் என்பதுதான். அது ஆலோசனையோ ஆணையோ எனக்குத் தெரியாது. ஏனென்றால் இலங்கையில் தீக்ஷித் முதலாக நிருபம் சென் உட்பட நிருபமா ராய் வரை இந்தியத் தூதுவர்களே கொலனி யுகத்தின் வைஸ்ராய் தோரணையிலேயே பேசி வந்திருந்த போது நாராயணன் மட்டும் ஏன் வேறு விதமாகப் பேச வேண்டும்? அவர் இந்திய அரசாங்கத்தின் சார்பாகத் தான் பேசினாரா? அதற்கான அதிகாரத்தை யார் அவருக்கு வழங்கினார்கள்? அப்படி அவர் தனக்கு இல்லாத ஒரு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தால் உடனேயே அதை மறுத்து இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரோ வெளிவிவகார அமைச்சரோ ஒரு அறிக்கை விடுத்திருக்கலாம் அல்லவா! ஆனால் ஆகாசவாணியின் செய்தி ஒலிபரப்பு அந்த அறிவுரைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறதே! எனவே அந்த ஆலோசனையையோ ஆணையையோ நாம் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

நாராயணன் ஒரு நிபந்தனையுமல்லவா போட்டிருக்கிறார். ஆயுதங்கள் தற்காப்புக்கானவையாக இருக்க வேண்டும். இங்கே எனக்கு வேறு சந்தேகங்களும் எழுகின்றன. தற்காப்புக்கான ஆயுதம் எது? கத்தி, வாள், துவக்கு? எனக்குத் தெரியக் கேடயம் ஒன்று தான் தற்காப்புக்கான கருவி. அது ஆயுதமாகுமா? மகாபாரதத்தில் நிராயுதபாணியாக்கப்பட்ட அபிமன்யுவின் கையில் அகப்பட்ட தேர்ச்சில்லும் ஒரு ஆயுதமாகச் செயற்பட்டதாம். அப்படியானால் எவையெவை தற்காப்புக்கான ஆயுதங்கள் என்று ஒரு பட்டியலிட்டால் உதவியாக இருக்கும். இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்கா வழங்குகிற ஆயுதங்களும் போர் விமானங்களும் எந்த வகையில் அடங்கும்? ஒரு வகையிற் பார்த்தால் எதிரியிடம் உள்ள எந்த ஆயுதத்தையும் முறியடிக்கக் கூடிய வேறெந்த ஆயுதமும் தற்காப்புக்கானது தான். அந்த அடிப்படையில் இன்று ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனும் கையில் வைத்திருக்கும் உரிமையைக் கொண்ட பலவாறான துப்பாக்கிகள் முதலாக அமெரிக்காவின் அனைத்து அணு ஆயுதங்களும் அவற்றைக் காவிச் செல்ல வல்ல விமானங்களும் நீர் மூழ்கிக் கப்பல்களும் ஏவுகணைகளும் தற்காப்புக்கானவையே. நச்சு வாயுவும் இரசாயன ஆயுதங்களும் உயிரியல் ஆயுதங்களும் கூட அமெரிக்காவிடம் இருந்தால் தற்காப்புக்கானவையே.

எப்படியிருந்தாலும், இந்தியாவின் எஜமானர்களிடம் எந்தெந்த ஆயுதங்கள் தற்காப்புக்கானவை என்றும் எந்தெந்த ஆயுதங்கள் தாக்குதலுக்கானவை என்றும் ஒரு தெளிவான வரையறுப்பு இருக்கக்கூடும். அதன் அடிப்படையில் இந்தியா தனது காந்திய நெறிப்படி அதை நீங்கள் இந்திரா காந்திய, ராஜீவ் காந்திய, சோனியா காந்திய, ராகுல் காந்திய என்று எப்படி வைத்துக் கொண்டாலும், அந்த நெறிப்படியே, பாதுகாப்புக்கான ஆயுதங்களை மட்டுமே இலங்கைக்கு விற்கும் அல்லது விலைக்கு வழங்கி உதவும். சீனாவோ பாகிஸ்தானோ அத்தகைய ஆயுதங்களை இலங்கைக்கு விற்றால் இந்தியா யாரைத் தண்டிக்கும்? சீனாவையா? பாகிஸ்தானையா? இலங்கை அரசையா? விடுதலைப் புலிகளையா? இந்த மாதிரிக் கேள்வி ஒன்றை வேதாளம் விக்கிரமாதித்தனிடம் முதலிலேயே கேட்டிருந்தால் ஆறுதலாகத் தனது முருங்க மரத்தில் அலுப்பில்லாமல் சீவித்திருக்கலாம். விக்கிரமாதித்தனுக்குக் கதை சொல்ல ஒரு காட்டேரியோ கொள்ளிவாய்ப் பிசாசோ அகப்படாமலா போயிருக்கும்!"

ஞாயிறு தினக்குரலில் கோகர்ணன் எழுதிய "மறுபக்கம்" பத்தியிலிருந்து…..

Monday, July 28, 2008

கொசோவோவும் பிச்சை அரசியலும்

இருப்புக்காக எதையாவது சொல்லியாகவேண்டும் என்று ஆகியபிறகு எதைச்சொன்னால் என்ன. இந்த நிலையில் தான் இருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அடிக்கடி கொசோவோவை உதாரணம் காட்டி சர்வதேச சமூகம் இதே நடைமுறை மூலம் இந்தியாவின் உதவியுடன் உதவவேண்டும் என்ற ஓலம் இன்னமும் ஒய்ந்தபாடில்லை.

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை அறிவித்த நேரத்தில் எழுதிய ஒரு பதிவை பகிர்ந்து கொள்ள விரும்பி.....

(தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை உடனேயே தெரிவித்தது. ஆனால் இந்தியா கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கும் நிலையில் இந்தியா சொன்னால் நாங்கள் சொன்ன மாதிரித் தான் என்று சொல்லும்; இந்தக் கூட்டமைப்பு செய்யப் போவதென்ன?)

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை வெளியிட்டவுடன் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்தது. அதில்
"உயிர்களை உவப்பீகை செய்து சுதந்திரம் இறைமை உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலையை வென்றெடுத்துள்ள வகையில் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்" என்று கூறப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுமானால் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளட்டும். தமிழ் மக்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க இவர்கள் யார்? தமிழ் மொழியின் பெயரால் ஒரு மரபுக் கூட்டம் பிழைப்பு நடத்த தமிழ் மக்களின் பெயரால் இன்னொரு கூட்டம் அரசியல் பிழைப்பு நடத்துகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையில்: "ஒரு விடுதலைப் போராட்டத்தை ஏற்று அந்த மக்களுக்கு இறைமை உண்டு தன்னாட்சி உரிமை உண்டு என்று அதனை அங்கீகரித்து அதன் தனிநாட்டுப் பிரடனத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைத்து செயற்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கும் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது" என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

"ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றிற்கான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை இறைமை என்பவற்றை கொசோவோவில் உலகப் பெரும் நாடுகள் அங்கீகரித்து தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஒத்துழைக்கின்றமை தமிழினத்துக்கும் அனைத்துலகத்தின் பால் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எல்லாவற்றிற்கும் கையேந்திக் கையேந்திப் பிச்சை எடுத்துப் பழகிய கூட்டமைப்பினருக்கு செய்யக் கூடியதெல்லாம் பிச்சை இடுவார்கள் என்று அவர்கள் நம்புகிறவர்களைப் போற்றுவது மட்டுமே. இவர்களால் தமிழ் மக்களுக்கு பயனெதுவும் விளையப் போவதில்லை. அண்டிப் பிழைக்கும் அரசியலை அன்றி வேறெதையும் அறியாதவர்கள் இவ் வகையான பயனற்ற வீர வசனங்களைப் பேசி பிழைப்பு நடத்துவதை விட வேறெதைச் செய்ய முடியும்.

இனி என்ன....
இந்த வாழ்த்துச் செய்தியின் ஆங்கில மொழியாக்கம் கொழும்பில் உள்ள மேற்குலக தூதரலாயங்களுக்கு அனுப்பப் படும். தூதராலய அதிகாரிகளுடன் கூட்டங்களுக்கு செல்லும் போது இந்த வாழ்த்துச் செய்தியை கையோடு எடுத்துச் சென்று தமிழ் மக்கள் எப்போதும் உங்களுடன் தான் இருக்கிறார்கள் என தமிழ் மக்களின் பெயரால் பிச்சையெடுக்க வேண்டியதுதான்.

இதற்கிடையில் இந்தியா கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யப் போவதென்ன?

இந்தியா சொன்னால் நாங்கள் சொன்ன மாதிரித் தான் என்று சொல்பவர்கள் இந்த விடயத்தில் யார் பக்கம் நிற்கிறார்கள்?

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை வெளியிட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைப்பதைப் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த எண்பது வயது மூதாட்டி சொன்னார். "1948 இல் பார்த்த மாதிரியே இருக்கு".

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரம் உள்ள ரஷ்யா, சீனா ஆகியன கொசோவோ தனி நாட்டுப் பிரகடனத்தை வன்மையாகக் கண்டித்துள்ள அதே வேளை ஐ.நாவின் 1244 வது தீர்மானத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளன. ஸ்பெயின் கொசோவோவை அங்கீகரிக்க மறுத்ததோடு அல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் இதை ஆதரிக்கக் கூடாது எனவும் கேட்டுள்ளது. கிரேக்கமும் அனேகமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கொசோவோவை அங்கீகரிக்க மறுத்துள்ளன.

அந்த மூதாட்டி சொன்னது போல இன்னுமொரு இலங்கைக்கான தொடக்க விழா அரங்கேறியுள்ளது. போராடிப் பெறாத சுதந்திரத்திற்கு மாற்றாக மன்றாடிப் பெற்ற சுதந்திரம் எப்படி இருக்கும் என்பதற்கு கொசோவோ ஒரு பாடமாக அமையும்.

Tuesday, July 22, 2008

ஃபோனில் சார்ஜ் இல்லாட்டி ஜெயில் வாசம்

ஆமிக்காரன்ட செக் பொயின்ற் வருது. எல்லாரும் இறங்கி தங்கட அடையாளங்களை காட்டினம். மன்னிச்சுக்கொள்ளுங்கோ...எல்லாரும் எண்டே சொன்னனான், இல்லை இல்லை...தமிழாக்கள் மட்டும்தான்.

இப்ப மேலதிகமா ஆமிக்காரன் ஆக்களின்ட ஃபோனுகளை வாங்கி #132# எண்டு அடிச்சு கோல் பண்ணுறான். ஃபோனின்ட முகப்பில அந்த ஆளின்ட பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் எல்லாம் விழுகுது. ஒப்பிட்டுப் பாக்குறான். விடுறான்.

தப்பித்தவறி, உங்கட ஃபோன் பற்றறியில கரண்ட் குறைவாயிருந்து #132# வேலை செய்யாட்டி 1,2,3..எண்டு கம்பி எண்ண வேண்டியதுதான்.

நாங்கள் நல்லாக்கள். எதையும் தாங்குவம் எண்டு இந்த ஃபசிலிட்டியையும் அரசாங்கம் தந்திருக்குது. கீழ சிரிக்கிற பொம்பிளை எங்களைப் பாத்துதான் சிரிக்கிறா, பாருங்கோ.- மதுவதனன் மௌ. -

Monday, July 21, 2008

Yahoo Mobile இன் குரல்வழி தேடல்


சமீபத்தில் Yahoo Mobile ஆனது குரல் வழி மூலமான தேடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவெனில் உங்கள் தேடலை குரல் மூலமான கட்டளைகளை உங்கள் Mobileக்கு பிறப்பிப்பதன் மூலம் இலகுவாக்கிக்கொள்ளலாம். உதாரணத்துக்கு http://mobile.yahoo.com/ என்பதை உங்களின் Mobile WAP Browser தட்டச்சு செய்து tamilgarden என குரல் எழுப்பினால் போதும் தமிழ் பூங்கா சம்பந்தப்பட்ட அனைத்து தரவுகளையும் உங்கள் Browser ல் தரும்.

தகவல் தொழில் நுட்ப்பத்தின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய பங்கினை வகிக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. Google உடன் போட்டி போடுவதற்கு பல வழிகளில் Yahoo முயற்சி செய்கின்றது. அதன் ஒரு வெளிப்பாடே இந்த Yahoo One Search. எது எவ்வாறாயினும் நமக்கு நல்ல சேவை கிடைத்தால் போதும் தானே (ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே :).

ஜப்பானியர்கள் நடனமாடுகின்றார்கள் - தமிழ்சினிமா பாடல்களுக்கு!

தமிழ்சினிமா பாடல்களுக்கு ஜப்பானிய இளைஞர், யுவதிகள், சிறுவர், சிறுமிகள் நடனமாடும் சில வீடியோக்களை இங்கே பாருங்கள்.

இவை, தமிழ் மொழிக்கும், ஜப்பான் மொழிக்கும் உள்ள தொடர்புகள் சம்பந்தமாக இணையத்தில் தேடி ஆராய்ந்தபோது அகப்பட்டவை. அத்தொடர்பு சம்பந்தமாக ஆராய்ச்சிகள் செய்துவந்த ஜப்பானிய பேராசிரியரொருவர் அண்மையில் காலமான செய்தி அனைவரும் அறிந்ததே.

வீடியோ 1


வீடியோ 2


வீடியோ 3


வீடியோ 4


வீடியோ 5


வீடியோ 6

Sunday, July 20, 2008

இரவில பரவாயில்லை, விடிஞ்ச பின்னாலுமா?

இன்றுடன் ஐந்து வருடங்களும் ஏழு மாதமும் ஆகிறது திருமணம் செய்து. வாய்த்த கணவரால் குறை என்று எதுவும் இல்லை. வீட்டை நான் கவனித்துக்கொள்வேன். அவர் சாப்ட்வெயர் கம்பனி ஒன்றில் கைநிறைய காசுடன்...

காலையில் எழுந்தால் எனக்கு இயலுமானவரை ஒத்தாசை செய்வார். வார இறுதிகளில் விழுந்து விழுந்து உதவிசெய்வார். பகலென்றல்ல எநத நேரமும் எனக்கு அவர் குறை வைத்தில்லை.

இன்று ஞாயிற்றுக் கிழமை, மணி ஆறரைக்கே காப்பியைக் கொண்டு பெட்ரூமிற்குச் சென்றேன். காப்பியை அருகில் வைத்துவிட்டு எழுப்பப் போனேன்.

"ஆகா, திரும்பவுமா? இரவு நடு ஜாமத்தில ஒருமுறை...இப்போ திரும்பவுமா?"

இரவு நடுஜாமம் தான் உடுப்பெல்லாம் மாத்திப்போட்டுப் படுத்தது. இப்போ என்னால மீண்டும் மாத்தமுடியாது.

விடிஞ்சு ஒரு மணியாச்சு இந்த நேரத்திலயுமா?...சலித்துக்கொண்டேன்.


"இஞ்சை ஒருக்கா வாறீங்களா...." சிறிது சத்தமாகக் கூப்பிட்டேன்.

"ஏன் என்ன நடந்தது?..." ஓடி வந்தார் கிச்சனிலிருந்து.

"பாருங்கோ மகன் செய்திருக்கிற வேலையை, இரவுதான் எல்லாம் மாத்திப்போட்டுவிட்டது, இப்ப திரும்பவும் பெட்ல யூரின் போய்ட்டான்"

"சரி விடுங்கோ, கிச்சனில காப்பி போட்டபடி இருக்குது போய்ப் பாருங்கோ நான் இவனை எழுப்பி எல்லாம் செய்யுறன்"

இன்றுடன் ஐந்து வருடங்களும் ஏழு மாதமும் ஆகிறது திருமணம் செய்து. வாய்த்த கணவரால் குறை என்று எதுவும் இல்லை.

- மதுவதனன் மௌ. -

Saturday, July 19, 2008

டபிள் ஏ (அடல்ஸ ஒன்லி இல்லைங்க)

வீடியோ சாமாச்சாரம்தான் ஆனா அடல்ஸ் ஒன்லி இல்லைங்க. இது எனக்கும் எனக்கு நெருக்கமான காகிதம் பற்றியதுமான ஒரு சிலாகிப்பு. டபிள் ஏ காகிதத்தின் மேல் எனக்கு ஏதோவொரு ஈடுபாடு. இந்த சலனப்படங்களைப் பார்த்து வந்ததல்ல அதன் முன்னமே வந்தது. அதன் மேலுறையின் வடிவமும் உள்ளே பால்வெண்மையும் எழுதினா அதன்மேல்தான் எழுதுவேன் என்று பல்கலைக்கழக காலம் முழுவதும் பந்தாவில பணத்தைச் செலவழிச்சது கூட அதன் மேலான கவர்ச்சிதான்.

கீழே இருக்கிற வீடியோக்களைப் பாருங்கோ. சூழலும் வருகின்றவர்களும் கூட டபிள் ஏ யின் வண்ணங்களுடன் சம்பந்தமாகத்தான் வருகிறார்கள்.

வீடியோ ஒன்று.



வீடியோ இரண்டு



வீடியோ ஒன்றைப் பார்த்து மீளப் பார்க்க விரும்புகிறவர்கள் இதைப்பார்க்கலாம்.விடயம் ஒன்றுதான் ஆட்கள் வேற. :-)



இல்ல அதே விடயம் இன்னும் வேற ஆட்களோட பாக்கவேணும் என்றவர்கள் இந்த யூடியூப் சுட்டிக்குப் போங்கோ.

- மதுவதனன் மௌ. -