Tuesday, August 25, 2009

கோழியா, முட்டையா, எது முதலில் வந்தது?

ஒருவரை பார்த்து, 'இதுவா அதுவா, எது முதலில் வந்தது அல்லது எதிலிருந்து எது வந்தது’ என்று வெளிப்படையாக விடை சொல்லமுடியாத கேள்வி'யொன்றை கேட்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு இதற்கான விடை உடனடியாக தெரியாதாயின், மாறாக உங்களை மடக்குவதற்காக அவர் உடனடியாக உங்களை நோக்கி ஒரு கேள்வியை எடுத்துவிடுவார். ‘கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்று சொல்லுங்கள்' என்று உங்களை கேட்பார். நீங்களும் எது முதலில் வந்தது என்று சொல்லமுடியாது விழிப்பீர்கள். உடனே அவர் ‘அவ்வாறே உங்களுடைய முன்னைய கேள்விக்கும் விடையளிப்பது கடினம்' என்பார்'

மேற்படி சந்தர்ப்பங்கள் பலவற்றை நான் சந்தித்திருக்கின்றேன். பெரிய அறிஞர்கள் என்று மதிக்கப்படுபவர்கள் கூட இவ்வாறு நடந்ததை கண்டிருக்கின்றேன். அவ்வாறே நீங்களும் சந்தித்திருப்பீர்கள். சரி, கோழியா முட்டையா, எது முதலில் வந்தது என்பது பற்றி இங்கே இப்போது ஆராய்வோம்.
 

“ …இந்த கோழி, கோழிமுட்டை பிரச்சினை தொடர்பாக

எம்மவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி கூட

அடிப்படையில் பிழையானது. 'கோழியிலிருந்து முட்டை

வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா?'

என்று கேட்பார்கள். கோழியிலிருந்து முட்டை வருகின்றது

சரி, அதெப்படி முட்டையிலிருந்து கோழி வரமுடியும்?

குழப்பமாக இருக்கின்றதா?… " 


கோழியா, முட்டையா, எது முதலில் வந்தது?

கோழிக்கு முன்பே முட்டையிடக்கூடிய வேறு உயிரினங்கள் இருந்துள்ளன தானே. உதாரணத்துக்கு, உயிர்ப் பரிணாமத்தில் (Biological Evolution), நகருயிர்களின் (Reptiles) பின்பு தான், பறவைகள் உருவாகியிருந்தன. டைனசோர் போன்ற நகருயிர்கள் பறவைகள் தோன்றுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்திருக்கின்றன. ஆகவே கோழியை விட, 'முட்டை' தானே முதலில் வந்திருக்கவேண்டும். இது கொஞ்சம் சுவாரசியமான விளக்கமாக இருக்கின்றது இல்லையா!

அவ்வாறல்ல, இங்கே கேள்வியிலே கொஞ்சம் குழப்பமிருக்கின்றது. கோழியா, முட்டையா என்பதற்கு பதிலாக கோழியா, கோழிமுட்டையா, என்றவாறு கேள்வி இருந்திருக்கவேண்டும். முட்டை என்று பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டால், அது கோழிமுட்டையல்லாத முட்டைகளையும் உள்ளடக்கி, டைனசோர்களையும் உள்ளே கொண்டுவந்துவிடும். ஆகவே கேள்வி ‘கோழியா, கோழிமுட்டையா, எது முதலில் வந்தது?' என்று அமையவேண்டும்.

இந்த கோழி, கோழிமுட்டை பிரச்சினை தொடர்பாக எம்மவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி கூட அடிப்படையில் பிழையானது. 'கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா?' என்று கேட்பார்கள். கோழியிலிருந்து முட்டை வருகின்றது சரி, அதெப்படி முட்டையிலிருந்து கோழி வரமுடியும்? குழப்பமாக இருக்கின்றதா?

மனிதத் தாயிலிருந்து குழந்தை வருகின்றது (பிறக்கின்றது). குழந்தை பிறந்த பின்பும், தாய் தாயாக இருக்கின்றாள், குழந்தை என்று புதிய ஒரு பொருள் வந்திருக்கின்றது. ஒன்றிலிருந்து இன்னொன்று வந்து, இப்போது இரண்டாக இருக்கின்றது.

அவ்வாறே, கோழி முட்டையிடுகின்றது. அதுவே கோழியிலிருந்து முட்டை வருகின்றது. அங்கேயும் கோழி கோழியாக இருக்கின்றது, முட்டை என்று ஒரு புதிய பொருள் வந்திருகின்றது.

இவற்றை வைத்து இப்போது சொல்லுங்கள். முட்டையிலிருந்து கோழி வருகின்றதா அல்லது முட்டையே கோழியாக மாறுகின்றதா?

ஆம், முட்டைக்குள் உயிர், இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு அந்த முட்டை அப்படியே கோழியாக மாறுகின்றதேயொழிய, முட்டையிலிருந்து கோழி வருவதில்லை. முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு பொரிக்கும்போது, இப்போது முட்டை இல்லை, கோழிக்குஞ்சு மட்டும் தானே எஞ்சியுள்ளது. இது உரு மாற்றம் தானே. ஒன்று இன்னொன்றாக மாறி எஞ்சியுள்ளது ஒன்றுதானே.

ஆகவே, இன்னும் யாராவது உங்களை பார்த்து, கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்த் கோழி வந்ததா என்று கேட்பாராயின், அவரது கேள்வியை திருத்தவேண்டியது உங்கள் பொறுப்பு. ஏனென்றால், தர்க்கரீதியாக அக்கேள்வி பிழையானது. இபோது சரியான கேள்வி ‘கோழியா (கோழி) முட்டையா, எது முதலில் வந்தது?' என்பதே. 'ஒன்றிலிருந்து மற்றது' என்ற முறையை விட்டுவிடவேண்டும், ஏனென்றால் இருவழிக்கும் அது பொருந்தவில்லை.

கோழிமுட்டை என்றால் என்ன என்று உங்களை கேட்டால் உடனே சொல்வீர்கள் ‘கோழி இட்ட முட்டை தான் கோழிமுட்டை' என்று. ஆனால், உயிரியலின்படி, அவ்வாறிருக்கவேண்டியதில்லை. கோழியல்லாத விலங்கு (பறவை) கூட கோழிமுட்டையை இடமுடியும். அதை பின்பு விளக்குகின்றேன். இலகுவாக ஒருவரியில் சொல்வதானால், குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்வது போல தான்.

மாறாக, உயிரியலின்படி, கோழியாக மாறக்கூடிய முட்டையே கோழிமுட்டையாக இருக்கமுடியும். அதாவது, எந்த முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு பொரிக்கின்றதோ (முட்டை கோழியாக மாறுகின்றது) அந்த முட்டை நிச்சயமாக கோழிமுட்டையாக தானே இருக்கமுடியும்.

தாயின் கருப்பையிலிருந்து குழந்தை வெளியே வந்த கணத்திலிருந்து நாங்கள் குழந்தையின் வயதை கணிக்கத்தொடங்குகின்றோம். மாறாக, அக்கணத்துக்கு ஏறத்தாழ பத்து மாதங்களுக்கு முன்பே குழந்தையின் உருவாக்கம்(ஆரம்பம்) தொடங்கிவிட்டது என்பது தானே உண்மை. அதாவது தந்தையின் விந்துக்கலமொன்றும் (Sperm Cell), தாயின் முட்டைக்கலமொன்றும் (Ovum) கருப்பையில் இணைந்து, குழந்தையை உருவாக்கக்கூடிய முதலாவது கலம் (நுகம் - Zygote) உருவாக்கப்பட்டபோதே குழந்தையின் உருவாக்கம் தொடங்கிவிட்டது. அந்த ஒரு கலம் பின்பு பல கலங்களாக பிரிவடைந்து நேரத்துடன் முழுமையான குழந்தையாக உருமாறுகின்றது. குழந்தையின் நடத்தைகள், உடலியல்புகள் எவ்வாறு இருக்கும் என்ற விடயங்களெல்லாம், அந்த முதலாவது கலத்திலேயே, தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன.

உயினமொன்றின் மொத்த இயல்புகளையும் தீர்மானிப்பது அதன் கலங்களிலுள்ள DNA யாதலால், DNA யில் ஏற்படுகின்ற மாற்றங்கள் காரணமாக, இயற்கையில், உயிரினங்கள் பரிணாமமடைகின்றன. கோழி போன்ற விலங்கினத்தில், ஆண்விலங்கின் விந்துக்கலத்திலிருந்தும் (Sperm), பெண்விலங்கின் முட்டைக்கலத்திலிருந்தும் (Ovum) (இது கோழிமுட்டையல்ல) DNA மூலக்கூறுகள் ஒன்றுசேர்ந்து, நுகம் (Zygote) - கோழிக்குஞ்சொன்றின் முதலாவது கலம், உருவாகின்றது. இந்த முதற்கலம் எண்ணுக்கணக்கற்ற தடவைகள் கலப்பிரிவுக்கு (ஒரு கலம் இரண்டாக பிரிந்து, இரு புதிய கலங்கல் உருவாதல்) உள்ளாகி, ஒரு முழுமையான விலங்குக்குரிய கலங்கள் உருவாகின்றன. எந்த ஒரு விலங்கிலும், எல்லாக் கலங்களும் ஒரே மாதிரியான DNA மூலக்கூறகளையே கொண்டிருக்கும் அந்த DNA முதலாவது கலமான நுகத்திலிருந்தே (Zygote) வருகின்றது.

ஆணினதும், பெண்ணினது DNA கலப்பினால் ஏற்பட்ட சிறிய மாற்றங்களினாலோ அல்லது, நுகத்தை (Zygote) உருவாக்கிய DNA யில் ஏற்பட்ட விகாரங்களினாலோ (Mutation) கோழியல்லாத உரிரினங்களிலிருந்து கோழிகள் பரிணாமமடைந்தன. இந்த மாற்றங்களும், விகாரங்களும் (Mutations) நுகம் (Zygote) உருவாகும் தருணத்தில் மாத்திரமே பாதிப்பை ஏற்படுத்தவல்லன. அதாவது, கோழியல்லாத இரு விலங்குகள் (இன்னும் சிறப்பாக பறவைகள்) இணைசேர்ந்தன, அவற்றினுடைய புதிய நுகத்திலிருந்த (Zygote) DNA, முதலாவது உண்மையான கோழியை உருவாக்கிய அந்த விகாரத்தை (அல்லது விகாரங்களை - mutations) கொண்டிருந்தது. அந்த ஒரு நுகக்கலம் (Zygote) கலப்பிரிவடைந்து முதலாவது உண்மையான கோழியை உருவாக்கியது

முதலாவது, உண்மையான கோழியாக உருவாகிய அந்த நுகத்துக்கு முன்பு, கோழியல்லாத விலங்குகள் மாத்திரமே இருந்தன. புதிய விலங்கொன்றை உருவாக்கக்கூடிய DNA விகாரங்கள் (mutations) ஏற்படக்கூடிய ஒரேயொரு இடம், நுகக்கலம் (Zygot) மாத்திரமே. அந்த நுகக்கலம் கோழியினுடைய முட்டையினுள்ளே கொண்டிருக்கப்பட்டுள்ளது. அதாவது, கோழி முட்டையென்பது ஒரு நுகம் - கோழியாக உருவாகப்போகின்ற அந்த உயிரினத்தின் முதலாவது கலம். ஆகவே முட்டையே முதலில் வந்திருக்கவேண்டும் என்பது, சந்தேகத்துக்கு இடமில்லாது நிரூபணமாகின்றது.

காலாகாலத்துக்கும் விஞ்ஞானிகளையும், தத்துவாசிரியர்களையும், ஏன் எங்கள் எல்லோரையுமே குழப்பத்திலாழ்த்திக்கொண்டிருந்த இந்த கேள்விக்கு, இப்போது விஞ்ஞானம் விடையளித்துள்ளது. இன்னும் இதுபற்றி (அறியாமையால்) குழம்பி/குழப்பிக்கொண்டிருப்பவர்களை தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பும் இதை அறிந்தவர் கைகளிலேயே உள்ளது.

குறிப்பு: இக்கட்டுரை இலங்கையிலிருந்து வெளிவருகின்ற 'பயில்நிலம்' காலாண்டு சஞ்சிகையின், 2009 இன் முதல் காலாண்டு இதழில் வெளிவந்தது.


உசாத்துணை
2. Which came first, the chicken or the egg? http://science.howstuffworks.com/genetic-science/question85.htm
3. Chicken and egg debate unscrambled http://www.cnn.com/2006/TECH/science/05/26/chicken.egg/
4. Which Came First? Eggs Before Chickens, Scientists Now Say http://www.livescience.com/animals/081114-chicken-or-egg.html
5. Chicken and egg question answered http://www.guardian.co.uk/science/2006/may/26/uknews

10 பின்னூட்டங்கள்:

Nimal said...

இதைப்பற்றி தானே பதிவர் சந்திப்பிலும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

ஒரு குழப்பத்தை குழப்பாமல் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

மதுவர்மன் said...

ஆம் நிமல்,

எனக்கு ஏற்பட்ட இந்த குழப்பத்தை போக்க தெரிந்த அறிவைக்கொண்டும், மேலும் தேடியும் ஆராயவேண்டியதாயிற்று.

Arun said...
This comment has been removed by the author.
Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன்
போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்

SUBBU said...

சப்பா முடியல, இப்பவே கன்ன கட்டுது :((

மதுவர்மன் said...

ராம்,

பின்னூட்டங்களில் விளம்பரம் செய்வதை தயவுசெய்து தவிருங்கள். நன்றி.

மதுவர்மன் said...

SUBBU,

வருகைக்கு நன்றி, என்ன சொல்லவருகின்றீர்கள்?
பதிவை விளங்கிக்கொள்ள கடினமாக இருக்கின்றதா?
சொல்லுங்கள்...

மது

SUBBU said...

இவ்வளவையும் படிச்சி முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சி, அததான் சொல்ல வந்தேன் :))

மதுவர்மன் said...

SUBBU,

:) கொஞ்சம் உயிரியல் விடயங்களையும் ஆழமாக சொல்லவேண்டியதாயிற்று, என்ன செய்ய..

ஆனாலும், ”கோழி முட்டை தான் முதலில் வந்தது” என்ற உண்மையை விளங்கிக்கொள்ளமுடிந்ததென்றால், அது போதுமே :)

SUBBU said...

கோழி முட்டை தான் முதலில் வந்தது :))))))))

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி