Thursday, May 8, 2008

ஒபாமா கறுப்பரா, வெள்ளையரா? கிறிஸ்தவரா, முஸ்லிமா?

வித்தியாசமாக இம்முறை அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக களம் குதித்திருக்கும் மனிதர் ஒபாமாவைப்பற்றி சூடான செய்திகள் பல மாதங்களாகவே இடம்பெறுகின்றன. அவ்வகையில் அவர் ஒரு கிறிஸ்தவரா, முஸ்லிமா, கறுப்பரா, வெள்ளையரா எனற சர்ச்சை அங்கே கிளப்பப்பட்டுள்ளது . அது சம்பந்தமாக இங்கே ஆராயமுற்படுகின்றது இக்கட்டுரை.

எதிர்வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக்கட்சி (Democratic Party) வேட்பாளர்களை தெரிவுசெய்யும் போட்டியில் பாரக் ஒபாமாவும் (Barack Obama), ஹிலாரி கிளிண்டனும் (Hillary Clinton) கடுமையாக போட்டியிடுவது யாவரும் அறிந்ததே.

பல மாகாணங்களில் ஒபாமா ஹிலாரியைவிட முன்னணியில் நின்றாலும், வெள்ளையர்கள் அதிகமாக வாழும்பகுதிகளில் ஹிலாரி, ஒபாமாவை விட முன்னணியில் நின்ற்கின்றார். ஆனால் இதுவரை நடைபெற்ற வாக்கெடுப்புக்களில் ஒட்டுமொத்தமாக ஒபாமா தான் சிறிது முன்னணியில் நிற்கின்றார்.

மறுபுறத்தில் குடியரசுக்கட்ட்சியின் (Republican Party) நிச்சயமான வேட்பாளர் ஜோன் மக் கெய்ன் (John Mc Cain) அதிகமான வெள்ளையினத்தவரின் ஆதரவைப்பெற்று நிற்கின்றார்.

மொத்தத்திலே இங்கே அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் பால்வேறுபாடும் (Gender), இனவேறுபாடும் (Race), மதமும் (Religion) செல்வாக்கு செலுத்தப்போகின்றன என்பது நிதர்சனமான உண்மை. அவற்றுள் இனவேறுபாடே அதிக செல்வாக்கு செலுத்தப்போகின்றது.

ஜனநாயகக்கட்சி வேட்பாளர்களான ஒபாமாவுகும், ஹிலாரிக்கும் இடையிலான போட்டியில் ஒபாமா ஒரு கறுப்பராகவே அடையாளப்படுத்தப்படுகின்றார். ஒபாமாவின் தந்தை கென்யாவை சேர்ந்த கறுப்பினத்தவராவார். தாயார் அமெரிக்க வெள்ளையினத்தை சேர்ந்தவர். வெள்ளையினத்தவர் அதிகமாகவுள்ள அமெரிக்க மாநிலங்களில் ஹிலாரி முன்னணியில் நிற்பதற்கு காரணம் இந்த கறுப்பர் வெள்ளையர் என்ற இனப்பாகுபாடே.

ஒபாமா ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும், ஒபாமாவின் தந்தையார் ஒரு முஸ்லிம் என்ற உண்மை இப்போது வெளிக்கொணரப்பட்டிருக்கின்றது. சில கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம், சில வாக்காளர்கள் ஒபாமாவை ஒரு ‘இரகசிய முஸ்லிமாகவே (Secret Muslim)' கருதுகின்றனர். இயலாக முஸ்லிம்கள் மீது அமெரிக்கர்களுக்கு உள்ள வெறுப்பு ஒபாமாவுக்கு எதிராக பாவிக்கப்படலாம்.

மாறாக ஹிலாரியை பாதிக்கக்கூடிய விடயம் அவர் ஒரு பெண்ணாக இருப்பது. முன்பே குறிப்பிட்டது போல, பால்நிலை வேறுபாடு கூட இத்தேர்தலில் சிறிய செல்வாக்கை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகின் பல நாடுகளிலும் பெண்கள் ஜனாதிபதிகாளாகவோ, பிரதமர்களாகவோ பதவிவகித்திருக்கின்றார்கல், இன்னும் வகிக்கின்றார்கள். ஆனால், இன்னும் ஆவ்வாறு அனுமதிக்காத ஒரு சில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அமெரிக்காவில், இதுவரைக்கும், பெண்ணொருவர் ஜனாதிபதியாக இருந்ததில்லை. சில கருத்துக்களிப்புக்களில்படி, பெண்ணொருவரை அதிபராக தெரிவுசெய்ய அமெரிக்க மக்கள் தயங்குவதாகவே தெரிகின்றது. அமெரிக்க, உலகத்தின் பொலிஸ்காரனாக இருக்கவேண்டி அமெரிக்க மக்கள் உணர்வதால், ஆண்களையே அதற்கு தகுந்தவர்களாக பார்கின்றார்கள்.

இனி தலைப்புக்கு வந்தால். ஒபாமா கறுப்பரா வெள்ளையரா? தந்தையார் ஒரு கறுப்பர், தாயார் ஒரு அமெரிக்க வெள்ளையர். ஆகவே ஒபாமா கறுப்பரா வெள்ளையரா. ஒபாமா பால் வெள்ளை நிறத்தவரில்லை, அதே நேரம் ஏனைய கறுப்பினத்தவரை போன்று கரிய நிறத்தவரும் இல்லை, பொது நிறத்தவர்.

சரி எவ்வினத்தவர் என்பதை நிறத்தை வைத்து தீர்மானிக்காவிட்டாலும், அறிவியல் ரீதியாக பார்த்தால், ஒபாமாவின் உடலில், கலங்களில் காணப்படும் 23 சோடி நிறமூர்த்தங்களில் அரைவாசி கறுப்பின தந்தையினுடையது, மீதி அரைவாசி வெள்ளையின தாயினுடையது. அப்படியானால், பாதி வெள்ளையின நிறமூர்த்தங்களாலும், மீதி கறுப்பின நிறமூர்த்தங்களாலுமான கலங்களாலான ஒபாமாவை எந்த இனத்துக்குள் அடக்குவது. அது தான் என்முன் எழும் கேள்வி. அவரை கறுப்பர் என்று சொல்வது சரியாகுமா? ஆனால் வெள்ளையர்களின் மேலாதிக்க சிந்தனையும், அமெரிக்க அதிபர் தேர்தலில் தூய வெள்ளயர்களுக்கெதிராக ஒபாமா போட்டியிடுவதாலும் அவர் கறுப்பர் என்ற கருத்து விதைக்கப்படுகின்றது.

அவ்வாறே, ஒபாமா ஒரு முற்றுமுழுதான கிறிஸ்தவராக இருந்தாலும், அவரின் தந்தை ஒரு முஸ்லிமானதால், ஒபாமா ஒரு முஸ்லிம் என்ற கருத்துருவும் உருவாக்கப்படுகின்றது.

மொத்தத்தில் அமெரிக்க அரசியலில், இனம் மதம் என்பன முக்கிய காரணிகளாக இன்னும் இருந்தாலும், கறுப்பரென கொள்ளப்படும் ஒருவர் ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமனம்பெறுமளவுக்கு வந்திருப்பது, அமெரிக்காவில் பெருமளவில் இனங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்பதையே காட்டுகின்றது.

அரசியல் இலாபங்களுக்காக, இனம், மதம், பால்வேறுபாடு என்பன அவ்வப்போது முக்கியமான தருணங்களில் எடுத்தாளப்பட்டாலும், காலமாற்றத்தோடு அவை குறைவடைந்துகொண்டே செல்கின்றன. ஒன்றை நாம் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும், அமெரிக்காவில் இன்னும், கிறிஸ்தவரல்லாத ஒருவர் சாதாரணமான வாழ்க்கை நடாத்துவது என்பது கடினமான காரியமே. அதிலும் அரசியலில் அது முடியாத காரியமே. அவ்வளவுக்கு அமெரிக்காவில் கிறிஸ்தவமதம் செல்வாக்கு செலுத்துகின்றது. கறுப்பர் வெள்ளையர் என்ற வேறுபாட்டுக்கும் இம்மதவாத சிந்தனையே உரமிடுகின்றது.

அமெரிக்காவில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலுமே ஏதோ ஒவ்வொரு அளவுகளில் இவ்வேறுபாடுகள் காண்பிக்கப்படுகின்றன தான். மனித இனம் இருக்கும் வரைக்கும், இனம், மொழி, மதம், பால் வேறுபாடுகள் பார்க்கப்படுமா என்று ஐயப்படத்தான் முடிகின்றது இப்போதைக்கு எம்மால்.

- மதுவர்மன் (2008-05-08)

உதவி
1. The Sunday Leader ஆங்கில வார பத்திரிகை, இலங்கை
2. BBC World Service
3. இலங்கை தமிழ் வார பத்திரிகைகள் (வீரகேசரி, தினக்குரல்)
4. TIME

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி