ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7:30 மணிக்கு, இலங்கை சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், Zorro தொலைக்காட்சித் தொடரை என்றாவது ஒரு நாள் பார்த்தவர்களுக்கு, அல்லது சனி, ஞாயிறு தினங்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் Grand Master நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு புரியும், இந்தப் பதிவின் தலைப்பு ஏன் அவசியம் என்று.
Zorro தொலைக்காட்சித் தொடர் - ஞாயிறு காலை 7:30
இது முக்கியமாக சிறுவர்களை
இலக்கு வைத்து ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சித் தொடராக இருக்கவேண்டும், காலை நேர தொடர்கள் அநேகமாக சிறுவர்களை இலக்காக கொண்டவை.
சக்தி தொலைக்காட்சியின் இந்த தொடர் அப்படியே ஆங்கில மொழியிலேயே ஒளிபரப்பப்படுகின்றது. தமிழ் மொழியில் ஒலி மாற்றம் இலங்கையிலே பெரும்பாலும் செய்யப்படுவதில்லை என்பது காரணமாக இருக்கலாம். ஆனாலும் ஆச்சரியப்படவும், ஆதங்கப்படவும் வைக்கும் விடயம் என்னவென்றால், இத்தொடரில் உபதலைப்புக்கள் சிங்கள மொழியில் வழங்கப்படுவது, தமிழில் எதுவுமே இல்லாமை.
சக்தி தொலைக்காட்சியின் அநேக தமிழ் மொழியிலமைந்த நிகழ்ச்சிகள் சிங்கள உப தலைப்புக்களுடன் வழங்கப்படுவது வழமை, அது வரவேற்கத்தக்கதும் கூட. ஆனால், ஆங்கில மொழியிலமைந்த தொடரொன்றுக்கு, தமிழ் பேசும் மக்களை நேயர்களாக கொண்ட தொலைக்கட்சி, தமிழ் மொழியை தவிர்த்து சிங்கள மொழியில் உபதலைப்புக்களை வழங்குவது வேதனையளிக்கின்றது.
என்னுடைய நண்பர் வீடொன்றில் நடந்த சம்பவமே என்னை இதை எழுதத்தூண்டியது. மூன்று பத்து வயதிற்கு கூடாத சிறுவர்க்ள் இத்தொடரை பார்த்துக்கொண்டிருந்தபோது, நானும் அவர்களுடன் இணைந்துகொண்டேன், அப்போது அவர்களில் ஒரு சிறுவன் என்னிடம் கேட்டான் ‘மாமா, அந்த எழுத்துக்களை சிங்களத்தில போடுகினமே, தமிழில போடமாட்டினமா?’ என்று. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதற்கு நான், அச்சிறுவனுக்கு ‘உவங்கள் உப்பிடித்தான்’ என்று பதிலளிக்கவேண்டியதாயிற்று.
பெரியவர்களையாவது பரவாயில்லை, அச்சிறுவர்களையும் ஆங்கில தெரிந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு நியாயம். தமிழ் மொழியிலான தொலைக்காட்சியான சக்தி, எம்மொழியில் முக்கியமாக இங்கு உபதலைப்புக்களை கொடுத்திருக்கவேண்டும்? அல்லது தமிழ் மொழிபெயர்த்து உபதலைப்புக்களை போடுவதற்கான வசதி சக்தி நிறுவனத்திடம் இல்லையா?
சக்தியின் Grand Master - சனி, ஞாயிறு இரவு 8 மணி
அவ்வப்போது இந்நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்கள் பிரதீப் கேட்கும் கேள்விகள் புரியாமல் ஆமா, இல்லையா என்று விடையளிக்க முடியாமல் சங்கடப்படுவதை கண்டிருக்கின்றேன். கேட்கப்பட்ட கேள்வி தொடர்பான விடயம் சம்பந்தமாக போதிய அறிவில்லாமை என்ற காரணம் போக, என்னை ஆத்திரப்பட வைத்த இன்னொரு காரணம் இருக்கின்றது.
அதாவது, பிரதீப் அநேகமாக, அதிகமாக, வேகமாக கதைக்கும் ஆங்கிலத்தை புரிந்துகொள்ளாமல், என்ன கேட்கின்றார் என்று புரியாமல் ஆம் அல்லது இல்லை என்று ஏதோ ஒன்றை விடையளித்து தடுமாறியவர்களை கண்டிருக்கின்றேன். அந்நிலைமைகளில் பிரதீப் நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்களை ஒரு ஏளனத்தனமையோடு நடத்துவதையும் அவதானிக்கலாம். நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்கள் சங்கடப்பகுகின்றார்கள்.
இந்நிகழ்ச்ச்சியில் பங்குபற்றும் அனைவரும் காட்டாயம் ஆங்கிலத்தில் சிறப்பு புலமை பெற்றிருக்கவேண்டும் என்ற நிபந்தனையை சக்தி தொலைக்கட்சி விதித்திருக்கின்றதா? தமிழ் தெரிந்த பிரதீப் தமிழ் மொழி பேசுபவர்களிடம் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்கலாம் தானே.
இலங்கை நேயர்களை பிரதீப் இந்திய நேயர்கள் போன்று எண்ணுகின்றாரோ தெரியவில்லை. இந்திய நேயர்கள் போன்றன்று, இலங்கை நேயர்கள் மிகக்குறைந்த அளவிலேயே ஆங்கிலச் சொற்களை பாவிப்பவர்கள். மாறாக இந்தியாவில் அவர்களுக்கேயுரிய, உச்சரிப்புடன்கூடிய தமிழ் கலந்த ஆங்கிலம் பேசுவார்கள், ஆனால் இலைகையில் தமிழர்கள் பெரும்பாலும் அப்படியில்லை.
பிரதீப் அதிகம் ஆங்கிலத்தை பாவிப்பது, மேலும் பங்குபற்ற விருப்பும் நேயர்களை கொஞ்சம் பின்நிற்கச்செய்யும் என்பதை சக்தி தொலைக்கட்சி விளங்கிக்கொள்ளவேண்டும். ஏனென்றால் ஆங்கிலம் சரளமாக தெரியாவிட்டால், பிரதீப் கேட்கும் கேள்விகளை புரிந்துகொள்ள முடியாதென்ற நிலை காணப்படுகின்றது. இவற்றை கவனித்து, சக்தி நிர்வாகம் முடிந்தவரை இந்நிகழ்ச்சிகளில் தமிழ் பாவனையை ஏற்படுத்தலாம்.
’தமிழ் மொழியின் சக்தி’ என்று சொல்லிக்கொள்பவர்கள் அதற்றாற்போல் நடக்காமல், தமிழர்களை ஆங்கில மயப்படுத்தவேண்டும் என்ற குறிக்கோளோடு இயங்குகின்றார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஏற்கனவே சிங்கள மயமாக்கலால் தமிழ்மொழி பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில், இலங்கையின் பிரதான தமிழ் தொலைக்காட்சியான சக்தியில், ஆங்கிலத்தின் ஆதிக்கம் அசாதாரணமாக அதிகமாகவே காணப்படுவது கொஞ்சம் மனவேதனையளிப்பதாகவே இருக்கின்றது.
கொசுறுத்தகவல்: சக்தி தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் ஒரு இந்தியர்
பிரதீப் தொடர்பாக ஏனைய இடங்களில்
http://nkashokbharan.wordpress.com/2008/05/02/a-moment-with-grand-master/
http://www.thehindu.com/fr/2007/06/08/stories/2007060851630400.htm
http://www.hindu.com/mp/2006/06/05/stories/2006060500050702.htm
19 பின்னூட்டங்கள்:
கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சியில் ஏமாற்றுப்பட்டவர்களில் நானும் ஒருவன், மக்களை நன்கு ஏமாற்றுகிறார்கள். யாராவது ஒருவர் அவரை உடனடியாக அந்த மேடையில் வைத்து நீங்கள் நினைக்கும் நபர் பற்றிய விடயங்களை நடுவர்களுக்கு கொடுத்து கண்டுபிடிக்கச் சொல்லுங்கள் நிச்சயம் தடுமாறுவார். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் 3 மணித்தியாலங்களுக்கு முன்னரே நாம் நினைப்பவர் பற்றிய விபரங்களை நடுவர்களுக்கு கொடுத்தால் நானும் கிராண்ட் மாஸ்டர் ஆகலாம்.
நீங்கள் சொல்லும் Grand Master நிகழ்ச்சி பார்த்து நானும் கடுப்பாகிய நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. முக்கியமாக பிரதீப் ஆண்களிடம் ஒரு மாதிரியும், பெண்களிடம் இன்னொரு விதத்திலும் நடந்து கொள்வதையும் நான் நிறைய முறை அவதானித்திருக்கிறேன். என்ன செய்ய? இலங்கையின் சில ஊடகங்களைப் பொறுத்த வரை இவைகளை கண்டு கொள்ள யாருமில்லை போலும்....
பதிவு அருமையாக இருந்தது.... வாழ்த்துக்கள்.....
//தமிழ் உபதலைப்புக்கள்// சக்தி ஒன்றும் அவ்வளவு வளங்கள் கொண்ட நிறுவனம் அல்ல. அது தவிரவும் அவர்கள் சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் அதே சிறுவர் படங்களை அவ்வாறே ஒளிபரப்புவார்கள். அவர்களுக்கு அவர்களின் சுய தாயாரிப்பு நிகழ்ச்சிகளுக்கான தயார்ப்படுத்தல் வேலைப்பழு அதிகம் இருப்பதால் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை என நினைக்கிறேன்.
//தமிழ் தெரிந்த பிரதீப்// என்பது எவ்வளவு சரியானது என தெரியவில்லை. அவரால் மலையாளத்துக்கும் தமிழுக்கான ஒற்றுமைகளையும் பயன்படுத்தி சில தமிழ் வார்த்தைகளை ஆங்காங்கே பொருத்தி ஏனைய இடங்களை ஆங்கிலத்தால் இட்டு நிரப்பி கதைக்க முடிவதாகவே எனக்கு தெரிகிறது.
வந்தி சொல்வது சாத்தியமெனினும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதே, ஒரு மாயவித்தை நிகழ்ச்சி பார்ப்பது போல... பொய் என்று தெரிந்தும் ஆர்வத்துடன் பார்த்தல் :-)
சக்தி தொலைக்காட்சியின் அநேக தமிழ் மொழியிலமைந்த நிகழ்ச்சிகள் சிங்கள உப தலைப்புக்களுடன் வழங்கப்படுவது வழமை, அது வரவேற்கத்தக்கதும் கூட. ஆனால், ஆங்கில மொழியிலமைந்த தொடரொன்றுக்கு, தமிழ் பேசும் மக்களை நேயர்களாக கொண்ட தொலைக்கட்சி, தமிழ் மொழியை தவிர்த்து சிங்கள மொழியில் உபதலைப்புக்களை வழங்குவது வேதனையளிக்கின்றது.
அதாவது சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்வுகளை அப்படியே எடுத்து எந்த விதமான மாற்றமும் செய்யாமல் மீளவும் அப்படியே ஒளிபரப்புகின்றார்கள்.. மொழிமாற்றம் செய்வதற்கோ அல்லது தமிழ் மொழியில் உபதலைப்பிடுவதற்கோ சக்தியில் வேலைசெய்பவர்களுக்கு ஆங்கிலப் புலமையும் தொழில்நுட்பப் புலமையும் போதாது என்பதே என்கருத்து.. இல்லாவிட்டால் அப்படிச்செய்ய மாட்டார்கள்..
வந்தியத்தேவன் கூறியது போல கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சி ஒரு பேக்காட்டு நிகழ்ச்சி...
ஆங்கில பேச்சு இல்லாவிட்டாலும் மலையாள வாசனை கலந்த அவரது தமிழ் எங்கள் நாட்டவருக்கு புரிந்து கொள்தல் கடினமே! மேலும் வந்தி கூறியது இந்த நிகழ்ச்சி பார்த்து எரிச்சலடைந்து பார்க்காமல் விட்ட எங்களுக்கு புதிய தகவல்.
வந்தி,
//கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சியில் ஏமாற்றுப்பட்டவர்களில் நானும் ஒருவன், மக்களை நன்கு ஏமாற்றுகிறார்கள்//
என்னுடைய இரண்டு நண்பர்களும் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் போல் தெரிகின்றது. இந்நிகழ்ச்சி சக்தியில் தொடங்கிய ஆரம்ப நாட்களில் பங்குபற்றியிருந்தார்கள். இருவருமே 10 000 ரூபாய்கள் பரிசு வென்றிருந்தார்கள். பணப்பரிசை அவர்களது முகவரிகளுக்கு அனுப்பிவைப்பதாக சக்தி நிறுவனத்தினர் அறிவித்திருந்தார்கள். ஆனால் இவ்வளவு காலமாகியும் (1 வருடம்) இன்னும் அந்த பணம் அனுப்பிவைக்கப்படவில்லை. இதை என்னவென்று சொல்வது.
இதைப்பற்றி தனிப்பதிவொன்று எழுதும் எண்ணத்தில் இருக்கின்றேன்.
நீங்கள் குறிப்பிட்ட மற்ரைய விடயம் ஆச்சரியமாக உள்ளது. எவ்வளவிற்கு வெளிப்படைத்தன்மை உள்ளது என்பது கேள்விக்குறியே!
//சப்ராஸ் அபூ பக்கர்
சிலவேளை எனக்கு பொல்லாத கோபமே வந்ததுண்டு...
உங்கள் கருத்துக்கு நன்றி..
//NiMaL
சக்தி ஒன்றும் அவ்வளவு வளங்கள் கொண்ட நிறுவனம் அல்ல. அது தவிரவும் அவர்கள் சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் அதே சிறுவர் படங்களை அவ்வாறே ஒளிபரப்புவார்கள். அவர்களுக்கு அவர்களின் சுய தாயாரிப்பு நிகழ்ச்சிகளுக்கான தயார்ப்படுத்தல் வேலைப்பழு அதிகம் இருப்பதால் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை என நினைக்கிறேன்.//
அவர்கள் தற்போது செய்வதை நீங்கள் சொல்கின்றீர்கள். இதை நீங்கள் நியாயப்படுத்தும் விதமாக இங்கே கூறவில்லை என்று எண்ணுகின்றேன். இதைத்தான் பலர் நாங்கள் பிழையென்கின்றோம்.
//என்பது எவ்வளவு சரியானது என தெரியவில்லை. அவரால் மலையாளத்துக்கும் தமிழுக்கான ஒற்றுமைகளையும் பயன்படுத்தி சில தமிழ் வார்த்தைகளை ஆங்காங்கே பொருத்தி ஏனைய இடங்களை ஆங்கிலத்தால் இட்டு நிரப்பி கதைக்க முடிவதாகவே எனக்கு தெரிகிறது.//
இல்லை நிமல், அவரால் சரளமாக தமிழில் உரையாடமுடியும் என்பது நான் தனிப்பட்டரீதியில் உறுதிசெய்துகொண்டபின்பு தான் இதை எழுதினேன். நீங்களே அவதானிக்கலாம், அவரால் சரளமாக தமிழில் உரையாடமுடியும் என்பதை..
//வந்தி சொல்வது சாத்தியமெனினும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதே, ஒரு மாயவித்தை நிகழ்ச்சி பார்ப்பது போல... பொய் என்று தெரிந்தும் ஆர்வத்துடன் பார்த்தல் :-)//
மாயவித்தை நிகழ்ச்சியையும், இதையும் ஒப்பிடுகின்றீர்களே!!! மாயவித்தையில் பார்வையாளர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்று ஒருபோதும் சொல்வதில்லையே..
//சுபானு
அதாவது சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்வுகளை அப்படியே எடுத்து எந்த விதமான மாற்றமும் செய்யாமல் மீளவும் அப்படியே ஒளிபரப்புகின்றார்கள்.. மொழிமாற்றம் செய்வதற்கோ அல்லது தமிழ் மொழியில் உபதலைப்பிடுவதற்கோ சக்தியில் வேலைசெய்பவர்களுக்கு ஆங்கிலப் புலமையும் தொழில்நுட்பப் புலமையும் போதாது என்பதே என்கருத்து.. இல்லாவிட்டால் அப்படிச்செய்ய மாட்டார்கள்..//
அவ்வளவு வசதிகளையும் சிங்கள மொழியில் ஏற்படுத்த முடியுமாயின், தமிழ் மொழியிலும் ஏன் ஏற்படுத்த முடியாது?
தமிழின் முதல் தர சேவை என்று சொபவர்களுக்கு, மிகப்பெரிய ஊடக நிறூவனமொன்றிற்கு இவ்வசதியை ஏற்படுத்துவது கடினமா?
அடிப்படையில், மேலிடத்திலிருந்து, அடிமட்டம் வரை அந்த எண்ணமும், மொழிமீதான பற்றும் வரவேண்டும். அந்த அடிப்படையில் தான் மாற்றமேற்படவேண்டும்.
நான் க்ராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சி பற்றி பல முரண்பாடுகள் இருந்தாலும் கலாநிதி.ப்ரதீப் என்ற தனிநபருடன் உரையாட எனக்கு சந்தர்ப்பம் வாய்த்தது. ஒரு மனிதர் அறிவாளியா இல்லை அவ்வாறு காட்டிக்கொள்கிறாரா என்ற வேறுபாட்டை என்னால் அறிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன்.அந்த வகையில் அவரது அறிவு ஆற்றல் மிகத்திறமானதே. ஒருவருடன் உரையாடும் போது அதைத் தெளிவாக அறிய முடியும். போட்டி நிகழ்ச்சியில் சில குழறுபடிகள் இருக்கலாம் - ஆனால் அதற்காக அவரது இயலுமையை சவாலுக்குள்ளாக்க முடியாது.
மற்றது அவரது தமிழ் - அட போங்கய்யா இலங்கை அறிவிப்பாளர்களே தமிழ் பேச கூச்சப்பட்டுக்கொண்டு அல்லது அவ்வாறு கொச்சைத்தமிழில் பேச ஊக்குவிக்கப்படுகையில் அவர் மட்டும் என்ன விதிவலக்கா??? - முதலில் ஊடகங்கள் தமது பாணியை மாற்றவேண்டும் - இது தொடர்பில் மேலதிகமாக இங்கு எழுதியுள்ளேன் - http://nkashokbharan.blogspot.com/2009/08/blog-post_10.html
அஷோக்,
நீங்கள் சொல்ல்வது போல, பிரதீப்பின் அறிவுத்திறமையிலும், விடையை கண்டுபிடிக்கும் திறமையிலும், எனக்கும் இரண்டாம் கருத்துக்கு இடமில்லைதான்
//மற்றது அவரது தமிழ் - அட போங்கய்யா இலங்கை அறிவிப்பாளர்களே தமிழ் பேச கூச்சப்பட்டுக்கொண்டு அல்லது அவ்வாறு கொச்சைத்தமிழில் பேச ஊக்குவிக்கப்படுகையில் அவர் மட்டும் என்ன விதிவலக்கா??? - முதலில் ஊடகங்கள் தமது பாணியை மாற்றவேண்டும்//
சில ஊடகங்களில், இலங்கை தமிழை விடுத்து, ஒருவித (ஸ்டைலான) தமிழில் பேசுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அறியக்கிடைத்தது.
ஆனால் நான் இங்கே முக்கியமாக பேசிய விடயம், தமிழ் முற்றுமுழுதாக மறுக்கப்படும் சந்தர்ப்பங்களை. இது கொஞ்சம் மோசமானதாகவே எனக்கு பட்டது.
இதை எங்கிருந்து சரிசெய்வது என்பதே கேள்விக்குரிய விடயம்...
உங்கள் பதிவை வாசித்தேன், இலங்கைத்தமிழ் ஊடகங்களில் பாதுகாக்கப்படாமை பற்றி மிகச்சிறப்பாகவே கூறியுள்ளீர்கள்..
அசோக் நானும் அவருடன் உரையாடினேன் அவரிடம் திறமை இருக்கலாம் ஆனால் தலைக்கனம் நிறையவே குறிப்பாக எம்மவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்ற எண்ணம் அவரின் பேச்சில் தெரிந்தது. அதே நேரம் ஈழத்தின் மூத்த கவிகள் நீலாவணன், முருகையன் போன்றவர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டுபோனால் நிராகரிப்பதும். கொஞ்சம் கடினமான கிரிக்கெட் வீரர்களைப் புகழ் பெறவில்லை என நிராகரிப்பதும் எவ்வகையில் நியாயம், முதல் கேள்வியிலே அவர் ஒரு விளையாட்டுவீரரா என ஒருவரை எப்படி அவரால் கேட்கமுடிகின்றது, இதெல்லாம் செட்டப் நாங்கள் ஏமாறுகின்றோம், முதல் சீசனில் வென்றவர்கள் அறிவிப்பாளினி சத்யபிரியாவின் கணவர் மற்றும் சில இலங்கையின் பிரபலங்கள் அவர்களை நிகழ்ச்சி சுவாரஸ்யத்துக்காக வெற்றியடைச் செய்தார்கள் என்பதும் பலருக்கும் தெரியும்.
இதிங் வந்தியத்தேவன் துமா மாத் ஏக தமா கியண்னே... ஒவ் ஏம வென்ன புழுவன் ஹபய் ஏக எயாகே வறட்த கியலா கியன்ன பானே.. ஷக்தி டி.வி. தமா மேவா கன ஹிதலா ஹறியட வட அறங் யன்ன ஓனே... ஒயாட தேரெனவத?
(எதிர்காலத்தில் தமிழ் இப்படியும் ஆகிவிடலாம் - சொல்லுவதற்கில்லை...)
//(எதிர்காலத்தில் தமிழ் இப்படியும் ஆகிவிடலாம் - சொல்லுவதற்கில்லை...)//
ஆகிவிடலாம் அல்ல ஆகிவிட்டது. சில இடங்களில் இருக்கும் தமிழ்ப் பொடியள் இப்போ சிங்களத்தமிழ் தான் பேசுகின்றார்கள். சக்தியில் கூட சில விடயங்களுக்கு நேரடிச் சிங்களம் பாவிக்கின்றார்கள்.
வந்தி,
ஒரு துறையிலே வருடக்கனக்கில் இருக்கும் ஒருவர் அத்துறையில் விற்பன்னராவது ஒன்றும் ஆச்சரியமில்லை. அதிலும் அதுவே பிழைத்துக்கொள்வதற்கான ஒரே வழியாகும்போது, அது தன்பாட்டிலேயே நடக்கும்.
உண்மை, நீங்கள் சொல்வது போல, அந்த தலைக்கனம், பங்குபற்றுபவர்களை ஏளனமாக பார்ப்பதை அப்படியே அப்பட்டமாக அவதானிக்கலாம்
அஷோக்,
எனக்கு சிங்களம் தெரியாதையா, என்ன சொன்னனீங்கள் எண்டு கொஞ்சம் மொழிபெயர்த்து சொல்லுங்கோவன். ஒண்டும் விளங்கேல்லை..
வந்தி,
சில இடங்களில் இருக்கும் தமிழ்ப் பெடியள் சிங்களத்தில் பேசுவது
ஒன்று - அவர்களுக்குள்ளே இருகின்ற அடிமைப்புத்தி
இரண்டு - பயம் (பாதுகாக்கு, தனிப்பட்ட)
மூன்று - அதை பெருமையாக நினைப்பது
நான்கு - சிங்களம் தெரியாத மற்றவர்களை பயப்பிடுத்த
என்று சில காரணங்களை சொல்லலாம்.
//NiMaL said...
//தமிழ் உபதலைப்புக்கள்// சக்தி ஒன்றும் அவ்வளவு வளங்கள் கொண்ட நிறுவனம் அல்ல. அது தவிரவும் அவர்கள் சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் அதே சிறுவர் படங்களை அவ்வாறே ஒளிபரப்புவார்கள். அவர்களுக்கு அவர்களின் சுய தாயாரிப்பு நிகழ்ச்சிகளுக்கான தயார்ப்படுத்தல் வேலைப்பழு அதிகம் இருப்பதால் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை என நினைக்கிறேன். //
வேலைப்பழு காரணமாக தமிழ் மொழிபெயர்ப்பு செய்ய முடியாதென்றால் தமிழ் தொடர் நாடகங்களுக்கு சிங்கள உபதலைப்பிட எங்கே நேரம் கிடைத்தது?
பிரதீப் உண்மையில் மலையாள தொலைக்காட்சியில் இதைப்போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். ஒரு மலையாளியினிடத்தில் சுத்த தமிழை எதிர் பார்க்கமுடியாது.
தேவதாசன்,
வருகைக்கு நன்றி,
பிரதீப் மலையாளியாக இருந்தாலும், அவருக்கு நன்றாக தமிழ் பேசவருகின்றது. இதை நான் அங்கே பணிபுரிபவர்களிடன் உறுதிப்படுத்தியும் இருக்கின்றேன், ஏன் நீங்களே அவதானிக்கலாம் இதை
சக்தி என்பது ஒரு கொள்ளை நோய். அதை எப்படி பரவாமல் தடுப்பது, நாட்டை விட்டு எவ்வாறு விரட்டியடிப்பது? இப்படியான விசயங்களை சிந்திப்பதை விடுத்து சின்ன சின்ன பக்க விளைவுகளை விமர்சிப்பது பயன் தருமா? அந்தச்சாக்கடைகள் திருந்தப்போவதில்லை. சமுகத்தை அடியோடு நாசமாக்காமல் விடப்போவதுமில்லை.
//சில ஊடகங்களில், இலங்கை தமிழை விடுத்து, ஒருவித (ஸ்டைலான) தமிழில் பேசுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அறியக்கிடைத்தது.//
அப்ப எங்கட தமிழ் ஸ்டயில் இல்லயா?
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி