Sunday, August 30, 2009

சரளமான ஆங்கில அறிவு அவசியம், சக்தி தொலைக்காட்சி நேயராக இருப்பதற்கு - இலங்கை

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7:30 மணிக்கு, இலங்கை சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், Zorro தொலைக்காட்சித் தொடரை என்றாவது ஒரு நாள் பார்த்தவர்களுக்கு, அல்லது சனி, ஞாயிறு தினங்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் Grand Master நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு புரியும், இந்தப் பதிவின் தலைப்பு ஏன் அவசியம் என்று.

Zorro தொலைக்காட்சித் தொடர் - ஞாயிறு காலை 7:30

இது முக்கியமாக சிறுவர்களை
இலக்கு வைத்து ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சித் தொடராக இருக்கவேண்டும், காலை நேர தொடர்கள் அநேகமாக சிறுவர்களை இலக்காக கொண்டவை.

சக்தி தொலைக்காட்சியின் இந்த தொடர் அப்படியே ஆங்கில மொழியிலேயே ஒளிபரப்பப்படுகின்றது. தமிழ் மொழியில் ஒலி மாற்றம் இலங்கையிலே பெரும்பாலும் செய்யப்படுவதில்லை என்பது காரணமாக இருக்கலாம். ஆனாலும் ஆச்சரியப்படவும், ஆதங்கப்படவும் வைக்கும் விடயம் என்னவென்றால், இத்தொடரில் உபதலைப்புக்கள் சிங்கள மொழியில் வழங்கப்படுவது, தமிழில் எதுவுமே இல்லாமை.

சக்தி தொலைக்காட்சியின் அநேக தமிழ் மொழியிலமைந்த நிகழ்ச்சிகள் சிங்கள உப தலைப்புக்களுடன் வழங்கப்படுவது வழமை, அது வரவேற்கத்தக்கதும் கூட. ஆனால், ஆங்கில மொழியிலமைந்த தொடரொன்றுக்கு, தமிழ் பேசும் மக்களை நேயர்களாக கொண்ட தொலைக்கட்சி, தமிழ் மொழியை தவிர்த்து சிங்கள மொழியில் உபதலைப்புக்களை வழங்குவது வேதனையளிக்கின்றது.

என்னுடைய நண்பர் வீடொன்றில் நடந்த சம்பவமே என்னை இதை எழுதத்தூண்டியது. மூன்று பத்து வயதிற்கு கூடாத சிறுவர்க்ள் இத்தொடரை பார்த்துக்கொண்டிருந்தபோது, நானும் அவர்களுடன் இணைந்துகொண்டேன், அப்போது அவர்களில் ஒரு சிறுவன் என்னிடம் கேட்டான் ‘மாமா, அந்த எழுத்துக்களை சிங்களத்தில போடுகினமே, தமிழில போடமாட்டினமா?’ என்று. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதற்கு நான், அச்சிறுவனுக்கு ‘உவங்கள் உப்பிடித்தான்’ என்று பதிலளிக்கவேண்டியதாயிற்று.

பெரியவர்களையாவது பரவாயில்லை, அச்சிறுவர்களையும் ஆங்கில தெரிந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு நியாயம். தமிழ் மொழியிலான தொலைக்காட்சியான சக்தி, எம்மொழியில் முக்கியமாக இங்கு உபதலைப்புக்களை கொடுத்திருக்கவேண்டும்? அல்லது தமிழ் மொழிபெயர்த்து உபதலைப்புக்களை போடுவதற்கான வசதி சக்தி நிறுவனத்திடம் இல்லையா?

சக்தியின் Grand Master - சனி, ஞாயிறு இரவு 8 மணி

இங்கேயும் ஒரு ஆங்கில மேலாதிக்கம் நிலவுகின்றது, இந்நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்து வருபவர்களுக்கு இந்நிலைமை புரியும். இந்நிகழ்ச்சியை நாடாத்தும் பிரதீப் என்ற இந்தியர் ஒரு மலையாளி என்று அறியக்கிடைத்தது, ஆனாலும் அவர் தமி மொழியில் கணிசமான புலமையோடு உரையாடுகின்றார்.

அவ்வப்போது இந்நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்கள் பிரதீப் கேட்கும் கேள்விகள் புரியாமல் ஆமா, இல்லையா என்று விடையளிக்க முடியாமல் சங்கடப்படுவதை கண்டிருக்கின்றேன். கேட்கப்பட்ட கேள்வி தொடர்பான விடயம் சம்பந்தமாக போதிய அறிவில்லாமை என்ற காரணம் போக, என்னை ஆத்திரப்பட வைத்த இன்னொரு காரணம் இருக்கின்றது.

அதாவது, பிரதீப் அநேகமாக, அதிகமாக, வேகமாக கதைக்கும் ஆங்கிலத்தை புரிந்துகொள்ளாமல், என்ன கேட்கின்றார் என்று புரியாமல் ஆம் அல்லது இல்லை என்று ஏதோ ஒன்றை விடையளித்து தடுமாறியவர்களை கண்டிருக்கின்றேன். அந்நிலைமைகளில் பிரதீப் நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்களை ஒரு ஏளனத்தனமையோடு நடத்துவதையும் அவதானிக்கலாம். நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்கள் சங்கடப்பகுகின்றார்கள்.

இந்நிகழ்ச்ச்சியில் பங்குபற்றும் அனைவரும் காட்டாயம் ஆங்கிலத்தில் சிறப்பு புலமை பெற்றிருக்கவேண்டும் என்ற நிபந்தனையை சக்தி தொலைக்கட்சி விதித்திருக்கின்றதா? தமிழ் தெரிந்த பிரதீப் தமிழ் மொழி பேசுபவர்களிடம் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்கலாம் தானே.



இலங்கை நேயர்களை பிரதீப் இந்திய நேயர்கள் போன்று எண்ணுகின்றாரோ தெரியவில்லை. இந்திய நேயர்கள் போன்றன்று, இலங்கை நேயர்கள் மிகக்குறைந்த அளவிலேயே ஆங்கிலச் சொற்களை பாவிப்பவர்கள். மாறாக இந்தியாவில் அவர்களுக்கேயுரிய, உச்சரிப்புடன்கூடிய தமிழ் கலந்த ஆங்கிலம் பேசுவார்கள், ஆனால் இலைகையில் தமிழர்கள் பெரும்பாலும் அப்படியில்லை.

பிரதீப் அதிகம் ஆங்கிலத்தை பாவிப்பது, மேலும் பங்குபற்ற விருப்பும் நேயர்களை கொஞ்சம் பின்நிற்கச்செய்யும் என்பதை சக்தி தொலைக்கட்சி விளங்கிக்கொள்ளவேண்டும். ஏனென்றால் ஆங்கிலம் சரளமாக தெரியாவிட்டால், பிரதீப் கேட்கும் கேள்விகளை புரிந்துகொள்ள முடியாதென்ற நிலை காணப்படுகின்றது. இவற்றை கவனித்து, சக்தி நிர்வாகம் முடிந்தவரை இந்நிகழ்ச்சிகளில் தமிழ் பாவனையை ஏற்படுத்தலாம்.

’தமிழ் மொழியின் சக்தி’ என்று சொல்லிக்கொள்பவர்கள் அதற்றாற்போல் நடக்காமல், தமிழர்களை ஆங்கில மயப்படுத்தவேண்டும் என்ற குறிக்கோளோடு இயங்குகின்றார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஏற்கனவே சிங்கள மயமாக்கலால் தமிழ்மொழி பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில், இலங்கையின் பிரதான தமிழ் தொலைக்காட்சியான சக்தியில், ஆங்கிலத்தின் ஆதிக்கம் அசாதாரணமாக அதிகமாகவே காணப்படுவது கொஞ்சம் மனவேதனையளிப்பதாகவே இருக்கின்றது.

கொசுறுத்தகவல்: சக்தி தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் ஒரு இந்தியர்

பிரதீப் தொடர்பாக ஏனைய இடங்களில்
http://nkashokbharan.wordpress.com/2008/05/02/a-moment-with-grand-master/
http://www.thehindu.com/fr/2007/06/08/stories/2007060851630400.htm
http://www.hindu.com/mp/2006/06/05/stories/2006060500050702.htm

Saturday, August 29, 2009

அஞ்சலி: கவிஞர் மாவை வரோதயன்


கவிஞர் மாவை வரோதயன் இன்று(2009-08-29 சனிக்கிழமை) அதிகாலை யாழ்ப்பாணத்தில் காலமானார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் கொழும்புக் கிளையின் இலக்கியச் செயலராக மாவை வரோதயனின் பங்களிப்பு அளப்பரியது. இவரது பன்னிரு சிறுகதைகளைக் கொண்ட "வேப்பமரம்" என்ற சிறுகதை தொகுதியும் "இன்னமும் வாழ்வேன்" என்ற கவிதை தொகுதியும் வெளிவந்துள்ளன.

சிவகடாட்சம்பிள்ளை சத்தியக்குமரன் எனும் இயற்பெயரை உடைய மாவை வரோதயன் யாழ்ப்பாணத்தின் வடக்கே மாவிட்டபுரத்தின் பளை எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். கவிதை, சிறுகதை, நாடகம், விமர்சனம், சினிமா எனப் பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். தொடக்கத்தில் கொழும்பில் பரீட்சைத் திணைக்களத்தில் இவர் பணிபுரிந்தார். பின்னர் இலங்கை சுகாதார சேவையில் சுகாதாரப் பரிசோதகராக கடமையாற்றிய இவர் சகல சமூக மக்களுடனும் மிக நெருக்கமான உறவைப் பேணியவர்.

அவரதுமறைவு நிரப்ப முடியாத இடைவெளியை ஈழத்து இலக்கிய உலகில் ஏற்படுத்தி இருக்கிறது அவரது பிரிவு தமிழ் இலக்கிய உலகிற்கும் சமூக விடுதலைச் சிந்தனையாளர்கட்கும் ஒரு பேரிழப்பாகும்.

அவரது பிரிவால் வருந்தும் அவரது மனைவியார் அவர்கட்கும் பிள்ளைகட்கும் குடும்பத்தினருக்கும் நாம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கான இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதில் அவருடைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் இணைந்து, எமது ஆழ்ந்த துயரை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மாவை வரோதயனின் இழப்பு குறித்து

செ.பொ.கோபிநாத் வலைப்பதிவில் http://spggobi.blogspot.com/2009/08/blog-post_29.html
கானா பிரபாவின் வலைப்பதிவில்http://kanapraba.blogspot.com/2009/08/blog-post_30.html

மாவை வரோதயனின் நூலகள் நூலகம் திட்டத்தில்

Tuesday, August 25, 2009

கோழியா, முட்டையா, எது முதலில் வந்தது?

ஒருவரை பார்த்து, 'இதுவா அதுவா, எது முதலில் வந்தது அல்லது எதிலிருந்து எது வந்தது’ என்று வெளிப்படையாக விடை சொல்லமுடியாத கேள்வி'யொன்றை கேட்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு இதற்கான விடை உடனடியாக தெரியாதாயின், மாறாக உங்களை மடக்குவதற்காக அவர் உடனடியாக உங்களை நோக்கி ஒரு கேள்வியை எடுத்துவிடுவார். ‘கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்று சொல்லுங்கள்' என்று உங்களை கேட்பார். நீங்களும் எது முதலில் வந்தது என்று சொல்லமுடியாது விழிப்பீர்கள். உடனே அவர் ‘அவ்வாறே உங்களுடைய முன்னைய கேள்விக்கும் விடையளிப்பது கடினம்' என்பார்'

மேற்படி சந்தர்ப்பங்கள் பலவற்றை நான் சந்தித்திருக்கின்றேன். பெரிய அறிஞர்கள் என்று மதிக்கப்படுபவர்கள் கூட இவ்வாறு நடந்ததை கண்டிருக்கின்றேன். அவ்வாறே நீங்களும் சந்தித்திருப்பீர்கள். சரி, கோழியா முட்டையா, எது முதலில் வந்தது என்பது பற்றி இங்கே இப்போது ஆராய்வோம்.
 

“ …இந்த கோழி, கோழிமுட்டை பிரச்சினை தொடர்பாக

எம்மவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி கூட

அடிப்படையில் பிழையானது. 'கோழியிலிருந்து முட்டை

வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா?'

என்று கேட்பார்கள். கோழியிலிருந்து முட்டை வருகின்றது

சரி, அதெப்படி முட்டையிலிருந்து கோழி வரமுடியும்?

குழப்பமாக இருக்கின்றதா?… " 


கோழியா, முட்டையா, எது முதலில் வந்தது?

கோழிக்கு முன்பே முட்டையிடக்கூடிய வேறு உயிரினங்கள் இருந்துள்ளன தானே. உதாரணத்துக்கு, உயிர்ப் பரிணாமத்தில் (Biological Evolution), நகருயிர்களின் (Reptiles) பின்பு தான், பறவைகள் உருவாகியிருந்தன. டைனசோர் போன்ற நகருயிர்கள் பறவைகள் தோன்றுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்திருக்கின்றன. ஆகவே கோழியை விட, 'முட்டை' தானே முதலில் வந்திருக்கவேண்டும். இது கொஞ்சம் சுவாரசியமான விளக்கமாக இருக்கின்றது இல்லையா!

அவ்வாறல்ல, இங்கே கேள்வியிலே கொஞ்சம் குழப்பமிருக்கின்றது. கோழியா, முட்டையா என்பதற்கு பதிலாக கோழியா, கோழிமுட்டையா, என்றவாறு கேள்வி இருந்திருக்கவேண்டும். முட்டை என்று பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டால், அது கோழிமுட்டையல்லாத முட்டைகளையும் உள்ளடக்கி, டைனசோர்களையும் உள்ளே கொண்டுவந்துவிடும். ஆகவே கேள்வி ‘கோழியா, கோழிமுட்டையா, எது முதலில் வந்தது?' என்று அமையவேண்டும்.

இந்த கோழி, கோழிமுட்டை பிரச்சினை தொடர்பாக எம்மவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி கூட அடிப்படையில் பிழையானது. 'கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா?' என்று கேட்பார்கள். கோழியிலிருந்து முட்டை வருகின்றது சரி, அதெப்படி முட்டையிலிருந்து கோழி வரமுடியும்? குழப்பமாக இருக்கின்றதா?

மனிதத் தாயிலிருந்து குழந்தை வருகின்றது (பிறக்கின்றது). குழந்தை பிறந்த பின்பும், தாய் தாயாக இருக்கின்றாள், குழந்தை என்று புதிய ஒரு பொருள் வந்திருக்கின்றது. ஒன்றிலிருந்து இன்னொன்று வந்து, இப்போது இரண்டாக இருக்கின்றது.

அவ்வாறே, கோழி முட்டையிடுகின்றது. அதுவே கோழியிலிருந்து முட்டை வருகின்றது. அங்கேயும் கோழி கோழியாக இருக்கின்றது, முட்டை என்று ஒரு புதிய பொருள் வந்திருகின்றது.

இவற்றை வைத்து இப்போது சொல்லுங்கள். முட்டையிலிருந்து கோழி வருகின்றதா அல்லது முட்டையே கோழியாக மாறுகின்றதா?

ஆம், முட்டைக்குள் உயிர், இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு அந்த முட்டை அப்படியே கோழியாக மாறுகின்றதேயொழிய, முட்டையிலிருந்து கோழி வருவதில்லை. முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு பொரிக்கும்போது, இப்போது முட்டை இல்லை, கோழிக்குஞ்சு மட்டும் தானே எஞ்சியுள்ளது. இது உரு மாற்றம் தானே. ஒன்று இன்னொன்றாக மாறி எஞ்சியுள்ளது ஒன்றுதானே.

ஆகவே, இன்னும் யாராவது உங்களை பார்த்து, கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்த் கோழி வந்ததா என்று கேட்பாராயின், அவரது கேள்வியை திருத்தவேண்டியது உங்கள் பொறுப்பு. ஏனென்றால், தர்க்கரீதியாக அக்கேள்வி பிழையானது. இபோது சரியான கேள்வி ‘கோழியா (கோழி) முட்டையா, எது முதலில் வந்தது?' என்பதே. 'ஒன்றிலிருந்து மற்றது' என்ற முறையை விட்டுவிடவேண்டும், ஏனென்றால் இருவழிக்கும் அது பொருந்தவில்லை.

கோழிமுட்டை என்றால் என்ன என்று உங்களை கேட்டால் உடனே சொல்வீர்கள் ‘கோழி இட்ட முட்டை தான் கோழிமுட்டை' என்று. ஆனால், உயிரியலின்படி, அவ்வாறிருக்கவேண்டியதில்லை. கோழியல்லாத விலங்கு (பறவை) கூட கோழிமுட்டையை இடமுடியும். அதை பின்பு விளக்குகின்றேன். இலகுவாக ஒருவரியில் சொல்வதானால், குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்வது போல தான்.

மாறாக, உயிரியலின்படி, கோழியாக மாறக்கூடிய முட்டையே கோழிமுட்டையாக இருக்கமுடியும். அதாவது, எந்த முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு பொரிக்கின்றதோ (முட்டை கோழியாக மாறுகின்றது) அந்த முட்டை நிச்சயமாக கோழிமுட்டையாக தானே இருக்கமுடியும்.

தாயின் கருப்பையிலிருந்து குழந்தை வெளியே வந்த கணத்திலிருந்து நாங்கள் குழந்தையின் வயதை கணிக்கத்தொடங்குகின்றோம். மாறாக, அக்கணத்துக்கு ஏறத்தாழ பத்து மாதங்களுக்கு முன்பே குழந்தையின் உருவாக்கம்(ஆரம்பம்) தொடங்கிவிட்டது என்பது தானே உண்மை. அதாவது தந்தையின் விந்துக்கலமொன்றும் (Sperm Cell), தாயின் முட்டைக்கலமொன்றும் (Ovum) கருப்பையில் இணைந்து, குழந்தையை உருவாக்கக்கூடிய முதலாவது கலம் (நுகம் - Zygote) உருவாக்கப்பட்டபோதே குழந்தையின் உருவாக்கம் தொடங்கிவிட்டது. அந்த ஒரு கலம் பின்பு பல கலங்களாக பிரிவடைந்து நேரத்துடன் முழுமையான குழந்தையாக உருமாறுகின்றது. குழந்தையின் நடத்தைகள், உடலியல்புகள் எவ்வாறு இருக்கும் என்ற விடயங்களெல்லாம், அந்த முதலாவது கலத்திலேயே, தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன.

உயினமொன்றின் மொத்த இயல்புகளையும் தீர்மானிப்பது அதன் கலங்களிலுள்ள DNA யாதலால், DNA யில் ஏற்படுகின்ற மாற்றங்கள் காரணமாக, இயற்கையில், உயிரினங்கள் பரிணாமமடைகின்றன. கோழி போன்ற விலங்கினத்தில், ஆண்விலங்கின் விந்துக்கலத்திலிருந்தும் (Sperm), பெண்விலங்கின் முட்டைக்கலத்திலிருந்தும் (Ovum) (இது கோழிமுட்டையல்ல) DNA மூலக்கூறுகள் ஒன்றுசேர்ந்து, நுகம் (Zygote) - கோழிக்குஞ்சொன்றின் முதலாவது கலம், உருவாகின்றது. இந்த முதற்கலம் எண்ணுக்கணக்கற்ற தடவைகள் கலப்பிரிவுக்கு (ஒரு கலம் இரண்டாக பிரிந்து, இரு புதிய கலங்கல் உருவாதல்) உள்ளாகி, ஒரு முழுமையான விலங்குக்குரிய கலங்கள் உருவாகின்றன. எந்த ஒரு விலங்கிலும், எல்லாக் கலங்களும் ஒரே மாதிரியான DNA மூலக்கூறகளையே கொண்டிருக்கும் அந்த DNA முதலாவது கலமான நுகத்திலிருந்தே (Zygote) வருகின்றது.

ஆணினதும், பெண்ணினது DNA கலப்பினால் ஏற்பட்ட சிறிய மாற்றங்களினாலோ அல்லது, நுகத்தை (Zygote) உருவாக்கிய DNA யில் ஏற்பட்ட விகாரங்களினாலோ (Mutation) கோழியல்லாத உரிரினங்களிலிருந்து கோழிகள் பரிணாமமடைந்தன. இந்த மாற்றங்களும், விகாரங்களும் (Mutations) நுகம் (Zygote) உருவாகும் தருணத்தில் மாத்திரமே பாதிப்பை ஏற்படுத்தவல்லன. அதாவது, கோழியல்லாத இரு விலங்குகள் (இன்னும் சிறப்பாக பறவைகள்) இணைசேர்ந்தன, அவற்றினுடைய புதிய நுகத்திலிருந்த (Zygote) DNA, முதலாவது உண்மையான கோழியை உருவாக்கிய அந்த விகாரத்தை (அல்லது விகாரங்களை - mutations) கொண்டிருந்தது. அந்த ஒரு நுகக்கலம் (Zygote) கலப்பிரிவடைந்து முதலாவது உண்மையான கோழியை உருவாக்கியது

முதலாவது, உண்மையான கோழியாக உருவாகிய அந்த நுகத்துக்கு முன்பு, கோழியல்லாத விலங்குகள் மாத்திரமே இருந்தன. புதிய விலங்கொன்றை உருவாக்கக்கூடிய DNA விகாரங்கள் (mutations) ஏற்படக்கூடிய ஒரேயொரு இடம், நுகக்கலம் (Zygot) மாத்திரமே. அந்த நுகக்கலம் கோழியினுடைய முட்டையினுள்ளே கொண்டிருக்கப்பட்டுள்ளது. அதாவது, கோழி முட்டையென்பது ஒரு நுகம் - கோழியாக உருவாகப்போகின்ற அந்த உயிரினத்தின் முதலாவது கலம். ஆகவே முட்டையே முதலில் வந்திருக்கவேண்டும் என்பது, சந்தேகத்துக்கு இடமில்லாது நிரூபணமாகின்றது.

காலாகாலத்துக்கும் விஞ்ஞானிகளையும், தத்துவாசிரியர்களையும், ஏன் எங்கள் எல்லோரையுமே குழப்பத்திலாழ்த்திக்கொண்டிருந்த இந்த கேள்விக்கு, இப்போது விஞ்ஞானம் விடையளித்துள்ளது. இன்னும் இதுபற்றி (அறியாமையால்) குழம்பி/குழப்பிக்கொண்டிருப்பவர்களை தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பும் இதை அறிந்தவர் கைகளிலேயே உள்ளது.

குறிப்பு: இக்கட்டுரை இலங்கையிலிருந்து வெளிவருகின்ற 'பயில்நிலம்' காலாண்டு சஞ்சிகையின், 2009 இன் முதல் காலாண்டு இதழில் வெளிவந்தது.


உசாத்துணை
2. Which came first, the chicken or the egg? http://science.howstuffworks.com/genetic-science/question85.htm
3. Chicken and egg debate unscrambled http://www.cnn.com/2006/TECH/science/05/26/chicken.egg/
4. Which Came First? Eggs Before Chickens, Scientists Now Say http://www.livescience.com/animals/081114-chicken-or-egg.html
5. Chicken and egg question answered http://www.guardian.co.uk/science/2006/may/26/uknews

Sunday, June 28, 2009

அஞ்சலி: மூத்த கவிஞர் இ.முருகையன்

மூத்த கவிஞர் இ.முருகையன் (23-04 -1935 - 27 -06 -2009)

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரும் ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவருமான இ. முருகையன் அவர்களது பிரிவுச் செய்தி தேசிய கலை இலக்கியப் பேரவையைப் பெருந் துயரில் ஆழ்த்தியுள்ளது.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தொடக்கத்திலிருந்து அதற்குத் துணையாயிருந்து இளம் படைப்பாளிகளை நெறிப்படுத்தி ஊக்குவித்ததில் அவரது பங்களிப்பு மிகப் பெரிது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகத்தின் ஆசிரியர் குழுவிற் பெரும் பொறுப்பேற்றுச் செயற்பட்டு வந்ததுடன் அதன் நூல் வெளியீடுகளிலும் அவர் ஆக்கபூர்வமான ஒரு வழிகாட்டியாயிருந்தார்.

மூத்த கவிஞர் முருகையன் கவிஞராக மட்டுமன்றித் தமிழறிஞராகவும் திறனாய்வாளராகவும் சீரிய முற்போக்குச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவராவார். அரசகரும மொழித் திணைக்களத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்கு அவர் ஆற்றிய சேவை முன்னோடியானதும் முற்போக்கானதுமாகும். அவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

அவரது கவிதைகள் போன்று மொழி, சமுகம், அரசியல் ஆகிய துறைகளில் அவரது கட்டுரைகளும் மிகுந்த தெளிவும் ஆழமும் சமூகப் பயனுமுடையவையுமாவன. அவர், தன்னைச் சூழத் தவறுகள் நடந்த போதெல்லாம் அவற்றைக் கண்டிக்த் தயங்காது காய்தல் உவத்தலியன்றி ஆக்கமான விமர்சனங்களை முன்வைத்து வந்தவருமாவர். அவரது பிரிவு தமிழ் இலக்கிய உலகிற்கும் சமூக விடுதலைச் சிந்தனையாளர்கட்கும் தமிழ் அறிவுத் துறைக்கும் ஒரு பேரிழப்பாகும்.

அவரது பிரிவால் வருந்தும் அவரது மனைவியார் தவமணிதேவி அவர்கட்கும் பிள்ளைகட்கும் குடும்பத்தினருக்கும் தேசிய கலை இலக்கியப் பேரவை தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கான இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதில் அவருடைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் இணைந்து, தனது ஆழ்ந்த துயரை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறது.


பொதுச் செயலாளர்
தேசிய கலை இலக்கியப் பேரவை

Saturday, March 7, 2009

கிரிக்கெட்+அரசியல்=பயங்கரவாதம்?

கடந்த 3 ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது திட்டமிட்ட தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுததாரிகளான ஒரு குழுவினர் நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் இலங்கை அணியினர் காயங்கள் அடைந்தனர். எவ்வாறாயினும் இத்தகைய தாக்குதலை எவர் செய்திருப்பினும் வன்மையாகக் கண்டிக்கப்படவும் எதிர்க்கப்படவும் வேண்டியதாகும். தீவிரவாத ஆயுதக் குழுக்களின் பலம் ஓங்கியுள்ள பாகிஸ்தானில் இவ்வாறான தாக்குதல் முயற்சி இடம்பெறக் கூடியது என்பதை இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்க வேண்டியதொன்றாகும். தெற்காசிய நாடுகளில் காணப்படும் பயங்கரவாதம் பற்றியும் இலங்கையில் இருந்து வரும் பயங்கரவாதம் பற்றியும் உச்சக் குரலில் பேசி வந்த இலங்கையின் தலைவர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் பற்றிக் கணக்கிட முடியாமல் போய்விட்டமை ஏன் என்பது புரியவில்லை.

ஏற்கனவே கடந்த வருடப் பிற்கூறில் மும்பையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டது. அங்கு தமக்குப் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தையே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்திய அணி அங்கு செல்லாது விட்டதற்கு பாகிஸ்தான் மீது இந்தியாவிற்கு ஏற்பட்ட விரோதக் கோபமே காரணமாகும். இந்தக் கோபத்தின் பின்னால் இந்திய பாகிஸ்தான் முரண்பாட்டு அரசியல் ராஜதந்திரம் இருந்தது. அது இன்று நேற்று ஏற்பட்டதொன்றல்ல. பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து நீடித்து வருவதாகும். இந்நிலையில் இந்திய அணி அங்கு செல்ல மறுத்ததைப் பொருட்படுத்தாது இலங்கை அணிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. அதனை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஏற்றுக்கொண்டு அங்கு சென்று விளையாட சம்மதம் தெரிவித்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற உள்ளார்ந்த நிலையிலேயே இலங்கை அணி பாகிஸ்தான் சென்றது என்பதை இலகுவில் மறைத்துவிட முடியாது.

இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான அரசியல் ராஜதந்திரப் பின்புலம் பார்க்கப்பட்ட அளவிற்கு இலங்கை அரசாங்கத்தால் அங்குள்ள பயங்கரவாதக் குழுக்கள் பற்றியும் அவற்றிலிருந்து இலங்கை அணியினரைப் பாதுகாக்கக் கூடிய வழிவகைகள் பற்றியும் முன்கூட்டியே சிந்திக்கப்படவில்லை. உயிர்ச்சேதம் இன்றி இலங்கை அணியினர் மீண்டு வந்தமை அரசாங்கத்திற்கு ஆறுதல் தருவதாக இருந்த போதிலும், எழக் கூடிய எதிர்ப்புகளை சமாளித்துக் கொள்ளவும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவைப் பெறவும் ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாகவே செயற்பட்டனர். நேபாளப் பயணத்தில் இருந்த ஜனாதிபதி தன்னுடன் இருந்த வெளியுறவு அமைச்சரை உடன் பாகிஸ்தான் அனுப்பியதுடன், தானும் ஒருநாள் முந்தியே பயணத்தை முடித்து நாடு திரும்பினார். இதனால், கிரிக்கெட் வட்டாரங்களில் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பெயர்கள் பாதுகாக்கப்பட்டன. அதன் மூலம் இவர்கள் தமக்கான சக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் கிரிக்கெட் என்பது வெறுமனே ஒரு விளையாட்டு மட்டுமல்ல அதன் பின்னால் அரசியல் வணிகம், இலாபமீட்டல் என்பன மிகக் கெட்டியாக இருந்து வருவதையும் உறுதிப்படுத்த முடிந்துள்ளது.

இத்தாக்குதல் நடைபெற்று 5 நாட்களாகியும் உரிய ஆயுததாரிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. எந்தவொரு தீவிரவாத இயக்கமும் உரிமை கோரவுமில்லை. அதனால் ஊகங்களை மட்டுமே ஊடகங்களும் இணையத்தளங்களும் வெளியிட்டு வருகின்றன. அத்துடன், இலங்கை இந்திய பாகிஸ்தானிய உயர்மட்டத் தலைவர்கள் தத்தமது நிலைப்பாடுகளுக்கு ஏற்ப கருத்துகளைக் கூறியும் வருகின்றனர். தாக்குதலுக்குப் பின்பு இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை அணி மீதான தாக்குதலைக் கண்டித்துவிட்டு பாகிஸ்தான் மீது பழி சுமத்தும் வகையில் கருத்துக் கூறிக்கொண்டார். அத்துடன் மேற்படி தாக்குதலை மும்பைத் தாக்குதலின் தொடர்ச்சி என்றும் கூறி பாகிஸ்தான் தனது நாட்டினில் இருந்து வரும் பயங்கரவாதத்தை உண்மையாகவே ஒழிக்க வேண்டும் என்றார். அதேவேளை, பாகிஸ்தானில் இருந்து வெளிவந்த கருத்துகளில் ஒன்று மும்பைத் தாக்குதலுக்குப் பழி தீர்க்கும் வகையில் இந்திய உளவு நிறுவனமான "றோ' வின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட தாக்குதல் என்றவாறு கூறப்பட்டது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் றோகித போகொல்லாகம கூறுகையில்; புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்டிருப்பதை நிராகரிக்க முடியாது என்றார். ஏனென்றால், தோல்வியால் விரக்தியடைந்த புலிகள் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடவே செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு லாகூர் தாக்குதல் பல்வேறு தரப்புகளின் கருத்துகளுக்கும் கண்ணோட்டங்களுக்கும் இலக்காகி உள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் விரைவில் இத்தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து இதன் பின்னால் உள்ளவற்றை அம்பலப்படுத்துவோம் என்று கூறியுள்ளார். அதேவேளை, இலங்கை அரசாங்கத்திடம் வருத்தம் தெரிவித்து இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவுக்கு எவ்வித பங்கமும் ஏற்படாது என்றும் அறிவித்திருக்கிறார். மேற்படி தாக்குதலை இந்தியத் தலைவர்களும் பிரதான ஊடகங்களும் தமது பாகிஸ்தான் எதிர்ப்புப் பல்லவிக்கு ஏற்றவிதமாகச் சுருதி சேர்த்து வாசித்து வருகின்றனர். அவர்களது கருத்து நோக்கின் படி தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்பது ஏதோ பாகிஸ்தானில் மட்டும் தான் விளைந்த வண்ணம் இருக்கிறது என்பதாகவே காட்டப்படுகிறது. இந்தியாவில் அவை இல்லை என்பது போலவும், இருந்தாலும் தமது கட்டுக்குள் இருந்து வருவதாகவும் அவை கூறி வருகின்றன. இந்தியாவில் எங்கு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தாலும் உடனடியாகவே பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களே காரணம் எனப் பட்டை அறைந்து கூறிவிடுவது இந்திய ஆளும் தரப்பிற்கு கைவந்த ஒன்று. மேலும் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தான் பின்னிருந்து இக் குழுக்களை இயக்குவதாகப் பரப்புரை செய்வதிலும் இந்திய ஊடகங்கள் மகா கெட்டிக்காரர்கள். ஆனால் , இந்தியாவில் பல்வேறுபட்ட பயங்கரவாத அமைப்புகள் இருந்து வருவது பற்றியும் அவை நடத்தும் தாக்குதல் பற்றியும் அடக்கியே அவை வாசிக்கின்றன.

அத்துடன், இந்திய உளவு நிறுவனமான "றோ' வின் செயற்பாடுகள் பற்றி வாயே திறப்பதில்லை. முஸ்லிம் தீவிரவாதிகள் பற்றி நீட்டி முழக்கும் எவரும் இந்து தீவிரவாத அமைப்புகளான ஆர்.எஸ். எஸ். சிவசேனை போன்ற சங்கப்பரிவார அமைப்புகள் இந்துத்துவத்தின் பேரால் நடத்தும் பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிப் பேசுவது மிகக் குறைவு. இன்றைய நிலையில் தீவிரவாதம் பயங்கரவாதம் இன, மத , மொழி பிரதேச அடிப்படையில் எங்கிருந்து வந்தாலும் அது எதிர்த்து நிராகரிக்கப்பட வேண்டியதாகும். அவை பாரத புண்ணிய பூமியில் இருந்து வந்தால் புனிதமானது என்றும் பாகிஸ்தானில் இருந்து வந்தால் அழிவுகரமானது என்றும் பார்க்கும் குறுகிய பார்வைகள் அகற்றப்பட வேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சோஷலிசத்தையும் மார்க்ஸிஸத்தையும் வர்க்கப் போராட்டப் பாதையில் அமைந்த விடுதலைப் போராட்டங்களையும் முறியடிக்கவே பயங்கரவாதக் குழுக்களையும் இயக்கங்களையும் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு உருவாக்கி நிதி, ஆயுதம், பயிற்சி வழங்கி முன் தள்ளிவிட்டது. அதேவழியில் ஏனைய முதலாளித்துவ ஆட்சி அதிகார சக்திகளும் அத்தகைய குழுக்களை தோற்றுவித்தன. இது சிறிய நாடுகளில் பாதாள உலகக் குழுக்களை உருவாக்கி இயக்குவது வரை கொண்டு செல்லப்பட்டது. அன்று சதாம் ஹுஸனையும் , பின் லேடனையும் வளர்த்து அரங்கில் ஆடவிட்டது அமெரிக்கா என்பதை யார் தான் மறுப்பர். அதே பெயர்கள் 9/11 க்குப் பின்பு உலகின் ஈவிரக்கமற்ற உலகப் பயங்கரவாதிகளாகக் காட்டப்பட்டனர். ஈராக்கில் புகுந்து கொள்ளவும் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கவும் அதே பெயர்களைத் தான் அமெரிக்கா பயன்படுத்தியது. தமது தேவை நிறைவேறும் மட்டும் விடுதலைப் போராளிகளாகக் காட்டி அத் தேவை முடிந்ததும் பயங்கரவாதிகளாக சித்திரித்தும் ஊட்டி வளர்த்தவர்களையே உதைத்து அழிப்பதும் ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளுக்கு கைவரப் பெற்ற கலையாகும்.

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கான போராட்டத்திலும் அமெரிக்கா , இந்தியா என்பன நடந்து கொண்ட முறைமையை யாராவது இன்றும் விளங்கிக் கொள்ளாவிட்டால் அத்தகையோர் முட்டாள்களாக அல்லது அறிவிலிகளாக மட்டுமே இருக்க முடியும். எனவே, தீவிரவாதம் பயங்கரவாதம் வெறுமனே ஒரு கேள்வி ஒரு விடையில் விளக்கிக் கொள்ளவியலாத ஒன்றாகவே காணப்படுகிறது. அது யாரால் யாருக்காக எந்த வழிமுறையில் முன்னெடுக்கப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். எந்தவொரு மக்கள் பிரிவினருக்கும் எதிராக ஒரு சிலரின் தேவைக்காக முன்னெடுக்கப்படும் தீவிரவாதமோ தாக்குதலோ அடிப்படையில் மக்கள் விரோதமானதாகும்.

இவ்வாறு தான் கிரிக்கெட் என்ற விளையாட்டுப் பற்றியும் நோக்க வேண்டியுள்ளது. அது நமது நாட்டின் தேசிய விளையாட்டுக்களில் ஒன்றல்ல. அது பிரித்தானியாவில் இருந்து நம்மீது திணிக்கப்பட்ட கனவான்களின் காலத்தை விரையமாக்கும் விளையாட்டு. அது இன்று சில நாடுகளால் மட்டுமே விளையாடப்படுகிறது. அவற்றில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்பன தெற்காசிய நாடுகளில் முக்கியமானவைகளாகும். இந்த கிரிக்கெட் விளையாட்டு வெறுமனே உடல் நலத்திற்காகவோ நட்பை விருத்தியாக்குவதற்கோ நடத்தப்படுவதில்லை. இன்று இந்த விளையாட்டு முற்றிலும் பணமும் சொத்தும் குவிக்கும் களமாகக் காணப்படுகிறது. ஏகாதிபத்திய உலகமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கு இக் கிரிக்கெட் விளையாட்டு பக்கபலமாகிக் கொண்டது. விளையாட்டு வீரர்களின் திறமையையும் ஆற்றல்களையும் விலைகொடுத்து வாங்குவதில் பல்தேசிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டன. தத்தமது விளம்பரங்களுக்காக விளையாட்டு வீரர்களை பிம்பமாக்கிக் கொண்டன. கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்குக் கோடிக்கணக்கில் பணம் கொட்டி அனுசரணை வழங்கி வருகின்றன. இந்தப் பணத்தில் ஒரு பகுதி விளையாட்டு வீரர்களுக்கும் மறுபகுதி கிரிக்கெட் சபையினருக்கும் சென்றடைகின்றன. அதனாலேயே கிரிக்கெட் சபையின் தலைவராவதற்கும் ஏனைய பதவிகளுக்கும் கடும்போட்டி இருந்து வருகின்றதை அவதானிக்கலாம். இந்தியாவின் கிரிக்கெட் சபைத் தலைவராக வருவதற்கு மத்திய அமைச்சராக இருக்கும் சரத்பவார் எத்தனை பாடுபட்டு தலைவரானார். அங்கே மக்களுக்குச் சேவை செய்வதற்கு அல்ல. அங்கு ஓடும் பண நதியில் நீச்சல் அடிப்பதற்கேயாகும். இங்கும் பெரும் பெரும் பண முதலைகள் பெருமளவில் செலவு செய்து கிரிக்கெட் சபைத் தேர்தலில் நின்று வருவதையும் காணலாம்.

இவ்வாறு கிரிக்கெட் விளையாட்டும் வீரர்களும் கிரிக்கெட் சபையும் கோடி கோடியாகப் பணம் பண்ணிக் கொண்டிருக்க அவ் விளையாட்டை நேரிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து ரசித்து நிற்கும் மக்கள் இறுதியில் கொட்டாவி விட வேண்டியதாகவே இருந்து வருகிறது. இத்தகைய வணிகமயப்படுத்தப்பட்ட இக் கிரிக்கெட் விளையாட்டினால் பல்தேசியக் கம்பனிகள் தமது உற்பத்திகளை மக்களிடையே திணிக்க விளம்பரங்கள் மூலம் பிரசாரம் செய்கின்றன. கொக்காக்கோலா, பெப்சி முதல் எரிபொருட்கள் வரையானவற்றுக்கு கிரிக்கெட்டில் முன்னணி வகிக்கும் வீரர்களைப் பயன்படுத்திக் கொள்வதையும் காணமுடிகிறது. அவை மட்டுமன்றி அரசியல்வாதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் கிரிக்கெட்டின் மூலம் பன்முகப்பயன்கள் சென்றடைகின்றன. அத்துடன் ஒவ்வொரு விளையாட்டுத் தொடருக்குப்பின்பும் பாதுகாப்புக்கென்ற பெயரில் யுத்தத்திற்கும் பெரும் தொகைப் பணம் அன்பளிப்பாகிறது. அத்துடன் அரசியலிலும் இக் கிரிக்கெட் மூலம் செல்வாக்குச் செலுத்தப்படுகிறது.

ஆதலால் கடந்த 3 ஆம் திகதி லாகூரில் இடம்பெற்ற தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரு கருத்திற்கு இடமேயில்லை. ஆனால் பணம் சம்பாதிக்கும், ஒரு சிலரின் பைகளை நிரப்பும், மக்களை நுகர்வுக்குத் தூண்டும் வகைகளிலான இக் கிரிக்கெட் விளையாட்டினால் நாட்டு மக்களுக்கோ நாட்டிற்கோ எவ்வித பலாபலன்களும் கிடைக்க மாட்டாது என்பதே உண்மையாகும்.

Friday, February 27, 2009

பயில்நிலம் இதழ் வெளியீடு

பயில்நிலத்தின் இதழ் வெளியீடு கடந்த 22ம் திகதி கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது.

கருத்துரைகளை பேராசிரியர் சி. சிவசேகரம் மற்றும் மு. மயூரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

பின்னர் "யாரோடு நோக? யார்க்கு எடுத்துரைக்க?" என்ற தலைப்பிலான கவிதா நிகழ்வும் இடம் பெற்றது.

பயில்நிலம் தொடர்புகளுக்கு payilnilam@gmail.com




Thursday, February 26, 2009

பயில்நிலத்தின் மீள் வருகை: மீண்டும் தொடங்கும் மிடுக்கு (ஈழத்து இலக்கியச் சூழலும் இளைய தலைமுறையின் இதழ் வெளியீட்டு முயற்சிகளும்)

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பயில்நிலத்தின் மீள் வருகை மகிழ்வளிக்கிறது. 2004 முதல் 2006 வரை தொடர்ச்சியாக 12 இதழ்களை இக் குழுவினர் வெளியிட்டு உள்ளனர். 3 வருட மௌனத்தின் பின்னர் புதிய இளம் குழுவால் பயில்நிலம் புதுப் பொலிவுடன் மீண்டும் வருகிறது. இன்றைய சூழலில் கூட்டுச்செயற்பாடு என்பது எவ்வளவு கடினமானது என்பதை எல்லோரும் நன்கு அறிவோம். தனி மனித வாதமும் தனி மனித முனைப்பும் முன்னிலைப்படுத்தபடுகின்ற சூழலில் இளையோர் ஒரு இதழைக் கொண்டு வருவது மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ் வகையில் பயில்நிலத்தின் மீள் வருகை எமது இளம் தலைமுறை குறித்த நம்பிக்கைகளைத் தக்க வைக்க உதவுகிறது.


இன்றைய சூழல் மிகுந்த சவால் மிக்கதாக இருக்கிறது. கூட்டுச்செயற்பாடும் தனி மனிதப் பொறுப்பும் சரியாக விளங்கிக் கொள்ளப்படவேண்டிய தேவையும் கூட்டுச்செயற்பாட்டின் அவசியமும் மிகவும் முக்கியமானது. இளைய தலைமுறையால் ஒரு தரமான இதழைக் கொண்டு வர முடியும் எனப் பயில்நிலம் தனது 12 இதழ்கள் மூலம் நிரூபித்து இருக்கிறது. இப்போது மீண்டும் வந்துள்ள பயில்நிலம் இதழும் அதன் தொடர்ச்சி என்றே கூறமுடியும்.

பயில்நிலத்தின் ஆசிரியத் தலையங்கம் இவ்வாறு சொல்கிறது. "இன்று நடைமுறையிலுள்ள கல்வி முறைமை இளைஞர்களைக் குறுகிய வட்டத்திற்குள் வரையறுத்து விடுகின்றது. இதற்குச் சமூகத்தின் திணிப்பும் காரணமாகின்றது. அத்தகைய பலவீனத்திலிருந்து வெளிவரும் நோக்கில் அவர்களது சிந்தனை, செயற்பாடு, கண்ணோட்டத்தைப் புதிய பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் முயற்சியே எமது பயில்நிலம்."

குறைந்த அளவான கவிதைகள் பல வேறுபட்ட விடயப் பரப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள், சிறுகதைகள், பத்திகள், குட்டிக் கதைகள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் என பல்வேறுபட்ட புதிய பரிணாமங்களுடன் பயில்நிலம் மலர்ந்து இருக்கிறது. இவ்விடத்தில் சில முக்கியமான விடயங்களைக் கூறவேண்டும். அந்நிய மேலாதிக்கத்துக்கு எதிரான எந்தப் போராட்டத்திலும் பண்பாட்டுத் துறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் முக்கியமானவை. முற்போக்குச் சிந்தனையாளர்கள் கலை இலக்கியங்கள் சமூகச்சார்பானதும் சமூக முன்னேற்றத்துக்குமான பங்களிப்பைச் செலுத்த வேண்டுமென வற்புறுத்துவர். சமூக விடுதலை இலக்குடையோர் கலை இலக்கியங்கள் அந்த இலக்கிற்குப் பணி செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பர். அது போலவே அடக்குமுறையாளர் தமது நோக்கங்களைக் கலை இலக்கியங்களூடு முன்னெடுக்கத் தயங்க மாட்டார்கள். அந்த அளவுக்கு, ஆனால் அந்தளவுக்கு மட்டுமே, கலை இலக்கியங்கள் பற்றிய பார்வையில் சமூக விடுதலையாளர்கட்கும் அடக்குமுறையாளர்கட்கும் ஒற்றுமை உண்டு. அதற்கப்பால் அணுகுமுறையிலும் உள்ளடக்கத்திலும் எதிர்மாறான தன்மைகளையே நாம் காணலாம்.

சமூக விடுதலையை வேண்டுவோர் கலை இலக்கியங்கள் சமூகச் சார்புடையனவாக இருப்பதை விரும்புவர். மனிதரின் உரிமைகளையும் மனிதரிடையே சமத்துவ அடிப்படையிலான ஒற்றுமையையும் நீதியையும் நியாயத்தையும் அவற்றுக்கான எழுச்சிகளையும் பேசுவதை வற்புறுத்துவர். அந்த இலக்குடைய படைப்பாளிகள் அவற்றை உணர்த்துகிற விதமாகக் கலை இலக்கியங்களை உருவாக்குவர். ஒடுக்குமுறையாளர்கள் தங்களது நோக்கங்களை அந்த விதமாக வெளிப்படுத்த இயலுமா? இயலாது. எனவே சமூக விழிப்புணர்வை வேண்டி நிற்கிற படைப்புக்களை எதிர்க்க அவர்கள் சமூக உணர்வை மழுங்கடிக்கிற விதமான படைப்புக்களை ஊக்குவிப்பர். பொது மக்களின் இரசனையையும் சிந்தனை ஆற்றலையும் வளர்த்தெடுக்கிற படைப்புகளின் இடத்தில் அவற்றைக் கீழ்த்தரமானவை ஆக்குகிற காரியங்களை அவர்கள் செயற்படுத்துவர். மனிதரைச் சமூகக் கூட்டுணர்வு உடையோராக மாற்றும் முயற்சிகட்கு மாறாகத் தனிமனிதவாதத்தையும் சுய நலப்போக்கையும் வற்புறுத்துவர்.

ஏகாதிபத்தியமோ பிற்போக்காளர்களோ கலை, இலக்கியம், பண்பாட்டுத் துறைகளிற் தங்களது மக்கள் விரோதச் செயல்களை நேரடியாகச் செய்வதில்லை. அவற்றுக்குப் பல்வேறு முகவர்களைப் பாவிப்பர். சமூக உணர்வு போதாத, ஆழமான சமூகச் சிந்தனையற்ற அல்லது சுயநலத்திற்கும் தற்பெருமைக்கும் சுயவிளம்பரத்திற்கும் ஆட்பட்ட ஆய்வறிவாளர்களும் படைப்பாளிகளும் அறிந்தோ அறியாமலோ அவ்வாறான காரியங்களைச் செய்யுங் கருவிகளாகின்றனர்.

இலங்கையில் சமூக உணர்வுள்ள இலக்கிய எழுச்சியில் மட்டுமன்றிப் பொதுவான இலக்கிய எழுச்சியிலும் இடதுசாரிகளும் பிற முற்போக்குச் சிந்தனையாளர்களும் ஒரு தலைமைப் பங்காற்றினர். அதை மறுப்பதற்கான பழமைவாதப் பிற்போக்குவாத முயற்சிகள் படுதோல்வி கண்டன. தேசியவாத இலக்கியத்தின் எழுச்சி கூட முற்போக்கு இலக்கியப் போக்கிலிருந்து எழுந்த சமூகச்சார்பான எழுத்தை உள்வாங்கியே தன்னை அடையாளப்படுத்துமளவுக்குச் சமூகச் சார்பான கலை இலக்கியங்கள் என்ற கருத்தாக்கம் நிலை கொண்டிருந்தது. தூய கலை இலக்கியம் பற்றிப் பேசி முற்போக்கு இலக்கியத்தை நிராகரித்தவர்களே தூய கலை இலக்கியக் கோட்பாட்டை மறந்து தேசியவாதக் கலை இலக்கியங்களைத் தூக்கிப் பிடித்தமை பற்றியும் இங்கு குறிப்பிடலாம். இப்போது எல்லாத் தளங்களிலும் ஏகாதிபத்தியவாதிகள் தங்களது தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். அவர்களது முகவர்கள் போலி மனிதாபிமான முகத்தைக் காட்டுகின்றனர். இதன் நோக்கங்கள் எப்படியானவையோ அப்படியானவையே கலை இலக்கியத் துறைகளில் நடைபெறும் ஊடுருவல்களின் நோக்கங்களும். இவை குறித்துப் பயில்நிலம் அவதானமாக இருக்க வேண்டும்.

பயில்நிலம் இதழ் பல புதிய விடயங்களைப் பேசுகிறது. பல அறிவியல் செய்திகளைச் சொல்கிறது. விண்ணியல் பற்றி எழுதப்பட்டிருக்கும் ஒரு பத்தியும், சுய ஆளுமை பற்றி எழுதப்பட்டிருக்கும் ஒரு பத்தியும் எமது இளம் தலைமுறை புதிய ஒளியை எம் சமூகத்தில் பாய்ச்சும் என்பதற்கு கட்டியம் கூறுவது போல உள்ளது. குறிப்பாக விண்ணியல் பற்றி எழுதத் தொடங்கியிருக்கும் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. இது விண்ணியல் பற்றி நாம் அறியாத பல விடயங்களை அறிந்து கொள்ள உதவும் என எதிர்பார்க்கமுடியும். சுய ஆளுமை பற்றி எழுதப்பட்டிருக்கும் பத்தி சில அடிப்படையான செய்திகளைச் சொல்கிறது. குடும்பம் என்ற நிறுவனத்தின் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் இன்றும் மனித சமூகத்தின் முக்கிய கூறாகவும் தனிமனித வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அலகாகவும் குடும்பம் இருக்கின்றது. இந்த ஏற்றத்தாழ்வான சமூகத்திற்கு மாறாக புதிய சமத்துவமான, சமநீதியை நிலைநாட்டக்கூடிய ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தைப் படைக்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டுள்ளவர்கள் சுய ஆளுமை தொடர்பான பிரச்சனைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளவற்றைத் தட்டிக்கழித்து விடமுடியாது. அவை வெறுமனே தனிப்பட்ட பிரச்சனைகளல்ல. சமூகத்தின் ஏற்றத் தாழ்வான வளர்ச்சியினால் பல்வேறு விதமான சில திட்டமிட்ட நடவடிக்கைகளினால் வளர்க்கப்பட்டுள்ள பிரச்சனைகளுமாகும். எனவே சுய ஆளுமை பற்றி எழுதப்பட்டிருக்கும் பத்தி ஒரு புதிய பார்வையை முன்வைக்கிறது.

புதிய விடயங்களை மட்டும் அல்ல பழைய விடயங்களிலும் பயில்நிலம் அக்கறையாய் இருக்கிறது என்பதை பயில்நிலம் இதழைத் திறந்த உடனேயே தெரிந்து கொண்டேன். இதழில் முதலாவதாக இருக்கும் கட்டுரை பொப்பிசைப் பாடல்கள் பற்றியது ஆகும். கட்டுரையின் முடிவில் "கள்ளுக்கடைப் பக்கம் போகாதே/ காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன், கண்ணும் புகைந்திடும்/ நெஞ்சும் வரண்டிடும்/ கைகால் உலர்ந்திடும் இந்தக் கள்ளாலே, ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்/ அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்/ விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே/ விட்டேனோ கள்ளுக்குடியை நான்" என்ற நித்தி கனகரத்தினத்தின் பாடல் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.

ஒரு விடுதலைப் போரின் போக்கில் நடக்கும் தவறுகள் விடுதலைப் போராட்டத்துக்குக் கேடானவை. போராட்டத்தின் போக்கில் நிகழும் தவறுகள் உடனுக்குடன் திருத்தப்படாவிடின் போராட்டம் பலவீனமடையும். போராட்டம் பற்றிய விமர்சனங்களிற் சினேகமானவற்றையும் பகைமையானவற்றையும் வேறுபடுத்திக் காணும் தேவையைப் பலரும் மறந்து விடுகின்றனர். பகைமையான விமர்சனங்களிற் கூடப் பயனுள்ள அம்சங்களை எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் ஒரு விடுதலை இயக்கத்துக்கு மிக அவசியம். இது குழவாகச் செயற்படும் எல்லோருக்கும் பொருந்தும். பயில்நிலம் குழுவுக்கும் கூட நான் இதை இங்கே சொல்ல முனைவதன் நோக்கம் பயில்நிலம் குழு விமர்சனங்களைக் கவனமாக அணுகவேண்டும் என்பதாலேயே. விமர்சனம் என்பது அழகியல் சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டும் என்பது அழகியல்வாதிகளது நிலைப்பாடு. ஒரு படைப்பின் அரசியற் சமுதாய முனைப்பை விமர்சிப்பதை இவர்கள் விரும்புவதில்லை.நிறவாதத்தையோ மதவெறியையோ தூண்டும் இலக்கியத்தையோ ஆணாதிக்கத்தையோ சாதியத்தையோ நியாயப்படுத்தும் ஒரு படைப்பையோ வெறுமனே அழகியற் கண்ணோட்டத்தில் விமர்சிப்பது எவ்வகையிலும் நேர்மையான காரியமல்ல. சமூகச் சீரழிவை ஊக்குவிக்கும் படைப்புக்களை அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்கொள்ள முடியும். பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்திலான படைப்பக்களை ஊக்குவிப்பதும் கலை இலக்கியங்களைப் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டதினின்று விமர்சிப்பதும் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுப்பணி சார்ந்தது.

மனிதத் தேவைகளையும் உணர்வுகளையும் புறக்கணித்துக் கலை இலக்கியங்களைப் படைக்க முடியாது. இந்தத் தேவைகளையும் உணர்வுகளையும் தனிமனிதருக்கே உரியனவாக்கி மனிதரைச் சமூகத்தினின்று பிரித்துத் தனிமனிதத்துவத்தை சமுதாயத்துக்கு முரண்பட்டதாக வளர்க்கும் போக்கு மனித இருப்பின் முக்கியமான ஒரு பகுதியை மறுக்கிறது. பாட்டாளி வர்க்கப் பார்வை மனிதனது இருப்பின் சமுதாயத் தன்மையை வலியுறுத்தி மனிதரது தனித்துவத்தை அங்கீகரிக்கிறது. தனிமனிதரது தேவைகளும் உணர்வுகளும் சமுதாயத்தினின்று பிரித்துப் பார்க்கப்படாமல் உறவுபடுத்திப் பார்க்கப் படுகின்றன. ஒரு படைப்பின் தொனி அதன் படைப்பாளியின் சமுதாயச் சார்பாலும் குறிப்பாக சமுதாயச் சூழலாலும் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. மனித இருப்பையே நெருக்கடிக்குள்ளாக்கிவரும் ஒரு சமுதாய அமைப்பிற்கு எதிரான போராட்ட உணர்வை வலியுறுத்துவது எமது வரலாற்றுக் கடமை. இதைப் பயில்நிலம் சரியாகச் செய்யும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த இடத்தில் நவீன உலகின் நாடகமேதைகளுள் ஒருவராகக் கருதப்படும் ஹென்றிக் இப்சன் எழுதிய மக்களின் எதிரி" என்ற நோர்வீஜிய நாடகத்தின் கதை நினைவுக்கு வருகிறது. ஒரு விஞ்ஞானி மனிதருக்குத் தீங்கான ஒன்றைக் கண்டறிகிறார். அதை உலகறியச் செய்வதன் மூலம் தான் மனித இனத்திற்கு நன்மை செய்வதாகவும் அதற்காகத் தனக்கு நன்றியாவது கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார். மாறாக, ஊரில் உள்ள சிலரது நலன்கட்கு அந்த உண்மை பாதகமாக உள்ளதன் விளைவாகத் தனது கண்டுபிடிப்பைத் ‘திருத்தி’ எழுதுமாறு விஞ்ஞானி கட்டாயப்படுத்தப்படுகிறார். அதை அவர் ஏற்க மறுத்து அதன் விளைவுகளை எதிர்கொள்கிறார். இதன் மூலம் வலியுறுத்தப்படுவன இரு விடயங்கள்: உண்மைகள் பங்கப்படுத்தக் கூடாதன. உண்மையைத் திரிப்பதற்கு முற்படுகிறவர்கள் தவிர்க்க இயலாமல் வக்கிர நடத்தை உள்ளவர்களாகிச் சீரழிகின்றனர்.

உண்மை என்பது பெரும்பான்மை வலிமையால் நிறுவப்படுவதல்ல என நாம் அறிவோம். எந்தச் சரியான கருத்தும் முதலில் சிறுபான்மைக் கருத்தாகவே தொடங்கிக் காலப்போக்கில் பெரும்பான்மையினரைத் தன் வசமாக்குகிறது. இதற்கு மனித இன வரலாற்றில் நிறைய ஆதாரங்களைக் காட்டலாம். இதைத் தனிநபர்வாத நியாயங்களுடன் நாம் குழம்பிக் கொள்ள அவசியமில்லை. எந்த ஒரு உண்மையின் பெறுமதியும் அதன் சமூகச் சார்பாகவே தீர்மானிக்கப்படுகிறது என்பது சமூகத்தின் உடனடியான அங்கீகாரத்தை ஒரு உண்மையினதோ அதன் பெறுமதியினதோ அளவுகோலாக்கி விடாது. இதுவும் பயில்நிலம் விளங்கி கொள்ள வேண்டிய ஒன்று. "போர் எங்களை முகத்தில் உற்றுநோக்கியவாறு இருக்கையில், ஆக்கங்களில் அதன் முகமே அதிகம் வரையப்படுவது இயல்பானதே. எனினும் இளம் படைப்பாளிகள் சோர்ந்துவிடக்கூடாது. ஒடுக்குமுறைப்போருக்கு எதிரானதும் நியாயத்திற்கானதுமான குரலாகவே படைப்புக்கள் ஒலிக்க வேண்டும் என்பது எம் எண்ணம்." என்று பயில்நிலத்தின் ஆசிரியத் தலையங்கம் சொல்கிறது.

இந்தப் பயில்நிலம் இதழின் முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால் மிகக் குறைவான கவிதைகளே இடம் பெற்று இருக்கின்றன. மற்ற எல்லா இலக்கிய வடிவங்களையும் போலன்றி நீண்டகால மரபு (முறிவுகளுடன் தான்) உள்ள தமிழ்க் கவிதையின் பின்னணியில் அதிகமாக எதிர்பார்க்க எல்லாரையும் போல் எனக்கும் உரிமை உண்டு. இன்று கவிதைத் துறையில் பலரும் புதுக்கவிதையை ஒரு இலகுவான மார்க்கமாகப் பயன்படுத்த முனைந்துள்ளார்களே ஒழிய மரபின் குறைபாடுகட்கு ஈடுகட்டும் ஒரு வலிய ஆயுதமாகப் பயன்படுத்தவில்லையோ என்ற கேள்வி சில சமயம் பயனுள்ள பதில்களைத் தரலாம். ஆனால் இதற்கான பதிலைப் பயில்நிலம் குழுவினரே தரவேண்டும். அதேவேளை இலங்கைத் தமிழ்க் கவிதை பற்றி எனக்குச் சில அச்சங்களும் ஐயங்களும் இருக்கின்றன. கவிதையின் பல்வேறு பரிமாணங்களையும் சாத்தியக் கூறுகளையும் துணிவுடன் அலசி ஆராய்வதில் உள்ள போதாமை, 'சாதனைகள்” பற்றிய சுயதிருப்தி, விமர்சனங்களை ஏற்பதில் தயக்கம், பரஸ்பரம் புகழ்மாலை சூட்டும் குறுகிய வட்டங்கள், எல்லா இலக்கியத் துறைகளையுமே பாதிக்கும். கிணற்றுத் தவளை மனோபாவம் போன்ற பலவற்றை என்னால் உணரமுடிகிறது. இடதுசாரி அரசியல் கோஷங்களையே கவிதையாக்கும் பலவீனத்தை எளிதாகக் கண்டு கொள்ளும் பலரால் சிந்தனைத் தேக்கத்தை அடையாளங் கண்டுகொள்ள முடிவதில்லை.

அலங்கார வார்த்தைகளையும், படிமங்களையும், குறியீடுகளையும் கொண்டு சிந்தனைத் தேக்கத்தை யாருக்கும் தெரியாமல் மூடுவதில் ஒருவரது கவிதை வெற்றி காணலாம். ஆனால் கவிதையின் வளர்ச்சியைச் சிந்தனையின் வளர்ச்சியினின்று பிரிக்க முடியாது. முடங்கிய சிந்தனைச் சூழலில் கவிதையும் முடங்கியே போகும். அவ்வாறு முடங்கிய சிந்தனையின் வழிப்பட்ட கவிதைகளை பிரசுரிப்பதை விட பிரசுரிக்காமல் விடுவது மேல்.

பேசக்கூடாத, பேசப்படாத விடயமாக இருக்கும் பல விடயங்களைப் பேசவே 'பேசப்படாதவை” என்ற பத்தி தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில் இம்முறை கோழியா முட்டையா எது முதலில் வந்தது? என்ற கேள்விக்கான விஞ்ஞான பூர்வமான பதில் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. இது வாசித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. இதே போல அறிவியல் நோக்கில் இரு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஒன்று நனோ தொழில்நுட்பம் மற்றையது பிறப்புரிமைசார் ஆலோசனைகள். இரண்டும் பல புதிய உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய பல பயனுள்ள தகவல்களைத் தருகிறது.

கலப்பு என்ற தலைப்பில் உள்ள லாங்ஸ்டன் ஹியூசின் கவிதை பல கேள்விகளை என்னுள் எழுப்பியது. இன உணர்வு பற்றி யாருமே அதிகம் கூச்சப்படுவதில்லை. சில சமயம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய விஷயமாகவே இன உணர்வு இருந்துள்ளது. என்னளவில் இன உணர்வு என்பது ஆழ்ந்த நோக்கில் அர்த்தமற்ற ஒன்று. ஆயினும் சமுதாயத்தில் இனவேறுபாடுகள் உள்ளபோது அவ்வவ்வேறுபாடுகள் வாழ்வின் வெவ்வேறு துறைகளைப் பாதிக்கும்போது அந்த உணர்வைப் பெரும்பாலானோரால் தவிர்க்க முடிவதில்லை.

இன உணர்வு என்பது ஒரு மனிதனது தன்னடையாளங்களில் ஒன்றாகச் செயற்படுகிறது. அது மொழி, மதம், கலாசாரம் போன்ற பல்வேறு வகையில் வெளிப்படும். அது முற்றாகப் புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல. மனித சமுதாயமும் சிந்தனையும் மேலும் வளர்ச்சியடையும்போது இன உணர்வுகள் சற்றே ஒதுங்கி வழிவிடவே செய்யும். ஆயினும் மனிதனை அவன் உள்ளவாறே ஏற்றுக்கொள்ளும் எந்தச் சிந்தனையும் இன உணர்வுகளை மதியாமல் இருக்கமுடியாது. இன்றைய சூழ்நிலையில் இன உணர்வு என்பது இயல்பான ஒன்று என்ற அளவில் மதிக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. இதைக் கடப்பவர்கள் குறுகிய சுயநலனுக்காக கடப்பவர்களாக இருக்கலாம் அல்லது பரந்துபட்ட மனித இன முழுமையினது நலன் நாடுபவர்களாக இருக்கலாம். எனவே இன உணர்வு இல்லாமை என்பது மட்டும் முற்போக்கான ஒன்றாகிவிடாது. அதன் இடத்தில் பரந்துபட்ட மானுட உணர்வு உள்ளதா அல்லது வெறும் சுயநலமோ சுரண்டும் வர்க்க நலமோ உள்ளதா என்பதையொட்டியே இன உணர்வு இல்லாமையை மதிப்பிட முடியும்.

மனிதர் மத்தியில் இன உணர்வுகள் வேறுபடும் அளவுகளில் இருக்கலாம். தன் இனத்தின் நலனை மற்ற இனங்களின் நலன்கட்கு முரணானதாகக் காணவும் காட்டவும் முனையும் போதும் தன் இனத்தின் இயல்புகளை இன்னொரு இனத்தினதும் மேலான ஒன்றாகக் காட்ட முனையும் போதும் இன உணர்வு இனவாதமாகிறது. இது மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு, கலாசார வேறுபாடுகளை ஏற்றத்தாழ்வுகளாகத் தரம் பிரித்தல், பிரச்சினைகளை இனமொன்றின் கண்ணோட்டத்தில் மட்டுமே தனிமைப்படுத்திக் காண முனைதல் போன்று தன்னை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. இன உணர்வு இனவாதமாகும்போது முரண்பாடுகள் பகைமைத் தன்மை பெற ஆரம்பிக்கின்றன. பகைமை உணர்வுகள் வளர்ந்து சகிப்புத் தன்மையின் எல்லை மீறப்படும்போது இனவாதம் இன வெறியாகிறது.

ஒரு சமுதாயம் முன்னேறிய “நாகரிக” சமுதாயம் என்பதால் அங்கே இனவாதமும் இனவெறியும் இல்லை என்றாகாது. ஐக்கிய அமெரிக்காவில் நீக்கிரோக்களுக்கு எதிரான இனவெறி, தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி, ஹிட்லரின் ஜேர்மனியில் ஆரிய இனவெறி இவையெல்லாம் பின்தங்கிய சமுதாயங்கட்குரியவல்ல. இனவாதமும் இனவெறியும் தொற்று நோய்களைப் போல் பரவுகின்றன. ஒரு இனத்தின் இனவாதமும் இனவெறியும் மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி வளர்த்து, அதன் மூலம் தம்மையும் வளர்த்துக் கொள்கின்றன. இன்றைய காலகட்டத்தில் தேசியவாதத்தின் அடிப்படையையும் அதன் வளர்ச்சிப் போக்கினையும் மக்கள் விளங்கிக்கொள்ளும் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாகத் தேசியவாதத்தினுள் அடங்கியிருக்கும் சாதக-பாதக அம்சங்களைப் பகுத்தறிந்து கொள்வது அவசியமாகிறது. தேசியவாதத்தின் எல்லைகளையும் அதனால் எவ்வளவு தூரம் சாதகமான பாதையில் பயணிக்க முடியும், அதற்கு அப்பால் அது ஏற்படுத்தக் கூடிய ஆக்கபூர்வமற்ற அழிவுகளின் தன்மை எத்தகையவை என்பதைத் தூரநோக்குடன் கண்டறிதல் தேவையாகிறது.

படைப்புக்கும், படைப்பாளிகளுக்குமான உறவும் உருவாக்கமும் முக்கியமானது. அடுத்து படைப்புக்கும் வாசகனுக்குமான உறவும், உரையாடலும் முக்கியத்துவம் பெறுகிறது. இவை அனைத்தையும் சாத்தியமாக்கப் பயில்நிலம் முனைய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
எல்லாவித அதிகாரங்களுக்கும் வாய்பேசா மௌனியாக இருந்துவிட்டு அதிகாரம் தமது இருப்பை அசைக்கின்றபோது கிணற்றுக்குள் இருந்து வெளியில் வந்த மனிதனைப் போல் சமூகத்தை எதிர்கொள்கிற மனநிலையிலிருந்து புதிய இளம் தலைமுறை வெளியேற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மாற்றங்களை வேண்டிப் பயணிக்கும் பயில்நிலம் தடைகளைக் கடந்து பயணிக்கும் என்ற நம்பிக்கையில்......
இது தொடர்பான மயூரனின் பதிவு: http://mauran.blogspot.com/2009/02/blog-post.html