Monday, September 7, 2009

கடவுளரின் கவனத்திற்கு - 001 - பாவம் செய்த பலியாடுகள்!

நண்பர்களே,

கடவுளரின் கவனத்திற்கு வராதவை!

'கடவுளரின் கவனத்திற்கு' என்ற தலைப்பில், இது ஒரு தொடர் எழுத்தாக அமையப்போகின்றது. கடவுள், மத நம்பிக்கைகள் உலகம் முழுமைக்கும், பிரதேச, சமூக எல்லைகளை கடந்து பொதுவாக, ஏதோ ஒரு வடிவில் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. நம்பிக்கை என்ற நடத்தை, உயிரியல் பரிணாம பாதையில், மனித இனத்துக்கு, பிழைத்துக்கொள்வதற்கான(survival) ஒரு விடயமாக வரப்பெற்றது. அதற்கு மனித மூளையின் அமைப்பு, அதன் சில பகுதிகள் பொறுப்பாக இருக்கின்றன என்பது அண்மைய விஞ்ஞான ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பு. இந்த நன்மை புரிந்த 'நம்பிக்கை (Belief)' என்ற நடத்தையின் பக்கவிளைவாகவே கடவுள், மத நம்பிக்கைகள் மனித இனத்தில் ஏற்பட்டன. எவ்வாறு இசை, சங்கீதம் போன்றவை பரிணாம வளர்ச்சியின் (Biological Evolution) அம்சமான, தொடர்பாடலுக்கு துணைபுரிந்த 'மொழி (Language)' வளர்ச்சியின் பக்கவிளைவாக அமைந்ததோ, அவ்வாறே கடவுள், மத நம்பிக்கைகளும் நம்பிக்கை என்ற நடத்தையின் பக்கவிளைவே.

ஆனால் மத, கடவுள் நம்பிக்கைகள் என்ற பெயரில் அரங்கேறும் கொடுமைகள், பொருள் வீண்விரயங்கள், ஏமாற்று நடவடிக்கைகள், பாரபட்ச நடவடிக்கைகள் என்றுமே ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை. அவை சிந்திக்கத்தெரிந்த மனிதர்க்கு ஆத்திரமூட்டுபவன. அவ்வகையில், விழிப்புணர்வூட்டும் நோக்கோடு மத நம்பிக்கைகள் என்ற பெயரில் நடைபெறும் பைத்தியக்காரத்தனங்களை அவ்வப்போது வெளிப்படுத்துவதாக இத்தொடர் அமையப்போகின்றது.

பாவம் செய்த பலியாடுகள்???

இது இவ்வாண்டு (2009) சிலாபத்தில் அமைந்திருக்கின்ற முன்னேஸ்வரம் மகா பத்திரகாளி அம்மன் கோவிலில் அரங்கேறிய மகா கொடுமை. ஏறக்குறைய 200 ஆடுகள், கோயில் முன்றலில் பலநூறு மக்கள் முன்னிலையில், அக்கோயிலின் சமய சடங்கு என்ற பெயரில் வெட்டிக்கொல்லபட்டன, அதாவது பலியிடப்பட்டன. படங்களை பாருங்கள் அவையே கதை சொல்லும்.






ஒரு காலத்தில், உலகம் முழுவதும் மத சடங்குகளில் இந்த (கடவுளர்க்கு) பலியிடுதல் என்ற சடங்கு இருந்து வந்திருக்கின்றது. ஆடுகள், கோழிகள் போன்ற விலங்குகளை பலியிடுவதுடன் மட்டும் நிற்காமல், குழந்தைகள் உட்பட மனிதர்களை பலியிடும் வழக்கமும் இருந்திருக்கின்றது) ஆனால் காலப்போக்கில், இவற்றை பல மக்கள் ஏற்றுக்கொள்ளாமலும், தடைச் சட்டங்களாலும் இப்பலியிடுதல் என்பது அருகிப்போயுள்ளது.

ஆனாலும் இன்றுவரை இது எங்கோ ஒரு மூலையில் நடைபெற்றுவரும் நிகழ்வாகவே இருந்து வருகின்றது. இந்தியாவில் நகர்ப்பகுதிகளில் நடைபெறாவிட்டாலும், கிராமப்புறங்களில் அதிகமான அளவில் நடைபெறுவதாகவே அறியக்கிடைக்கின்றது.

ஆனாலும், இலங்கையிலும் இது நடைபெறுகின்றது என்பதை அறிந்தபோது மிக அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் ஏறக்குறைய 200 ஆடுகள், குழந்தைகள், சிறுவர்கள் முன்னிலையில், நீண்ட கூரிய வாள்களால் வெட்டிக்கொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வளவிற்கும் இந்நாட்டில், பொதுஇடங்களில் மிருகங்களை வெட்டிக்கொல்வதற்கு சட்டரீதியான தடை இருக்கின்றது. மதம் எல்லவற்றிலுமிருந்து தப்பிவிடுகின்றது.

எல்லா உயிர்களும் கடவுளின் படைப்பே, அவற்றிலும் கடவுள் வியாபித்திருக்கின்றார் என்று வலியுறுத்தும் இந்து மதத்தில், இக்கொலைகளை எவ்வாறு நியாயப்படுதமுடியும். அத்துடன் உயிக்கொலைகளையும், மாமிசமுண்ணலையும் இம்மதத்தில் மாபாதங்களாக குறிப்பிட்டிருக்கின்றார்கள். தங்கள் மீது கருணைகாட்டுவதாக பல்லாயிரக்கனக்கான மக்கள் நம்பும் இந்த கருணை மிக்க கடவுளர் (ஆகக்குறைந்தது நேரே பார்த்துக்கொண்டிருந்த மகா பட்திரகாளி அம்மன்) ஏன் இப்பாதகங்களை தடுக்கமுடியாமல் போனது. கடவுளரின் கவனத்திலிருந்து இவை தப்பிவிட்டனவா? அவ்வாறெனில் இதோ கடவுளரின் கவனத்துக்கு இவ்விடயம், எதிர்காலத்தில் இம்மாதிரியானவை நடைபெறாமல் தடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு...

மதுவர்மன் (2009-09-06)

நன்றி
படங்கள் மற்றும் செய்தி
Public slaughter of animals http://sundaytimes.lk/image_story.htm
Sacrificial goats http://sundaytimes.lk/090906/News/nws_04.html

உசாத்துணை
Belief and the brain's 'God spot' http://www.independent.co.uk/news/science/belief-and-the-brains-god-spot-1641022.html
Functional Neuroimaging of Belief, Disbelief, and Uncertainty http://richarddawkins.net/article,1994,Functional-Neuroimaging-of-Belief-Disbelief-and-Uncertainty,Sam-Harris-Sameer-A-Sheth-Mark-S-Cohen

Animal sacrifice http://en.wikipedia.org/wiki/Animal_sacrifice

Animal sacrifice: a corrective http://www.hindu.com/op/2003/09/16/stories/2003091600290300.htm
Significance of Anuimals in Hinduism http://www.hinduwebsite.com/hinduism/essays/animals.asp
Hinduism and animals http://www.bbc.co.uk/religion/religions/hinduism/hinduethics/animal.shtml
Ban on sacrificing animals in temples lifted http://www.hindu.com/2004/02/21/stories/2004022106220400.htm